Published:Updated:

`ஒரு தலைவரா இருந்தா கொரோனாவை எப்படிக் கையாண்டிருப்பீங்க?' - மிஸ் யுனிவர்ஸ் 2020 சொன்ன பதில் இதுதான்

மிஸ் யுனிவர்ஸ் ஆண்ட்ரியா மெசா
மிஸ் யுனிவர்ஸ் ஆண்ட்ரியா மெசா ( Twitter Image )

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா மிஸ் யுனிவர்ஸ் 2020 பட்டத்தை தன் வசமாக்கினார்.

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா, மிஸ் யுனிவர்ஸ் 2020 பட்டத்தை தன் வசமாக்கியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அஷ்ட்லைன் கேஸ்லினோ, `மிஸ் திவா 2020' பட்டம் வென்று நான்காம் இடம் பிடித்துள்ளார். போட்டியில் கொரோனா பற்றிய கேள்விக்கு ஆண்ட்ரியா மெசா அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடந்து முடிந்த மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் `மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தைப் பெற்ற ஆண்ட்ரியா, ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, நடைபெற்ற இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.

மிஸ் யூனிவர்ஸ் ஆண்ட்ரியா மெசா
மிஸ் யூனிவர்ஸ் ஆண்ட்ரியா மெசா
Twitter image

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள செமினோல் ஹார்ட் ராக் ஹோட்டல் மற்றும் கேசினோவில் நடந்த இப்போட்டியில், `மிஸ் யுனிவர்ஸ் 2019' ஸோஜிபினி துன்சி, மெசாவுக்கு இந்தப் பட்டத்தை வழங்கினார். முன்னதாக இறுதிப் போட்டியில், மாறிவரும் அழகு மதிப்பீடுகள் குறித்து 26 வயதான மெசாவிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், ``இப்போதெல்லாம் அழகு என்பது, நாம் பார்க்கும் முறை மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை, அழகு என்பது நம் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது நம் இதயத்திலிருந்து பிறப்பது; நம்மை நாம் நடத்தும் விதத்துடன் சம்பந்தப்பட்டது. மேலும் நீங்கள் மதிப்பற்றவர் என்று யாரும் உங்களைச் சொல்ல அனுமதிக்காதீர்கள்'' என்றார்.

தொடர்ந்து கொரோனா குறித்து, `நீங்கள் ஒரு நாட்டின் தலைவராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?' என்று கேள்வி கேட்கப்பட்டபோது, ``இந்தக் கொடுமையான காலகட்டத்தில் நான் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால், இவ்வளவு பெரிதாக இதைப் பரவவிட்டிருக்க மாட்டேன். ஆரம்பத்திலேயே ஊரடங்கை அமல்படுத்தியிருப்பேன். தற்போது நாம் பல உயிர்களை இழந்துள்ளோம். அவற்றை மீண்டும் வாங்க முடியாதல்லவா? அதனால் ஆரம்பத்திலேயே அதைச் சரிசெய்ய முயன்றிருப்பேன்'' என்றார்.

இந்தப் போட்டியில் கலந்துகொண்ட 73 நாடுகளைச் சேர்ந்த பெண்களில், மெக்ஸிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசாவுக்கு `மிஸ் யுனிவர்ஸ் 2020' பட்டம் சூட்டப்பட்டத்தைத் தொடர்ந்து, மிஸ் பிரேசில் ஜூலியா காமா, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஸ் பெரு, ஜானிக் மாசெட்டா டெல் காஸ்டிலோ மூன்றாம் இடத்தைப் பிடித்தார். இந்தியாவைச் சேர்ந்த அட்லைன் காஸ்டெலினோவால் நான்காவது இடத்தைப் பிடித்தார். அவர் `மிஸ் திவா யுனிவர்ஸ் 2020' என முடிசூட்டப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு