கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதா மாரிமுத்து கலந்து கொண்டு தான் முதன்முதலாக தன் மனதுக்குள் பெண்ணாக உணர ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலான தன்னுடைய பயணத்தை பற்றி விவரித்தார். அவருடைய பேச்சு பொது சமூகத்தை சிறிது அசைத்து பார்த்திருக்கிறது.
அவர் தன்னுடைய பத்தாம் வகுப்பின் போது பெண்களைப் போல உடை அணிந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக தன் பெற்றோர்களிடம் அடி வாங்கியிருக்கிறார். பலமுறை வீட்டை விட்டுச் செல்வதற்கு முயற்சி செய்து வெளியில் அதைவிட பிரச்னைகள் அதிகம் இருந்ததால் திரும்பி வீட்டுக்கே வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் இவ்வாறு சென்று திரும்பும் பொழுது பெற்றோர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். தனது பெற்றோர் தன்னை அவமானமாக நினைத்து செய்த கொடுமைகளை, தான் கடந்து வந்த வலிகளை வெளிப்படையாகக் கூறினார்.

ஆணின் உடலிலிருந்து தன்னை பெண்ணாக உணரும் நமீதாவை அவரது பெற்றோர்கள் முதலில் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவரை அடித்து மனநல மருத்துவமனையில் நிரந்தரமாகச் சேர்த்திருக்கின்றனர். ஒவ்வொரு முறை அடைத்து வைக்கப்பட்ட பொழுதும் தப்பிச் சென்று பெண்ணாகும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார். பிறகு திருநங்கைகளுக்காக நடக்கும் அழகி போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அவரை அவரது பெற்றோருடன் சேர்த்து வைப்பதற்கான முதல்படியாக அழகிப் போட்டியில் கிடைத்த வெற்றி இருந்திருக்கின்றது. அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சர்வதேச அளவில் கலந்து கொண்டு வென்றிருக்கிறார்.
இதற்கிடையில் பொறியியல் பட்டப்படிப்பை மூன்று ஆண்டுகளோடு பாதியில் நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது. நமீதா பேசிய பல விஷயங்கள் பொது சமூகத்திற்கு புதியது. இதுபோன்ற ஒரு தளத்தை திருநங்கைகளின் வாழ்க்கையை பற்றி பொது சமூகம் தெரிந்து கொள்வதற்காக உருவாக்கிக் கொடுத்த விஜய் டிவியின் பிக் பாஸ் குழுவினருக்கு நன்றி.
ஆனால்...
இந்த ஒரு பேச்சிலேயே திருநர்களைப் புரிந்துகொண்டதாக, இதுவரை நடந்ததற்கு வருந்துவதாக பலரும் ”எமோஷனலாக” எழுதியிருந்தார்கள். இது நம்மிடையே இருக்கும் கும்பல் மனப்பான்மையின் (Mob Culture) வெளிப்பாடு. நாளைக்கே குடும்பத்தில் ஒருவர் திருநர் அல்லது தன்பால் ஈர்ப்பாளர் என்று தெரிய வரும்போது, எவ்வளவு பேர் புரிந்துகொண்டு அவர்களுக்குத் துணை நிற்பார்கள்?!
நமீதாவின் பேச்சு ஏற்படுத்திய அதிர்வலைகள் இரண்டொரு நாள்களுக்குள் அடங்கிவிட்டன. நமீதாவும் திடீரென்று பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிவிட்டார். நமீதா பேசியபோது அவரை புரிந்துகொண்டதாகச் சொன்ன சமூகம் தற்போது அவர் ஏன் வெளியேறினார் எனும் “Gossip”இல் மூழ்கி இருக்கிறது.

அவ்வளவுதானா?
சகமனிதனுக்கு அநீதி நடக்கும்பொழுது பொதுசமூகம் கண்டுகொள்ளாமல் விலகி நடக்கும் பிரச்னைகள் ஏராளம். அதில் ஒன்று திருநர்களின் வாழ்கை. அவர்களின் உரிமைகள், வேலை வாய்ப்புகள் பற்றி குறிப்பிட்ட சில செயல்பாட்டாளர்கள் தவிர பொது சமூகம் பேசுவதற்குத் தயாராக இல்லை. திருநர்களை பொது இடங்களில் காணும்போது முகத்தைத் திருப்பிக் கொள்வது, இளக்காரமாக உற்றுப் பார்ப்பது போன்ற செய்கைகளின் வழியாக அவர்கள் சராசரி வாழ்க்கை வாழ்பவர்கள் அல்ல என்று சமூகம் அவர்களுக்குக் குத்திக் காட்டுகிறது. அதேபோல் அவர்களின் சமத்துவத்திற்கான செயல்பாடுகளை முன்னெடுக்காமல் திருநங்கைகளை பாலியல் தொழில் செய்கிறார்கள் எனத் தொடர்ந்து குற்றம் சாட்டவும் செய்கின்றது. #VictimBlaming
T. ராஜேந்தரின் 'கூடையில கருவாடு' பாடலில் இருந்து அமீரின் 'ஊரோரம் புளியமரம்' வரை எண்ணற்ற திரைக்காவியங்கள்(?!) தமிழில் திருநங்கைகள் பற்றி தவறான எண்ணங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. அதேபோல் சங்க கால இலக்கியங்களில் திருநர்களை பற்றிய கூற்றுகள் இருக்கின்றன எனப் பலரும் பெருமையாக கூறுகின்றனர். அகநானூறு, புறநானூறு, திருக்குறள், நாலடியார் எனத் தமிழின் முக்கியமான இலக்கியங்கள் சித்திரித்திருக்கின்றன.
சு. சமுத்திரத்தின் 'வாடாமல்லி' தமிழில் திருநங்கைகளைப் பற்றிய சரியான புரிதலுடன் வந்த முதல் நாவல்.
திருநர்களை பற்றி கட்டுரைகளும், டாக்குமென்ட்ரிகளும் வந்திருந்தாலும், அவை பொதுமக்களின் பார்வைக்கு அதிகம் கிடைப்பதில்லை. பொதுவாகவே ஆவணப்படங்கள் யாருக்காக எடுக்கப்படுகின்றனவோ அவர்களை அவை சென்று அடைவதே கிடையாது. அதேபோல் ஆங்கிலத்தில் வந்த அளவு தமிழில் திருநர்களுக்கான குரல்கள் எழும்பவே இல்லை.
இங்கு பெண், ஆண் என இரு பாலினம் மட்டுமே இருப்பதாக பலரும் புரிந்து கொண்டுள்ளனர். சாதி மற்றும் மதங்களில் சிலவற்றை உயர்ந்தவை என்று மனிதர்கள் உருவாக்கிைவைத்து, அதன் அடிப்படையில் மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் அதே நடைமுறை திருநர்களின் மீதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்-மைய சமூகம் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் உருவாக்கி வைத்திருப்பது போலவே மற்ற பாலின தேர்வு உடையவர்களுக்கும் கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறது. எந்த மாற்று பாலினமாக இருந்தாலும் அவர்களைத் தங்களுக்கு கீழ் கொண்டு வரும் ஆண் ஆதிக்கம் நம் நாட்டில் அதிகமாகவே இருக்கின்றது.

ஒருவர் பிறப்பிலிருந்தோ அல்லது வளரும் வயதிலோ தன்னுடைய உடல் வெளிக்காட்டும் பாலினமாக அல்லாமல் வேறு பாலினமாக மனதால் உணரும்போது அவர் திருநர் ஆகிறார். பலரும் தன் மாற்று பாலின தேர்வை வெளியில் அறிவித்துக் கொண்டு சிகிச்சைகள் மூலம் உடல் மற்றும் உடைகளில் மாற்றம் செய்து கொள்கின்றனர்.
இவ்வாறு ஒருவர் மனதுக்குள் உணருவது இயற்கையாக நிகழ்வது. அதை புரிந்து கொள்ளாமல் முதலில் குடும்பத்தில் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தாங்களும் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதை மறந்து தங்கள் பிள்ளைகளை சமூகம் அங்கீகரிக்காது என்கின்றனர். சகமனிதனின் பாலின தேர்வு என்பது அவர்களது தனி மனித சுதந்திரம்.
பதின்வயதில் தனது பிறப்பின் அடிப்படையிலான பாலினத்தில் இருந்து மாற்று பாலினமாக மனதால் உணர்ந்தும் அதை வெளிப்படுத்த இயலாத நிலை, தனது சொந்த உடலிலேயே சிறைப்பட்டதை போன்றது.
