Published:Updated:

உயில் எழுதாவிட்டால் பெற்றோரின் சொத்து பிள்ளைக்குக் கிடைக்குமா?

உயில்

பிரீமியம் ஸ்டோரி

ஓடி ஓடி உழைத்துப் பணம் சம்பாதிக்கும் பலர், தனக்குப் பிறகு, தனது பணம் யாருக்குச் சேர வேண்டும் என்று உயில் எழுதத் தவறிவிடுகிறார்கள்; இறந்துபோய்விடு கிறார்கள். மற்றொரு புறம் பார்த்தால், உயில் எழுத வேண்டிய வயதுக்கு முன்பே எதிர்பாராத விதமாக ஏற்படும் மரணம். இப்படிப்பட்ட சூழலில், பெற்றோரின் பணம் பிள்ளைக்குக் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

பொதுவாக, சொத்து என்பது இரு வகையாக உள்ளது. அதாவது, பிள்ளைகளின் பெற்றோர் தாமே சம்பாதித்த சொத்து மற்றும் பிள்ளை களின் தந்தைக்குப் பூர்வீகமாகக் கிடைத்த சொத்து.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

ஐந்து வகை பிள்ளைகள்...

பிள்ளைகள் என்பவர்கள் மகன்/மகள் என்றுதான் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், சட்டப்படி ஐந்து வகையான பிள்ளைகள் உள்ளனர். அந்த ஐந்து வகை பிள்ளைகள் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

1. சட்டபூர்வமான பிள்ளைகள்...

இந்திய வாரிசுரிமை சட்டம் 1956-ல் இயற்றப்பட்டு 2005-ம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது. (Indian Succession (Amendment) ACT 2005) இதன்படி, ஆண் - பெண் இருபாலரும் தன் தந்தைக்குக் கிடைத்த பணம் மற்றும் பூர்வீகச் சொத்துக்கு உரிமை உள்ளவர்கள். ஆனால், அவர்களின் தாய்-தந்தையர், தாமே சம்பாதித்த சொத்து மற்றும் பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் தர உயில் எழுதலாம். அவ்வாறு உயிலில் எழுதப்பட்டவர் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஆனால், உயில் எழுதாமல் இறந்து விட்டால் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் சொத்து மற்றும் பணத்தைப் பெற உரிமை உண்டு.

2. தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள்...

பெற்றோரின் பணத்துக்கு, பெற்ற பிள்ளைக்கு என்ன உரிமையோ, அதே உரிமை தத்தெடுக்கப்பட்ட பிள்ளை களுக்கும் உண்டு. இதிலும்கூட ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்கிற பாகுபாடு கிடையாது. ஆனால், அவ்வாறு தத்தெடுக்கப் பட்ட பிள்ளை, தன்னை ஈன்ற பெற்றோரின் பணம் மற்றும் சொத்துக்கு உரிமை கோர முடியாது.

கூட்டு வாரிசுரிமை சொத்திலும் (Coparcenary Property) உரிமை கோர முடியாது. அதே சமயம், தத்தெடுக்கப்பட்ட பிள்ளையின் உண்மையான பெற்றோர் விரும்பினால், தத்தெடுக்கப்பட்ட பிள்ளைக்கு சொத்தைத் தரலாம் (இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956).

உயில் எழுதாவிட்டால் பெற்றோரின் சொத்து பிள்ளைக்குக் கிடைக்குமா?

3. சட்டபூர்வமல்லாத பிள்ளைகள்...

இந்து திருமணச் சட்டம் 1955-ன்படி, ஏற்கெனவே மனைவியுடன் வசித்து வருபவர் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது. இதற்கு மாறாக, ஒருவருக்கு மனைவியல்லாத மற்றொரு பெண் மூலம் பிறக்கும் குழந்தை சட்டபூர்வமல்லாத குழந்தை என்றாகிறது. இத்தகைய பிள்ளைக்குத் தன் பெற்றோரின் சொந்த சம்பாத்தியம் மூலம் வந்த பணம் மற்றும் சொத்தில் மட்டுமே உரிமை உண்டு. அவர்களுடைய பூர்வீகச் சொத்தில் பாத்தியதை கிடையாது.

என்றாலும், உச்ச நீதிமன்றத்தின் 2011-ம் வருடத்திய தீர்ப்பின்படி, திருமணப் பந்தத்தை மீறி பிறந்த குழந்தைக்கும் தந்தையின் பூர்வீக சொத்தில் பாத்தியதை உண்டு. ஆனாலும், இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் சட்டபூர்வமற்ற பிள்ளை விஷயத்தில் பூர்வீக சொத்து தொடர்பான குழப்பம் இன்றளவும் நீடிக்கிறது,

4. விவாகரத்தான பெற்றோரின் பிள்ளைகள்...

பிள்ளையின் பெற்றோர் விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்ட நிலையிலும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைக்குப் பெற்றோரரின் பணம் மற்றும் சொத்தில் பாத்தியதை உண்டு. இது அவரவர் மத வழக்கப்படி, வாரிசு உரிமைச் சட்டப்படி நடக்கும். எனவே, விவாகரத்தான பிள்ளைக்கு பூர்வீக சொத்தில் உரிமை உண்டு. இதில் கவனிக்க வேண்டியது, விவாகரத்துப் பெற்ற தந்தை உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அந்தத் தந்தை சம்பாதித்த பணம் மற்றும் சொத்தில் பிள்ளைக்கு உரிமை உண்டு. ஆனால், விவாகரத்துப் பெற்றவர் தான் உயிரோடு உள்ளபோதே தான் சம்பாதித்த பணத்தை அல்லது சொத்தை யாருக்கேனும் உயில் எழுதி வைத்துவிட்டால், விவாகரத்தான பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைக்கு சொத்து எதுவும் கிடைக்காது.

5. திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த பெற்றோரின் பிள்ளை...

இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ சமயங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வதை சட்டப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும், 2008-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, இந்தவகை பிள்ளைக்கும் சட்டபூர்வமான பிள்ளைக்குரிய உரிமை பூர்வீக சொத்தில் உண்டு.

மற்றொரு உச்ச நீதிமன்ற 2015-ம் ஆண்டு தீர்ப்பின் படி, நீண்ட நாள் சேர்ந்து வாழ்ந்தவர்கள் மணமாவர் களாகவே கருதப்படுவர். எனவே, இந்த வகை பிள்ளைக்கு தந்தை சம்பாதித்த பணம் மற்றும் சொத்தில் பாத்தியதை உண்டு (இந்து திருமணச் சட்டம் 1955 – பிரிவு 16).

மைனர் குழந்தைகள்...

மேற்கண்ட இனங்களில் பிள்ளைகள் பருவ வயது அடையாத மைனர் எனில், சட்டபூர்வப் பாதுகாவலர் (Legal guardian) பணம் மற்றும் சொத்தை நிர்வகிப்பார். சட்டபூர்வ பாதுகாவலர் இல்லாத நிலையில், நீதிமன்றம் நியமிக்கும் பாதுகாவலர் சொத்துக்கு நிர்வாகியாக இருப்பார்.

நாமினி நியமிக்காமல் இறந்துபோனால்...

ஒருவர் தனது சொத்துக்கு யாரையும் நாமினியாக நியமிக்காமல் இறந்து போனால் மேற்கண்ட இனங்கள் மனைவி, கணவர், மகன், மணமாகாத மகள் ஆகியோருக்கு சமபங்காகக் கிடைக்கும். ஊழியராக இருந்து இறந்து போனவர் மணமாகாதவர் எனில், பெற்றோருக்கும் கிடைக்கும்.

ஆக, உங்கள் சொத்தானது நீங்கள் விரும்பும் நபருக்கு சென்று சேர வேண்டுமெனில், உயிரோடு இருக்கும் போதே உயில் எழுதிவைப்பது அவசியம்!

அரசுப் பணியினரின் சொத்து யாருக்குச் சேரும்?

மத்திய, மாநில அரசு ஊழியர் மற்றும் ரயில்வே, அஞ்சலகம் போன்றவற்றின் சம்பளதாரர்களுக்கு அவர்களது பணிக் காலத்தைப் பொறுத்து கிடைக்கும் பணிக்கொடை, பிராவிடன்ட் ஃபண்ட், பென்ஷன் கம்யூடேசன், விடுப்புச் சம்பளம் முதலானவற்றை அவர்களின் பிள்ளைகளில் யாருக்கு வேண்டுமானாலும் தர நியமனம் செய்து, நாமினேஷன் பதியலாம். பிள்ளைகள் ஆணாகவோ, பெண்ணாகவோ, திருமணம் ஆனவராகவோ, ஆகாதவராகவோ, விதவையாகவோ, கணவரால் கைவிடப்பட்டவராகவோ இருக்கலாம்.

மேற்கண்ட நான்கு இனங்களின் பணத்தையும் ஒட்டுமொத்தமாக ஒரே பிள்ளைக்கேகூட நாமினேஷன் செய்யலாம். ஒரே இனத்தைக்கூட ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்குப் பகுதி பகுதியாகப் பிரித்து நாமினேஷன் செய்யலாம். மனைவி அல்லது கணவரையும் நாமினேஷன் செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு