தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

உலகத்துல உள்ள அத்தனை பேரையும் எப்படி சந்தோஷப்படுத்த முடியும்?

சுதா ரகுநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
சுதா ரகுநாதன்

சுதா ரகுநாதன்

சங்கீதம்... சாகரம்...

`வெற்றி வேண்டும். அது தரும் வெளிச்சமும் வேண்டும். விமர்சனங்கள் மட்டும் கூடாது...' - புகழ் போதையை விரும்பும் பலரின் எதிர்பார்ப்பும் இப்படித்தான் இருக்கிறது. யதார்த்தம் அப்படி இருப்பதில்லை. வெற்றிகளைக் கொண்டாடுகிற அதேநேரம் விமர்சனங்களும் வீட்டு வாசலில் நிற்கும். சர்ச்சைகளும் சவால்களும் வரிசையில் காத்திருக்கும். நூற்றாண்டு பிரபலம் முதல் நேற்று ஒளிவட்டத்துக்குள் வந்தவர்வரை யாரும் இதிலிருந்து தப்புவதில்லை.

`` `மத்தவங்க போடற சத்தத்துக்கெல்லாம் நீ பதில் கொடுத்துட்டிருந்தா, அது இன்னும் பெரிசுதான் ஆகும். அப்படியொரு சூழலை ஏற்படுத்திக்காதே...’ - இது என் குரு எம்.எல்.வி அம்மா எனக்குச் சொன்ன பால பாடம். இன்னிக்கும் அதைத்தான் ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்...’’ - ‘சங்கீத கலாநிதி’ முதல் வேற்றுமதத்தைச் சேர்ந்த, வேற்று நாட்டவருடான மகளின் திருமணம் வரை பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் சுதா ரகுநாதனின் வார்த்தைகள் இவை.

தொடர் விமர்சனங்களும் அவை தரும் காயங்களும் ஒருவரை மனதளவில் இறுகச் செய்யும். சமுதாயத்திலிருந்து விலகியிருக்கச் சொல்லும். சுதா ரகுநாதனிடமோ இன்றும் அதே சிநேகம்... அதே அமைதியான அழகான அணுகுமுறை... சுதாவுக்கு 63 வயது என்கிறது விக்கிபீடியா. பொறாமையாக இருக்கிறது!

சுதா ரகுநாதன்
சுதா ரகுநாதன்

இந்த வருட சங்கீத சீசனுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவரிடம் அதையே முதல் கேள்வியாக்கி உரையாடலை ஆரம்பித்தோம்.

என்ன ஸ்பெஷல் இந்த வருஷம்... அபூர்வ ராகங்களை எதிர்பார்க்கலாமா?

பாடற அத்தனையுமே ஸ்பெஷல்தான்.கர்னாடக சங்கீதத்தில் `மிக்ஸ் அண்டு மேட்ச்'னு ஒரு விஷயம் இருக்கு. அதாவது பழசையும் பாடணும், கொஞ்சம் புதுமையையும் அதுல புகுத்தணும். அப்படிப் பார்த்தா தியாகராஜர் கீர்த்தனை, ஷ்யாமா சாஸ்திரி தீட்சிதர், பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதின்னு வரிசையா நம்முடைய பழைய பொக்கிஷங்கள்லேருந்து நிறைய எடுத்து ராகம், தானம், பல்லவியிலோ, பாரதிதாசன் பாடல்களிலோ சேர்க்கலாம். பழைமையை மறுபடி கொண்டுவர்றதே ஒருவகையில் புதுமைதான். பாடவே படாத அல்லது அதிகம் பாடப்படாத ராகங்கள் நிறைய இருக்கு. அந்த ராகங்களை திடீர்னு ஒரு சீசன்ல கொண்டுவர முடியாது. கச்சேரிக்கு வர்றவங்க சங்கீதம் தெரிஞ்சவங்களாகவும் இருக்கலாம். `சுதா கச்சேரியா... போய் பார்ப்போமே'ன்னு நினைச்சு வர்றவங்களாகவும் இருக்கலாம். அந்தச் சூழல்ல எல்லாத்தையும் புதுசா பாட முடியாது. பழைமையையும் புதுமையையும் எப்படித் தரணும்னு ஓர் அளவு இருக்கு. அந்த அளவோடு ரெண்டையும் கொடுத்தா, புதுசையும் ஏத்துப்பாங்க. பழசுல இதெல்லாம் இருக்கான்னு தெரிஞ்சுப்பாங்க. ரெண்டு தரப்பையும் திருப்திப்படுத்த முடியும். இந்த வருஷம் பாடறதுக்காக சித்ராம்பரி, நாசிகாபூஷணி மாதிரி சில அபூர்வ ராகங்களை வெச்சிருக்கேன்.

கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதுண்டா? நிறைவா இருக்கா அல்லது செய்ய வேண்டியது நிறைய இருக்குன்னு தோணுதா?

ரெண்டுமே இருக்கு. பழசை நினைச்சுப் பார்க்கிறதும் நன்றியோடு இருக்கிறதும் மனுஷங்களுடைய கடமைனு நினைக்கிறேன். அப்படிப்பார்த்தா, எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்த எல்லாரையும் நான் நினைச்சுப் பார்க்காத நாளில்லை. எல்லோரோடும் இன்னிக்கும் தொடர்பிலிருக்கேன்.இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில முதல் வருஷம் தம்புரா பரிசு வாங்கினேன். தம்புரா பரிசு வாங்கினவங்களுக்கு அடுத்த வருஷம் முதல் ஸ்லாட்டில் கச்சேரி பண்ற வாய்ப்பு கிடைக்கும். அப்படித்தான் நான் கச்சேரிகளை ஆரம்பிச்சேன். டீன்ஏஜரா 12 மணி கச்சேரி பண்ண ஆரம்பிச்சு, இது எனக்கு 40-வது வருஷம். நிச்சயம் நிறைவா ஃபீல் பண்றேன். இன்னும் பண்ண வேண்டியது நிறைய இருக்குங்கிற எண்ணமும் இருக்கு. கர்னாடக சங்கீதம் என்பது பெரிய சாகரம். அதுல ஆழத்துக்குப் போகப்போக முத்துகள் கிடைக்கும். ஓர் உண்மையான கலைஞனுக்கு நிறைவு நிச்சயம் கிடைக்காது. அந்த தாகமும், `இன்னும் கத்துக்கணும்' என்ற தேடலும், `பர்ஃபார்ம் பண்ணணும்' என்ற ஆசையும் எந்தக் காலத்துலயும் குறையாது!

எம்.எல்.வி அம்மா இன்னிக்கு இருந்திருந்தா உங்க கச்சேரிகளைப் பார்த்து என்ன சொல்லியிருப்பாங்க? அவங்க இழப்புலேருந்து முழுமையா வெளியில வந்துட்டீங்களா?

சந்தோஷப்பட்டிருப்பாங்க. அம்மாவோடு 13 வருஷங்கள் இருந்தேன். என் கச்சேரிகளுக்கு வரக்கூடிய சந்தர்ப்பமே அவங்களுக்கு அமையலை. பிசியாவே இருந்தாங்க. எனக்குமே `அம்மா என் கச்சேரிக்கு வந்துடக் கூடாதே'ன்னுதான் இருந்தது. சிகரத்தில் இருக்கிற என் குரு... என் கச்சேரிக்கு வந்தாங்கன்னா என்ன நினைப்பாங்களோன்ற பயம், பதற்றம் காரணமா அன்னிக்கு அப்படி நினைச்சிருக்கேன். இன்னிக்கு வருத்தப் படறேன். `கட்டாயப்படுத்தி அவங்களை என் கச்சேரிக்கு வரச் சொல்லியிருக்கணுமோ'ன்னு நினைக்கிறேன்.

Sudha Ragunathan
Sudha Ragunathan

எம்.எல்.வி அம்மா எனக்கு ரெண்டாவது தாய் மாதிரி இருந்தாங்க. காலேஜ் போற நேரம் தவிர பெரும்பாலும் அவங்களோடவே இருந்திருக்கேன். என்னுடைய ஆசைகள், தேவைகள் எல்லாம் தெரிஞ்சவங்க அவங்க. தம்புரா போட ஆரம்பிச்சு, அப்புறம் அவங்ககூட பாட ஆரம்பிச்சேன். அவங்க இழப்புலேருந்து மீள ரொம்பக் கஷ்டப் பட்டேன். அவங்க நினைவாதான் என் மகளுக்கு `மாளவிகா'ன்னு பெயர் வெச்சேன். அவளைப் பார்க்கிறபோதும், கூப்பிடறபோதும் என் குருவை நினைச்சுக்கிற உணர்வை நானா கொண்டு வந்தேன்.அவங்களுடைய சங்கீதம் மனிதர்களுக்குள்ளே அவ்வளவு பெரிய பாதிப்பை, வியப்பை ஏற்படுத்தும்.அவங்க குரல்ல ஒரு ஜிலுஜிலுப்பு இருக்கும். வருத்தமாகவோ, ஏமாற்றமாகவோ இருக்கும்போது அவங்க பாடல்களைக் கேட்டால், டக்குனு எழுந்து உட்காரவெச்சிடும். ஒவ்வொரு முறை தம்புராவில் ஸ்ருதி சேர்க்கும் போதும் அழுகையா வரும். சங்கீதத்தின் மூலமா அவங்க எப்படியும் என்கூட இருக்காங்கன்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா வெளியில வந்தேன்.

எம்.எல்.வி தன்னுடைய கடைசி காலத்துல சந்திச்ச விமர்சனங்களைப் பக்கத்துல இருந்து பார்த்தவங்க நீங்க. இன்னிக்கு நீங்களும் விமர்சனங்கள்லேருந்து தப்பலை. விமர்சனங்களை எதிர்கொள்வது எவ்வளவு பெரிய சுமையா இருக்கு?

`கலைத்துறையில இருக்கிற நீ தைரியத்தை வரவழைச்சுக்கணும். இங்கே யார் வேணா என்ன வேணா சொல்லலாம். அது அவங்க சுதந்திரம். அது சரியா, தப்பாங்கிறதை நீ முடிவு பண்ணு. சரியாயிருந்து அந்த விமர்சனம் உனக்கு உதவும்னு நினைச்சா, அதுல உள்ள நல்லதை எடுத்துக்கோ. ராகங்களை அணுகுவது தொடர்பா விமர்சனம் பண்ணினா, அதுல உள்ள நல்லதை எடுத்துக்கோ. மற்ற விஷயங்களை நீ பொருட்படுத்தாதே. சத்தம் போடுவாங்க, தானா அடங்கிடுவாங்க. நீ பதில் கொடுத்தா கண்டிப்பா அது பெரிசாகும். அப்படியொரு சூழலை ஏற்படுத்திக்காதே'ன்னு எம்.எல்.வி அம்மா எனக்கு அட்வைஸ் பண்ணினாங்க. பகவத் கீதையின் மேல் சத்தியம் பண்ற மாதிரி அவங்க வார்த்தைகளை நான் எனக்கான சத்திய வாக்கா எடுத்துக்கிட்டேன்.

உலகத்துல உள்ள அத்தனை பேரையும் எப்படி சந்தோஷப்படுத்த முடியும்?

பாட்டைப் பற்றி, என்னைப் பற்றி, என் உடைகளைப் பற்றி... இதோ சமீபத்துல என் மகளின் கல்யாணம் வரைக்கும் நிறைய விமர்சனங்களைக் கடந்து வந்திருக்கேன். உலகத்துல உள்ள அத்தனை பேரையும் எப்படி சந்தோஷப்படுத்த முடியும்? அவங்களுடைய எதிர்பார்ப்புகளை நாம எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என் குரு சொல்லிக்கொடுத்த மாதிரி பாடறதைப் போலவே, அவங்க சொன்ன அறிவுரைகளையும் ஃபாலோ பண்றேன். பேசறவங்க பேசிட்டேதான் இருப்பாங்க. கண்டுக்காம இருந்தா, ஒரு கட்டத்துல அவங்களே அடங்கிடுவாங்க. ஒருத்தரைப் பற்றி விமர்சனம் பண்ண இன்னொருத்தருக்கு என்ன உரிமை இருக்கு. அதே கஷ்டமோ, அதே சூழலோ அவங்களுக்கு வராதுன்னு என்ன நிச்சயம்? என் குடும்பம், ஃபிரெண்ட்ஸின் சப்போர்ட் எனக்குப் பெரிய கவசமா இருந்திருக்கு. நல்லதை மட்டுமே வலியுறுத்தறவங்க எல்லாரும். அதனால நெகட்டிவ் விமர்சனங்களைக் கடக்கிறது எனக்கு சவாலா தெரியலை.

மேடையில குரல் எடுபட்டா போதாதா? பட்டுப்புடவையும் நகையும்தான் உங்க பெருமை பேசணுமா?உங்க மகளோ, மகனோ இசையில் உங்க பேர் சொல்ல வாரிசாக வராமல் போனதில் வருத்தம் உண்டா?

இன்னும் பல கேள்விகளுக்கு அடுத்த இதழில் விடையளிக்கிறார் சுதா ரகுநாதன்