Published:Updated:

உங்கள் குழந்தைக்குக் கட்டாயம் இந்த 5 விஷயங்களைக் கத்துக்கொடுங்க!

தன்னைவிட வயதில் மற்றும் அனுபவத்தில் குறைந்தவர்களையும் மதிக்கும் பண்பை நம் குழந்தைகளுக்குள் ஏற்படுத்திவிட்டால், அவர்களின் எதிர்காலத்திலும் ஈகோ என்ற ஒன்று உண்டாகாது.

குழந்தைகள்
குழந்தைகள் ( pixabay )

நீண்ட நாளைய முகநூல் நண்பர் அவர். 'ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வாங்க' என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதனால், உறவினர் விசேஷத்துக்குச் சென்றிருந்தபோது அந்த நண்பருக்கு போன் செய்ய, அவரே வந்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

வீட்டுக்குள் நுழைந்தபோது ஹாலில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இன்று நிறைய குழந்தைகள் ரசித்துப் பார்க்கும் புகழ்பெற்ற கார்ட்டூனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் 7 வயதும் 10 வயதுமான நண்பரின் வாரிசுகள்.

``வாங்க... வாங்க...'' என அழைத்தார் நண்பரின் மனைவி.

``ஹாய் அங்கிள்'' என்று கையசைத்து சிரித்தாள் மகள்.

மகன் சட்டென எழுந்துசென்று தொலைக்காட்சியை அணைத்துவிட்டுத் திரும்பி வந்தான்.

குழந்தைகள்
குழந்தைகள்
pixabay

``அடடா... ஏன்ப்பா ஆஃப் பண்ணிட்டே? நீங்க பாருங்க'' என்றதற்கு, ``இல்லே அங்கிள். அப்புறம் பார்த்துக்கிறோம். வீட்டுக்கு வந்த விருந்தாளிகள்கிட்ட முதல்ல பேசணும்'' என்று புன்னகைத்தான் நண்பரின் மகன்.

அதுமட்டுமா? ``உங்களைப் பற்றி அப்பா சொல்லியிருக்கார்'' என்று இருவரும் மாற்றி மாற்றி சில வார்த்தைகள் பேச, அத்தனை நெகிழ்ச்சியாகிவிட்டது.

குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்கவிடுவது எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் சில பண்பாடுகளைச் சொல்லிக்கொடுத்து அவர்களை இயல்பாகப் பழக்கப்படுத்துவது. இது, குழந்தைகளிடம் நற்குணங்களை வளர்ப்பதுடன், நம் குழந்தைகள் மீது மற்றவர்களுக்கு மதிப்பையும் தனித்த அடையாளத்தையும் கொடுக்கும். அத்தகைய அடையாளத்தை உங்கள் குழந்தைகளுக்கு அளியுங்கள்.

1. வீட்டுக்கு ஒருவர் வருகிறார் என்றால், அவரைப் பற்றி குழந்தைகளிடம் முன்கூட்டியே சில வார்த்தைகள் சொல்லிவையுங்கள். குறிப்பாக, அவரின் திறமைகள், குடும்பம், குழந்தைகளின் பெயர்களைச் சொல்லுங்கள். வருபவர்களிடம் அதைக் குறிப்பிட்டு நலம் விசாரிக்கும் முறையையும் சொல்லிக்கொடுங்கள். இப்படி ஒருவரின் பர்சனலான விஷயத்தைக் குறிப்பிட்டு பேசும்போது மிகவும் மகிழ்வார்கள். பேசுவது குழந்தைகள் என்பதால், அவர்களின் உற்சாகம் இரண்டு மடங்காக இருக்கும்.

kids
kids
pixabay

2. அதேபோல ஒருவரின் வீட்டுக்குச் செல்லும் முன்பும் அவர்களைப் பற்றிச் சொல்லி அழைத்துச் செல்லுங்கள். முக்கியமாக, அங்கே இருக்கும் குழந்தைகள் பற்றி அதிகம் சொல்லுங்கள். அந்தக் குழந்தைகளிடம் எதற்காகவும் கோபித்துக்கொள்ளாமல் விளையாட வேண்டும், அவர்களின் பொம்மைகள் மற்றும் பொருள்களை அனுமதி பெற்றே தொட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள்.

3. குடும்ப விழா மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கு எப்போதும் விளையாட்டு மீதுதான் ஆர்வம் இருக்கும். நன்றாக விளையாடட்டும். அதனுடன் நிகழ்ச்சியில் சின்னச் சின்ன உதவிகளை முன்வந்து செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நாற்காலிகளை நகர்த்திப் போடுவது, பெரியவர்கள் வந்தால் தண்ணீர் கொடுப்பது போன்ற உதவிகள் செய்ய பழக்கப்படுத்துங்கள். இவற்றை இன்னும் சில குழந்தைகளுடன் சேர்த்து ஒரு பொறுப்பாகவும் கொடுக்கலாம். அவர்களுக்கும் `குட்டிப் பெரியவர்கள்' என்ற உணர்வு ஏற்படும்.

கிச்சன் முதல் பீச் வரை... உங்கள் குழந்தைகளோடு கொண்டாட சன்டே டைம் பேபிள்!

4. அதேபோல பொது இடங்களில் தன்னைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் தன்னைச் சுற்றி சுத்தமாக இருக்கும் வகையில் நடந்துகொள்ளப் பழக்கப்படுத்துங்கள். சாக்லேட் கவர்களையோ, பேப்பர் கோப்பைகளையோ உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே வைக்காமல், எழுந்துசென்று குப்பைத் தொட்டியிலோ, அதற்குரிய இடத்திலோ போட்டுவிட்டு வரச் சொல்லுங்கள். அப்படிச் சொல்கையில் அருகிலுள்ள வயதானவர்களிடமிருந்தும் கேட்டு வாங்கிச் சென்று போடப் பழக்கப்படுத்துங்கள்.

5. பெரியவர்களுக்கு உதவுவது, பெரியவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்வது மட்டுமல்ல, தன்னைவிட வயதில் சிறியவர்களிடம் மதிப்பையும் அன்பையும் பெறச் செய்வதும் மிகச் சிறந்த பண்பாடு. வயதில் சிறிய குழந்தைகளிடம் விட்டுக்கொடுப்பது, அவர்கள் சொல்லவரும் விஷயங்களையும் பொறுமையாகக் கேட்பது, தவறாக இருந்தால் அதைப் புரியவைப்பது போன்றவற்றுக்கும் பழக்கப்படுத்துங்கள். தன்னைவிட வயதில் மற்றும் அனுபவத்தில் குறைந்தவர்களையும் மதிக்கும் பண்பை நம் குழந்தைகளுக்குள் ஏற்படுத்திவிட்டால், அவர்களின் எதிர்காலத்திலும் ஈகோ என்ற ஒன்று உண்டாகாது.

kids
kids
pixabay
80'ஸ் கிட்ஸ் பொங்கல் எப்படியிருந்தது? பொங்கல் நினைவுகள்!

இத்தகைய செயல்கள் உங்கள் குழந்தைகளை அனைவரிடமும் தனித்து அடையாளம் காட்டும்!