Published:Updated:

``அப்பார்ட்மென்ட் வீட்டில் 101 மரங்கள் சாத்தியம்" - சென்னைக் குழந்தைகளின் புதிய முயற்சி!

'மியாவாக்கி' என்பது குறைந்த இடத்தில் அதிகமான மரங்களை வளர்த்து சின்ன காடு மாதிரியான அமைப்பை உருவாக்குவதுதான்.

மியாவாக்கி
மியாவாக்கி

கடுமையான தண்ணீர்ப் பிரச்னை, வாட்டியெடுக்கும் வெயில் இதற்கெல்லாம் காடுகள், மரங்கள் அதிகளவு அழிக்கப்பட்டதும் ஒரு காரணம். இயற்கையின் இயல்பு மாற்றியதன் விளைவாக அதிகளவு பாதிப்புகள் உருவாகும்போதுதான் மீண்டும் பழைமையை நோக்கி ஓட ஆரம்பிக்கிறோம். அப்பார்ட்டிமென்ட் வீட்டில் வசிக்கும் எனக்கு மரம் வளர்க்க ஆசையாக இருக்கிறது, என்ன செய்வது? எப்படி நான் மரங்களை வளர்ப்பது எனக் கவலைப்படுபவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறான் சென்னையைச் சேர்ந்த சரண் என்ற 12 வயதுச் சிறுவன். அப்பார்மென்ட்டில் வசிக்கும் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து மியாவாக்கி என்ற அடர் காடுகள் வளர்ப்பு முறையைப் பின்பற்றி ஒரே நாளில் 101 மரங்களை நட்டு மாற்றத்திற்கான விதையை விதைத்துள்ளார். இது குறித்து சரணிடம் பேசினோம்.

மரம் வளர்ப்பு
மரம் வளர்ப்பு

"நாங்க சென்னையில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருக்கோம். அதனால வீட்டுக்கொரு மரம் என்ற கான்செப்ட் சரி வராது. ஆனாலும் மரம் வளர்த்தே ஆகணும் என்பது என் விருப்பம். என்ன பண்ணலாம்னு யோசித்தபோதுதான் மியாவாக்கி கான்செப்ட் பற்றித் தெரிய வந்துச்சு. மியாவாக்கி என்பது குறைந்த இடத்தில் அதிகமான மரங்களை நட்டு சின்ன காடு மாதிரியான அமைப்பை உருவாக்குவதுதான்.

எங்க அப்பார்மென்டில் சின்ன பார்க் ஒண்ணு இருக்கு அங்க மட்டும்தான் மணல் சார்ந்த இடம் என்பதால் அங்கே மரம் நடலாம்னு பிளான் பண்ணி அனுமதி கேட்டேன். அனுமதியும் கிடைச்சிருச்சு. நான் ஒரு டிரம்மர். 'டிரம்ஸ் சர்க்கிள்' என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். என் பிசினஸ் மூலமாக கிடைச்ச தொகையை மரம் வளர்க்க இன்வெஸ்ட் பண்ணேன்.

இடத்தைச் சுத்தப் படுத்த, குழிகள் தோண்ட, தண்ணீர் ஊற்ற என்று எல்லா வேலைகளிலும் எங்க அப்பார்ட்மென்டில் உள்ள என் நண்பர்களையும் சேர்த்துக்கிட்டேன். எல்லாரும் ஆர்வமாக உதவினாங்க. இதற்கு முன் மதுரையில் மியாவாக்கி காடுகள் உருவாக்கி இருக்கும் சக்தி அங்கிளும் சரியாக வழிகாட்டினார். மரம் வளர்க்க நாங்க பிளான் பண்ணியிருந்த இடத்தை 3 அடிக்கு குழிகள் தோண்டி காய்கறிக்குப்பைகள், சாணம் இதையெல்லாம் இட்டு ஒரு வாரம் ஊற வெச்சோம். அது எல்லாம் மண்ணோட மண்ணாக மக்கியதற்குப் பின் நேற்று செடிகளை நட்டு இருக்கோம்.

எங்களோட தோட்டத்தில் வேம்பு, பலா, மா, அரசமரம், மந்தாரை, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா மற்றும் மூலிகைச் செடிகள், பூச்செடிகள் என மொத்தம் 101 செடிகள் நட்டு இருக்கோம். பொதுவாக 1000 சதுரடி நிலத்தில் 23 முதல் 30 மரங்கள்தான் நட முடியும். மியாவாக்கி முறையைப் பின்பற்றி 2 அடி முதல் 4 அடி வரையிலான இடத்தில் 101 செடிகளை நட்டு இருக்கோம்.

முதலில் நீங்கள் எங்கு மரம் நடப்போகிறீர்களோ அந்த இடத்தை முழுவதுமாக குளம் போன்று மூன்றிலிருந்து நான்கு அடி ஆழம் வரை தோண்டி சுத்தப்படுத்த வேண்டும். அப்போதுதான் மரம் நெருக்கமாக இருந்தாலும் வேர் பரவுவதில் சிக்கல் இல்லாமல் இருக்கும்.
மியாவாக்கி வடிவமைப்பாளர் சக்தி

எங்களோட செடிகள் எல்லாம் இன்னும் பத்து மாசத்தில் மரங்களாக வளர்ந்து, எங்க பார்க் சின்ன காடாக உருவாகிவிடும். இது ஒரு சின்ன முயற்சிதான். சக்சஸ் ஆயிருச்சுனா அடுத்தடுத்து இன்னும் நிறைய பிளான் இருக்கு" எனப் புன்னகைக்கிறார் சரண்.

மியாவாக்கி முறை என்பது என்ன, எப்படிச் செடிகளை நட வேண்டும் என மியாவாக்கி காடுகளை உருவாக்கும் சக்தியிடம் பேசினோம்.

"மரங்களை மிக நெருக்கமாக நடுவதைத்தான் ஜப்பானியர்கள் மியாவாக்கி முறை என்கிறார்கள். இந்த முறையைப் பின்பற்றி 100 சதுரடி இடத்தில் கூட 10 மரங்கள் வரை நட முடியும். மியாவாக்கி முறையைப் பின்பற்றி இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் மரம் நடத்தொடங்கியிருக்கிறார்கள்.

மரம் வளர்ப்பு
மரம் வளர்ப்பு

முதலில் நீங்கள் எங்கு மரம் நடப்போகிறீர்களோ அந்த இடத்தை முழுவதுமாக குளம் போன்று மூன்றிலிருந்து நான்கு அடி ஆழம் வரை தோண்டி சுத்தப்படுத்த வேண்டும். அப்போதுதான் மரம் நெருக்கமாக இருந்தாலும் வேர் பரவுவதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். குளம் போன்று தோண்டிய பகுதியில் முதலில் பழைய தென்னை மட்டை, தேங்காய் ஓடு போன்ற கழிவுகளை இடவேண்டும். இது குழியின் மூன்றாவது அடுக்காகும்.

இரண்டாவது அடுக்கில் காய்கறிக்கழிவுகள், மரத்தூள் போன்றவற்றை நிரப்புங்கள். அதன்பின் மேல் அடுக்கில் சாணி, சாம்பல் போன்றவற்றை இட்டு மண்ணால் மூடி தண்ணீர் தெளித்து ஒரு வார காலம் கழிவுகளை மக்கச்செய்ய வேண்டும். வளம் குறைந்த மண் எனில் மேல்பகுதியில் செம்மண் இட்டுக்கொள்ளுங்கள்.

குழந்தைகள்
குழந்தைகள்

கழிவுகள் நன்கு மக்கி, மண் உள்ள இடம் சிறிதுகாயந்த பின், செடிகள் நடுவதற்கு, குழிகள்தோண்டி செடிகளை நடவேண்டும். முதலில் வேம்பு போன்று ஓர் அடர்த்தியான மரம் நடுகிறீர்கள் எனில், அதற்கு பக்கத்தில் மாதுளை, கொய்யா போன்ற அடர்த்தி குறைந்த மரத்தை நடவேண்டும்.

செடிகள் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள நர்சரிக்குச் சென்று, உங்களுக்குப் பிடித்த செடியை ரெண்டு அடி உயரத்திலிருந்து நான்கு அடி உயரத்திற்குள் இருக்கும் படி பார்த்து தேர்வு செய்யுங்கள். செடிகளை வாங்கி அவை சுற்றியிருக்கும் பை அல்லது பூந்தோட்டியை நீக்கிவிட்டு நீங்கள் உரமிட்டு இருக்கும் மணல் பகுதியில் செடியை நட வேண்டும்.

மரம்
மரம்

அவ்வப்போது தண்ணீர் தெளித்து, பராமரித்து வந்தால் உங்கள் ஏரியாவிலும் அடர் காடு சாத்தியமாகும். இரண்டு மூன்று அடுக்குகளாக இயற்கைக் கழிவுகளை நிரப்பியிருப்பதால் அடிக்கடி உரம் இட்டு பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை!" என்று முடித்தார்.