Published:Updated:

அன்போ அக்கறையோ... குழந்தைகளிடம் உரிமை எடுப்பதற்கு முன் இவற்றையெல்லாம் கவனிங்க!

குழந்தை
News
குழந்தை ( pixabay )

அன்போ, கண்டிப்போ எதுவாக இருந்தாலும் ஒரு குழந்தையிடம் பிரயோகிக்கும் முன்பு சில விஷயங்களைக் கவனத்தில்கொள்வது மிக முக்கியம். அந்தக் குழந்தையின் வயது, உறவுமுறை, குழந்தையின் மனநிலை ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும்.

பள்ளி முடிந்து வெளியே வந்த அந்தப் பத்தாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர், சாலையோரம் நின்று அரட்டையடித்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் அந்தப் பக்கம் வந்த ஓர் ஆசிரியை வண்டியை நிறுத்தினார்.

"ஏய்... ஸ்கூல் முடிஞ்சு எவ்வளவு நேரமாச்சு. வீட்டுக்குப் போகாம இங்கே நின்னு என்ன பண்ணிகிட்டிருக்கீங்க? போறவன் வர்றவன் எல்லாம் வேடிக்கை பார்க்கிற மாதிரி கெக்கபிக்கேன்னு சிரிச்சுகிட்டிருக்கீங்க?'' என்று சீறினார்.

அத்துடன் விடவில்லை. மறுநாள் மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து, "4.30 மணிக்கு ஸ்கூல் முடியுது. நாலே முக்கால், 5 மணிக்குள்ளே அவங்க வீட்டுல இல்லைன்னா எனக்கு போன் பண்ணுங்க. இனிமே தினமும் அந்த டைமுக்குள்ளே வந்துட்டதுக்கான கையெழுத்து போட்டு அனுப்புங்க'' என்றார்.

kids
kids
pixabay

தன் பள்ளி மாணவிகள், பத்திரமாக வீடு சென்று சேர வேண்டும் என்ற அவரது அக்கறை சரிதான். அதற்காக, பள்ளிக்கு வெளியே அவர்களின் உரிமையை, மகிழ்ச்சியைத் தடுப்பது நியாயமா?

அதைவிடக் கொடுமை, அப்படி அந்த மாணவிகள் அங்கே நின்று அரட்டை அடிப்பதே, யாரையோ கவருவதற்காக என்ற எண்ணம். "இப்படித்தான் கெட்டுப் போறாங்க. அப்புறம் நீங்க எங்கிட்ட வந்து கேள்வி கேட்பீங்க'' என்று பெற்றோரையும் குழந்தைகளையும் ஒன்றுசேர அசிங்கப்படுத்தினார் அந்த ஆசிரியை.

பெற்றோர்களில் பலர் வீட்டிலும் அப்படித்தான். போனில் நண்பர்களுடன் சிரித்துப் பேசினால், "போன்ல என்ன அரட்டை? அதுதான் காலையிலிருந்து ஸ்கூல்ல பேசிகிட்டுதானே வர்றீங்க. பாடம் சம்பந்தமா சந்தேகம் கேட்கிறதுக்கு மட்டும்தான் பேசணும்'' என்று போனை பிடுங்கும் பெற்றோர் உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அளவுக்கு மீறி நீண்ட நேரம் பேசுவதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாமே தவிர, அரட்டையே கூடாது எனத் தடுப்பது எந்த வகையில் நியாயம்? நண்பர்களிடையே அந்தந்த வயதுக்குரிய விஷயங்கள் பேசிக்கொள்வது அவர்களின் உரிமை.

அன்போ, கண்டிப்போ எதுவாக இருந்தாலும் ஒரு குழந்தையிடம் பிரயோகிக்கும் முன்பு சில விஷயங்களைக் கவனத்தில்கொள்வது மிக முக்கியம். அந்தக் குழந்தையின் வயது, உறவுமுறை, குழந்தையின் மனநிலை ஆகியவற்றை கவனிக்க வேண்டும். அந்தக் குழந்தைக்கு விருப்பம் இல்லாத நேரத்தில் அன்பை வெளிப்படுத்துவதுகூட உரிமை மீறலே.

kids
kids
pixabay

வளரிளம் குழந்தைகளிடம்தான் நாம் அதிகம் வரையறை மீறுகிறோம். ஏனெனில், அவர்கள்தான் அதிகம் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். நம் கருத்துக்கு எதிராகக் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு முன்பு வரை, நம் கைகள் பிடித்தே நடந்தவர்கள், கைகளை உதறி சுயமாக நடக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கென ஒரு நட்பு வட்டம், பேச்சுகள், செயல்கள் என மாறுகிறது.

தவறாகச் சென்றுவிடுவார்களோ என்று பயப்படுகிறோம். அல்லது அவர்கள் செய்வது எல்லாமே தவறு என்று நினைக்கிறோம். அதனால், அவர்களின் விஷயத்தில் அதிகம் தலையிடுகிறோம். அக்கறை என்கிற பெயரில் நம்மை மீறி வரையறை தாண்டுகிறோம்.

பெரிய குழந்தைகளிடம் கண்டிப்பு என்றால், சிறு குழந்தைகளிடம் அன்பு என்கிற பெயரில் வரையறையை மறந்துவிடுகிறோம். 5 வயதுக்கு மேற்பட்ட உங்களின் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சவும் முத்தமிடவும் உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், உங்களின் நெருங்கிய நண்பராகவே இருந்தாலும், அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்களின் குழந்தையை அணைக்கவோ, முத்தமிடவோ செய்யாதீர்கள். அதுதான் நண்பர்களின்/தெரிந்தவர்களின் குழந்தைகளிடம் வெளிப்படுத்தும் நம் உரிமையின் வரையறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் குழந்தையின் திறமைகளை மற்றவர்களிடம் பெருமையுடன் எடுத்துச் சொல்லும் முன்பு, அதில் உங்கள் குழந்தைக்கு விருப்பமா என்று பாருங்கள். உங்கள் குழந்தை விரும்பாத நேரத்தில், விரும்பாத நபர்களிடம் சொல்வதோ, அவர்கள் முன்னிலையில் செய்ய வைப்பதோகூட வரைமுறை மீறலே.

உங்களுக்குத் தெரிந்தவர்களின் பிள்ளைகள் தவறாகப் பேசினால், தவறான செயலில் ஈடுபட்டால், அதைத் தடுக்கும் உரிமை மட்டுமே உங்களுக்கு உண்டு. அவர்களைத் தண்டிப்பதோ, மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ தவறு. அந்தப் பிள்ளையின் பெற்றோருக்கு விஷயத்தைச் சொல்லி, அவர்களின் பொறுப்பில் விடுங்கள்.

kids
kids
pixabay

நீங்கள் பெற்றோராக இருக்கலாம். வேறு உறவாக இருக்கலாம். ஆசிரியராக இருக்கலாம். குழந்தைகள் செயற்பாட்டாளராகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அந்தந்த கதாபாத்திரத்தின் அடிப்படையில், குழந்தைகளிடம் உரிமை எடுத்துக்கொள்வதற்கு ஓர் எல்லை உள்ளது. அந்த எல்லையை, வரையறையைப் புரிந்துகொள்ளுங்கள். அதன் அடிப்படையில் மட்டுமே உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும். அன்பு, அக்கறை என்கிற பெயரில் தெரிந்தோ, தெரியாமலோ குழந்தைகளிடம் வன்முறையைச் செலுத்திவிடாதீர்கள்.