என்னை நம்பியிருப்பது என் குடும்பம் மட்டுமல்ல... பல ஆயிரம் குடும்பங்கள்! - காளியம்மாள்

நம்ம ஊர் நைட்டிங்கேல்
கொரோனாவுக்கு எதிரான போரில் கவச ஆடைகளுடன் யுத்தகளத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள் மருத்துவர்களும் செவிலியர்களுமே. சுற்றிச்சுழன்று கொண்டிருக்கும் செவிலியர்களின் பர்சனல் பக்கங்களைத் தெரிந்துகொள்வதற்காக, தேனி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் காளியம்மாளிடம் பேசினோம்.
``2020-ம் ஆண்டை சர்வதேச செவிலியர் ஆண்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அறிவிப்பு வந்தவுடன், கொண்டாட்ட மனநிலைக்கு நாங்கள் தயாராகிவிட்டோம். ஆனால், ஜனவரி இறுதியிலிருந்தே கொண்டாட்டத்தைவிட சேவைதான் முக்கியம் என்கிற எண்ணத்துக்குள் சென்றோம். காரணம், கொரோனா!
முதலில் கொரோனா நோயாளி களுக்கென பிரத்யேக வார்டுகள் இல்லை.

அதனால் சாதாரண உள்நோயாளிகளைக்கூட கவனத்துடனேயே அணுகினோம். மருத்துவமனைக்கு வரும் எல்லாருக்கும் முன்னெச்சரிக்கை விஷயங்களைத் தொடர்ச்சியாக சொல்லிக்கொடுத்தோம்.
முன்பெல்லாம் தினமும் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குப்போன பிறகு கைகால்களைக் கழுவிவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்குவேன். கொரோனா பரவல் தொடங்கிய பிறகு வீட்டுக்கு வந்ததும் அன்றைய நாள் முழுவதும் நான் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளையும் சோப் போட்டு, சுத்தப்படுத்திய பிறகுதான் வீட்டுக்குள்ளேயே எடுத்துப்போவேன். மருத்துவமனையில் அதிக வேலை காரணமாக சோர்வுடன் வீட்டுக்கு வந்தாலும்கூட, ஒரு மணி நேரம் பொருள்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, குளித்துவிட்டுதான் மற்ற பணிகளைத் தொடங்குவேன்.
என் கணவரும் செவிலியர்தான், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். நாங்கள் இருவரும் செவிலியராக இருப்பது பாசிட்டிவ்வான விஷயம்தான். நோய்த்தொற்று காலத்தில் இதுவே சிக்கலான விஷயமாகவும் மாறிவிடும். காரணம், இரண்டு பேருமே வேலைக்குப் போக வேண்டியிருக்கும். இருவருக்குமே நோய் தொற்றுவதற்கான சாத்தியங்களும் அதிகம். வீட்டையும் குழந்தைகளையும் சரியாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் மனது முழுக்க நிறைந்திருக்கும்.

ஒரே ஆறுதல், பிள்ளைகள் எங்களை நன்கு புரிந்துகொள்கிறார்கள். ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகள்தான் உடம்பு முடியாத என் அம்மாவைக் கவனித்துக்கொள்கிறாள்.சில நேரத்தில் என் அம்மா சொல்லச் சொல்ல அவளே சமைக்கிறாள்.
என் பையனுக்கு எட்டு வயது. துணி துவைப்பதிலிருந்து சாப்பிட்ட தட்டைக் கழுவிவைப்பதுவரை அவன் வேலைகளை அவனே பார்த்துக்கொள்கிறான். ஒருபக்கம் சந்தோஷமாக உணர்ந்தாலும் குழந்தைகள் வேலை செய்வதைப் பார்க்கும்போது ஓர் அம்மாவாக வருத்தமாக இருக்கும்.
நாங்கள் செவிலியர் பணியில் சேரும் போதே, பணியின்போது என்ன நடந்தாலும் அதைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். சோர்ந்து போகும்போதும், மனதளவில் தடுமாறிப்போகும்போதும் அதை மனத்தில் நினைத்துக்கொள்வேன். தினமும் காலையில் 4:30 மணிக்கு எழுந்திருப்பது என் வழக்கம். ஒவ்வொரு விடியலிலும் எனக்கு நானே சொல்லிக்கொள்வது, `நம்மளை நம்பி, நம் குடும்பம் மட்டுமல்ல... பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கு’ என்பதைத்தான்” - உணர்ச்சிகரமாகப் பேசி முடிக்கிறார் காளியம்மாள்.
காளியம்மாளின் கணவர் செல்வகுமார் கொரோனா வார்டு பணியை முடித்துவிட்டு, இப்போது க்வாரன்டீனில் இருக்கிறார். கொரோனா பரிசோதனைக்கு அவரின் மாதிரிகளும் அனுப்பி வைக்கப்பட்டிருக் கின்றன. க்வாரன்டீன் முடிந்து கணவர் ஆரோக்கியமாக திரும்பியவுடன், காளியம் மாள் கொரோனா வார்டுக்குச் செல்லப் போகிறாராம்.
“கொரோனா நோயாளிகளைப் பராமரிக்க என் கணவருக்குக் கிடைத்த வாய்ப்பு எனக்கும் கிடைக்கப்போகும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்!” உறுதியான குரலில் சொல்கிறார் காளியம்மாள்.
இணையருக்கு வாழ்த்துகளோடு நன்றியும் சொல்வோம்!