சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வீழட்டும் மன்னராட்சி! - தயாராகும் தாய்லாந்து

தாய்லாந்து
பிரீமியம் ஸ்டோரி
News
தாய்லாந்து

இன்னமும் மன்னராட்சி நடக்கும் ஒரு சில நாடுகளில் முக்கியமான நாடு தாய்லாந்து.

ன்னராட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் கதைகள் எல்லாம் வரலாற்றுப் புத்தகத்தோடு முடிந்துபோனவை அல்ல. இதோ தாய்லாந்தில் நம் கண் முன்னே அப்படி ஓர் எழுச்சிமிக்க போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. முன்னெடுத்து நடத்துவது அந்த நாட்டின் மாணவர்கள். தாய்லாந்து மக்கள் போராடுவது மன்னராட்சியில் பறிபோன தங்களின் சுதந்திரத்திற்காக; ராணுவத் தலைவர்களின் பிடியில் நசுங்கிக்கொண்டிருக்கும் தங்களின் உரிமைகளுக்காக; அதிகாரத்தின் பிடியில் அழிந்துகொண்டிருக்கும் ஜனநாயகத்திற்காக.

இன்னமும் மன்னராட்சி நடக்கும் ஒரு சில நாடுகளில் முக்கியமான நாடு தாய்லாந்து. கேளிக்கைக்கும் விடுமுறைக் கொண்டாட்டத்துக்கும் ஆசிய நாடுகளில் தாய்லாந்துதான் முக்கியமானது. சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்க வேண்டிய பாங்காக்கின் சாலைகள் இன்று போராடும் மக்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் அந்நாட்டின் மன்னர் ஜெர்மனியில் மகிழ்ச்சியாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது தாய்லாந்தில்? என்னதான் வேண்டும் மக்களுக்கு?

வீழட்டும் மன்னராட்சி! - தயாராகும் தாய்லாந்து

தாய்லாந்து நாட்டில் நடப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி மற்றும் பாராளுமன்ற மக்களாட்சி. அதாவது அந்நாட்டின் அரசரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு ஆட்சி செய்வார்கள். அரசரே ஆயுதப்படைக்குத் தலைவராகவும், மதப் பாதுகாவலராகவும் செயல்படுவார். 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘பத்தாம் ராமா’ என்றழைக்கப்படும் வஜ்ஜிரலோங்கரன் என்பவர் அந்நாட்டின் அரசராக உள்ளார். அரசரின் மிக்க ஆடம்பரமும், அவரது சொத்துகளைத் தாண்டி அவருக்கு அரசு கஜானாவிலிருந்து ஏராளமாக நிதி ஒதுக்கப்படுவதும், பொறுப்பற்ற அவரது உல்லாச வாழ்க்கை முறையும் அந்நாட்டு மக்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. ஆனால், இதுகுறித்தெல்லாம் மக்கள் எவ்விதக் கருத்தும் சொல்ல முடியாது. அந்நாட்டின் லெஸ் மஜாஸ்ட்டே(Lèse-majesté) எனும் சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும், அவர்களுக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை. கருத்துச்சுதந்திரத்தைப் பறிக்கும் இந்தச் சட்டத்தை நீக்கச் சொல்லியும் முடியாட்சி அமைப்பை மறுசீரமைக்கவும்தான் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள் மக்கள்.

குடியரசு நாடாக இருந்த தாய்லாந்தில் 2014-ல் ராணுவம் சதி செய்தி ஆட்சியைக் கவிழ்த்து நாட்டைக் கைப்பற்றியது. அது முழுக்க முழுக்க மன்னரின் கைப்பாவையாகவே செயல்பட்டது. ராணுவத்தின் முன்னாள் தலைவர் பிரயுத் சான் ஒச்சா பிரதமர் ஆனார். பின்னர் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து தேர்தல் நடந்தது. 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாணவர்களின் ஆதரவு பெற்ற ‘ப்யூச்சர் பார்வர்டு’ கட்சி தோல்வியைத் தழுவியது. மீண்டும் பிரதமர் ஆனார் பிரயுத். இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக அப்போதே சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், 2020 தொடக்கத்தில் ப்யூச்சர் பார்வர்டு கட்சியே கலைக்கப்பட வேண்டும் எனச் சட்ட ரீதியாக அழுத்தங்கள் தரப்பட்டன. இப்போது நடைபெறும் போராட்டத்தின் ஆரம்பப்புள்ளி அப்போது நடந்த போராட்டங்கள்தான். கொரோனாவால் சில மாதங்கள் அந்தப் போராட்டங்கள் வீரியம் இழந்தன. இப்போது, பல மாதங்களாக அடக்கிவைக்கப்பட்ட மக்களின் கோபம் வெடித்து மாபெரும் மாணவர் போராட்டமாக மலர்ந்திருக்கிறது.

வீழட்டும் மன்னராட்சி! - தயாராகும் தாய்லாந்து

முடியாட்சியை மறு சீரமைப்பு செய்ய வேண்டும், மீண்டும் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களையும் மற்ற புரட்சியாளர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்பதே இப்போதைய கோரிக்கைகள். ஆனால் மன்னரோ, காவல்துறையோ, பிரதமரோ எதையும் கேட்கத் தயாராக இல்லை. மாணவர்களின் இடைவிடாத போராட்டங் களால் இப்போது ‘பேச்சு வார்த்தைக்குத் தயார்’ என இறங்கிவந்திருக்கிறார் பிரதமர். தாய்லாந்து அதிகாரம் மக்கள் சக்திக்கு முன் முதல் முறையாகக் கொஞ்சமாக வளைந்திருக்கிறது.

உலகம் முழுவதும் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களே மக்களை ஆளும் மகத்தான ஜனநாயகம் மலரட்டும்!