
நம்ம ஊர் நைட்டிங்கேல்
“நான் திருமணம் செய்திருந்தால் கோவிட்-19 வார்டில் பணியாற்றத் தயங்கியிருப்பேன்” - ஓய்வு பெறுவதற்கு வெறும் 10 மாதங்களே இருந்த நிலையில், கொரோனா வார்டில் பணி செய்ய வேண்டும் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்ற செவிலியர் எஸ்.கண்ணகியின் வார்த்தைகள் இவை. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் செவிலியராகப் பணியாற்றுகிறார் கண்ணகி.
“என் அக்கா செவிலியர் படிப்பைத் தேர்ந்தெடுத்த காரணத்தினால் பெற்றோர் என்னையும் வற்புறுத்தி அதையே படிக்க வைத்தனர். விருப்பமில்லாமல்தான் படித்தேன். படித்து முடித்ததும், 1988-ம் ஆண்டு, முதல் பணியே ஹெச்.ஐ.வி மருத்துவமனையில். அந்த நோயை அருவருக்கத்தக்க விஷயமாகப் பார்க்கப்பட்ட காலகட்டம் அது. அங்கு வேலைக்குச் செல்லவே மாட்டேன் என்று பெற்றோரிடம் அழுதேன். ‘நீ பார்த்துக்கொள்ளவில்லை என்றால், வேறு யார் இருக்கிறார்கள் அவர்களுக்கு... போய் வேலையைப் பார். உனக்கு நாங்கள் இருக்கிறோம்’ என்று தைரியம் சொல்லி அனுப்பிவைத்தனர்.
மருத்துவமனைக்குப் பணிக்குச் சென்றதும் என் கண்ணோட்டமே மாறிவிட்டது. செவிலியர் பணியை மிகவும் நேசிக்கத் தொடங்கினேன். 12 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிறகு இப்போது இந்த மருத்துவமனையில் 24 ஆண்டு களாகப் பணியாற்றுகிறேன்” என்கிறவரிடம் கொரோனா வார்டு பணியைக் கேட்டு, பணியாற்றச் சென்றதன் காரணம் கேட்டோம்.

“கொரோனா வார்டு தொடங்கப்பட்ட நேரத்தில் இளம் வயதினரைப் பணியாற்ற அனுமதித்தனர். எனக்கோ ஓய்வுபெற 10 மாதங்களே இருந்தன. ஆனாலும், உலகையே அச்சுறுத்தும் நோய்க்கு சிகிச்சையளிப்பதில் என் பங்கும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் நிர்வாகத்திடம் கேட்டுவாங்கி அந்த வார்டுக்குச் சென்றேன்.
முதல் நாள் பணிக்குச் சென்றபோது கவச உடைகளை அணிவதற்கே மிகவும் சிரமப்பட்டேன். அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். உடைகளை அணிந்ததும் நெஞ்சடைத்து மூச்சுமுட்டுவது போன்று ஆகிவிட்டது. சற்று நிதானித்துக்கொண்டு பணிக்குச் சென்றேன். நான் கண்ணாடி அணிந்திருப்பேன். கவச உடைகளை அணியும் போது கண்ணாடி அணிந்து, அதற்கு மேல் பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து, அதற்கு மேல் தலையிலிருந்து முகத்தை மறைக்கும் வகையில் ஒரு பிளாஸ்டிக் அணிவது மிகவும் சிரமமாக இருக்கும். வியர்த்து பனி போல என் மூக்குக்கண்ணாடியில் படிந்துவிடும். வெளிச்சமான பகுதியில்தான் எழுத்துகளைப் படிக்க முடியும். வியர்வையைத் துடைக்க கைகள் மெலெழும்பும். ஆனால், துடைக்க முடியாது. சில நோயாளிகள், ‘சிஸ்டர்! இந்த டிரஸ்ஸைப் போட்டுட்டு எவ்ளோ கஷ்டப்படுறீங்க?’ என்பார்கள். `என் கஷ்டத்தைப் பார்த்தாவது இங்கே இருந்துபோனதும் வீட்டிலேயே பத்திரமா இருங்க’ன்னு சொல்லுவேன்” என்கிறவர், தன்னை மிகவும் பாதித்த சம்பவத்தைப் பகிர்கிறார்.

“நான் கொரோனா வார்டு பணிக்குப் போன அன்று 55 வயதான ஒருவரும் அவரின் மனைவி, மகன் மூன்று பேரும் அங்கு வந்திருந்தனர். அதில் அந்த நபருக்கு மட்டும் கொரோனா பாசிட்டிவ். உடனே, `எதற்காக மனைவியையும் மகனையும் அழைத்து வந்திருக்கிறீர்கள்? அவர்களுக்கும் நோய் பரவும் ஆபத்து இருக்கிறது' என்று கூறி, உடனே இருவரையும் வீட்டுக்குப் போகச் சொன்னேன். கையிலிருந்த பையை அப்பாவிடம் கொடுத்த மகன், அம்மாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான். அவர்கள் போவதையே பார்த்து விட்டு வாடிய முகத்துடன் வார்டுக்குச் சென்றார். அதற்குப் பிறகு என் மனது அமைதியற்று இருந்தது. உடனே போய் முதியவரைப் பார்த்தேன். தனது படுக்கையில் அமர்ந்து போன் பேசிக்கொண்டிருந்தார். என் பணி நேரம் முடிந்ததால் கிளம்பிவிட்டேன். மறுநாள் காலையில் வந்து இரவுப் பணியி லிருந்த செவிலியரிடம் ரிப்போர்ட்டை வாங்கியபோது, ‘ஒரு டெத்’ என்றார்.
நான் போகும்போது யாரும் சீரியஸாக இல்லையே... எந்த கேஸ் டெத் என்று கேட் டேன். முந்தைய நாள் நான் வார்டுக்கு அனுப்பிய அதே முதியவர்தான் என்று கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டேன். விசாரித்தபோது இரவு சாப்பிட்டதும் படுக்கை யில் அமர்ந்து போன் பேசியவர், அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்திருக்கிறார். அந்தத் துயரம் இன்னும் என் மனத்தைவிட்டு அகல வில்லை'' என்று குரல் தழுதழுக்க சொன்ன கண்ணகி, திருமணம் செய்து கொள்ளாமலேயே செவிலியர் பணியாற்றிக் கொண்டிருக்கிறவர்.
“நான் ஹெச்.ஐ.வி மருத்துவமனையில் பணியாற்றியபோது கம்பீரமாக ஹீரோ போன்று இருப்பவர்கள்கூட அந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவார்கள். அதனால் நான் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் திருமணத்துக்கு முன்பாக ஹெச்.ஐ.வி பரி சோதனை செய்துகொள்ள வேண்டும் என கண்டிஷன் போட்டேன். அந்தக் கண்டிஷனை இப்போது போட்டால்கூட பலர் முன்வரமாட்டார்கள். நான் 1990-களில் அப்படிச் சொன்னேன். அதனால் வரன் எதுவும் அமையாமலே போய் விட்டது” என்று சிரிக்கும் கண்ணகி, கொரோனா வார்டில் பணியாற்றிவிட்டு, இப்போது க்வாரன்டீன் வார்டில் இருக்கிறார்.
“என் புள்ளைங்களை விட்டுட்டு கொரோனா டூயூட்டிக்குப் போயிட் டேன். க்வாரன்டீன் முடிஞ்சதும் முதல்ல அவங்களைப் போய்ப் பார்க்கணும்” என்கிறவரிடம் ஆச்சர்யத்தோடு அது பற்றி விசாரித்தோம். தங்கியிருக்கும் செவிலியர் விடுதியின் ஒரு பகுதியில் சிறிய தோட்டத்தை உருவாக்கி வளர்த்து வருகிறார் கண்ணகி. செடி, கொடி களையே குழந்தைகள் என்று பாசமாக அழைக்கிறார்!
“புள்ளைங்களைக் கவனிச்சுக்கச் சொல்லி ஒருத்தர்கிட்ட சொல் லிட்டுத்தான் வந்திருக்கிறேன். இருந்தாலும் நம்ம பக்கத்துல இருந்து கவனிக்கிற மாதிரி வருமா... நான் செல்லமாக வளர்த்த நெல்லிக்காய் மரம் இப்போது கொத்துக் கொத்தாகக் காய்க்கிறது” - விடை கொடுத்தார் கண்ணகி.
அப்படியே ஒரு குட் நியூஸ்... கொரோனா சிகிச்சையளிப்ப தற்காக ஓராண்டுப் பணிக் காலம் நீட்டிக்கப்பட்ட மருத்துவத் துறையினரில் கண்ணகியும் ஒருவர்.
வாழ்த்துகள் சிஸ்டர்!