Published:Updated:

''தெரிஞ்ச ஆட்டோ மேனா இருந்தாலும்...!'' ஸ்கூல் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு டிப்ஸ் சொல்லும் ஆட்டோ டிரைவர்

''தெரிஞ்ச ஆட்டோ மேனா இருந்தாலும்...!'' ஸ்கூல் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு டிப்ஸ் சொல்லும் ஆட்டோ டிரைவர்
''தெரிஞ்ச ஆட்டோ மேனா இருந்தாலும்...!'' ஸ்கூல் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு டிப்ஸ் சொல்லும் ஆட்டோ டிரைவர்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்போகின்றன. ஸ்கூல் பஸ் தவிர, நிறைய குழந்தைகள் ஆட்டோவையே பள்ளி செல்ல நம்பியிருக்கிறார்கள். அதே நேரம், 'பஞ்சு மூட்டைபோல குழந்தைகளை அடைத்துக்கொண்டு போகிறார்கள், டிரைவர்கள் மடியில் உட்காரவைத்துப் போகிறார்கள்' எனப் பெற்றோர்களின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவதும் ஆட்டோக்காரர்கள்தான். பள்ளிக் குழந்தைகளைத் தங்கள் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும்போது என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும், என்னென்ன விஷயங்களைச் செய்யவே கூடாது? 30 வருடத்துக்கும் மேலாக ஆட்டோவில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பன்னீர் செல்வம், தன் இயல்பான மொழியிலேயே பகிர்ந்துகொண்டார்.

"பஸ்ல ஏறுகிறவர்களுக்கு எப்படி டிரைவரும் கண்டக்டரும் பொறுப்போ, அப்படித்தான் ஆட்டோ மேன்களும் குழந்தைகள் விஷயத்துல பொறுப்பெடுத்துக்கணும். ஒரு குழந்தை நம்ம ஆட்டோவுல ஏறிடுச்சுன்னா, அது நம்ம சொந்த குழந்தைன்னு நினைக்கணும். அதுக்கு ஒரு தகப்பன் ஸ்தானத்துல நம்மளை நினைச்சுக்கணும்.

மாடியில் கிளாஸ் ரூம் இருந்துச்சுன்னா, குழந்தைகளைப் படியில் கூப்பிட்டுட்டு இறங்குறப்போ, அவங்க வேகத்துக்குத்தான் ஆட்டோ மேன்கள் இறங்கணும். பசிக்குது, அடுத்த சவாரிக்கு நேரமாச்சுன்னு பச்சைப் புள்ளைகளை நம்ம வேகத்துக்கு இழுத்துட்டு இறங்கக் கூடாது. படியில கால் தடுக்கி விழுந்துட்டா, பிஞ்சு எலும்பு என்னத்துக்கு ஆகும்? 

சில பிள்ளைங்க படு சேட்டையா இருக்கும். அதுங்ககிட்ட பிரியமா இருந்தா நாம செல்றதைக் கேட்டு அமைதியா ஆட்டோவுல உட்காரும். அதட்டறது கூடவே கூடாது. மிரண்டுப் போயிடுங்க. நமக்கு வேலைக் கொடுத்த முதலாளிகிட்ட பதவிசாதானே நடந்துப்போம். ஆட்டோ மேனுக்கும் அவன் குடும்பத்துக்கும் முதலாளி ஒரு வகையில் இந்தக் குழந்தைகதான். இதை எல்லா ஆட்டோ மேனும் மனசுல வெச்சுக்கணும்.

ஆட்டோ ஓட்டும்போது ரோட்டுல கண்ணு இருக்கிற மாதிரி, ஆட்டோவில் உட்கார்ந்திருக்கிற குழந்தைகள் மேலேயும் கவனம் இருக்கணும். சில குழந்தைகள் வீசும் காற்றுல சட்டுனு கண் அசந்து தூங்கிடும். வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி, குழந்தை முகத்தைத் துடைச்சு உட்கார வைக்கணும். இல்லைன்னா ஆட்டோ ஓரத்துல பெரிய பிள்ளைகளை பாதுகாப்பா உட்காரவைக்கணும்.

என் ஆட்டோவுல என் சீட்டுக்கு பின்னாடி ஒரு மரக்கட்டை அடிச்சி வெச்சிருப்பேன். குழந்தைகளை சீட்ல உட்காரவெச்சு, அந்த மரக்கட்டை மேலே கால்களை தூக்கிவெச்சுக்க சொல்வேன். சடன் பிரேக் போடற நிலைமை வந்தாலும் குழந்தைகள் ஆடாம, அசையாம பூ மாதிரி உட்கார்ந்திருக்கும். முக்கியமாக, முன்னாடி இருக்கும் கம்பியில் இடிச்சுக்காம இருக்க இது உதவும்.  

ஸ்கூல் விடறதுக்கு 5 நிமிஷத்துக்கு முன்னாடியே போயிடணும். மிஸ்ஸுங்களுக்கு நம்ம முகத்தைக் காண்பிச்சு, குழந்தைகளை வாங்கிக்கணும். இந்தக் குழந்தையை இந்த ஆட்டோ மேன்தான் கூட்டிட்டுப் போவாருன்னு டீச்சர்களுக்குத் தெரிஞ்சாதான் வேற யாரும் ஏமாத்தி கூட்டிட்டுப் போக முடியாது.

நேரமாகுது; இன்னொரு டிரிப் வரணும்ன்னு வேகமா ஓட்டிட்டுப் போகக் கூடாது. சிக்னலை சட்டுனு தாண்டிடலாம்னு அவசரம் கூடாது.  குழந்தைங்க ஆட்டோவுல இருக்கும்போது நிதானத்தையும் ரூல்ஸையும் ரெண்டு மடங்கா ஃபாலோ பண்ணனும்.   

ஒரு குழந்தை மாடி வீட்ல இருக்குன்னா, இன்னொரு குழந்தையை தனியா ஆட்டோவுல விட்டுட்டு போகக் கூடாது. கூடவே கூட்டிட்டு போயிடலாம். இன்னிக்கு இருக்கும் நிலைமைக்கு ரெண்டு நிமிஷம்கூட பிள்ளைகளை தனியா விட முடியறதில்லை.

ஆடு மாடு ஏத்துற மாதிரி 10, 15 குழந்தைகளை வண்டியில் ஏத்த கூடாதும்மா. அது தப்பு. மூணு இல்லைன்னா, நாலு குழந்தைகளை ஒரு டிரிப்புக்கு கூட்டிப்போனால் போதும். இதுதான் நியாயமும்கூட. 

தெரிஞ்ச ஆட்டோ மேன் அப்படிங்கிறதால், ஏற்கெனவே ரொம்பி வழியும் ஆட்டோவுல உங்க குழந்தைகளையும் அனுப்பாதீங்க.

சில பிள்ளைகளை ஸ்கூலிலிருந்து ஆட்டோமேன்கள் டே கேரில் விடற மாதிரி இருக்கும். அப்படி விடும்போது, அங்கே யாரு இன்சார்ஜோ அவங்க கையில் குழந்தையை கரெக்டா ஒப்படைச்சுட்டு வரணும். கேட்டுக்குப் பக்கத்துல ஆட்டோவை நிறுத்தி, அப்படியே குழந்தையை இறக்கி விட்டுட்டு வரக் கூடாது. குழந்தை வேடிக்கைப் பார்த்துட்டே எங்கேயாவது போயிடலாம், கவனம்'' என்று அழுத்தமாகச் சொல்லி முடிக்கிறார் பன்னீர் செல்வம்