Published:Updated:

மதுர மக்கள்: "வரதட்சணை கொடுமை, வாழ்க்கையே முடிஞ்சதுனு நினைச்சேன்! ஆனா..."- `முயல் சத்யா'வின் கதை!

மதுர மக்கள் | முயல் சத்யா
News
மதுர மக்கள் | முயல் சத்யா

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

மதுர மக்கள்: "வரதட்சணை கொடுமை, வாழ்க்கையே முடிஞ்சதுனு நினைச்சேன்! ஆனா..."- `முயல் சத்யா'வின் கதை!

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

மதுர மக்கள் | முயல் சத்யா
News
மதுர மக்கள் | முயல் சத்யா

"சொந்த ஊரு கொட்டாம்பட்டிதான். முதுகலை முடிச்சுட்டு டீச்சர் வேலை பார்த்தேன். வீட்டு சூழல்னால சீக்கிரமே கல்யாணம் நடந்துச்சு. எல்லா பொண்ணுங்களுக்குமே இருக்கிற அதே கனவுகளோடதான் கல்யாண வாழ்க்கைய தொடங்குனேன். ஆனா அது அவ்வளவு சந்தோஷமா அமையல! பெரிய ஏமாற்றம், தினம் தினம் கண்ணீர் மட்டும்தான் எனக்கு மிச்சம். வாழ்க்கையில எல்லாமே முடிஞ்சு போச்சுனு நினைச்சேன். இப்படியே போனா என்னத்தயாச்சும் பண்ணிக்கப்போகுதுன்னு பயந்துட்டாங்க... சரின்னு மனசு திருப்திக்காக மூணு முயல் குட்டி வாங்கி வந்து குடுத்தாங்க அண்ணன். அதுங்கள பராமரிக்கவும், வளர்க்கவும்னு என்னை சுத்தி இருந்து கவலைகளை மறக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு அதுவே எனக்கு வருமானமாகவும் மாறிப்போச்சு. அஞ்சு முயலோட தொடங்கினேன். இன்னைக்கு 300 முயல்கள்!" - அவ்வளவு நம்பிக்கையுடன் பேசுகிறார் சத்யா.

பொழுதுபோக்குக்காக வளர்த்த முயல், எப்படித் தொழிலா மாறுச்சு?

 முயல் சத்யா
முயல் சத்யா

"வாழ்க்கையில நாம சந்திக்கிற மனுஷங்க ஒவ்வொருத்தவங்களும் நமக்கு எதாவது ஒரு வகையில் அற்புதங்களையும், அபத்தங்களையும் தந்துவிட்டு போறவங்களா இருக்காங்க. ஆனா நாம அதையெல்லாம் நம்மளோட அனுபவங்களா மாத்திக்கணும். கல்யாணம் பண்ணும்போது டீச்சர் வேலை மாப்பிள்ளைன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்குடுத்தாங்க. கல்யாணாத்துக்கு பிறகுதான் தெரிஞ்சது மாப்பிளைக்கு வேலையே இல்லைன்னு... நகைகளை எல்லாம் அடகு வச்சுக்கிட்டு வரதட்சனை கொடுமை பண்ண ஆரம்பிச்சாங்க. எதையும் எதிர்த்து கேட்குற குடும்ப சூழல் வாய்க்கவே இல்ல. நிறை மாச கர்ப்பினியா இருக்கும்போது அனுபவிச்ச கொடுமைகள் எல்லாம் நிறையவே இருக்கு. குழந்தைக்காகப் பொறுத்துக்கிட்டேன். குழந்தைக்கு இருதயத்துல பிரச்னை அப்படின்னு கேள்விப்பட்ட வீட்டுக்காரர் அதுக்கு அப்றம் என்னை நடத்துற விதம் இன்னும் ரொம்ப மோசமா போச்சு. குழந்தை நமக்கு வேணும்னா சேர்ந்து வாழ்றதுல அர்த்தம் இல்லைனு விலகிட்டேன்.

அப்போ கருங்காலக்குடியில தினசரி வேலைக்கு போகும்போது பெரியவர் ஒருத்தரைப் பார்த்தேன். அவருக்கு அஞ்சு பிள்ளைங்க... ஆனா யாரும் இப்போ அவருக்கு கண்டுக்கடலன்னு சொன்னாரு. ஆனாலும் அவருக்கு முயல்தான் யார்கிட்டையும் கையேந்த விட்டாம காப்பாத்திருக்குன்னு சொல்லி முயல் வளர்ப்பு பத்தி புரிய வச்சார். தன்னம்பிக்கையும் தன்மானமும்தானே முக்கியம்! எல்லாத்தையும் விட்டுட்டு, வெறும் வளர்ப்புக்காக வாங்குன முயல்களை வருமானத்துக்கு ஏத்த விதமா மாத்தணும்னு முடிவு பண்ணுனேன். அவமானங்கள்தானே எல்லாத்தையும் கத்துக்குடுக்கும்! குடும்ப வாழ்க்கையோட கசப்பான அனுபவங்கள்தான் நமக்கான அடையாளத்த தேடிக்கணுங்கிற ஒருவித வெறியை எனக்கு உண்டு பண்ணுச்சு. அதான் இப்போ என்னை இந்தளவுக்கு உயர்த்திருக்கு!"

முயல் பண்ணையின் ஆரம்பகால செயல்பாடுகள் எப்படி இருந்தன?

 முயல் சத்யா
முயல் சத்யா

"2017-ல்தான் ஆரம்பிச்சேன். வெறும் அஞ்சு முயல்கள் இருந்துச்சு. அதுக்கு பிறகு அண்ணனோட உதவியால ஊருக்கு வெளியில கொஞ்சம் இடம் கிடைச்சது. அதுல ஒரு யூனிட்லதான் தொடங்குனேன். அதாவது ஏழு பெண் முயல்கள் மூணு ஆண் முயல்கள்னு ஆரம்பிச்சேன். முயல்களோட எண்ணிக்கை குறைவா இருந்ததால பராமரிக்கிற செலவும் நேரமும் குறைவாகவே இருந்துச்சு. காலைலயும் சாயங்காலமும் முயலுக்காகவும் மீதி நேரத்துல வேலைக்கும் போக அரம்பிச்சேன். சில்லறை விற்பனை அதிகமாக அதிகமாக யூனிட் அதிகமாச்சு. ஒரு யூனிட் நாலு யூனிட்டா மாறுச்சு, நாம ஜெயிச்சுடலாம்னு நம்பிக்கை வந்துச்சு!"

எப்படி பராமரிக்கிறீங்க?

"முயல்களை நாம நல்லா பார்த்துக்கிட்டா பதிலுக்கு முயல்கள் நம்மளை நல்லா பார்த்துக்கும்.

முயல்களால் அதிக வெப்பத்தையும் குளிரையும் தாங்க முடியாது. அதனால கூரைக் கொட்டகைதான் நல்லது. அது, காத்து மழையைத் தாங்கக்கூடியதாகவும் இருக்கணும். இதோடு முயல்களுக்கு மண் தரைதான் நல்லது. அப்போதான் முயல்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்படாம இருக்கும். குழாய்வழியா தண்ணி கொடுத்தா, அடிக்கடி தண்ணி தர வேண்டிய அவசியம் இருக்காது.

பண்ணையும் சுத்தமாக இருக்கும். மண்பானையில தண்ணியை ஊத்தி, குழாய் வழியாகக் கொடுத்தா ஆரோக்கியமா இருக்கும். முயலுக்குச் செரிமானத் தன்மை குறைவு. அதனால அடிக்கடி தீவனம் கொடுக்கக் கூடாது. காதைப் பிடிச்சு தூக்கக் கூடாது. காலையில 7 மணியில இருந்து 8.30 மணிக்குள்ள அடர் தீவனம் கொடுக்கணும்."

முயல் சத்யா வளர்க்கும் குதிரை
முயல் சத்யா வளர்க்கும் குதிரை

அடுத்த இலக்கு என்ன?

"சாதா சத்யாவ இன்னைக்கு 'முயல் சத்யா'னு அடையாளப்படுத்துனது இந்தப் பண்ணையம்தான். பையனுக்கு ஆபரேஷன் பண்ணுனதுல நிறைய செலவு, கடன் ஆச்சு. கொஞ்ச கொஞ்சமா அந்தக் கடன்ல இருந்து வெளில வந்துட்டு இருக்கேன். இப்போ குதிரைகள் வளர்க்க ஆரம்பிச்சிருக்கேன். நானே குதிரை ஓட்ட பயிற்சியும் எடுத்துட்டு இருக்கேன். இந்தப் பண்ணையத்த இன்னும் பெரிய அளவுல விரிவுபடுத்தணும். அதுக்கு லோனுக்கு அப்ளை பண்ணிருக்கேன். ஆனாலும் இன்னும் கிடைச்சபாடு இல்லை. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு காரணம் சொல்லி தட்டிகழிச்சிக்கிட்டு இருக்காங்க. அவுங்க கேட்ட எல்லா விதமான கட்டட அமைப்புகளையும் செஞ்சுட்டேன். ஆனாலும் ஏன் தட்டிக்கழிக்கிறாங்க தெரியல. சீக்கிரமே அதுக்கும் நல்ல முடிவு கிடைச்சுட்டா இன்னும் என்னைய மாதிரி 'வாழ்க்கையை தொலைச்சுட்டோமோ'னு விரக்தில இருக்கிற இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் சுயதொழில் தொடங்க உறுதுணையாக இருக்கணும். இதான் என் ஆசை!"