Published:Updated:

``18 நாள்ல 140 சடலங்கள், தகனமேடை தண்டவாளமே உருகிடுச்சு!

கண்ணகி
News
கண்ணகி

``அக்கம், பக்கம் இருக்குறவங்க, என்னைப் பார்க்குறவங்க எல்லாம் ஒருவேளை இழிவா நினைச்சாலும், இறந்தவங்களுக்குக் கண்ணியம் குறையாம தகனம் செய்ற இந்த வேலையை நான் மேன்மையானதா பார்க்குறேன்'' என்கிறார் கண்ணகி.

Published:Updated:

``18 நாள்ல 140 சடலங்கள், தகனமேடை தண்டவாளமே உருகிடுச்சு!

``அக்கம், பக்கம் இருக்குறவங்க, என்னைப் பார்க்குறவங்க எல்லாம் ஒருவேளை இழிவா நினைச்சாலும், இறந்தவங்களுக்குக் கண்ணியம் குறையாம தகனம் செய்ற இந்த வேலையை நான் மேன்மையானதா பார்க்குறேன்'' என்கிறார் கண்ணகி.

கண்ணகி
News
கண்ணகி

`பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது' என்ற தடைகள் உடைக்கப்பட்டும், மீறப்பட்டும் வருகின்றன. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், இந்த நூற்றாண்டிலும் தன் பெற்றோரிலிருந்து நெருக்கமான உறவுகள் வரை மரணம் என்ற பிரிவால் பிரிகையில், வீட்டு வாசலில் நின்று இறந்தவர்களின் உடலை வழியனுப்பி வைக்கும் நிலைதான் பெண்களுக்கு உள்ளது. அவர்கள் சுடுகாட்டுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், சுடுகாடுகளிலும், தகனமேடைகளிலும் எரியூட்டும் பணியாளராகச் சில பெண்கள் இப்போது பணியாற்றி வருவது, ஒரு மைல்கல். அப்படியாக, தகன மேடையில் எரியூட்டும் வேலையை அர்ப்பணிப்புடனும் நேர்த்தியாகவும் வருபவர்தான் திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணகி.

கண்ணகி
கண்ணகி

``அக்கம், பக்கம் இருக்குறவங்க, என்னைப் பார்க்குறவங்க எல்லாம் ஒருவேளை இழிவா நினைச்சாலும், இறந்தவங்களுக்குக் கண்ணியம் குறையாம தகனம் செய்ற இந்த வேலையை நான் மேன்மையானதா பார்க்குறேன்'' என்கிறார் கண்ணகி.

``அம்மா படிக்காதவங்க. அப்பா, எனக்கு 10 வயசு இருக்கும்போது இறந்துட்டாங்க. அப்பா இல்லாம அம்மாவே ஒத்தை மனுஷியா நின்னு என்னைய எம்.ஏ வரைக்கும் படிக்க வெச்சாங்க. என் தைரியமும், `பொண்ணுன்னா இதைச் செய்யக் கூடாதா?'னு கேட்குற துணிவும் இப்போ இந்த வேலையை என்னை பார்க்கவெச்சுட்டு இருக்கு. சின்ன வயசுல இருந்தே என்கிட்ட ஒப்படைக்குற வேலையை சரியா செய்து முடிக்கணும்ங்கிற வைராக்கியம் இருக்கும். அப்படித்தான் இந்த வேலையையும் செஞ்சிட்டு இருக்கேன்'' என்கிறார்.

கண்ணகி இந்த வேலையில் கொரோனா காலகட்டம்தான் தனக்கு மிகவும் துயரமானதாக இருப்பதாகக் கூறுகிறார். ``ஒன்பது வருஷமா மயானத்துல எரியூட்டும் வேலையை செஞ்சிட்டு வர்றேன். ஆனால, இந்த ஒன்றரை மாசமா மனசு ரொம்ப வேதனையா இருக்கு. போன வருஷம் கொரோனா நேரத்துலகூட இவ்வளவு சடலங்கள் வரல. பொதுவா ஒரு மாசத்துக்கு 40 சடலங்கள் வரை இங்க வரும். இந்தத் தொற்றுக் காலத்துல போன ஏப்ரல் மாசம் மட்டும் 82 சடலங்கள் வந்துச்சு. மே மாசத்துல 18 நாள்ல மட்டும் 140 சடலங்கள் வந்திருக்கு.

ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு சடலங்கள் வரைதான் தகன இயந்திரத்துல எரிக்க முடியும். கொரோனாவால இறந்தவங்க, மற்ற காரணங்களால இறந்தவங்கனு இந்த ரெண்டு மாசமா அதிக எண்ணிக்கையில சடலங்கள் வருது.

கண்ணகி
கண்ணகி

ஒரு நாளைக்கு 13 முதல் 14 சடலங்கள எரிக்கும் நிலை உருவாகி இருக்கு. இதனால இயந்திரத்தின் தண்டவாளம் சூட்டினால உருகிருச்சு. பிரேதங்கள உள்ள வைக்கும் கல்லும் ஒடஞ்சுபோயிருச்சு. தகன மெஷின் சில நாள்களா உபயோகப்படுத்த முடியாம இருந்துச்சு. இருந்தாலும், இறந்தவங்களுக்கான இறுதி மரியாதையை முழுமையா செய்யணும்னு, காம்பவுண்டுக்கு உள்ளேயே விறகு, வரட்டி எல்லாம் வச்சு, இங்க வேலை பார்க்குற ரெண்டு பேரின் உதவியோட, வெளியில மேடை அமைச்சு பிரேதங்கள எரிச்சு வந்தோம்.

அப்புறம் இயந்திரத்தை பழுது பார்த்துக் கொடுத்துட்டாங்க. தொடர்ந்து இயந்திரத்துல தகனம் செய்ய ஆரம்பிச்சோம். இந்தக் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால, இறந்தவங்களோட வீட்ல இருந்து ஒருத்தர், ரெண்டு பேர் மட்டுமே இங்கவரை வருவாங்க. தனது சொந்தத்தை இழந்து வர்ற ஒவ்வொருத்தரையும் பார்க்கும்போது, எதுவுமே இங்கே நிரந்தரம் இல்லைனு எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். இந்தக் கொரோனா காலத்துல, நாம வாழுற ஒவ்வொரு நாளுமே நீட்டிக்கப்பட்ட ஆசீர்வாதம்னுதான் தோணுது'' என்கிறார்.

கண்ணகி
கண்ணகி

கண்ணகி திருவண்ணாமலை ஆட்சியரிடம் `லோக்கல் சாம்பியன்' விருதும், 2020 தமிழக அரசின் அவ்வையார் விருதும் பெற்றுள்ளார். இங்கு வேலைபார்ப்பதற்கு முன்பு ஒரு தன்னார்வ நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம், எளிய மக்களுக்கு கூரை வீடுகளை ஓட்டு வீடுகளாகவும், கான்கிரீட் வீடுகளாகவும் சுமார் 450 வீடுகள் கட்டிக் கொடுக்கும் செயல்பாடுகளில் பங்களித்துள்ளார்.

``எந்த வேலையும் கீழானது இல்ல, பொண்ணுங்க செய்யக் கூடாததுனு எந்த வேலையும் உலகத்துல இல்ல'' - கம்பீரமாகச் சொல்கிறார் கண்ணகி.