சாண்டாகிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) எனும் அழகான சிறிய நகரத்தை பற்றிய தொகுப்பு.
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
`சாண்டாகிளாஸ்', அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் தென் பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம். இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குப் பெயர் பெற்ற நகரம்.

ஏன்? இதற்கு இந்தப் பெயர் வந்தது என்பதை முதலில் பார்ப்போம். இந்நகரம் 1854-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது அதன் பெயர் சாண்டா பெ என்று இருந்தது. அந்த ஊருக்கு அம்மக்கள் தபால் நிலையம் கொண்டுவர நினைத்தார்கள். ஆனால், இதற்கு முன்னரே இந்தப் பெயரில் ஒரு நகரம் இருந்ததால் அந்தப் பெயரை நிராகரித்தார்கள். அதனால் அனைவரும் சேர்ந்து சாண்டா கிளாஸ் எனும் பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள்.
பின்னாளில் இந்தப் பெயரை வைத்தே அந்தத் தபால் நிலையத்துக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரத்தொடங்கின. குழந்தைகள் தங்களுக்குக் கிறிஸ்துமஸ் பரிசு என்ன வேண்டும் என்பதையும் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லியும் கடிதங்கள் வரத்தொடங்கின. அனைத்துக் கடிதங்களுக்கும் அந்தத் தபால் நிலையத்தில் உள்ளவர்கள் சாண்டா பதில் எழுதுவதைப் போலவே பதில் அனுப்பினார்கள். பிறகு இது பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.

இதுவே கிறிஸ்துமஸ் பாரம்பர்யம் ஆனது. அதனால் சாண்டா கிளாஸ் நகரம் முழுவதும் சாண்டா கிளாஸ் உருவச் சிலைகள், கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின. இதில் ஆச்சர்யம் என்னவெனில் இந்நகரம் முழுவதும் உள்ள தெருக்கள், கடைகள் கிறிஸ்துமஸ் தொடர்பான பெயரிலேயே உள்ளன. உதாரணமாக கிறிஸ்துமஸ் லேக், ஹோலி லேக், லேக் நோயல், கிறிஸ்துமஸ் லேக் வில்லேஜ் என ஒரே கிறிஸ்துமஸ் மயம்தான்.
பின்பு அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக சாண்டாஸ் கேன்டி ஹாஸ்டல், சாண்டா கிளாஸ் மியூசியம், ஹாலிடே வேர்ல்ட் தீம் பார்க், பிராஸ்டிஸ் சென்டர், கிறிஸ்துமஸ் கோல்ப் கோர்ஸ், சாண்டாஸ் லாட்ஜ், ருடோல்ப் காம்ப்கிரௌண்ட் என்று குழந்தைகளுக்குப் பிடித்த சுற்றுலாத்தலமாக மாறியது.

இன்றைக்கும் குழந்தைகள் அந்தத் தபால் நிலையத்தில் சாண்டாவுக்கு கடிதம் எழுதலாம். பின்பு சாண்டாவிடமிருந்து பதில் வரும். அங்கு சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் ஸ்டோர் ஒன்று உள்ளது. அங்கு பல்வேறு விதமான சாண்டா கிளாஸ் பொம்மைகள், கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் , குக்கீ கடைகள் உள்ளன. அக்கடையின் உள்ளே சாண்டா கிளாஸ் அமர்ந்திருப்பார். அவரிடம் சென்று குழந்தைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அங்கு கிடைக்கும் ஹாட் சாக்லேட் உடன் விற்கப்படும் சாக்லேட் சிப் குக்கீ சூடாகவும் சுவையாகவும் இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் கிறிஸ்துமஸ் ஊர்வலம் சிறப்பானது. அதைக் காண அனைத்து ஊர்களில் இருந்தும் மக்கள் காண வருவார்கள். நவம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கி டிசம்பர் மாதம் இறுதிவரை கோலாகலமாக இருக்கும்.
இறுதியாக அங்கு நடக்கும் லேண்ட் ஆப் லைட்ஸ் எனப்படும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூங்காவில் கார்களில் அமர்ந்தவாறே 1.2 மைல் தொலைவுக்கு ரெய்ண்டீர் கதைகளைக் குழந்தைகளுக்கு விளக்கும் விதமாக விளக்கு அலங்காரம் அமைந்திருக்கும். இவ்வாறாக இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
-சுதா ஜெயக்குமார்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.