ஒருவருக்குத் தன்னுடைய எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு வருவது மட்டும்தான் இயற்கை என்று பொது சமூகத்தின் புத்தியில் இருக்கின்றது. தன்னுடைய பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பாலியல் ஈர்ப்பு வருவதும் இயற்கைதான். தன்பாலின ஈர்ப்புடைய யாவரும் திருநங்கை/திருநம்பியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
திரு, திருமதி, செல்வி என்று பாலின அடையாளங்களை வைத்து அழைப்பதை போல் திருநர்களை எப்படி அழைப்பது என்கிற குழப்பங்கள் பலருக்கும் இருக்கின்றன.
சிறுவயதில் இருந்து ஆணாக அறிமுகமான ஒருவர் பதின் வயதுக்கு மேல் தன்னை பெண்ணாக மாற்றிக்கொள்ளும்போது (பெயர் உள்பட), பழைய நினைவில் தெரிந்தும்/தெரியாமலும் அவரை ஆணாக பாவித்து விளிப்பதும், பேசுவதும் தவறு.
எல்லா திருநர்களும் உடலில் சிகிச்சை செய்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆணாகப் பிறந்து பெண்ணாக உணரும் சிலர் உடை, உருவம் எதிலும் பெரிதாக மாற்றங்கள் செய்யாமலே திருநங்கையாக வாழ்வார்கள். அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டவர்கள் தான் திருநங்கைகள் என்று யாரையும் வரையறுக்க தேவையில்லை. அதேபோல் திருநர்களுக்கு பிறந்தபோது வைத்த பெயரை தெரிந்துகொள்ளும் ஆர்வம் பலருக்கும் இருக்கிறது. ஒருவர் என்னவாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாரோ அதுவே அவரது பெயர், பாலினம்.

திருநங்கைகள் ஹார்மோன் சிகிச்சை செய்து கொள்வதால், மாதவிடாய் – உதிரப்போக்கு இல்லாவிட்டாலும், பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் மற்ற அறிகுறிகள் #PMS இருக்கும் என்கிறார்கள். திருநர்களின் உணர்வுகளை மதிப்பது போன்றே உடல் பிரச்னைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களை போல பிரச்னைகள் இருப்பதாக நடிக்கிறார்கள் என்று கேலி செய்வது அநாகரீகம்.
சிகிச்சைகள், பாலின உறுப்புகள், உடலுறவு தொடர்பான தனிப்பட்ட கேள்விகளை எப்படி மற்றவர்களிடம் கேட்கக்கூடாதோ அதேபோல் திருநர்களிடமும் கேட்கக் கூடாது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவை அறிமுகம் செய்து வைத்த நடிகர் கமல்ஹாசன் திருநங்கைகளை ’பால் கடந்தோர்’ அல்லது ’பாலின தேர்வு கடந்தோர்’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
தன்னுடைய பிறப்பின் அடிப்படையிலான பாலினத்தில் இருந்து மாறி தான் உணரும் பாலினமாக மாறி கொள்பவர்களை மாற்று பாலினத்தவர் என்கிறோம். ஆங்கிலத்தில் ’#TransGender’. TransGender என்கிற வார்த்தையை தமிழ்படுத்த யோசித்து அதை பாலினம் கடந்தோர் அல்லது பாலின தேர்வு கடந்தோர் என்று மொழி பெயர்த்திருப்பதாக கமல்ஹாசன் கூறுகிறார்.
உதாரணத்திற்கு ஆணாக பிறந்து பெண்ணாக உணரும் ஒருவர், பெண்ணாக மாறுவதற்கு வெறும் உடை மட்டும் போதாது. பெண்களைப் போல மார்பகம் வளர்ச்சி அடைவதற்கு, உடலில் முடி வளருவதைத் தடுப்பதற்கான ஹார்மோன் சிகிச்சைகள் செய்து கொள்வதோடு பிறப்புறுப்பையும் நீக்கிக் கொள்கின்றனர். இவையெல்லாம் மிக சாதாரண விஷயங்கள் அல்ல. இவற்றை செய்வதற்கு ஒருவருக்கு அதீத மன உறுதியும், பெண்ணாக மாறியே ஆகவேண்டும் என்கிற உந்துதலும் இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது.
நம்முடையது ஆண்-மைய சமூகம். பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க படைக்கப்பட்டவர்கள் எனும் எண்ணம் இன்னமும் பொதுபுத்தியில் இருக்கின்றது. அப்படியான ஆதிக்கம் செலுத்தக் கூடிய இடத்தில் இருந்து ஒடுக்கப்படும் இனமாக மாறுவதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள். ஆண் எனும் Privilegeஐ விட்டுக் கொடுத்து பெண்ணாக மாறுவதற்கு, ஒருவருக்கு தன்னுடைய பாலின தேர்வு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும்?

திருநர்களைக் கேவலப்படுத்தும் நோக்கில் சமூகம் பல்வேறு பெயர் வைத்து அழைத்ததை தடுக்கவும், அவர்களுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் இட ஒதுக்கீடு வழங்குவதற்காகவும் 2006இல் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட, பொது அடையாளமே ’திருநங்கை’ மற்றும் ‘திருநம்பி’ எனும் பெயர்கள். மற்றபடி ஒருவர் தன்னை பெண்ணாக முன்னிறுத்தும்போது பெண் என அழைப்பதே சரி.
மன உளைச்சல், நிராகரிப்பு, பசி, அடிப்படை உரிமைகள் மறுப்பு என எண்ணற்ற வலிகளை தாங்கிக் கொண்டு தைரியமாக, தங்களுக்கு பிடித்த பாலினமாக சமூகத்தில் தங்களை முன்நிறுத்துபவர்களை ’பால் கடந்தோர்’ என்று அழைப்பது, திருநர்களின் வலி, உழைப்பு, சாதனைகளை கூசாமல் புறக்கணிக்கும் அருவருப்பான செயல்.
அந்நிகழ்ச்சியில் இதை நேரில் கேட்டுக் கொண்டிருந்த நமீதாவும் கூட இத்தனை ஆண்டுகளாக பெண் எனும் அடையாளத்துக்காகத்தானே போராடினார்?
பிரபலமாக இருப்பதால் எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை இதுபோன்ற புரிதலற்ற விஷயங்களில் கருத்து சொல்லும் பிரபலங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களை கேவலப்படுத்தும் வசனம் ஒன்றை கமல் பேசி, கௌதம் மேனன் இயக்கியிருப்பார். இத்தனை ஆண்டுகளில் LGBTQI+ சமூகத்தை பற்றி கமல் ’அப்டேட்’ ஆகாமலே இருக்கிறார் என்பதை அவரது ‘பால் கடந்தோர்’ மொழிபெயர்ப்பின் மூலம் புரிந்து கொள்ளலாம். தன்னை பகுத்தறிவுவாதியாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் இதை செய்யும்போது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது.

57 வகையான பாலின தேர்வு இருப்பதாக LGBTQI+ சமூகத்தை பற்றிய இணையதளங்கள் குறிப்பிடுகின்றன. அதில் ஒன்று #Agender அதாவது, பாலினமற்றவர்கள் என்பதையும் குறிப்பிட்டு சொல்லவேண்டும்.
பிகு 1: தன்பாலின ஈர்ப்பு என்பது இயற்கைக்கு எதிரானது என்றும் சட்டப்படி தவறு என்றும் சொல்லிய இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377வது பிரிவின் சில பகுதிகளை 2018-ல் உச்சநீதி மன்றம் நீக்கியிருக்கிறது. அந்த தீர்ப்பில் தன்பால் ஈர்ப்பாளர்களை அச்சத்துடன் வாழ வைத்ததற்காகவும், அவர்களது உரிமை மறுக்கப்பட்டதற்காகவும் அவர்களிடம் வரலாறு மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறது என்று நீதிபதி மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பின் மூலம் உலகில் தன்பால் ஈர்ப்பை அனுமதிக்கும் நாடுகளின் வரிசையில் 125வது நாடாக இந்தியா சேர்ந்துள்ளது.
பிகு 2: தமிழ்நாடு அரசின் திருநங்கைகள் நலவாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்களாக ஒரு பெண் உள்பட 12 திருநங்கைகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது இந்த வாரத்தின் மகிழ்ச்சியான செய்தி.