Published:Updated:

''நாம் எப்படி குழந்தைகளை வளர்க்கிறோமோ, அப்படித்தான் வளருவாங்க!'' - நடிகை ராதா

''நாம் எப்படி குழந்தைகளை வளர்க்கிறோமோ, அப்படித்தான் வளருவாங்க!'' -  நடிகை ராதா
''நாம் எப்படி குழந்தைகளை வளர்க்கிறோமோ, அப்படித்தான் வளருவாங்க!'' - நடிகை ராதா

டிகை ராதா என்றால், திரையுலகில் தெரியாதவர்கள் யாருமில்லை. நடிப்பு, நடனம் என பல திறமைகளை திரையில் காட்டியவர். நிஜத்திலும் தன் உழைப்பு மற்றும் திறமையால் தனித்துவமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். கேரளாவில் இரண்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களை நடத்திவரும் ராதா, தற்போது மூன்றாவது ஹோட்டலை கட்டும் சந்தோஷம் மற்றும் பரபரப்புக்கு மத்தியில் நம்மோடு பேசினார்.

''உங்க குழந்தைகள் மூன்று பேரையும் ஹோட்டல் பிசினஸில் இறக்கி விட்டுட்டீங்க போல...''

''இவ்வளவு நாளா உழைச்சு சம்பாதிச்சு, பார்த்துப் பார்த்து சேமிச்ச பணம். பிள்ளைகளின் வருங்காலத்தை யோசிச்சு, நம்ம சொந்தத் தொழிலில் ஈடுபடுத்துவதில் என்ன தப்பு இருக்கப் போகுது. 'எனக்கு இந்த விஷயம் பிடிக்கலை'னு அவங்க சொல்லி இருந்தா, நிச்சயமா வற்புறுத்தி இருக்க மாட்டேன். அவங்களே பிடிச்சுப்போய் நேரம் கிடைக்கும்போது, இந்த ஹோட்டல் பிஸினசில் ஈடுபாடு காண்பிக்கிறாங்க. என்னோட பையன் விக்னேஷ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சுட்டு ஒரு ஹோட்டலில் சேர்ந்திருக்கான். 'அங்கே ஐந்து வருஷம் ஒர்க் பண்ணி அனுபவத்தோடு வந்தால்தான் நம்ம ஹோட்டல்ல உனக்கு வேலை'னு என் கணவர் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்.''

''பொண்ணுங்க இரண்டு பேரும் என்ன பண்றாங்க?''

''இரண்டுப் பேருக்குமே நல்ல நிர்வாகத் திறமை இருக்கு. கார்த்திகா, தனியார் கம்பெனியில் வேலைப் பார்த்துட்டு இருக்காங்க. கடைசி பொண்ணு துளசி, காலேஜ் படிச்சிட்டு இருக்காங்க. காலேஜ்ல எல்லாவற்றிலும் முதல் ஆளா நிக்கிறாங்க. ரொம்பப் பெருமையா இருக்கு. நேரம் கிடைக்கும்போது ஹோட்டல் வேலைகளையும் பார்த்துக்கிறாங்க.''

''தற்போதைய காதல், திருமணம், குழந்தை வளர்ப்பு எல்லாம் எப்படி இருக்கு?''

''நிறைய பேர் 'உலகம் முன்னே இருந்த மாதிரி இல்லை. ரொம்ப மாறிடுச்சு'னு சொல்லிட்டே இருக்காங்க. அப்படி எதுவும் மாறலைங்க. ஒவ்வொரு தலைமுறை வரும்போதும் அந்தத் தலைமுறைக்குத் தேவையான விஷயங்களைப் பண்ணிட்டு இருக்காங்க. அவ்வளவுதான். ஒவ்வொருத்தருடைய தேவைக்கும் தகுந்த விஷயத்தை செய்துட்டு இருக்காங்க. இப்போ இருக்கிற பசங்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்கு. அவங்ககிட்டே நேர்மை இருக்கு. காதல் என்பது ஒரு துணையோடு வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்கிறது. அப்படிப்பட்ட பார்ட்னரை சரியாகத் தேர்ந்தெடுக்கிறது ரொம்ப முக்கியம். நிறைய இளைஞர்கள் அதைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சு இருக்காங்க. எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறப்ப 'டாக்டர் மாப்பிள்ளையோ, இன்ஜினீயர் மாப்பிள்ளையோ வேண்டாம். பிசினஸ் பண்ற மாப்பிள்ளை வேணும்'னு அம்மாகிட்டே சொல்லிட்டேன். அதே மாதிரி, ஹோட்டல் பிசினஸ் செய்கிறவரை திருமணம் செய்துகிட்டேன். அவரை சந்திச்சதுக்கூட குடும்ப உறவினர்களுக்கு மத்தியில்தான். அரேஞ்டு மேரேஜ் என்பதால், அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் இல்லை. எனக்கு ஸ்ட்ரெஸ் எதுவும் வரலை. நான் நானா இருந்தேன். அவர் அவரா இருந்தார். எனக்கு ஐந்து குழந்தைகள் வேணும்னு நினைச்சேன். மூன்று போதும்னு அவரே சொல்லிட்டார். இப்போ குழந்தை பெத்துக்கறதுக்கே நிறைய பேர் யோசிக்கிறாங்க. நாம எப்படி குழந்தைகள் வளர்க்கிறோமோ அப்படித்தான் அவர்களும் இருப்பாங்க. குழந்தைகளின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அவங்களோட இருக்கவேண்டியது அவசியம். அதை உணர்ந்துதான் படங்களில் நடிக்காம அவங்களுக்காக டிராவல் பண்ணிட்டு இருக்கேன்.''

