பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் இளைய மகனான ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையும், பெண்ணியவாதியுமான மேகன் மார்கெல்லை 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து, அரண்மனை வாழ்க்கையின் ராயல் இமேஜையும், படாடோபத்தையும் தவிர்த்து படு சிம்பிளாக இந்த ஜோடி பொதுவெளியில் இயங்க ஆரம்பித்தது பலரையும் ஆச்சர்யம்கொள்ளச் செய்தது.
இது ஒருபுறமிருக்க தனக்கு ஏற்பட்ட கருச்சிதைவு உட்பட தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களை மேகன் மார்கெல் மக்களிடம் வெளிப்படையாகப் பகிர ஆரம்பித்தார். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல, `நானும் என் மனைவியும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்கிற பொறுப்பிலிருந்து விலகுகிறோம்’ என்று ஹாரி அறிவிப்பை வெளியிட்ட கையோடு, மனைவி, குழந்தையுடன் அமெரிக்காவில் தற்சார்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். அரண்மனைக்கும் இந்தத் தம்பதிக்கும் இடையிலான பிரச்னை அப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில்தான், ஹாரி தன் மனைவி மேகன் மார்கெல்லுடன் இணைந்து சிபிஎஸ் (CBS) என்கிற அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலமான ஒப்ரா வின்ஃப்ரே நடத்திய இரண்டு மணிநேர நேர்காணல், கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நேர்காணலின் பல பகுதிகள் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்ததாக இருப்பதால், உலகமே உற்று நோக்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅரண்மனையின் பிரம்மாண்டத்தையும் அங்கு வாழும் மனிதர்களின் ராஜ வாழ்க்கையையும் பார்த்துவிட்டு, `வாழ்ந்தா இப்படி வாழணும்’ என்று நாம் நினைப்போம்தானே?! ஆனால், இந்த வாழ்க்கையில் தனக்கு மூச்சுத் திணறியதாக இப்பேட்டியில் மேகன் கூறியிருக்கிறார்.
``ராஜ வாழ்க்கையில் நான் மிகவும் தனிமையை உணர்ந்தேன். தனித்து விடப்பட்டதுபோல எண்ணினேன். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம்கூட எனக்கு ஏற்பட்டது” என்று அதில் சொல்லியிருக்கும் மேகன், இந்த எண்ணத்திலிருந்து வெளிவருவதற்காக அரண்மனையை நாடியபோது அவர்கள் எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
``நான் கருவுற்றிருந்த நேரம் அது. எங்களுக்குப் பிறக்கும் குழந்தை கறுப்பு நிறத்துடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அரண்மனையில் உள்ளவர்கள் அப்போது அடிக்கடி பேசிக்கொண்டதாகக் கேள்விப்பட்டவுடன் நான் அதிர்ந்து போனேன்“ என்று ஒப்ராவிடம் மேகன் வேதனை மேலிடத் தெரிவிக்க, ‘'ஆமாம் அப்படித்தான் நடந்தது'’ என்று தன் மனைவி சொன்னதை ஆமோதித்திருக்கும் ஹாரி, யார் யாரெல்லாம் அப்படிப் பேசினார்கள் என்பது குறித்த விவரங்களைப் பகிர மறுத்திருக்கிறார்.

தங்களது திருமணத்தன்று இளவரசர் வில்லியமின் மனைவியான கேத்தே மிடில்டனை தான் அழ வைத்ததாக வரும் செய்திகளில் இம்மியளவும் உண்மையில்லை என்று சொல்லும் மேகன், அவர்தான் தன்னை அழ வைத்ததாகவும், பின்னர் நடந்த சம்பவத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்ததால் அப்பிரச்னை அப்போதே தீர்க்கப்பட்டுவிட்டது என்றும் சொல்லியிருக்கிறார்.
அரச குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விலகி இருக்க முடிவு செய்த அந்தக் கணத்திலிருந்து தன் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் இடையில் இடைவெளி விழ ஆரம்பித்ததாகவும் ஹாரி மனம் திறந்திருக்கிறார். அந்த நேரத்தில் தன் தந்தை சார்லஸ் தனது தொலைபேசி அழைப்புகளைக்கூட எடுக்கவில்லை என்று பேசியிருக்கும் ஹாரி, ``நான் என் தந்தையை மிகவும் நேசிக்கிறேன். அதனால் எனக்கும் என் தந்தைக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த இடைவெளியைச் சரிசெய்வதே என் முக்கியமான இலக்கு” என்றும் நெகிழ்ந்திருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அரண்மனை என்னும் அமைப்புக்குள் தான் இத்தனை காலம் கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்ததாகவும், மேகனைச் சந்தித்து அவரை திருமணம் செய்துகொண்ட பிறகே தான் இதை உணர்ந்ததாகவும் கூறியிருக்கும் ஹாரி, பேட்டியின்போதே இதற்காகத் தன் மனைவிக்கு நன்றி தெரிவிக்கிறார். ``அரச குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விலகி நீங்கள் என்னையும், நம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டீர்கள். உங்களுக்கு என் நன்றி” என்று மேகன் மார்கெல்லும் பதில் நன்றி சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சில பிரிட்டிஷ் ஊடகங்கள், தன்னை பற்றியும் தன் மனைவியைப் பற்றியும் வெளியிட்டுவரும் அவதூறுச் செய்திகளால் தன் மனைவியும் தானும் மனம்நொந்து போயிருப்பதாகவும் பேட்டியில் ஹாரி சொல்கிறார்.

மறைந்த தன் அம்மா குறித்து நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசவும் இவர் தவறவில்லை. ``பிரச்னைகள் எங்களைத் துரத்துகின்றனதான். ஆனால், நான் என் மனைவியின் கையைப் பிடித்தபடி நிம்மதியுடன் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். இதே அன்பும் நம்பிக்கையும் என்னிடமிருந்து என் மனைவிக்குக் கிடைக்கிறது. ஆனால், அம்மா ஒற்றை மனுஷியாக அனைத்தையும் எதிர்கொண்டார். அம்மா விட்டுச் சென்றதை நான் தொடர்கிறேன். எங்களது இப்பயணம் முழுவதும் அம்மா எங்களுடன் இருப்பதாக நான் உறுதியுடன் நம்புகிறேன்” என்று மனம் கலங்கிப் பேசியிருக்கிறார் ஹாரி.
தங்கக் கூண்டிலிருந்து விடுதலை பெற்ற ஜோடிப் பறவைகளின் சிறகுகள் உயர மிதக்கின்றன காற்றில்!