Published:Updated:

"குழந்தைகளை மரங்களில் ஏறி விளையாட அனுமதிக்கலாமா?" - ஓர் அலசல்

மரம் ஏறுதல் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்த உதவும். மரம் ஏறும்போது கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபடாமலிருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

உங்கள் குழந்தை உங்களிடம் வந்து, 'நான் மரத்துல ஏறி விளையாடப் போறேன்' என்றால், உங்களின் பதில் என்னவாக இருக்கும்? 'அய்யோ அதெல்லாம் வேணாம்..!' என்று பதறுவீர்களா? 'நாங்கல்லாம் சின்ன வயசுல மரத்துக்கு மரம் ஏறி, தாவி விளையாடாத விளையாட்டா? ஆனா...' என்று தயங்குவீர்களா? 'ஓ... விளையாடலாமே!' என்று அதற்கான ஆயத்தங்களுக்குத் தயாராவீர்களா? இதில் எந்த எண்ணவோட்டம் சரி என்பதைக் குழந்தைகள் நல ஆர்வலர்களிடமே கேட்டுவிடுவோமா?

மரம் ஏறி விளையாடுதல்
மரம் ஏறி விளையாடுதல்
Vikatan

பள்ளி ஆசிரியையான சுடரொளி, அம்மா, ஆசிரியை என்ற இரண்டு கோணங்களிலிருந்தும் பதில் தந்தார்.

"குழந்தைகளை மரம் ஏறி விளையாட நாம் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் வாய்ப்புள்ள இடங்களில் பெரும்பாலான குழந்தைகள் மரம் ஏறவே விரும்புகிறார்கள். இயல்பாகவே குழந்தைகளுக்கு மரம் ஏறுவதில் விருப்பம் இருக்கும். 'மனிதன் குரங்கிலிருந்து வந்தான்' என்பதன் மிச்சசொச்ச அடையாளமாக குழந்தைகளின் இவ்விருப்பம் உள்ளது.

மரம் ஏறி விளையாடுவது என்பது உடலுக்கும் மனதுக்கும் சிறந்த பயிற்சி. குழந்தைகளுக்கு மரம் ஏறி விளையாட விருப்பம் இருந்தாலும், பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களுக்கு அனுமதி வழங்காததற்குக் காரணம், அவ்வாறு விளையாடும்போது ஏதாவது விபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம்தான். உண்மையில், பெரியவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் பாதுகாப்பு உணர்வு அதிகம். அவர்கள் எல்லா விதத்திலும் கவனமாகத்தான் இருப்பார்கள். எனினும், ஆரம்பத்தில் குழந்தைகள் மரம் ஏறி விளையாடிப் பழகும்போது, கவனமாய் இருப்பது குறித்து பெற்றோர்கள் பேசலாமே தவிர, பயமுறுத்தி தடுக்கத் தேவையில்லை.

பள்ளி ஆசிரியை சுடரொளி
பள்ளி ஆசிரியை சுடரொளி

விளையாட்டுகளைப் பொறுத்தவரை குழந்தைகளின் விருப்பத்திற்குத் தடைபோடாமல் இருப்பதே சிறந்தது. நம் பாரம்பர்ய, குழந்தைகள் சார்ந்த விளையாட்டுகளைப் பெரியவர்கள் யாரும் உருவாக்கவில்லை. அவற்றை எல்லாம் உருவாக்கியவர்கள் குழந்தைகள்தான். குழந்தைகளின் விளையாட்டுகளில் உடல்திறன், கூட்டு மனப்பான்மை, அறிவியல் அறிவு, கணிதத்திறனை வளர்த்தெடுக்கும் வழிமுறைகளே மிகுந்திருக்கும். எனவே, அவர்களின் சிந்தனைகளைச் செயல்படுத்த, பெரும் வெளியை நாம் உருவாக்கித் தர வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மரம் ஏறி விளையாட ஆர்வமுள்ள குழந்தைகளைக் கவனமாக ஏறி விளையாட ஊக்குவிக்கலாம். அதே நேரத்தில், சில குழந்தைகளுக்கு உயரத்தைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவர்களை மரம் ஏறி விளையாடச் சொல்லி வற்புறுத்தக்கூடாது. நான், என் குழந்தைகளை மரம் ஏறி விளையாட அனுமதிப்பேன். ஆனால், நான் பணிபுரியும் என் பள்ளிக் குழந்தைகளை மரம் ஏறி விளையாட அனுமதிக்க மாட்டேன்.

மரம் ஏறி விளையாடுதல்
மரம் ஏறி விளையாடுதல்
1200 கி.மீ டூ வீலர் பயணம்.. 300 விதைப் பந்துகள் - சென்னை இளைஞர்களின் மரம் வளர்ப்பு முயற்சி!

