லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

முதல் பெண்கள்: ஜோதி வெங்கடாசலம்

ஜோதி வெங்கடாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதி வெங்கடாசலம்

ஆளுநர் பதவி வகித்த முதல் தமிழ்ப் பெண்; நாடு விடுதலை அடைந்தபின் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர்

``இந்திரா காந்திக்கும் அத்தைக்கும் இடையே மிக நெருங்கிய நட்பு இருந்தது. அரசியல் தாண்டிய நட்பு அது. ராஜீவ் பிறந்திருந்தபோது தன் கையால் பின்னிய பின்னலாடை செட் ஒன்றைப் பரிசளித்திருந்தார் அத்தை. ஆனால், பின்னாளில் காமராஜரின் காங்கிரஸ் (ஓ)விலிருந்து இந்திரா தலைமையிலான இ.காங்கிரஸுக்குக் கட்சி மாறச் சொல்லி நெருங்கிய தோழியான இந்திரா வேண்டுகோள் வைத்தபோதும் மறுத்துவிட்டார். மொரார்ஜி தேசாயால் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர் களை இந்திரா பிரதமர் பதவிக்கு வந்ததும் இடமாற்றம் செய்தாலும், அத்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நட்புக்கும் அரசியலுக்கும் இடையேயான அந்த மெல்லிய கோட்டை மிகச் சரியாகப் பராமரித்து வந்தவர் அத்தை...

காங்கிரஸில் அமைச்சராக இருந்தாலும், எங்கள் வீட்டு விழாக்களுக்கு எம்.ஜி.ஆர், கலைஞர் எனப் பிற கட்சித் தலைவர்களை அழைக்க அவர் தயங்கியதே இல்லை. கலைஞரும் அவர் குடும்பத்தினரும் மட்டுமல்ல; எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள், ஈ.வி.கே.எஸ். சம்பத் போன்றோரும் அத்தையிடம் நல்ல நட்பு பாராட்டினார்கள்” என்று தன் மாமியார் ஜோதி வெங்கடாசலம் குறித்து சொல்கிறார் அவர் மருமகளான பத்மினி தியானேசுவரன். சென்னை ராணி மேரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் இவர்.

முதல் பெண்கள்: ஜோதி வெங்கடாசலம்

பர்மா நாட்டின் மலை நகரமான மேய்மியோவில் 1918 அக்டோபர் 27 அன்று ஜி.குப்புராம் - மீனாபாய் தம்பதியின் இரண்டாவது மகளாகப் பிறந்தார் ஜோதி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் எஃப்.ஏ படித்திருந்த குப்புராமுக்கு பர்மிய அரசில் செயலாளர் பணி கிடைக்க, அங்கேயே பணியாற்றத் தொடங்கினார். ரங்கூன் நகரிலுள்ள அமெரிக்கன் பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியிலும், தூய ஆன்டனிஸ் பள்ளியிலும் கல்வி கற்றார் ஜோதி. 1930-களில் பர்மாவில் நிலவிய அரசியல் குழப்பநிலை காரணமாகப் பணியை ராஜினாமா செய்த குப்புராம், குடும்பத்துடன் சொந்த ஊரான சென்னைக்கே குடிபெயர்ந்தார்.

சென்னை வேப்பேரியிலுள்ள எவார்டு உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார் ஜோதி. மொழியறிவு ஜோதியின் மிகப்பெரிய பலம். ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, பர்மிய மொழி என ஆறு மொழிகளில் ஜோதி பேசவும் எழுதவும் கூடியவர்; வரலாறு படிப்பதில் அதீத ஆர்வம்கொண்டவர்; ஆங்கிலேய வரலாறு குறித்து மணிக்கணக்கில் பேசக்கூடியவர். பள்ளியில் படிக்கும்போதே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றிருக்கிறார் ஜோதி. மேடைப் பேச்சில் கைதேர்ந்தவர் என்ற பெயரும் எடுத்தார். குப்புராமின் குடும்பமே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றது.

1935-ம் ஆண்டு, அன்றைய மதராஸில் பிரபலமான பி.வெங்கடாசலம் அண்டு கோ குடும்ப வாரிசான பி.வி.எஸ்.வெங்கடாசலத்துடன் ஜோதியின் திருமணம் நடைபெற்றது. மதராஸின் ஊறுகாய் ராஜா என்று அறியப்பட்ட பி.வெங்கடாசலம் `மதராஸ் கறி பவுடர்' என்ற பெயரில் வெளிநாடு களுக்கு மசாலாக்களையும் ஊறுகாய்களையும் ஏற்றுமதி செய்து வந்தார். பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து அரசியின் உணவு மேஜையில் இடம்பிடித்திருந்தன வெங்கடாசலத்தின் ‘கறி பவுடர்’ மசாலாக்கள்!

ஜோதி - வெங்கடாசலம் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் என்பது கூடுதல் சிறப்பு. அன்றைய மதராஸில் பெரும் பேசுபொருளானது இந்தத் திருமணம். விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு அரசியல் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர் இந்த லட்சியத் தம்பதியர். காங்கிரஸ் கட்சி முன்னெடுத்திருந்த விடுதலைப் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டனர். ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் முன்நின்றனர். கூட்டுக் குடும்பமாக வேப்பேரியில் `கல்யாண்' என்ற பங்களாவில் வசித்துவந்தனர். ஒவ்வொரு வேளையும் 30-35 பேருக்கு சமையல், பூஜை, குடும்ப நிர்வாகம் என்று பரபரப்பாக இருந்த நிலையிலும், அக்கம்பக்கமுள்ள குடிசைப் பகுதிகளுக்குச் சென்று சமூகப் பணி செய்தார் ஜோதி.

சாதி, பொருளாதாரப் பின்புலம் கீழ்நோக்கி இருந்தாலும், வாழ்க்கை முன்னேற்றத்துக்குக் கல்வி அவசியம் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் புரியவைப்பதையே தன் பணியாகக் கொண்டார் ஜோதி. `வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமென்றால் கல்வி மட்டுமே பற்றுகோல்' என்று தங்களிடம் வாதாடிய ஜோதியின் நினைவாக அந்தக் குடிசைப் பகுதி மக்கள், தங்கள் குடியிருப்புக்கு ஜோதி நகர் என்று பெயர் வைத்தனர். இன்றும் வேப்பேரியில் ஜோதி வாழ்ந்த பகுதிக்கு அருகே `ஜோதி நகர்' என்ற குடியிருப்புப் பகுதி, அவர் பெயர் சொல்லி நிற்கிறது.

கணவர் வெங்கடாசலம் மதராஸ் நகரின் ஷெரிஃப் பதவியில் அமர, ஜோதியின் சமூகப் பொறுப்பும் பணிகளும் இன்னும் அதிகரித்தன. தம்பதிக்கு சிவசுப்பிரமணியன், அனுசுயா, தியானேசுவரன் என மூன்று குழந்தைகள். சிந்தாதிரிப்பேட்டையில் வாடகை வீடு ஒன்றில் ஏழைகளுக்கான பள்ளியைத் தொடர்ந்து நடத்தினர். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள குடும்பக் கோயிலான தட்சிணாமூர்த்தி கோயில் வளாகத்தில் இலவச மருத்துவமனை நடத்தினர். இன்றும் ஜோதி நகரில் உள்ள கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கு புரவலர்களாக இந்தக் குடும்பமே இருக்கிறது.

ஜோதி வெங்கடாசலம்
ஜோதி வெங்கடாசலம்

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஜோதி முன்னெடுத்த முயற்சிகள் காங்கிரஸ் தலைவர்களைக் கவர்ந்தன. காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த விடுதலைப் போராட்டக் கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றி வந்தார் ஜோதி. ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் என அன்றைய காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவைப் பெற்றார். 1953-ம் ஆண்டு, திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு, மதராஸ் மாகாண சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு - ஆந்திர மாநிலப் பிரிவு ஏற்படுத்தப் பட்டபோது அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்ய, 1953 அக்டோபர் 10 அன்று ஜோதியை பெண்கள் நலத்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக நியமித்தார் முதல்வர் ராஜாஜி. நாடு விடுதலை பெற்றபின் பதவியேற்ற முதல் பெண் அமைச்சரானார் ஜோதி வெங்கடாசலம். குறுகிய காலத்தில் மதுவிலக்குத்துறையை காவல்துறையுடன் இணைத்து உத்தரவிட்டு, கள்ளச்சாராய ஒழிப்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கக் காரணமும் ஆனார்.

1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜாஜி பதவியைத் துறந்தபின் முதல்வரானார் காமராஜர். ஆனால், காமராஜரின் அமைச்சரவையில் ஜோதி இடம்பெறவில்லை. ஓராண்டு மட்டுமே அமைச்சர் பதவி வகித்திருந் தாலும், மேலவை உறுப்பினராகவே தன் பணியைத் தொடர்ந்தார் ஜோதி.

1961 ஜூலை 19 அன்று நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் அகால மரணமடைந்தார் வெங்கடாசலம். சொந்த வாழ்க்கையின் வலியி லிருந்து மீண்டெழ, ஜோதி இன்னும் அதிகமாக சமூகப்பணியில் அக்கறை காட்டினார். 1962-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எழும்பூர் தொகுதியில் வென்றார். இம்முறை ஜோதிக்கு அமைச்சர் பதவியை விரும்பி அளித்தார் காமராஜர். மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாரத்துறை, மகளிர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் ஜோதி. 1963-ம் ஆண்டு, `காமராஜர் திட்டம்' நிறைவேற தன் பதவியைத் துறந்தார் காமராஜர். அதன்பின் பக்தவத்சலம் முதல்வரான பின்பும் ஜோதி பணியில் நீடித்தார்.

இந்தப் பதவி காலத்தில் ஜோதியால் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர முடிந்தது. ஏழரை ஆண்டுகள் படிக்கவேண்டிய மருத்துவக்கல்வியை ஐந்தாண்டுக் காலப் படிப்பாக மாற்றியது ஜோதிதான். கோவை, நெல்லை, தஞ்சை, செங்கல்பட்டு நகரங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வழிவகை செய்தார். இவர் காலத்தில்தான் குடும்பநலத் திட்டம் முழு வீச்சில் செயற் படுத்தப்பட்டது. மகளிர் நலத்துறை அமைச்சராக இருந்த காரணத்தால் பெண்கள் முன்னேற்றத்துக்கென பல முக்கிய முன்னெடுப்புகளை ஜோதியால் எடுக்க முடிந்தது. மகளிர் நலத்துறையை மறுகட்டமைப்பு செய்தார். மாவட்டம்தோறும் மகளிர் நல அதிகாரிகளை நியமித்தார்.

பஞ்சாயத்துதோறும் ‘மகளிர் மன்றம்’ என்ற அமைப்பை நிறுவி மகளிர்நல ஒருங்கிணைப் பாளர்கள் மூலம் பெண்களை ஒருங்கிணைத்து கைவினைத் தொழிற்பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். 97 மாதர் சங்கங்கள் தமிழ்நாட்டில் செயற்படத் தொடங்கின. இந்தச் சங்கங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு, தேர்ச்சிபெற்றவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பாய் முடைதல், மூங்கில் வேலைப்பாடு, கயிறு திரித்தல், பொம்மை செய்தல், பனை ஓலையில் பொருள்கள் செய்தல், தையல் வேலை எனப் பல கைவினைத் தொழில்களைக் கற்றுத் தரவும் தயாரிக்கவும் 33 சிறு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன.

ஆதரவற்ற பெண்களுக்கு உதவ அரசு சேவை இல்லங்கள் தாம்பரம், தஞ்சை மற்றும் கடலூரில் தொடங்கப்பட்டன. இவற்றில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கி, ஆதரவு தேடிவரும் பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி தந்து சொந்தக்காலில் நிற்கும் வாய்ப்பை வழங்கினார் ஜோதி. 10,000 பெண்களுக்கு ஒரு தாய்சேய் நல மையம் கண்டிப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தாய்சேய் நல மையங்களை பஞ்சாயத்துகள் எடுத்து நடத்திட வழிசெய்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் நல செயல்விளக்கத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். 1967 மார்ச் 3 அன்று வரை அமைச்சராக செவ்வனே பணியாற்றினார். 1974-ம் ஆண்டு, இவரது அயராத சமூகத் தொண்டைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.

“ `எனக்கு மிகவும் பிடித்த எதிர்க்கட்சித் தலைவி, நான் மிகவும் மதிக்கும் தலைவி ஜோதி வெங்கடாசலம்தான்' என்று கலைஞர் அடிக்கடி சொல்வதுண்டு. அத்தைக்கு பக்தி அதிகம். தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் பூஜை செய்வார். நவராத்திரி கொலு எங்கள் வீட்டில் வெகு பிரசித்தம். கொலுவுக்கு எம்.எஸ் கச்சேரி உண்டு. திருவிதாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி, பி.சுசீலா, லீலா, சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எஸ்.ஜெயராமன், ஜெமினி போன்றோர் எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வந்து செல்வதுண்டு. `கல்யாண்' எப்போதும் கலகலவென்றே இருக்கும்” என்று நினைவுகூர்கிறார் பத்மினி.

முதல் பெண்கள்: ஜோதி வெங்கடாசலம்

1977-ம் ஆண்டு, பேறுகாலத்துக்கென மருத்துவமனையில் மருமகள் பத்மினியை சேர்ப்பதற்கு முந்தைய நாள் டெல்லியிலிருந்து பிரதமர் மொரார்ஜி தேசாய் அழைப்புவிடுக்க, அங்கு பயணமானார் ஜோதி. கேரள மாநில ஆளுநர் பதவிக்கு அவரை நியமித்து உத்தரவிட்டார் குடியரசுத் தலைவர். `கவர்னர் பேரன், கவர்னருக்குப் பேரன் பிறந்திருக்கிறான்' என்று சொல்லி அடுத்த நாள் தனக்குப் பிறந்த மகனை மருத்துவமனை ஊழியர்கள் தூக்கிக் கொஞ்சியதையும் நினைவுகூர்கிறார் பத்மினி.

திருவனந்தபுரம் சென்ற ஜோதி தனக்குத் தரப்பட்ட ஆளுநர் பணியை பொறுப்புடன் செய்யத் தொடங்கினார். ஏ.கே.ஆண்டனி, கருணாகரன் ஆகிய இரு பெரும் அரசியல் தலைவர்கள் முதல்வர்களாகச் செயல்பட்ட காலம் அது. ஜோதி ஆளுநர் பணியாற்றிய 1977 அக்டோபர் 14 முதல் 1982 அக்டோபர் 26 வரை இருமுறை ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கேரளாவில் அமலுக்கு வந்தது.

`எனக்கு மிகவும் பிடித்த எதிர்க்கட்சித் தலைவி, நான் மிகவும் மதிக்கும் தலைவி ஜோதி வெங்கடாசலம்தான்' என்று கலைஞர் அடிக்கடி சொல்வதுண்டு.

“இந்த அரசியல் குழப்பம் பாட்டியின் உடல்நலனுக்குக் கேடாக அமைந்தது. ருமாட்டிசம் அதிகரித்தது. உடல்நலத்தை அவர் சரியாகப் பராமரிக்கவில்லை. யார் என்ன சிகிச்சை சொன்னாலும் உடனே அதைச் செய்துவிடுவார். இதனாலேயே 1982-ம் ஆண்டு, ஆளுநர் பதவிக்காலம் முடிந்ததும் குடியரசு துணைத் தலைவர் பதவி அவரைத் தேடி வந்தபோது அவர் அதை ஏற்கவில்லை. ஒருவேளை அதை ஏற்றுக்கொண்டிருந்தால், நாட்டின் முதல் பெண் குடியரசு துணைத் தலைவர் என்ற பெருமை பாட்டிக்குக் கிடைத்திருக்கும்” என்று சொல்கிறார் அவரது பேரன் பி.வி.எஸ்.வெங்கடசுப்ரமணியன். பி.வெங்கடாசலம் குழுமத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார் இவர்.

தன் இறுதிக் காலத்தில் சென்னை அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார் ஜோதி. அங்குதான் 1992 நவம்பர் 28 அன்று மரணமடையும் வரை சிகிச்சை பெற்றிருக்கிறார்.

ஜோதி வசித்த வேப்பேரி ஹாட்கின்சன் சாலை `ஜோதி வெங்கடாசலம் சாலை' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அவர் விருப்பத்துடன் தொண்டாற்றிய ஜோதி நகரின் மக்கள் இன்னமும் தன்னை `ஜோதி அம்மா மருமகள்' என்று சொல்லி, தன்னை கையெடுத்து வணங்குவதாக நெகிழ்கிறார் ஜோதியின் மருமகள் பத்மினி. முகம் தெரியாத யாரோ சிலரது மனங்களில் வாழ்வது எவ்வளவு பெரிய வரம்!