Published:Updated:

இன்று சீனப் புத்தாண்டு... சீனர்கள் கொண்டாட்டம்... ஆனால் உலகப் பொருளாதாரம்?!

சீனப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டு

ஆக்ஸ் ஆண்டு பொதுவாக மிகச் சிறந்த பலன்களை அளிக்கும் நம்பிக்கையூட்டும் ஆண்டாகக் கருதப்படுகிறது. எனவே இந்த 2021 சிறந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று சீன மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

ஒரு புத்தாண்டு உலகப் பொருளாதாரத்தையே அதிரவைக்கும்... வர்த்தகத்தையே முடக்கும்... உலக விநியோகச் சங்கிலியையே (Supply Chain) முற்றிலுமாக ஸ்தம்பிக்கவைக்கும் என்றால் நம்பமுடிகிறதா? ஆமாம்... நம்பமுடியாததை எல்லாம் செய்பவர்களான சீனர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்தான் இது அத்தனையையும் செய்கிறது.

இன்று (பிப்ரவரி 12) உலகம் முழுக்க உள்ள சீனர்கள் தங்களின் லூனார் (Lunar) புத்தாண்டைக் கோலாகமாகக் கொண்டாடுகிறார்கள். கடந்த 12 மாதங்களின் துயரங்களையும் மொத்தமாக துடைத்து அழித்து, அழகியதொரு புத்தம் புதிய ஆண்டின் கதவுகளை இந்தப் புத்தாண்டு திறக்கும் என்கிற நம்பிக்கையோடு இந்த நாளை கொண்டாடுகிறார்கள் சீன மக்கள்.

சீனப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டு

புத்தாண்டு தினத்துக்கு முந்தைய இரவு கொடூரமான அரக்கனை பயமுறுத்தி விரட்டுவதற்காக முதலில் பட்டாசுகள் வெடிப்பதும், பின்னர் புத்தாண்டின் காலையில், புதிய அதிர்ஷ்டத்தை வரவேற்க மீண்டும் பட்டாசுகள் வெடிப்பதும் சீனர்களின் வழக்கம். இதோடு டிராகன், சிங்க நடனங்கள், பேரரசர்களின் திருமண வைபோக நடனங்கள், சுவையான உணவு மற்றும் ஆடல் பாடல்களோடு ஒவ்வொரு ஆண்டும் சீனப்புத்தாண்டு களைகட்டும்!

பாதுகாப்பு மற்றும் சூழலியல் மாசு காரணமாக 500-க்கும் மேற்பட்ட சீன நகரங்கள் புத்தாண்டின்போது பட்டாசு வெடிக்கத் தடை விதித்தன. ஆனால் மக்கள் அதனை ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. 13 ஆண்டுகளாக பெய்ஜிங்கில் இருந்த பட்டாசுக்கான தடை 2006-ல் பொதுமக்கள் மூர்க்கமடைந்து புரட்சி செய்ததால் நீக்கப்பட்டது.

2021-ல் கொண்டாட்டம் எப்படி?!

புத்தாண்டுக்காக இவ்வருடம் பிப்ரவரி 11 முதல் 17 வரை சீனாவில் தேசிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனாவால் உலகமே ஆட்டம் கண்டிருப்பதால் இந்த வருடம் பெரிய கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் வழக்கமான மரபுகள், பழக்கவழக்கங்கள் என எதிலும் குறை வைக்காமல் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் மக்கள். Lunar Calendar எனப்படும் சந்திர நாட்காட்டியைப் பயன்படுத்தும் அல்லது அதிகளவில் சீன இனத்தவர் வாழும் தாய்லாந்து, மலேசியா, மியான்மர், கம்போடியா, சிங்கப்பூர், வியட்நாம், கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், சீனர்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, ஐரோப்பாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்துவருகின்றன.

புத்தாண்டுக்குப் பின்னாடி ஒரு பெரிய ஸ்டோரி!

சீனாவில் உள்ள அனைத்து பாரம்பர்ய பண்டிகைகளையும் போலவே, சீனப் புத்தாண்டுக்குப்பினாலும் பல புராணக் கதைகள் இருக்கின்றன. சீனப் புத்தாண்டு தினம் சீன மொழியில் 'குவோ நியான்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் 'ஒரு புதிய ஆண்டைக் கொண்டாடு' அல்லது 'நியானைக் கடத்தல்' என்று பொருள். (நியான்) என்றால் 'ஆண்டு' அல்லது 'அசுரன் நியான்' என்று இருவேறு அர்த்தங்கள் உண்டு!

