பார்க்கப் பார்க்க சலிக்காதவை மலையும் யானையும் என்பார்கள். அதுபோலவே, பேசப் பேச அலுக்காத, அயர்ச்சி தராத பல விஷயங்களில் ஒன்று தங்கம். `அன்றாடங்காய்ச்சிதான் நான்.. ஆனாலும் பொட்டு தங்கமாச்சும் போட்டுத்தான் என் பிள்ளையைக் கட்டிக் கொடுக்கணும்' எனச் சொல்லும் அம்மாக்கள் இங்கு ஏராளம். பிள்ளை முதல் பிரியமான காதலி வரை எல்லோரையும் கொஞ்சுவதற்கும் தங்கம்தான் இங்கே செல்ல வார்த்தை.
பெரியாழ்வார்கூட திருமாலுக்குத் தாலாட்டு பாடும்போது, `ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்' எனப் பொன்னைத்தான் மேற்கோள் காட்டுகிறார்.
தங்கத்தின் மவுசு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் அதிகம். ஏனெனில், தங்கம் வெறும் மஞ்சள் உலோகம் மாத்திரமல்ல, அதை மனிதர்களின் அந்தஸ்தை பறைசாற்றும் அடையாளமாகவே பார்க்கும் சமூகம் நம் சமூகம். அதனால்தான் வீட்டில் பெண் குழந்தை பிறந்த சில நாள்களுக்குள்ளேயே அவர்களுக்கு நகை சேர்க்கும் வழக்கம் பல குடும்பங்களில் தொடங்கிவிடுகிறது. சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழி, தங்க நகைகளை சிறுகச் சேர்க்கும் மத்தியதர, கீழ் மத்தியதர மக்களுக்கு வெகுவாகப் பொருந்தும்.

தங்கத்தில் முதலீடு செய்வது பற்றி ஏற்கெனவே #HerMoney-ல் பார்த்தோம். இன்னும் தங்க நகைகளில் மட்டும்தான் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், அந்தக் கட்டுரையை நிச்சயம் படித்துவிடுங்கள்.
தங்கம், கோல்டு இ.டி.எஃப், தங்கப் பத்திரங்கள் எனப்படும் சாவரின் கோல்டு பாண்ட் (Sovereign Gold Bond - SGB) இடையிலான ஒற்றுமைகள், வித்தியாசங்களை இன்னும் எளிமைப்படுத்தி ஓர் அடிப்படை புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் விளக்குமாறு வாசகிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்கி இந்த வாரம் நாம் பார்க்கப்போவது, `எவர்கிரீன் கமாடிட்டி'யான தங்கத்தில் செய்யப்படும் முதலீட்டு வகைகளுக்கிடையிலான சிறு ஒப்பீட்டு அலசல்.
தரம் - அது நிரந்தரமா?!
சென்னை சென்ட்ரலை நோக்கிப் போய்க்கொண்டிருந்த மின்சார ரயில் பயணத்தில் சந்தித்த கிருஷ்ணவேணியின் ஊர் செங்கல்பட்டு. தி.நகரிலுள்ள பிரபல நகைக் கடையின் பெயரைச் சொல்லி, தன் பழைய நகை ஒன்றை மதிப்பீடு செய்து பின் புது நகை வாங்குவதற்காக அந்தக் கடைக்குப் போவதுதான் அவரின் பயண நோக்கமே என்றதை என்னால் நம்ப முடியவில்லை. கூடவே அவர் சொன்ன மற்றொரு விஷயமும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
``எனக்கு நகை அங்க வாங்கினால்தான் ராசி. இப்போ பழசைக் கொடுத்து புதுசு வாங்கப் போறதைப் பார்த்தே, அதுக்கா இவ்ளோ தூரம் போறனு ஆச்சர்யப்படுறாங்க. ஆனா, மெட்டி வாங்கறதுனா கூட நான் அங்க மட்டும்தான் வாங்குவேன். காரணம், அங்கதான் தரம் நல்லா இருக்கும்" என்றார். தங்க ஆபரணத்தில் முதலீடு செய்யும் அனைவரின் மனதில் இருக்கும் அடிப்படையான விஷயம் அதன் தரம். ஏனெனில், தங்கத்தின் தூய்மை மற்றும் அதன் தரம் எப்போதும் ஒரு கேள்வியாகவும், பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கும்படியாகவுமே இருக்கின்றது. ஆனால், SGB அல்லது கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்யும்போது அதன் தரம் குறித்து கவலை கொள்ளத் தேவை இல்லை.

லாபமா, நஷ்டமா?
ஆபரணத் தங்கம்
ஆபரணத் தங்கத்தில் செய்கூலி மற்றும் சேதாரத்திற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் தங்கத்தின் மூலம் கிடைக்கும் `உண்மையான லாபம்' நம்மை வந்தடைவது என்பது குறைவு.
கோல்டு இ.டி.எஃப்
இந்த முதலீட்டின் வருவாய், தங்கத்தின் விலைபோக்கையொட்டியே இருக்கும். அத்துடன் செய்கூலி, சேதாரம் கிடையாது.
தங்கப் பத்திரம் (SGB)
இதிலும் செய்கூலி, சேதாரம் கிடையாது. ஆபரணத் தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை/லாபத்தைவிட இதன் மூலம் கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும்.
கடன் பிணையம் பெறும்போது...
ஆபரணத் தங்கம்
முன்பே சொன்னதுபோல, எதிர்பாராத பொருளாதார சிக்கல்களை சமாளிக்கத் துணிவே துணையோ இல்லையோ, தங்கமே துணை. அனைத்து வங்கிகளிலும் கடன் ஜாமீன் (Loan collateral) என்று வரும்போது அங்கே தங்கத்துக்கென தனி இடம் இருப்பதுடன் சிறந்த கடன் பிணையாகவும் இது இன்று வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
கோல்டு இ.டி.எஃப்
ஆபரண தங்கத்தைப்போலவே, அவசரத் தேவைக்கு கோல்டு இ.டி.எஃப்-களையும் அடமானம் வைத்து வங்கிகளிலிருந்து கடன்பெற முடியும்.
தங்கப் பத்திரம் (SGB)
இதையும் ஆபரண தங்கத்தைப்போல, கோல்டு இ.டி.எஃப் போலவே அடமானம் வைத்து வங்கிகளிலிருந்து கடன் பெற முடியும்.

பாதுகாப்பு..?
ஆபரண தங்கம்
ஆபரண தங்கத்தைப் பொறுத்தவரை திருட்டு குறித்த அச்சமும், அணிய அணிய ஆபரணங்கள் பழுதுபடுவதற்கான வாய்ப்புகளும், தேய்மானமும் அதிகம். அத்துடன் இதைப் பாதுகாக்க லாக்கரும் அவசியம்.
கோல்டு இ.டி.எஃப்
பேப்பர் தங்கம் என்பதால் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. பாதுகாக்க லாக்கரும் வேண்டியதில்லை.
தங்கப் பத்திரம் (SGB)
இங்கும் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. பாதுகாக்க லாக்கரும் வேண்டியதில்லை.
அத்துடன், ஆபரண தங்கத்தை பாதுகாத்து பராமரிக்கும் செலவுகள் அதிகம். ஆனால் கோல்டு இ.டி.எஃப் மற்றும் தங்கப் பத்திரத்தைப் பொறுத்தவரையில் இதுபோன்ற பராமரிப்புச் செலவுகள் என எதுவும் இல்லை.
நீங்கள் தங்கம் வாங்குவது அழகுக்காக என்றால் சரி. ஒரு வகையில் முதலீடாகவும், ஆபத்து நேரத்தில் உதவும் என்றும் வாங்குவதாக இருந்தால், ஆபரணத் தங்கம் அவ்வளவு சிறந்த ஆப்ஷன் கிடையாது என்பதை மட்டும் மனதில் வையுங்கள் தோழிகளே.