உலகின் மிக நீண்ட வான்வழி தூரமான (14 ஆயிரம் கிமீ) சான் பிரான்சிஸ்கோ - பெங்களூருவுக்கு இடையில் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதன் முதலாக வணிக விமானச் சேவையை தொடங்கியது. 17 – 19 மணி நேரம் தொடர்ந்து பறக்க வேண்டிய அச்சேவை முழுவதும் பெண் விமானிகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. சமீபத்தில் என்னை மிகவும் மகிழ்ச்சிகொள்ளவைத்த செய்தி இது.
திரைப்பட நடிகை எஸ்.என்.லட்சுமி ஒரு பேட்டியில் அவருக்கு கார் ஓட்டுவதில் இருந்த ஈடுபாடு பற்றி பேசிய விஷயம் எனக்கு சிறுவயதில் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. மிகவும் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் எஸ்.என்.லட்சுமி. மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின் திரைத்துறையில் நுழைந்து சம்பாதிக்க ஆரம்பித்ததும் சொந்தமாக கார் வாங்கியிருக்கிறார். அது அவரது கனவாக இருந்திருக்கிறது. 1962-ல் தனது முதல் காரை வாங்கியபோது அவருக்கு வயது 35. அந்தக் காலத்திலேயே சென்னையிலிருந்து ஒற்றை ஆளாய் தனது சொந்த ஊரான விருதுநகருக்கு கார் ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார்.
கார் ஓட்டக் கற்றுக் கொண்டாலும் இன்றுவரை தனியாக வெளியூர்களுக்குச் செல்ல பெண்கள் பலரும் தயங்கும் சூழ்நிலையில் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் தனியாக கார் ஓட்டிச் சென்றார் என்பது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. கார் ஓட்டுவதில் தயக்கமும் பயமும் வரும்போதெல்லாம் முதலில் நினைவிற்கு வருவது எஸ்.என்.லட்சுமி அவர்களின் பேட்டிதான்.

முதன்முதலில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொண்ட விஷயம் கொஞ்சம் வேடிக்கையானது. கைனடிக் லூனா என்கிற இருசக்கர வாகனம் வைத்திருந்த உறவினர் ஒருவர் வீட்டுக்கு வருகையில் அவர் வண்டியை இயக்குவதை கவனித்திருந்த நான் ஒருநாள் சாவி வண்டியிலேயே இருந்ததைப் பார்த்து வண்டியை இயக்கி ஓட்ட முயற்சி செய்தேன். பெரிய சிரமம் ஒன்றுமில்லை. சைக்கிளை போல இரண்டு பெடலையும் சுற்றினால் வண்டி ஸ்டார்ட் ஆகிவிடும். ஸ்டார்ட் செய்து சிறிது தூரம் போய் பிரேக் பிடித்து நிறுத்தி விட்டேன். கீழே விழவில்லை. ஆனால் திருப்பவோ, வண்டியை நிறுத்தவோ தெரியவில்லை. பதினொரு வயதில் இருந்த துணிவும், அன்று விழாமல் இருந்ததும் தொடர்ந்து பயமில்லாமல் வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்ள உதவியாக இருந்தாலும் அது தவறான வழிமுறை.
பத்தாண்டுகள் முன்புவரை ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் இருந்த ஆண்கள் இன்று சாலையில் ஸ்கூட்டரில் போகும் பெண்களை வானவில், பட்டாம்பூச்சி என்று வர்ணிக்கும் அளவுக்கு மாறி, முன்னேறி இருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் பைக் ஓட்டும் பெண்களை அதே கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை. பைக்குகள் இந்திய ஆண்களின் சராசரி உயரத்தை கணக்கில் கொண்டு மட்டுமே தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் பைக் ஓட்டுவது எல்லா பெண்களுக்கும் சாத்தியம் இல்லை என்ற நிலையும் இருக்கிறது. அதேசமயம் பெண்கள் ஸ்கூட்டரில் இருந்து அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய பைக்குகளுக்கு மாறிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது இன்றைய பெட்ரோல் விலை.
சட்டப்படி 18 வயது நிறைவடைந்ததும் தான் நம் நாட்டில் வாகனம் ஓட்ட அனுமதி உண்டு. அதற்கு முன்பு குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து சைக்கிள் மிதிக்கக் கற்று கொடுக்க வேண்டும். அது அவர்களுக்கு Road sense-ஐ ஏற்படுத்துவதுடன் வளர்ந்ததும் அவர்கள் விபத்து நடக்காமல் இருசக்கர வாகனம் ஒட்ட உதவியாக இருக்கும். பெண் குழந்தைகளுக்கு குறைந்தது ஐந்து வயதில் சைக்கிள் ஓட்ட பழக்க ஆரம்பித்தல் அவசியம்.