''இப்போ இருக்கிற இளைஞர்கள் எப்படி இருக்காங்க?''

''மீடியாவின் மாற்றம்தான் அதிகமாகி இருக்கே தவிர, நிறைய விஷயங்களில் இளைஞர்கள் மாறாமத்தான் இருக்காங்க. வாட்ஸ்அப், லைவ் வாட்ஸ்அப் என நிறைய மாற்றத்தைப் பார்க்கிறோம். எந்தக் காலகட்டமா இருந்தாலும் பெற்றோரின் வளர்ப்பு, கண்டிப்பு, அரவணைப்பில்தான் ஒருவருடைய வளர்ச்சி இருக்கிறதா நினைக்கிறேன். இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கவலைப்பட ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் சொல்லப்போனா, விளையாட்டுத்தனமா இருந்த என் பையன், இப்போ பொறுப்பாக வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டார். நானே காலையில் எழுந்து அவருக்கு சாப்பாடு கட்டிக் கொடுப்பேன். இது புது அனுபவமா இருக்கு, சந்தோஷமா ஃபீல் பண்றேன். ஒவ்வொரு காலகட்டத்தையும் நாம் கண்டிப்பாக கடக்க வேண்டும். கடக்கும்போது அதை ரசிக்கணும்.''  

''இப்போ எந்த நிகழ்ச்சியிலும் வர்றதில்லையே என்னாச்சு?''

''டான்ஸ் என்றால் எனக்கு உயிர். அதனாலதான் விஜய் டி.வி நடன நிகழ்ச்சிக்கு நடுவராக ஒத்துக்கிட்டேன். சினிமாவில் நிறைய பாவனைகள் படத்துக்கான விஷயமாக இருக்கும். ஆனா, அந்த நடன நிகழ்ச்சியில் முழுமையான ராதாவை நீங்கள் பார்த்திருக்கலாம். இதை எல்லாம், இப்படி எல்லாம் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்குமேனு எவ்வளவோ விஷயங்களைச் சொல்லி இருப்பேன். இப்பவும் எனக்குத் தோணும்போது வீட்டில் டான்ஸ் ஆடுவேன். பாடல்களை ரசிப்பேன். விஜய் டி.வி நிகழ்ச்சிக்குப் பிறகு வேறு நிகழ்ச்சியிலோ, சினிமாவிலோ நடிக்கலை. ஏன்னா, என் பசங்களை நான் பக்கத்துல இருந்து பார்த்துக்கணும். குழந்தையாக இருந்தபோது கிடைச்ச கேர் இந்த டீன்ஏஜிலும் தேவைப்படுது. இப்போவெல்லாம் என்னால் சினிமாவின் கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி மாற முடியலை. இனி என்னைப் பார்க்கணும்னா, சினிமா  இல்லாத ஒரு ராதாவாகத்தான் பார்க்கணும்.''

''உங்களோட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் எங்க இருக்கு?''

''எங்க ஹோட்டலின் பெயர், 'உதய சமுத்ரா'. கேரளாவுல ரெண்டு ஹோட்டல் இருக்கு. இப்பமூணாவதா ஆலப்புழா பக்கத்துல கன்ஸ்ட்ரக்‌ஷன் போய்ட்டு இருக்குது. ஆரம்பத்தில் மூன்று நட்சத்திர அந்தஸ்தில் இருந்த ஹோட்டலை தன்னோட உழைப்பால ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு வந்தார் என் கணவர். அவரோட உழைப்பைப் பார்த்த பிறகுதான் பிசினஸ் செய்யறது எவ்வளவு சவாலான விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஹோட்டல்களுக்கு வருபவர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். அதைச் சரியா செய்யவேண்டியது நம்ம கடமை. எந்த வேலையாக இருந்தாலும், அதற்கான மரியாதையைக் கொடுத்து முழு ஈடுபாட்டோடு செய்தால் வெற்றியும் சந்தோஷமும் உறுதி'' என்று புன்னகைக்கிறார் ராதா.