Published:Updated:

``நான் வாங்கித்தர பூவையும் சாமி படத்துல தொங்கவிட்ருவா'' |ஜன்னலோரக் கதைகள் - 6

Old age (Representational image)
News
Old age (Representational image) ( Pixabay )

``அவன் என்னை நல்லா பார்த்துக்கல; நான் கேட்டதை வாங்கித் தரல; அவங்க அம்மா புராணம் பாடுறான்; நல்ல வேலைக்குப் போகல; அக்கா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணணும்னு சொல்றான்...”

Published:Updated:

``நான் வாங்கித்தர பூவையும் சாமி படத்துல தொங்கவிட்ருவா'' |ஜன்னலோரக் கதைகள் - 6

``அவன் என்னை நல்லா பார்த்துக்கல; நான் கேட்டதை வாங்கித் தரல; அவங்க அம்மா புராணம் பாடுறான்; நல்ல வேலைக்குப் போகல; அக்கா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணணும்னு சொல்றான்...”

Old age (Representational image)
News
Old age (Representational image) ( Pixabay )

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், புறப்படத் தயாராக நான்காம் நடைமேடையில் நின்றது. பைகளுடன் ஏறிய நானும் என் தோழியும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சீட்டை தேடினோம். வட்டமேசை அமைக்கப்பட்டிருக்கும் நடு சீட் கிடைத்தது. பைகளை லக்கேஜ் வைக்கும் பகுதியின் மேல் வைத்துவிட்டு, ஃபோனை கையில் எடுத்துக்கொண்டேன். அது மூன்று பேர் அமரும் சீட். எதிரெதிரே என்பதால் மொத்தம் ஆறு சீட்டுகள் இருந்தன. எங்களுக்கு எதிர் சீட்டில் இளம் காதல் ஜோடிகள் அமர்ந்திருந்தார்கள். எங்களுக்கு அடுத்திருந்த சீட்டில் 75 வயது மதிக்கத்தக்க பாட்டியும், எதிர் சீட்டில் 80 வயது மதிக்கத்தக்க தாத்தாவும் அமர்ந்திருந்தார்கள்.

ரயில் டிக்கெட் ஜிஎஸ்டி
ரயில் டிக்கெட் ஜிஎஸ்டி

என்னுடன் வந்த தோழிக்கு லவ் பிரேக்-அப். ரயில் புறப்பட்டதிலிருந்து புலம்பிக் கொண்டும், அழுது கொண்டும் வந்தாள். எப்படி சமாதானப்படுத்தினாலும், ஏதாவது சொல்லி, புலம்பிக்கொண்டே இருந்தாள்.

`அவன் என்னை நல்லா பார்த்துக்கல; நான் கேட்டதை வாங்கித் தரல; அவங்க அம்மா புராணம் பாடுறான்; நல்ல வேலைக்கு போகல; அக்கா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணணும்னு சொல்றான்' என புலம்பிக் கொண்டே வந்தாள். ஒரு கட்டத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல், `சரி, விடு' என்ற வார்த்தையை சொல்லி முடித்துக் கொண்டு, ஜன்னல் பக்கம் திரும்பினேன்.

காதல்
காதல்

எங்களுக்கு எதிரில் இருந்த காதல் ஜோடி, ரயிலில் ஏறியதிலிருந்து சண்டை போட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் பேசியதிலிருந்து, அப்பெண் கேட்ட கூல்டிரிங்க் பாட்டிலை, அவர் வாங்கி வருவதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது என்பது தெரிந்தது. சண்டைக்கு நடுவே, `ஐ.டி கார்ட் கொடுங்க' என்ற கறார் குரலுடன் டி.டி. ஆர் வந்தார். `ஆறு பேருமே மதுரை' என்று சொல்லிவிட்டு, தனக்கு வழங்கப்பட்டுள்ள தாளில் டிக் செய்து கொண்டார். காதல் ஜோடிகளுக்குள் மீண்டும் சண்டை தொடங்கியது. `உன்னை நம்பி வந்தேன் பாரு' என அவள் கத்த, காதலனோ, `அப்படி ஒண்ணும் நீ சலிச்சுக்கிட்டு என்கூட வரவேணாம், இப்பவே கிளம்பு' என்று தலையில் அடித்துக் கொண்டான். கோபத்துடன் அவள் பையை தூக்கிக் கொண்டு கிளம்பினாள். ரயில் மெதுவாக தாம்பரம் ரயில் நிலையம் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் கத்திக்கொண்டே, அவனும் ரயிலிலிருந்து கீழே இறங்கினான். என் தோழியோ, `பார்த்தியா... இதெல்லாம் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கு' என்று ஆரம்பித்தாள்.

நான் இளையராஜா பாட்டை, ஹெட் போனில் ஆன் செய்து கொண்டேன். எனக்கு எதிரில் அமர்ந்திருந்த தாத்தா, தன் மனைவியை தனக்கு அருகில் இருந்த சீட்டில் வந்து அமருமாறு சைகை செய்தார். பாட்டியும் எங்களுக்கு எதிரில் இருந்த ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொண்டார். சிறிது நேரத்தில் தாத்தா பாட்டி இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள். ஒரே தட்டில் அவர்கள் சாப்பிட்டது ரசனைக்குரியதாக இருந்தது. பாட்டி சாப்பிட்டு முடித்ததும் தாத்தா தன்னுடைய பையில் இருந்து ஏதோ ஒரு மாத்திரையை எடுத்து பாட்டியின் கையில் திணித்தார். தண்ணீர் குடிக்க வாட்டர் பாட்டிலின் மூடியைத் திறந்து கொடுத்தார்.

மாத்திரையை முழுங்கிய பாட்டி, `ரெஸ்ட் ரூம் போணும்' என்று சொன்னார். பாட்டியின் கையைப் பிடித்து தாத்தா அழைத்துச் சென்றார். பத்து நிமிடங்கள் கழித்து தாத்தாவும் பாட்டியும் சீட்டில் வந்து அமர்ந்தார்கள். பாட்டி சீட்டில் சாய்ந்து சிறிது நேரத்தில் தூங்கிப் போனார். சீட்டிலேயே தூங்கி விழுந்த பாட்டியை, தாத்தா தன் மடியில் சாய்த்துக் கொண்டார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது இளையராஜாவின் பாடல் ஹெட்போனை தாண்டி வெளியில் ஒலித்தது போல் தோன்றியது.

 காதல்
காதல்
representational image

நான் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்த தாத்தா, லேசாக சிரித்தார். `பாட்டியை நீங்க ரொம்ப நல்லா பார்த்துக்கிறீங்க' என்று சொன்னதும், `அவளுக்கு யார் இருக்கா? நாப்பது வருஷமா என்கூட எனக்காகவே இருக்கிறவளை நான்தானே கவனிச்சுக்கணும். இத்தனை வருஷமா குடும்பத்தைத் தாங்கியிருக்கா? இப்போ அவ மனசும் குழந்தைத்தனமா மாறிருச்சு. எங்களுக்கு மூணு பையன். ஒரு பொண்ணு. பசங்க, பொண்ணுங்க, பேரப்புள்ளைங்கன்னு எங்க வாழ்க்கை ஓடிருச்சு. எங்க வாழ்க்கையே அவர்களுக்காகக் கொடுத்த மாதிரிதான். நாங்களா எதுவும் முடிவு பண்ண முடியாது. எங்கயாவது போகணும்னாகூட, பசங்க வர்ற நேரம், குழந்தைகள் வர்ற நேரம், சாப்பிடுற நேரம்னு எல்லாத்தையும் பார்க்கணும். சொந்த ஊரு மதுரை. ஊரை விட்டு வந்து சென்னையில அப்பார்ட்மென்ட் வீட்ல கூண்டுக்குள்ள அடைஞ்ச மாதிரி வாழ்றோம். எல்லாம் குழந்தைகளுக்காகத்தான்.

இப்போ பேரப்பிள்ளைகளுக்கு அரைப்பரீட்சை லீவு. வெளியூர் போயிருக்காங்க. அதனால நாங்க ஃப்ரீ. எங்களுக்காக ஒரு ரெண்டு நாள் வாழணும்னு தோணுச்சு. அதான், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சின்ன ட்ரிப் பிளான் பண்ணோம். பல வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் தனியா ஒரு இடத்துக்குப் போறோம்' என்ற தாத்தா வாஞ்சையோடு, மடியில் படுத்திருந்த தன் மனைவியின் தோள்களைப் பற்றிக் கொண்டார்.

முதிய தம்பதி
முதிய தம்பதி

``இந்தா இருக்காளே, இந்த மனுஷி பாக்கத்தான் எலும்பும் தோலுமா இருக்கா. ஆனா, மன தைரியத்துல பத்துப் பேருக்கு சமம். எங்களுக்கு பெரியவங்க பார்த்துதான் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. காதல் கசமுசாலாம் அப்போ என்னனுகூட தெரியாது. என் குடும்பத்தை அவ குடும்பம் மாதிரி பார்த்துக்கிட்டா. என் மூணு தங்கச்சிகளுக்கும் நகை நட்டு, சீதனத்தோட கல்யாணம் பண்ணி வெச்சா. என் அம்மாவோட கடைசி காலத்துல, பெத்த மக பார்க்குற மாதிரி கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டா. நான் வெளியூர்ல வேலைபார்த்தேன். சம்பாத்தியம் தவிர எனக்கு எதுவும் தெரியாது. பிள்ளைங்க படிப்பு தொடங்கி, அதுங்க கல்யாணத்துக்கு காசு, பணம் சேர்த்ததுவரை எல்லாமே இந்த மகராசியோட கைவண்ணம்தான்.

அவளுக்குனு நல்ல செருப்புகூட வாங்குனது கிடையாது. சீலையில் ஊக்கு குத்துறதுக்குகூட நேரம் கிடையாது. சரியா சாப்பிடுறதுகூட கிடையாது. தலையில மல்லிகைப் பூ வெச்சுக்கிறதுனா அவளுக்கு அம்புட்டு இஷ்டம். வயசு காலத்துல நான் வெளியூர்ல இருந்தேன். சம்பாத்தியம் கம்மி. அதனால டெய்லி பூ வாங்கிக் கொடுக்க முடியல. இப்போ முடியும். ஆனா. வீட்டுக்கு வந்த மருமகளுக வேலைக்குப் போறதுனால பூ வைக்கிறது இல்ல. `மருமக பூ வைக்காம நான் மட்டும் என்னத்த குமரி மாதிரி பூ வைக்க'னு நான் வாங்கித்தர பூவையும், சாமி படத்துல தொங்கவிட்டுருவா.

மருமகளுககூட சில நேரத்துல சின்னச்சின்ன மனஸ்தாபம் வரும். நான் என்ன பிரச்னைனு  கேட்டா, `பொம்பளைங்க சமாச்சாரத்துல  தலையிடாதீங்க'னு சொல்லி,  குடும்பத்தை ரொம்ப அழகா நிர்வாகம் பண்றா. அவளுக்குன்னு ஓர் உணர்வு இருக்கு; அவளுக்கு இது பிடிக்கும்; இது பிடிக்காது; இது தேவைன்னுகூட வீட்ல இருக்கிற யாருக்கும் எதுவும் தெரியாது. அவ சொன்னதும் கிடையாது. நாங்க கேட்டதும் கிடையாது. ஆனா இப்போ கேட்கணும்னுபோல இருக்கு. கேட்கறேன். ஆசைகளை அடக்கிப் பழகுனவ, ஆசைகளே இல்லைங்கிற மனநிலைக்கு பக்குவப்பட்டுட்டா' என்று தாத்தா சொல்லும்போது, பாட்டி எழுந்து உட்கார்ந்து, `மனுஷா எந்த ஊரு வந்துருக்கு'னு கேட்டார்.

முதிய தம்பதி (மாதிரி படம்)
முதிய தம்பதி (மாதிரி படம்)
Pixabay

`விழுப்புரம்' என்று தாத்தா சொல்ல, ஃப்ளாஸ்க்கில் இருந்த டீயை ஊற்றி தாத்தாவிடம் நீட்டினார் பாட்டி. நீண்ட உரையாடல் தொடர்ந்தது. `ரொம்ப நேரமா ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்கிறது கால் வலிக்குது' என்ற தாத்தா எழுந்து சென்றார். அதற்குள் சமோசா விற்கும் நபர் வரவும், `தாத்தாவுக்கு சமோசா பிடிக்கும்' என்று நெஞ்சுக்கூட்டில் ஒளித்து வைத்திருந்த பர்ஸை எடுத்து பாட்டி சமோசா வாங்கி வைத்தார். இப்படி அவர்கள் செய்த சின்னச் சின்ன விஷயங்கள் காதல் பற்றிய நல்ல உணர்வை எனக்குள் விதைத்தன. மதுரை வந்ததும், ஆளுக்கொரு பையை தூக்கிக் கொண்டார்கள். பாட்டி கையிலிருந்த பையை தாத்தா வாங்கி, `பாத்து இறங்கு' என்றார். பாட்டியோ, 'கொடுங்க நீங்க எத்தன பையைத் தூக்குவீங்க?' என்று சுமையைப் பகிர்ந்து கொண்டார். 

என்னுடன் வந்த தோழியை நான் திரும்பிப் பார்த்தேன். தொடர்ந்து பேசுபவள், முதல்முறையாக நான் சொல்வதை காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இருந்தாள். அவளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமாக... உண்மையில் காதல் என்பது எல்லாவற்றையும் சமமாகப் பகிர்வதில் இருக்கிறது. நாம் எதிர்பார்ப்பதை எல்லாம் நிறைவேற்றுவது அல்ல காதல், அது, எதிர்பாராமல் கிடைக்கும் அன்பு! அது கட்டி அணைப்பதில் மட்டுமல்ல... கை கோத்தலிலும் இருக்கிறது. நம்முடன் நேரம் செலவழிப்பது மட்டுமல்ல, நமக்காக நேரம் செலவழிப்பதும் கூட. தலை நரைத்து, கால்கள் பலமிழந்த நேரத்திலும் உணர்வுகளை புரிந்து கொண்டு காதலைப் பரிமாற முடியுமென்றால், நாம் ஏன் நம் இளமைப் பருவத்தை சின்னச்சின்ன சண்டைகளால் வீணடிக்க வேண்டும். சாரி, அல்லது தேங்க்ஸ் சொல்லிப் பிரிந்த உறவுக்கு உயிர் கொடுப்போம். ஒவ்வொரு நிமிடமும் அன்பை பரிமாறிக்கொள்வோம். அன்பு சூழ் உலகிது.

அன்பால் அனைத்தும் சாத்தியப்படும்!