Published:Updated:

அடமும் பிடிக்கிறான்; அசரவும் வைக்கிறான்... தனசேகரை எப்படிப் புரிந்துகொள்வது?

தான் கதை சொல்லிமுடித்ததும், மற்றவர்கள் சொல்லும்போது குறுக்கிட்டுக் குறுக்கிட்டு கேலி செய்வான் தனசேகர். ரொம்ப அதட்டினால், சட்டென எழுந்துபோய் வேறு விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்துவிடுவான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

னசேகர் ஏழாம் வகுப்புப் படிக்கிறான். அந்தப் பகுதியில் இருக்கும் சில இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து நடத்தும் இலவச மாலை வகுப்பு மற்றும் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் வருபவர்களில் தனசேகரும் ஒருவன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். சொடுக்கு போடும் நேரத்தில் ஒரு கதையை உருவாக்கிச் சொல்ல ஆரம்பிப்பான். எந்த விஷயமாக இருந்தாலும் முதல் ஆளாக முன்வந்து செய்ய ஆரம்பிப்பான்.

ஆனால், ஒரு பிரச்னை. தான் கதை சொல்லிமுடித்ததும், மற்றவர்கள் சொல்லும்போது குறுக்கிட்டுக் குறுக்கிட்டு கேலி செய்வான் தனசேகர். ரொம்ப அதட்டினால், சட்டென எழுந்துபோய் வேறு விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்துவிடுவான். அதைப் பார்த்து அவனுடன் இன்னும் சிலரும் சேர்ந்துவிடுவார்கள். இதனால், அந்த நிகழ்வே கொஞ்ச நேரத்துக்குக் குளறுபடி ஆகிவிடும்.

Representational Image
Representational Image
pixabay

நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் இளைஞர்கள் பலமுறை கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி எனப் பல வழிகளில் சொல்லிப் பார்த்துவிட்டார்கள். சில சமயம் கோபத்தில் வெளியே போ என்றும் சொல்வார்கள்.

அதற்கும் அசரமாட்டான் தனசேகர். ``ஏன் போகணும்? எனக்குப் பிடிச்சதை செய்யறேன். மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகுதுன்னா நான் என்ன பண்றது?'' என்பான்.

நாம் எப்படிப் பேசினாலும் அதற்கு எதிராகக் கேள்விகள் கேட்பான். இளைஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால், சில சமயம் கலைநிகழ்ச்சிகளை நடத்த வெளியிலிருந்து வரும் சிறப்பு கலைஞர்களிடமும் இப்படித்தான் நடந்துகொள்வான். அது நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

தனசேகரை ஒரேயடியாகக் கோபிக்கவும் முடியவில்லை. ஏனெனில், எல்லோரும் வியக்கும் வகையில் அவனின் சில செயல்கள் இருக்கும். அந்தப் பகுதியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி இருக்கிறாள். அவளுக்காக நண்பர்களுடன் திட்டமிட்டு சர்ப்ரைஸாக பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடினான்.

``அந்த அக்காவுக்கு அப்பா இல்லே. அம்மா வீட்டு வேலை செய்யறாங்க. அந்த அக்கா புது டிரெஸ் போட்டே பார்த்ததில்லே. சொந்தக்காரங்க கொடுக்கிற பழைய டிரெஸ்தான் போடுவாங்க. பிறந்தநாள் கொண்டாடினதே இல்லையாம். அதான் இப்படி சர்ப்ரைஸ் கொடுத்தோம்'' என்றான் தனசேகர்.

Representational Image
Representational Image
pixabay

``கேக் வாங்க பணத்துக்கு என்னடா செஞ்சீங்க?'' என்று கேட்டார்கள் இளைஞர்கள்.

``எங்க வீட்டுல கேட்டோம். கொடுத்துதான் ஆகணும்னு அடம்பிடிச்சு வாங்கினோம்'' என்றான்.

``திட்டலையா?''

``அதெல்லாம் காதுல வாங்கிக்கக் கூடாது'' என்றபடி நகர்ந்துவிட்டான்.

அந்தப் பகுதியில் இருக்கும் தன்னைவிட வயது குறைந்த பிள்ளைகளிடம் நிகழ்ச்சி முழுக்க வம்பு செய்துகொண்டிருப்பான். ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களைப் பத்திரமாக அவரவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நாங்க அந்தப் பக்கம்தான்டா போறோம். விட்டுட்டுப் போறோம்'' என்று சொன்னால், ``வேணாம்... வேணாம்... நான் பார்த்துக்கிறேன் கிளம்புங்க'' என்பான்.

இவனை எப்படி நடத்துவது என்றே புரியாமல் குழம்பினார்கள் இளைஞர்கள். அந்த வாரம் அப்படித்தான், சிறப்பு கலைஞராக ஒரு கதைசொல்லி வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்த பிறகு, அவர்களுக்காகத் தன் செலவில் வாங்கிவந்திருந்த பென்சில்களைக் கொடுத்தார்.

ஆனால், பென்சில்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இத்தனை பேர் இருப்பார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால், சின்ன பசங்களுக்கு முதலில், மிச்சம் இருந்தால் மற்றவர்களுக்கு என்று முடிவானது. அதனால், கிடைக்காத சில பெரிய பிள்ளைகள் அமைதியாகப் போய்விட்டார்கள்.

Representational Image
Representational Image
pixabay

ஆனால், தனசேகர் விடவில்லை. ``அது எப்படி கொஞ்ச பேருக்கு மட்டும் கொடுக்கலாம்? நீங்க வர்றதுக்கு முன்னாடியே போன் போட்டு எத்தனை பேர் இருக்காங்கன்னு கேட்டுகிட்டு அதுக்கு ஏற்றமாதிரி வாங்கி வந்திருக்கணும். குறைவா வாங்கிகிட்டு வந்தது உங்க தப்பு. எனக்கு இப்போ வேணும்'' என்று அவரைப் பார்த்து கைநீட்டி பேச ஆரம்பித்துவிட்டான்.

இளைஞர்களுக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. அவன் பேச்சை தடுக்க எவ்வளவோ முயன்றார்கள். ம்ஹூம்... வழக்கம்போல அவன் யாருக்கும் அடங்கவில்லை.

பிறகு, அவரே அவனை அருகில் இருக்கும் கடைக்கு அழைத்துச் சென்று ஒரு பென்சிலை வாங்கிக்கொடுத்தார். அதன்பிறகும், ``ம்... இனிமேலாவது ஒரு விஷயத்தைச் செய்யும்போது எப்படிச் சரியா செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க'' என்று பன்ச் அடித்துவிட்டுச் சென்றான் தனசேகர்.

இளைஞர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு, தனசேகர் பற்றி பல விஷயங்களைப் புலம்பினார்கள். அடங்காத பிள்ளை, அவனுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறோம் என்றார்கள்.

Representational Image
Representational Image
pixabay
அரசுப் பள்ளி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? - வாசகர் பகிர்வு #MyVikatan

அவர் புன்னகையோடு, ``அவன் கேட்ட முறையும் வார்த்தைகளும் நமக்கு எரிச்சல் கொடுத்திருக்கலாம். ஆனால், அவன் சொல்லவந்த விஷயம் சரிதானே. தப்பு யார் செய்தாலும் தைரியமா கேட்கிறான். எந்த விஷயத்திலும் தான் முன்நின்று, தலைமையா இருக்கணும்னு நினைக்கிறான். கதையைச் சொல்லி முடிச்சதும் மற்றவங்களைக் கிண்டல் பண்றான் குறுக்கிடறான்னு சொல்றீங்க இல்லியா? எல்லோரையும் கதை சொல்ல வைக்கிற, நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிற பொறுப்பையே அவன்கிட்ட ஒப்படைங்க'' என்றார்.

அடுத்த வாரத்தில் அப்படிச் செய்ததும், தனசேகர் ஆளே மாறிவிட்டான். குறுக்கிடுபவர்களையும் அதட்டி உட்கார வைத்தான்.

இப்படித்தான் எந்தப் பிள்ளையும் கெட்ட பிள்ளை இல்லை. அவர்களை எப்படிப் புரிந்துகொண்டு, அவர்களிடம் என்ன சாவி கொடுப்பது என்பதில்தான் இருக்கிறது விஷயம். அப்படிச் செய்துவிட்டால், அவர்களுக்கான வாசல் கதவை அவர்களே திறந்துகொள்வார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு