``பெற்ற குழந்தையைவிட உனக்கு உன் வேலைதான் முக்கியமா போயிடுச்சா?'' - இந்தக் கேள்வியைச் சந்திக்காத `வொர்க்கிங் மாம்'களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சமூகம் மட்டுமல்ல, வீட்டுப் பெண்களின் கனவுகளுக்கும் கரியருக்கும் துணை நிற்க வேண்டிய சொந்தக் குடும்பமும், இந்தக் கேள்விகளைக் கேட்கும் என்பதுதான் இதில் மிகப்பெரிய சோகம்.
இவற்றையெல்லாம் தாண்டித்தான், பெண்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்... வேலைபார்க்கும் அம்மாக்களுக்கு எப்படியெல்லாம் பிரச்னை வரலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது, ஒரு சம்பவம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மும்பையைச் சேர்ந்த அந்தப் பெண் பொறியாளர், 2015-ல் இருந்து சட்டப்படி கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். வேலைக்கும் சென்று கொண்டு மகளையும் வளர்த்து வந்தவருக்கு, சமீபத்தில் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. அந்தப் பெண், போலந்து நாட்டுக்குச் சென்று இரண்டு வருடங்கள் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம். மகளுடன் வெளிநாட்டுக்குக் கிளம்ப இருந்தவருக்கு, கணவர் மூலமாகத் தடை வந்திருக்கிறது.
அதாவது, கணவரும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தாலும், நீதிமன்றம் அனுமதித்த நாள்களில் மகளை சந்திக்க சட்டப்படி தந்தைக்கு உரிமை உண்டு. மகளை அழைத்துக்கொண்டு முன்னாள் மனைவி போலந்து சென்றுவிட்டால், தன்னால் மகளைச் சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதால், மனைவி வெளிநாடு செல்லும்போது, மகளை தன்னிடம் விட்டுச் செல்ல வேண்டுமென்று, மும்பை உயர் நீதிமன்றத்தில் தந்தை வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ``குழந்தையின் தந்தையுடைய அக்கறை புரிகிறது; மகளைச் சந்திக்க முடியாமல் போய்விடுமே என்ற அவருடைய பாசமும் புரிகிறது. ஆனால், குழந்தை மைனர் என்பதால் அம்மாவிடம்தான் இருக்க வேண்டும். கணவரைப் பிரிந்ததில் இருந்து தன்னந்தனியாக குழந்தையை வளர்த்து வந்தவர் அம்மாதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போலந்து செல்லும்போது சிறுமியின் பாட்டியும் (அம்மாவின் அம்மா) உடன் செல்கிறார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்குக் கிடைக்கின்ற வேலைவாய்ப்புகளை, உயர் பதவிகளை நீதிமன்றத்தால் மறுக்க முடியாது. தவிர, தனக்கான வேலைவாய்ப்பை குழந்தையின் அம்மா இழக்க வேண்டிய அவசியமும் இல்லை. தனிமனித உரிமைகளுக்கு நீதிமன்றத்தால் தடைபோட முடியாது.

மகள் நாட்டை விட்டுச் செல்வது, தந்தைக்கு வலி மிகுந்த தருணம்தான் என்றாலும், வேலைக்குச் சென்றபடியே இத்தனை வருடங்களாக வளர்த்த குழந்தையின் தாயாருடைய வேலை வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும். தந்தையுடன் குழந்தை பிணைப்பாக இருந்தாலும், அவருடனும் அவருடைய குடும்பத்துடனும் சில மணி நேரம் மட்டுமே பல வருடங்களாக குழந்தை இருந்திருக்கிறாள்.
அதனால், `குழந்தையை இந்தியாவில் எங்களிடம் விட்டுச் செல்ல வேண்டும்' என்கிற அப்பாவின் கோரிக்கையை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்குப் பதிலாக, குழந்தையை போலந்துக்கு சென்று பார்ப்பதற்கு தந்தைக்கு விடுமுறை வழங்குவது, கண்காணிப்பில்லாமல் மகளுடன் பேசுவது போன்றவற்றுக்கு அனுமதி வழங்கலாம்'' என்றிருக்கிறது மும்பை நீதிமன்றம். சிறுமியின் தந்தை இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார்.