Published:Updated:

மேடைப் பேச்சில் உங்கள் குழந்தை ஜொலிக்க 9 சூப்பர் டிப்ஸ்!

"உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு நல்ல குரல் வளமும், எந்த விஷயத்தையும் தெளிவாச் சொல்ற ஆர்வமும் இருந்தால், சின்னச் சின்ன பயிற்சிகள் கொடுப்பது மூலம் அவர்களைச்  சிறந்த பேச்சாளர்கள் ஆக்க முடியும்."

மேடைப் பேச்சில் உங்கள் குழந்தை ஜொலிக்க 9 சூப்பர் டிப்ஸ்!
மேடைப் பேச்சில் உங்கள் குழந்தை ஜொலிக்க 9 சூப்பர் டிப்ஸ்!

குழந்தைகளின் மழலைப்பேச்சைக் கேட்க யாருக்குத்தான் பிடிக்காது..? மழலைப் பேச்சிலும் தெளிவாகப் பேசுகிற சுட்டியை யாருக்குத்தான் பிடிக்காது? சொல்ல வருவதைத் திருத்தமாக, சுருக்கமாகப் பேசுகிறார்களா உங்கள் வீட்டு குட்டீஸ்? சரளமாக பொதுவெளியில் பேச தயங்குகிறார்களா? சிறு சிறு பயிற்சிகள் மூலமாக அவர்களின் பேச்சுக் கலையை வளர்க்க முடியும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பேச்சாளர் சியாமளா ரமேஷ் பாபு.

* உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற பொது விஷயங்கள் பற்றி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களிடம் பேசிக்கொண்டே  இருங்கள். அவர்களுக்கு எந்தளவுக்குப் புரிந்திருக்கிறது என்பதை பேசச் சொல்லி தெரிந்துகொள்ளுங்கள். `எங்க செல்லம் உங்களுக்குத் தெரிந்த அளவுக்கு நீங்களே சொல்லுங்க பாப்போம்'னு ஊக்கப்படுத்துங்கள் .

* ஆரம்பத்தில், வார்த்தைகளை உடைத்துத் தயங்கியபடியேதான் குழந்தைகள் பேசுவார்கள். ``வாவ் உனக்கு செமையா பேச வருதே...'' என்று அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஊக்கம் மட்டுமே அவர்களைத் தெளிவாகப் பேச வைக்கும். 

* பள்ளி விடுமுறை நாள்களில், குடும்பத்தினர் அனைவரும் கூடியிருக்கும் நேரத்தில் `தங்கம் இந்த வீட்ல உனக்கு யார் ரொம்பப் பிடிக்கும்? அவங்களைப் பத்தி எழுந்து நின்று பேசு பார்ப்போம்' என்று சொல்லுங்கள். நேரத்தை செட் செய்யுங்கள். அவர்கள் எவ்வளவு சுருக்கமாகப் பேசுகிறார்கள் என்று பாருங்கள். படிப்படியாக `ஒரு நிமிஷம் பேசு' என்று அவர்கள் அறிய நேரத்தை செட் செய்யுங்கள். கோவையாக வார்த்தைகளைக் கையாளுதல், நேரக் கவனிப்பு, சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லுதல் ஆகியவற்றை வளர்க்க இது உதவும்.

* குழந்தைகளைச் சட்டெனப் பொதுவெளியில் பேச சொல்லி அனைவரின் முன்பும் பேசி தர்மசங்கடப்படுத்த வேண்டாம். அவர்கள் விரும்பும் இடங்களில், விரும்பும் நேரத்தில் அவர்களைப் பேச ஊக்கப்படுத்துங்கள்.

* நாளிதழ் படிக்கும் போது குழந்தைகளையும் பக்கத்தில் உட்காரச்சொல்லிப் படித்து காண்பிக்கவும். அவர்களையும் நாளிதழ் கொடுத்து உரக்க வாசிக்கச் சொல்லுங்கள். இதன் மூலம் சரியான உச்சரிப்பை உள்வாங்கிக்கொள்ள முடியும். 

* குழந்தைகள் பேசிய வீடியோவை அவர்களிடமே காட்டி, `சூப்பரா பேசியிருக்க... சில இடங்களில் திருத்திட்டா இன்னும் சூப்பர் ஆகிடும்' என்று அவர்களை உற்சாகமூட்டுங்கள்.

* பேச வேண்டிய டாப்பிக், செய்தி போன்றவற்றை எங்கிருந்து எடுக்க வேண்டும், எப்படி நோட்ஸ் எடுத்துக்கொள்ளவேண்டும்... அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.                                                                                              

* பேச்சாளராக முதலில் உடல் மொழி அவசியம். அதற்குக் கண்ணாடியைப் பார்த்து சுயமாகப் பேசுவது முக்கியம். உங்கள்  குழந்தைகளைக் கண்ணாடியைப் பார்த்து உரக்கப் பேசச் சொல்லுங்கள்.

* மற்றவர்கள் முன் பேசும் போது தவிர்க்க வேண்டிய செயல்களான... தேவையில்லாமல் எச்சில் விழுங்குதல், மறந்த வார்த்தையை நினைவுகூர்வதிலேயே நேரத்தைக் கடத்துதல், கூட்டத்தில் ஒரே நபரையோ இடத்தையோ மட்டுமே பார்த்துப் பேசுதல், கைதட்டல் வரும் எனக் காத்திருத்தல் அல்லது கைதட்டி முடிப்பதற்குள் பேச்சைத் தொடங்குதல், தேவையின்றி ஆடை மற்றும் தலைமுடியைச் சரிசெய்தல், குறிப்பாகக்  கையில் குறிப்புகளை வைத்துக்கொண்டு அதைப் பார்ப்பதிலேயே கவனம் செலுத்துதல் ஆகியவற்றை ஒவ்வொன்றாய்த் தவிர்க்க பயிற்சி அளிக்கலாம்.

இனி உங்கள் குழந்தையும் மேடைப் பேச்சாளர்தான்!