சிறுவயதில் பெரும்பாலும் எல்லோருமே வாடகை சைக்கிளில்தான் ஓட்டிப் பழகி இருப்போம். வீட்டில் அழுது ஐந்து ரூபாய் கிடைத்துவிட்டால் முதலில் போய் நிற்கும் இடம் வாடகை சைக்கிள் கடை. குறிப்பிட்ட வயதுவரை ஆண், பெண் பேதமில்லாமல் வளர்க்கப்பட்டதுதான் எளிதாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதற்கான முதல் காரணமாக இருக்கலாம்.
நாளொன்றுக்கு இரண்டு பேருந்துகள் மட்டும் வந்துபோகும் ஊரில் வெளியில் செல்ல எதற்கெடுத்தாலும் ஆண்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. அவசர மருத்துவ உதவிக்கு வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் நான் இருசக்கர வாகனம் ஓட்டிப் பழகியதற்கான காரணம். சைக்கிள் முதல் கார்வரை ஓட்ட கற்றுக்கொண்டதற்கு அப்பா சொன்ன ஒரே காரணம் அடுத்தவரை சார்ந்திருக்கக் கூடாது என்பதுதான்.
பெண்களுக்கு வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய சுதந்திரம் என சைக்கிளில் கல்லூரிக்குச் செல்லும்போதும் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் செல்ல துவங்கியபோதும் உணர்ந்திருக்கிறேன்.
சைக்கிள் அறிமுகமானபோது உலக அளவில் சைக்கிளை பெண் சுதந்திரத்திற்கான வாகனமாக பெண்கள் கொண்டாடினார்கள். தமிழ்நாட்டில் 1990-ல் அறிவொளி இயக்கத்தின் மூலமாக பெண்களுக்கு சைக்கிள் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை புதுக்கோட்டையில் அன்றைய ஆட்சியர் ஷீலாராணி துவக்கி வைத்தார். அதன்மூலம் ஒரு லட்சம் பெண்களுக்கு சைக்கிள் கற்றுக் கொடுக்கப்பட்டது. விவசாயம் மற்றும் குவாரி வேலைக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சைக்கிள் கற்றுக்கொண்டனர்.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான புதுக்கோட்டையில் வீட்டை விட்டு வெளியில் வராத இஸ்லாமிய பெண்களும் சைக்கிள் கற்றுக்கொண்டார்கள். சைக்கிள் ஓட்டுவது தங்களுக்கு சுதந்திரத்தை உணர வைப்பதாகவும் அதே சமயம் அவர்களின் நடத்தைமீது உளவியல் தாக்குதல்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தாகவும் கூறியதாக பி.சாய்நாத் தனது புத்தகமான Everybody Loves a Good Drought ல் ”சக்கரம் இருக்கும் இடத்தில் வழிகளும்” என்கிற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
வேலைக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் பொதுப் போக்குவரத்தையே நம்பி இருக்கும் நம் மாநிலத்தில், தற்போது அரசு அளித்து வரும் பெண்களுக்கான 50% இருசக்கர வாகன மானியம் பல பெண்களுக்கும் மிகப்பெரும் உதவியாக இருக்கிறது.

உலகம் முழுவதுமே பெண்கள் சைக்கிள் ஓட்டுவதை பறத்தலுடன் ஒப்புமை படுத்துகிறார்கள். அது உண்மை என்பதை கொரோனா லாக்டெளனில் உணர்ந்தேன். பத்து மாதங்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலையில் தினமும் அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டுவது மட்டுமே வெளி உலகத்துடன் இணைக்கும் வழியாக இருந்தது. மனதையும், உடலையும் ஒருசேர Fit ஆக வைத்துக்கொள்ள நடனத்தைப் போலவே சைக்கிள் ஓட்டுவதும் சிறந்த உடற்பயிற்சி முறை.
நான் சைக்கிள் ஓட்டும் படங்களை பகிர்ந்தபோது தோழிகள் பலரும் உள்ளூரில் சைக்கிள் ஓட்டுவதற்கு கூச்சமாக இருக்கிறது என்றார்கள். மேலும் கிராமங்களில் ஷூ அணிந்து நடைப்பயிற்சி சென்றால்கூட மற்றவர்கள் கேலி செய்கிறார்கள் என்கிறார்கள். கார் ஓட்டுவது கௌரவமாகவும் சைக்கிள் ஓட்டுவது கீழாகவும் எண்ணும் மனநிலை இங்கே இருக்கிறது. அதனால்தான் கார் ஓட்டுவதை பெருமையாக வெளியில் சொல்வோர் அருகில் இருக்கும் கடைகளுக்கு சைக்கிளில் செல்வதற்கு தயங்குகிறார்கள்.
2017-ல் கோவையைச் சேர்ந்த இரண்டு பெண்களும் மும்பையை சேர்ந்த ஒருவரும் 24 நாடுகளை 70 நாட்களில் காரிலேயே பயணம் செய்தது நினைவிருக்கலாம். பெண்கள் தனியாக காரில் உலகம் சுற்றி வந்தாலும் வாகனம் வாங்கும் பெண்களுக்கு வீட்டில் இருக்கும் ஆண்களும், ஷோரூம்-ல் இருப்பவர்களும் கூட முதலில் ஆட்டோ-கியர் வண்டிகளையே பரிந்துரைக்கிறார்கள். பெண்கள் கடினமான காரியங்களை செய்யக்கூடியவர்கள் இல்லை எனும் எண்ணம் இங்கே எல்லோருக்குமே இருக்கிறது.
பெண்களுக்கு தனியாக வெளியில் செல்வது பாதுகாப்பு இல்லை, வாகனம் ஓட்டி பழகும்போது பெண்பிள்ளைகள் சாலையில் கீழே விழுந்தால் அவமானம் என்று இன்றும் பெண்களுக்கு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டக் கற்றுத்தராமல் இருக்க சில குடும்பங்களில் காரணம் சொல்கின்றனர். என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய மற்றொரு காரணம், அடிபட்டால் உடலில் தழும்பு ஏற்படும் என்று தன் மகளுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கவில்லை என்று என் உறவினர் ஒருவர் சொன்னது.

ஆரம்பத்தில் பெண்கள் சேலை உடுத்தியிருந்ததால் சைக்கிள் ஓட்டுவது சிரமமாக இருந்தது. பிறகு பெண்களுக்கான பிரத்யேகமான குறுக்கு கம்பி இல்லாத சைக்கிள்கள் அறிமுகமாயின. அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கென ஸ்கூட்டர்கள் வந்தன. ஸ்கூட்டரைவிட பைக்குகள் ஓட்டுவதற்கு நன்றாக இருப்பதோடு அதிக மைலேஜும் கொடுக்கும். பெரும் நகரங்களில் தினமும் அதிக தூரம் பயணிக்க வேண்டிய பெண்களும், கிராமங்களில் விவசாயம் பார்க்கும் பெண்களும் இன்று அதிக அளவில் பைக் ஓட்டுகிறார்கள்.
பேன்ட் ஷர்ட் அணிந்து பைக் ஓட்டும் #CityGirls-ஐ போலவே சுடிதார் அணிந்து காய்கறி மூட்டைகளை பைக்கில் சந்தைக்கு எடுத்து செல்லும் பெண்களும் அழகாக அசத்துகிறார்கள்.
“பெண்களுக்கு வெளி உலகம் பற்றிய அறிவு இல்லை” எனும் பொருளில் ”பெண்களுக்கு Road sense குறைவாக இருக்கும்” என்கிற குற்றச்சாட்டை ஆண்கள் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். உண்மையில் பெண்களுக்கு சாலையில் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் தடுமாற்றங்களுக்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. சிறுவயதில் இருந்தே தெருவில் யாராவது கேலி செய்யும்போது எதிர்த்துக் கேள்விக் கேட்காமல் வீடு திரும்ப வேண்டும் என கற்பிக்கப்பட்ட பெண்களுக்கு சாலையில் ஒருவர் அருகில் வந்து சத்தம் கொடுக்கும்போது அச்சம் ஏற்படும்.
93 – 112 டெசிபல்வரை சத்தம் எழுப்பக்கூடிய ஒற்றை ஒலி ஹாரன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளை மீறும் வாகனங்கள் கடந்து செல்லும்போது யாராக இருந்தாலும் தடுமாற்றத்திற்கு உள்ளாவார்கள். மற்றவர்களுக்கு பதற்றம் ஏற்படுத்தும் நோக்கில் இருசக்கர வாகனத்தில் சைலன்சர் இல்லாமல் ஓட்டுவது என்று இளைஞர்கள் செய்யும் காரியங்களை மிக இயல்பாக கடந்து போகப் பழகிக் கொண்ட சமூகம் அதற்கு எதிர்வினையாக ஒரு பெண் சாலையில் தடுமாறினால் பெண்களுக்கு Road sense இல்லை என்று முத்திரைக் குத்துகிறது.
பொதுவாக இருசக்கர வாகனம் அல்லது சைக்கிள் ஓட்டும்போது ஆடைகளில் கவனம் கொள்ள வேண்டும் என வீட்டில் இருப்பவர்களில் இருந்து, சாலையில் பார்ப்பவர்கள்வரை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். வாகனத்தில் செல்லும்போது காற்றில் பறந்து சக்கரத்தில் உடைகள் சிக்கிக் கொள்ளாமல் இன்றைய பெண்கள் கவனமாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் துப்பட்டா அல்லது சேலை அணிந்திருக்கும் பெண்களிடம் கடந்து செல்பவர்கள் அவர்களாக ஆர்வக்கோளாறில் வாகனத்தை தடுத்து அலெர்ட் செய்வதை நம்மூரில் ஒரு சோஷியல் சர்வீஸாக நினைத்து செய்கிறார்கள்.

பெண்கள் வாகனம் ஓட்டும்போது சாலையில் சிறிது தடுமாறினாலும், ”இவங்க எல்லாம் வண்டி ஓட்டறதுக்கு பேசாம பஸ்ல போகலாம்ல” என்கிற அறிவுரை முன்பின் அறிமுகம் இல்லாத ஆண்களிடத்தில் இருந்துகூட வரும். ஒரு பெண் சாலையில் ஆணை முந்திச் சென்றுவிட்டால் அவளை துரத்தி சென்று முந்திய பிறகே மனம் அமைதியடையும் போல ஆண்கள் நடந்து கொள்கிறார்கள்.
பெரும்பாலும் பெண் பிள்ளைகள் தேவையில்லாமல் வெளியில் தனியாக செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. 16 - 17 வயதிலிருந்து ஆண் பிள்ளைகள் அப்பாவின் வண்டியை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் ஊர் சுற்றும் வாகனச் சுதந்திரம் நம் குடும்பங்களில் எல்லா பெண்களுக்கும் வாய்ப்பது இல்லை. குறிப்பாக #80s & #90sKids பெண்கள் பலருக்கும் வேலை அல்லது திருமணத்திற்கு பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தேவையினால் வாகனம் ஓட்டிப் பழகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இன்றும் பெரும்பாலான வீடுகளில் பெண் குழந்தைகளை திருமணமாகும் வரை பத்திரமாக வைத்து அனுப்பிவிட வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் என்றும் ஊர்சுற்றி என மற்றவர்கள் நினைக்கக்கூடும் என அஞ்சும் பெற்றோர்கள் ஆண் குழந்தைகளை மிக சிறு வயதிலேயே வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பாரபட்சம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அதேபோல் திருமணத்திற்கு பிறகும் பலருக்கும் தனியாக வாகனம் வைத்துக் கொள்ள குடும்பத்தில் அனுமதி இருப்பதில்லை. தனியாக வாகனம் வைத்துக்கொண்டால் பெண்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க மாட்டார்கள் என்று ஆண்கள் எண்ணுகிறார்கள்.

சவுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் பெண்கள் கார் ஓட்டுவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கி இருக்கிறது. அங்கிருக்கும் பெண்கள் அதை கொண்டாடிய விதமும் அவர்களின் மகிழ்ச்சியும் அளவில்லாதது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அப்படியான சிக்கல்கள் இல்லை. நமக்கு இருக்கும் தடைகள் எல்லாம் நம் மனத்தடைகளே அன்றி வெளியில் இல்லை. பெண்கள் அதை உடைத்து சுதந்திரமாக பறத்தலை அனுபவிக்க வேண்டும். நம் சிறகுகள் மிக வலியது. பறந்து பார்ப்போம் வாருங்கள்!
பி.கு: இங்கு பொதுவாக ஆண்கள் என குறிப்பிட்டிருப்பதை பெரும்பான்மையான ஆண்கள் எனப் புரிந்துகொள்ளவும். #NotAllMen