ஏனென்றால், குழந்தைகள் கூட்டமாக மரம் ஏறி விளையாடும்போது, போட்டி மனப்பான்மை ஏற்பட்டு கீழே விழுந்து அடிபட வாய்ப்புள்ளது. மேலும், நாம் அருகில் இல்லாத நேரங்களிலும் அவர்கள் மரம் ஏற முயல்வார்கள் என்பதால் பள்ளியில் அனுமதிப்பதில்லை. மற்றபடி குழந்தைகள் மரம் ஏறி விளையாடுவதற்கு நிச்சயமாக அனுமதிக்கலாம் என்பது என் கருத்து.

இன்றைய காலகட்டத்தில், குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொக்கிஷம்போல பாதுகாத்து வளர்க்கும் மனநிலைதான் உள்ளது. அந்நிலை மாற வேண்டும்; அவர்களை வெளிச் சூழலுக்குப் பழக்க வேண்டும். மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும்போது, இயல்பாகவே அவர்களுக்கு இயற்கை மீதான பிரியம் கூடும். அது, மரம் வளர்த்தல், இயற்கையைப் பாதுகாத்தல் போன்ற எண்ணங்களையும் தரும். எனவே பெற்றோர்கள், மரம் ஏறி விளையாட ஆர்வமுள்ள தங்கள் குழந்தைகளுக்குத் தாராளமாக அனுமதி தரலாம்" என்றார்.

மரம் ஏறி விளையாடுதல்
மரம் ஏறி விளையாடுதல்

ஆக, உங்கள் குழந்தைகள் மரம் ஏறி விளையாட விருப்பப்பட்டால் தயங்காமல் அனுமதி தாருங்கள். அது, அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்த உதவும். மேலும், மரம் ஏறும்போது கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபடாமலிருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

குழந்தைகள் நல ஆர்வலரும், 'பல்லாங்குழி' என்ற அமைப்பின் மூலம் நமது பாரம்பர்ய விளையாட்டுகளைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்பவருமான இனியனிடம் பேசினோம்.

"மரம் ஏறி விளையாட குழந்தைகளுக்கு நிச்சயம் அனுமதி தரலாம். இது, குழந்தைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும். நமது பாரம்பர்ய விளையாட்டுகளில் மரம் சார்ந்த விளையாட்டுகள் நிறைய உள்ளன.

இனியன்
இனியன்
``பப்பி லவ் ஆபத்தானதா?’’- பெற்றோர்களின் கவனத்துக்கு

'மரம் ஏறி - கொம்பேறி' என்பது அதில் ஒரு ரகம். தரையில் ஓடிப் பிடித்து விளையாடுவதுபோல் மரத்தில், கிளைக்குக் கிளை தாவி ஓடிப் பிடிக்க வேண்டும். ஆனால், கால் தரையில் படக்கூடாது. இந்த விளையாட்டுக்கு அதிகக் கிளைகள் உள்ள மரம் தேவைப்படும்.

இதுபோல், மரம் ஏறும் பழங்குடியினர் விளையாட்டுகளும் நிறைய உள்ளன. குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் இந்த விளையாட்டுகளில் பங்குபெறுவர்.

உதாரணத்துக்கு, குழந்தைகள் ஏறும் மரத்திற்குக் கீழே உள்ள தரையை மேடு, பள்ளம் இல்லாமல் சமதளமாக வைத்திருக்கலாம். அதிகக் கிளைகள் உள்ள மரங்கள், பட்டுப்போகாமல் நல்ல நிலையில் உள்ள மரங்கள் போன்றவற்றை குழந்தைகள் ஏறி விளையாடத் தேர்ந்தெடுக்கலாம். அந்த மரங்களில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மரம் ஏறி விளையாடுதல்
மரம் ஏறி விளையாடுதல்

'இப்போதுள்ள குழந்தைகள், வீட்டைவிட்டு எங்கு வெளியில் வருகிறார்கள்? விடுமுறை நாள்களில்கூட கேட்ஜெட்களில்தான் மூழ்கியுள்ளார்கள்' என்று குழந்தைகளைக் குறைகூறும் நாம், அவர்கள் இயற்கையோடு இணைந்து விளையாட என்ன வெளியை அமைத்துக்கொடுத்துள்ளோம் என்று யோசித்துள்ளோமா? குழந்தைகள் மகிழ்ந்து விளையாட ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தித் தருவது பெற்றோர்களின் கடமைகளுள் ஒன்று என்பதை மனதில் கொள்வோம்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு