Published:Updated:

குழந்தைகளின் நிறை, குறைகளை ஆரோக்கியமான முறையில் எடுத்துச் சொல்வது எப்படி? - சியாமளா ரமேஷ் பாபு #GoodParenting

குழந்தைகளின் நிறை, குறைகளை ஆரோக்கியமான முறையில் எடுத்துச் சொல்வது எப்படி? - சியாமளா ரமேஷ் பாபு #GoodParenting
குழந்தைகளின் நிறை, குறைகளை ஆரோக்கியமான முறையில் எடுத்துச் சொல்வது எப்படி? - சியாமளா ரமேஷ் பாபு #GoodParenting

குழந்தையின் பலம் மற்றும் பலவீனத்தைப்பற்றி அதனிடமே ஆரோக்கியமாக 'கமென்ட்' செய்யுங்கள். உங்கள் குழந்தைக்கு உணர்வுபூர்வமான 'ஃப்ரெண்டு ரெக்வஸ்டு' முதலில் உங்களிடமிருந்து வெளிப்படுதல் நன்று.

காரணங்கள் ஏதுமின்றி கொள்ளை சந்தோஷப்படும் ஆற்றல் குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியம். வன்மம், கவலை இவற்றுக்கெல்லாம் குழந்தைகள் உலகில் அனுமதியில்லை. மாறாக ஆட்டம், பாட்டம், ஓட்டம் என நம் மனதை இலகுவாக்கும்

விஷயங்கள்தாம் அவர்களின் சின்னஞ்சிறு உலகை நிரப்பும் விசித்திரங்கள். வளர்ந்த மனிதர்களுக்குத்தான் சந்தோசப்படுவதற்குக் காரணங்கள் தேவை. குழந்தைகளுக்கோ சுற்றி இருக்கும் அனைத்துமே மகிழ்ச்சியின் பிரதிநிதிகள்தாம். பள்ளிக்கூடம் போகும் வரை கண்ணில் பட்டதும் கையில் கிடைத்ததும்தாம் அவர்கள் சந்தோஷத்திற்கான கடவுச்சீட்டு. வீட்டுக்குள் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்து, நிறைய இறைத்து, கொஞ்சம் சாப்பிட்டு, பொம்மைகளைக் கழற்றி மாட்டி, உடைத்து, சுவரைக் கிறுக்கல்களால் அலங்கரித்து, தூக்கத்தில் கூட அடுக்கடுக்காய்ச் சிரிக்கும் குழந்தைகளோடு சேர்ந்து நாமும் சந்தோஷமாக இருப்பது எப்படி எனக் கொஞ்சம் யோசித்தால் எல்லா நாளுமே உலக சந்தோஷ நாள்தான். உங்கள் குழந்தையை எப்போதும் சந்தோஷமாய் வைத்திருப்பது எப்படி எனச் சொல்கிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா ரமேஷ் பாபு.

"நிறை குறைகளோடு குழந்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதே அவர்களின் சந்தோஷத்திற்கு நாம் தரும் முதல் உத்தரவாதம். அவர்களின் இயல்பிற்கே வாழப் பழக்கப்படுத்துங்கள். குழந்தைகளோடு குழந்தைகளாய் மாற தினமும் பெற்றோர்கள் பிரத்யேகமாய் நேரம் ஒதுக்குங்கள். அது அவர்களோடு மழலை வார்த்தைகள் பேசி விளையாடுவதாக இருக்கலாம், குட்டியாய்க் கூட்டாஞ்சோறு ஆக்கி மகிழலாம், நல்ல நீதி போதிக்கும் கார்ட்டூன் படங்கள் சேர்ந்து பார்ப்பதாக இருக்கலாம், அவர்களோடு சேர்ந்து வரையலாம் வண்ணம் தீட்டலாம். பெற்றோர்கள் நமக்காக நேரம் ஒதுக்குகிறார்கள் எனக் குழந்தைகள் உணரும் போது சந்தோஷத்தோடு சேர்ந்து பாதுகாப்பாகவும் உணருவார்கள். உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் ஒதுக்கும் நேரம்தான் அவர்களை அறியாமலேயே அவர்களின் மைனஸை பிளஸ்ஸாக மாற்றும்.

குழந்தையின்  குட்டி மூளை ஒரு பரிசோதனைக்கூடம் போன்றது குழந்தைகள் 4 வயதிலிருந்தே எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள் எப்போதும் சின்னச்சின்ன சந்தேகங்கள் அதன் வெளிப்பாடாகக் கேள்விகள் என ஒரு குட்டி விஞ்ஞானியோடு பெற்றோர்கள் நாம் இருக்கிறோம் எனப் பெருமைப் பட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் கேட்கும் தொடர்ச்சியான கேள்விகள் உங்களை எரிச்சல் படுத்தினாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், பொறுமையாக அவர்களின் முதிர்ச்சிக்கு ஏற்ப சலிப்பின்றி பதில் சொல்லுங்கள். அவர்களின் கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்கள் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வைத்திருப்பதுடன் தன்னம்பிக்கை நிறைந்த மனிதராகவும் உருவாக்கும்.

உங்கள் குழந்தையிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு பெற்றோர்கள் முதலில் 'லைக்' போடுங்கள். உங்கள் குழந்தையிடம் நீங்கள் ரசிக்கும் நல்ல விஷயங்களுக்குச் சின்னச் சின்ன பாராட்டுகளை கொடுங்கள். மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மற்றவர்களிடம் குழந்தைகள் முன்னிலையிலும் அவர்களைப் பற்றி 'ஷேர்' செய்யுங்கள். இந்தச் செயல்பாடுகள் மூலம் பெற்றோர்தாம் நம் முதல் நண்பர்கள். எது செய்தாலும் நம் நண்மையை மட்டுமே நினைத்துச் செய்வோர் பெற்றோர் மட்டுமே எனும் உத்தரவாதத்தினை குழந்தைகளின் மனதில் விதைக்கும்.

பொதுவாகக் குழந்தைகள் வெளியுலகிலிருந்து கற்றுக்கொள்வதைதான் விரும்புவார்கள்,அவுட்டிங் செல்கிறோம் என்றால் குழந்தைகளின் முகத்தில் பொங்கும் சிரிப்புக்கு அளவே இருக்காது. நீங்கள் வெளியே எங்குச் சென்றாலும் குழந்தைகளைச் சுமையாக எண்ணாமல் கூட்டிச்செல்லுங்கள். இந்தச் செயல்பாடு அவர்களுக்கான மகிழ்ச்சி என்பதைத் தாண்டி, தயக்கமின்றி வெளியுலகை அணுகவும் எதிர்கொள்ளவும் அவர்களைத் தயார் படுத்தும்.

குழந்தைகளின் சின்னச் சின்ன ஆசைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களின் உடையை அவர்களுக்குப் பிடித்த நிறத்தில் தேர்வு செய்வது, விரும்பிய விளையாட்டை விளையாடுவது, மனசுக்குப் பிடித்த செயல்பாடுகளைச் செய்வது என முழுச் சுதந்திரம் கொடுங்கள் எக்காரணம் கொண்டும் பெற்றோர்களின் ரசனையைக் குழந்தைகளிடம் திணிக்க வேண்டாம்.

உணவு விடுதிக்குச் செல்லும் போது பண்டப்பட்டியலைப் பார்த்து குழந்தை தனக்குப் பிடித்ததைக் கேட்கும் உரிமையைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களின் சந்தோஷம் விண்ணை முட்டும். அதைக் குழந்தையால் சாப்பிட முடியுமா முடியாதா என்பதைப் பொறுமையாக புரியும் படி எடுத்துச் சொல்வது நம் கடமை.

வீட்டில் சின்னச் சின்ன விஷயங்களைப் பேசி முடிவெடுக்கும் போது குழந்தைகளையும் ஈடுபடுத்திக் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தி, அவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் சொல்லும் சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள். அவர்கள் சொல்லும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் நிலைமையைக் குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப சொல்லிப் புரிய வையுங்கள்.

குழந்தையின் பலம் மற்றும் பலவீனத்தைப்பற்றி அதனிடமே ஆரோக்கியமாக 'கமென்ட்' செய்யுங்கள். உங்கள் குழந்தைக்கு உணர்வுபூர்வமான 'ஃப்ரெண்டு ரெக்வஸ்டு' முதலில் உங்களிடமிருந்து வெளிப்படுதல் நன்று.

குழந்தைப் பருவம் வாழ்க்கையின் மிகக் குறுகிய பருவம். அதை வெறும் எதிர்பார்ப்புகளால் திணிக்காமல், குதூகலத்தால் மட்டுமே நிரப்புவதே பெற்றோர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.  

அடுத்த கட்டுரைக்கு