Lion Dance | சீனப் புத்தாண்டு
Lion Dance | சீனப் புத்தாண்டு

நீண்ட தலை மற்றும் கூர்மையான கொம்புகளுடன் நியான் என்ற ஓர் அரக்கன் இருந்தாகவும், அவன் ஆண்டு முழுவதும் ஆழ் கடலில் வசித்து வந்ததாகவும், அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மக்களையும், கால்நடைகளையும் சாப்பிட்டு அழித்தாகவும் கதைகள் உண்டு. அந்த அசுரன் நியான் மக்களைத் தாக்கி அழிவை ஏற்படுத்துவதைத் தடுக்க, நியானுக்காக தங்கள் வீட்டு வாசலில் மக்கள் உணவை வைக்க ஆரம்பித்தார்களாம். நியான் உரத்த சத்தத்திற்கும் சிவப்பு நிறத்திற்கும் அஞ்சியதால் அதனை விரட்ட மூங்கில்களை எரித்தும், வீட்டு ஜன்னல், கதவுகளில் சிவப்பு விளக்குகளை ஒளிரவும் விட்டார்களாம். அதுவே காலப்போக்கில் மருகி மூங்கிலுக்குப் பதிலாக பட்டாசுகள் வெடிப்பது, திண்பண்டங்கள் பரிமாறுவது என மக்கள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்தனர் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் நியான் (ஆண்டு) என்ற சொல் முதன்முதலில் ஷோ வம்சத்தில் (கிமு 1046-256) தோன்றியது என்றும், மூதாதையர்களுக்கோ அல்லது கடவுள்களுக்கோ தியாகங்களைச் செய்வதும், ஆண்டின் தொடக்கத்தில் அறுவடைகளுக்கு நன்றி தெரிவித்து இயற்கையை வணங்குவதும் அப்போதே ஒரு வழக்கமாகி இருந்தது என்றும் கூறப்படுகிறது.
சீனா புத்தாண்டின் மற்றுமொரு முக்கிய அம்சம் சிவப்பு நிறப் பைகளில் வழங்கப்படும் பரிசுகள். இதன் பின்னணி என்ன?!

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகள் மற்றும் இளையவர்களுக்கு சிவப்பு உறைகளில் பணத்தை வைத்து பரிசாகக் கொடுக்கிறார்கள். இது யசுய் கியான் (Yasui Qian) என்று அழைக்கப்படுகிறது (சுய் என்றால் பணத்தை வைத்தல்).

புராணக் கதைகளின்படி நியான் என்ற அசுரனைத் தவிர, தூங்கும் குழந்தைகளைப் பயமுறுத்துவதற்காக சுய் என்ற ஓர் அரக்கன் இருந்தானாம். அவன் தூங்கிக்கொண்டு இருக்கும் குழந்தைகளின் தலையைத் தொட்டு விட்டால் அவர்கள் சத்தமாக அழுவதற்கு கூட மிகவும் பயப்படுவார்களாம். அதன்பின் கடுமையான காய்ச்சலில் அவதிப்படுவார்களாம். எனவே இந்த சுயால் குழந்தைகளுக்குத் தீங்கு வராமல் இருக்க, பெற்றோர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி, இரவு முழுவதும் விழித்திருப்பார்களாம்.

சீனப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டு

ஒரு புத்தாண்டு தினத்தன்று, ஒரு வீட்டில் தங்கள் குழந்தைக்கு தூங்காமல் விழித்திருக்கச் செய்வதற்காக அவர்களது பெற்றோர் எட்டு நாணயங்களை விளையாடக் கொடுத்தார்களாம். அக்குழந்தை அதை ஒரு சிவப்பு காகிதத்தில் சுற்றி தன் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கிவிட்டதாம். பின் இரவில் வந்த சுய் அரக்கன் அந்த சிவப்பு நிறத்தை பார்த்து பயந்து ஓடி விட்டானாம். அதன்பின் அந்த எட்டு நாணயங்களும் எட்டு தேவதைகளாக மாறி குழந்தைகளைப் பாதுகாத்தனவாம். இதிலிருந்து குழந்தைகளை கெட்ட அரக்கர்களிடம் இருந்து பாதுகாக்கவும், தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு அதிர்ஷ்டம் கொண்டுவரவும் இவ்வாறான சிவப்பு உறையில் சுற்றப்பட்டு பணம் கொடுக்கும் வழக்கம் வந்தது என்கிறார்கள்.

சரி... இது எல்லாவற்றையும்விட சீன புதுவருடம் என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விலங்கின் பெயரால் அது அழைக்கப்படுவது. எதற்காக இவ்வாறு அழைக்கப்படுகின்றது என்பதற்கும் வழக்கம்போல ஒரு சுவையான கதை உண்டு!

முன்னொரு காலத்தில் ஜேட் பேரரசர் தன் காவலுக்கு 12 விலங்குகளைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்து பூலோகத்தில் விலங்குகளுக்கு ஓர் ஓட்டப்பந்தயம் வைத்தாராம். அதில் முதல் 12 இடங்களை பெரும் விலங்குகளுக்கு அதற்கேற்றாற்போல இடங்கள் வழங்கப்படும் என்றாராம். முறையே எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி ஆகியவை முதல் 12 இடங்களைப் பிடித்தனவாம். அதன் பிறகு அவற்றுக்கு முறையே ஒவ்வொரு வருடத்தை பேரரசர் பரிசளித்தாராம்.

அதில் இருந்து சீன வருடங்கள் இந்த 12 விலங்குகளின் பெயர்களால் கொண்டாடப்படுகின்றன என்கிறார்கள். புகழ் பெற்ற Chinese Zodiac இந்த 12 விலங்குகளின் குண இயல்புகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. சீன கலாசாரத்தில் டிராகன், பாம்பு, பன்றி, எலி மற்றும் புலி முதல் 5 அதிர்ஷ்டமான ஆண்டுகளாகவும், மிகவும் பிரபலமான ராசிகளாகவும் கருதப்படுகின்றன.

சீனப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டு

இந்த வருடம் எந்த விலங்கிற்கானது?

2021 'ஆக்ஸ்' (எருது) ஆண்டாகும். 1961, 1973, 1985, 1997, 2009, 2021, 2033 என ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆக்ஸ் ஆண்டு வரும்.

ஆக்ஸ் நீண்ட காலமாக சீன கலாசாரத்தில் அதிகாரத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. மேலும் ஆக்ஸ் ஆண்டு பொதுவாக மிகச் சிறந்த பலன்களை அளிக்கும் நம்பிக்கையூட்டும் ஆண்டாகக் கருதப்படுகிறது. எனவே இந்த 2021 சிறந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று சீன மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

சீனப் புத்தாண்டும், பொருளாதாரமும்!

எந்த ஒரு பண்டிகைக்கும் இல்லாத ஒரு பொருளாதார அதிர்வு சீன புத்தாண்டின்போது உலகெங்கும் நிகழும். பொதுவாக நாம் Amazon, EBay போன்ற தளங்களில் பொருட்கள் வாங்கி இருப்போம். புது வருடம் மற்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் நாம் கொடுக்கும் ஆர்டர்கள் சிறிது தாமதமாகவே வரும். ஆனால் இவற்றை விடவும் சீனப் புதுவருட காலப்பகுதியில் உலக சந்தையில் இறக்குமதி வர்த்தகம் மிகவும் மந்தகதிக்கு சென்றுவிடும். ஏனெனில் உலக சந்தையின் மிக முக்கிய உற்பத்தியாளரான சீனாவில், புத்தாண்டுக் காலத்தில் முழு நாடும் ஹாலிடே மோடிற்குச் சென்றுவிடும். நீண்ட அரச விடுமுறையின் காரணமாக சீன அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சுமார் மூன்று வாரங்களுக்கு மூடப்படும். இதனால் விநியோகச் சங்கிலி முற்றாக ஸ்தம்பித்துவிடும். எனவே அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே உலக நாடுகள் இறக்குமதி செய்து ஓரளவுக்குச் சமாளிக்கும்.

சீனப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டு

2020-ல் சீன புத்தாண்டு ஜனவரி 25-ல் பிறந்தது. ஆனால் அந்த நேரம் கொரோனா பரவல் சீனாவில் உச்சத்தில் இருந்ததால், நாடு முழுவதும் லாக்டெளன் அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். ஆனால் இவ்வருடம் நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் புது வருடத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

பிறக்கும் எருது ஆண்டில் உறுதியோடும் தைரியத்தோடும் சவால்களை முட்டி மோதி வீழ்த்தி வாழ்வை எதிர்கொள்ள சீனர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமுமே தயாராக இருக்கிறது!
அடுத்த கட்டுரைக்கு