Published:Updated:

மேடம் ஷகிலா - 8: "குழந்தை இல்லாதவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்?!" #IVF #TestTube

குழந்தை
News
குழந்தை

பல லட்சங்கள் செலவு செய்து, உடல் வருத்தி மருத்துவம் பார்த்து #IVF மூலம் கருத்தரிக்கும் பெண்கள்கூட குழந்தை பெற்றுக்கொள்வதற்கான காரணங்களாக குடும்பத்தையும், சமூகத்தையுமே சொல்கின்றனர்.

Published:Updated:

மேடம் ஷகிலா - 8: "குழந்தை இல்லாதவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்?!" #IVF #TestTube

பல லட்சங்கள் செலவு செய்து, உடல் வருத்தி மருத்துவம் பார்த்து #IVF மூலம் கருத்தரிக்கும் பெண்கள்கூட குழந்தை பெற்றுக்கொள்வதற்கான காரணங்களாக குடும்பத்தையும், சமூகத்தையுமே சொல்கின்றனர்.

குழந்தை
News
குழந்தை

என் அம்மாவின் தோழி ஒருவருக்கு குழந்தைகள் இல்லை. பெரும்பாலான நேரங்கள் அவர் என் அம்மாவுடனே இருப்பார். என் அம்மாவுடன் எனது பள்ளி, கல்லூரிக்கு கட்டணம் செலுத்த வருவார். பார்ப்பவர்கள் அவரை என் அம்மா என நினைத்துக்கொள்ளும் அளவிற்கு எங்களுக்குள் உருவ ஒற்றுமை இருக்கும்.

எப்போதும் நேர்த்தியாக உடை உடுத்தி, சிரித்த முகத்துடன் அழகாக இருப்பார். அவரிடம் ஒட்டிக்கொள்ளும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிள்ளைகளிடத்தில் அவரால் ஏக்கமில்லாமல் பிரியமாக இருக்க முடிந்திருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நம் கிராமங்களில் குழந்தை இல்லாதது எவ்வளவு பேச்சுகளையும், பிரச்னைகளையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அவர் சோகமாக இருந்தோ, பிள்ளை இல்லை என வருத்தப்பட்டோ நான் கண்டதேயில்லை. பள்ளி வயதில் இருந்தே சுற்றி இருப்பவர்களின் கேலி பேச்சுக்களை சட்டை செய்யாமல் வாழ அவர்தான் முன்மாதிரி.

குழந்தை
குழந்தை
ஆனால், இன்றைய பெண்கள் கல்வி, வேலை, பொருளாதார சுதந்திரத்துடன் இருந்தாலும் திருமணம், குழந்தை என்று வரும்போது மிகவும் எமோஷனலாக சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். மற்றவர்களின் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனம் மற்றும் உடலளவில் தங்களை வருத்திக் கொள்கிறார்கள்.

ஒரு திருமணம் குறித்து முடிவெடுக்கும் முன்பே தான் “ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்” என தன்னைதானே கேட்டுக்கொள்ள வேண்டும். தனது குடும்பச்சூழல், உடல்நிலை, மனநிலை அதற்கு ஏற்றாற்போல் இருக்கிறதா என உறுதியாக தெரிந்துகொள்ள வேண்டும். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தில் தீவிரமான பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தால் உடனடியாக பெரியவர்கள் சொல்லும் தீர்வு, குழந்தை பெற்றுக்கொள்வது. ஒரு குழந்தையின் புன்னகை மனிதர்களை இணைக்கும் என்பதெல்லாம் முன்பு பெண்கள் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் இருந்தபோது குழந்தை பிறந்தால் அதை வளர்ப்பதற்கு வேண்டி கணவன் வீட்டோடு அனுசரித்து இருப்பார்கள் எனும் அடிப்படையில் சொல்லப்பட்டவை.

சேர்ந்து வாழ முடியாத உறவில் குழந்தை பெற்றுக்கொள்வது அந்தக் குழந்தையையும் சேர்த்து மோசமான வாழ்வில் தள்ளும் செயல். இதில் தினமும் அடித்துக்கொண்டு, முதல் குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும் குடும்பத்தில் இரண்டாவது குழந்தை பெற்று அதையும் துயரக்குழியில் தள்ளுபவர்கள் இருக்கிறார்கள்.

பெண்களுக்கு தங்கள் உடல் பற்றி நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். பள்ளி பாடப் புத்தகங்களில் அறிவியல் பாடத்தில் இருப்பதைத் தவிர சிறப்பு வகுப்புகள் மூலம் பெண்களுக்கு தங்கள் உடல் பற்றிய கல்வியை பள்ளிகளில் சொல்லித் தரவேண்டும். அதேபோல் வீட்டில் பெரியவர்கள் இடத்திலும் வெளிப்படையான உரையாடல்கள் நிகழ்த்திட வேண்டும். இங்கே 30 வயதில் இரண்டு பிள்ளைக்கு தாயான பெண்களுக்கு கூட கருப்பைக்கும், கர்ப்பப்பைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

கர்ப்பிணி
கர்ப்பிணி

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த 2021-லும் 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முயற்சி செய்யும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்கள் சராசரியாக 12 - 13 வயதில் பூப்பெய்துகிறார்கள். 13 வயதில் அவளது முதல் கருமுட்டை உருவாகத் தொடங்கியிருந்தாலும் கர்ப்பப்பை ஒரு குழந்தையை சுமக்கும் அளவுக்கு வலிமையானதாக மாற குறைந்தது 20 வயது ஆகும். இதையும் கணக்கில் கொண்டுதான் அரசாங்கம் பெண்ணுக்கான திருமண வயது 18 என நிர்ணயம் செய்துள்ளது. 18 வயது நிரம்பி திருமணம் செய்த பெண்களுக்குத்தான் அரசின் பிரசவ உதவிகளை பெற முடியும். ஆனால் கிராமங்களில் 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் சோகங்கள் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

நம்மூரில் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்யாமல் இருந்தாலோ, திருமணமாகிய 2 - 3 ஆண்டுகளில் குழந்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தாலோ அதை சமூகம் மிகவும் அவமானத்திற்குரிய விஷயமாக உருவாக்கி வைத்திருக்கிறது. குழந்தை இல்லாதவர்களை பரிதாபமாகப் பார்க்கும் சூழலும் இருக்கிறது. ”எத்தனை குழந்தைகள்?” என்று கேட்பவர்களிடம், “இன்னும் இல்லை” என்று பதில் சொன்னால் அவர்கள் பதற்றம் கொள்கின்றார்கள். அவசரமாக மன்னிப்பு கோருகின்றார்கள். ”இல்லை எனத் தெரியாமல் கேட்டுவிட்டேன்” என்கிறார்கள். சிலர் உடனடியாக ”உங்களுக்காக கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என்கிறார்கள். மேம்போக்காக பார்த்தால் அது அன்பினால் கூறுவதுதானே என நினைக்கலாம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் உளவியல், குழந்தை இல்லாதவர்களை வாழத் தகுதியற்றவர்களாக இந்தச் சமூகம் நினைப்பதுதான்.

அதனால்தான், தங்களுக்கு விருப்பமோ, பணவசதியோ இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளப் பலரும் உந்தப்படுகிறார்கள். உண்மையில் குழந்தை இல்லாதது மன்னிப்பு கோரும் அளவு அவமானமோ, பரிதாபத்திற்குரிய விஷயமோ இல்லை.

ஏழெட்டு ஆண்டுகள் முன்புவரையில் பெரிய பிரச்னைகள் இல்லாத 30 வயதிற்குட்பட்ட தம்பதியினருக்கு பெரும்பாலான மருத்துவர்கள் Test Tube baby சிகிச்சையை பரிந்துரைக்கவில்லை. இயற்கையாக கருத்தரிக்கவே வலியுறுத்துவார்கள். ஆனால் இன்று திருமணமாகி மூன்று மாதங்களில் குழந்தை இல்லையென்றாலே #Fertility சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு சொல்கின்றனர். சென்னை, கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் பெண்களுக்கான மருத்துவமனைகள் அனைத்தும் கிட்டத்தட்ட #FertilityClinic போல் செயல்படுகின்றன.

டெஸ்ட் டியூப் பேபி
டெஸ்ட் டியூப் பேபி

தமிழ்நாட்டில் #TestTube சோதனை குழாயின் மூலம் கருத்தரிக்கும் முறை வந்து 31 ஆண்டுகள் ஆகின்றன. பத்தாண்டுகள் முன்புவரையில்கூட இந்த முறையில் கருத்தரிப்பதில் மக்களுக்கு மிகுந்த மனத்தடை இருந்தது. தற்போது அந்த நிலை மாறி மக்கள் அறிவியல் மாற்றத்தை ஏற்றுக்கொள்கின்றனர். டெஸ்ட் ட்யூப் மூலம் கருத்தரிக்கத் தயாராக, ஒரு பெண்ணுக்கு மிகுந்த மன வலிமையும், உடல்நலமும் தேவைப்படுகிறது. ஆனால் ஒருமுறை IVF முறையில் முயற்சி செய்து கருத்தரிக்காத பெண்கள் மனமொடிந்து போகின்றனர். அதே சமயம் மருந்துகளின் பக்கவிளைவுகளை கவனத்தில் கொள்ளாமல் சிலர் அதிகமுறை முயற்சி செய்து உடல்நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.

குழந்தைப் பெற்றுக்கொள்ள அதற்காக முடிந்தவரை எல்லா ட்ரீட்மென்ட்களையும் முயற்சி செய்யலாம். அதே சமயம் அதிகமுறை முயற்சி செய்தவர்கள் குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க ஆதரவற்ற குழந்தைகளைத் தத்து எடுப்பதற்கான விதிமுறைகளை அரசு கடுமையானதாக்கி இருக்கிறது. அதனால் குழந்தைக்காக பதிவு செய்து நான்கு ஆண்டுகள்வரை காத்திருக்கும் சூழ்நிலையும் உண்டு. மக்கள் சோதனை குழாய் மூலம் கருத்தரிக்கும் சிகிச்சைகளை மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.

இப்படி பல லட்சங்கள் செலவு செய்து, உடல் வருத்தி மருத்துவம் பார்த்து #IVF மூலம் கருத்தரிக்கும் பெண்கள்கூட குழந்தை பெற்றுக்கொள்வதற்கான காரணங்களாக குடும்பத்தையும், சமூகத்தையுமே சொல்கின்றனர்.

சாதாரணமாக மாதந்திர சுழற்சியில் ஒரு பெண்ணுக்கு ஒரு கருமுட்டை மட்டுமே உருவாகும். ஹார்மோன் ஊசியால் குறைந்தது 4 முதல் அதிகபட்சமாக 10 கருமுட்டைகள்வரை உருவாக்குகிறார்கள். இது TEST TUBE BABY/IVF METHOD-ல் கர்ப்பமாகும் எல்லாப் பெண்களுக்குமே செய்யப்படுவது. இதன் மூலம் ஒரு முட்டை மட்டுமே கொள்ளக்கூடிய ஓவரியில் அளவுக்கு மிக அதிகமான முட்டைகள் உருவாக்கப்படுவதால் பின்னாட்களில் Ovary மற்றும் Uterus பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் பெற்றுக்கொள்வதை விட முக்கியம் அவர்களை வளர்ப்பதற்கு நாம் நலமாக இருக்கவேண்டும்.

Pregnancy
Pregnancy

குழந்தை உண்டாகத் தாமதமானால் மருத்துவமனை சென்ற உடன் முதலில் #IUI (Intra uterine insemination) எனும் முறையை பரிந்துரை செய்கிறார்கள். ஆக்டிவாக இருக்கும் விந்தணுக்களை மட்டும் பிரித்து சிறிய ட்யூபின் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் நேரடியாக செலுத்தும் எளிய சிகிச்சை முறை இது. நம்மூரில் இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் பெரும்பாலும் மிகக் குறைவு. மிகக் குறைந்த செலவில் நடத்தப்படும் இந்த சிகிச்சையில் அதிகமான மருந்துகள் உட்கொள்ளத் தேவையில்லை. பெரும்பாலும் இரண்டு முறை முயற்சி செய்த பின் இன்றைய மருத்துவர்கள் உடனடியாக #IVF சோதனை குழாய் முறையை பரிந்துரை செய்கிறார்கள்.

உண்மையிலேயே தம்பதியினருக்கு பிரச்னை இருக்கிறதா அல்லது பணத்துக்காக செய்கிறார்களா என்கிற குழப்பங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இது போன்ற #Sensitive ஆன விஷயங்களில் நாம் இறுதியில் மருத்துவர் சொல்வதைத்தான் கேட்க வேண்டியிருக்கிறது.

சோதனைக்குழாய் முறையில் கர்ப்பக் காலம் முழுவதும் பெண்கள் தொடர்ந்து ஹார்மோன் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு தம்பதியினர் சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அடிப்படையில் முக்கியமான காரணங்கள் ஆணின் விந்தணு போதாமை அல்லது அது கருவை உருவாக்குமளவு தரமில்லாமல் இருப்பது மற்றும் பெண்ணுக்கு கருமுட்டை உண்டாவதில் பிரச்னை. இதில் விந்தணு மற்றும் கருமுட்டை பிரச்னை இருப்பவர்களுக்கு அவற்றை கொடையாளர்களிடம் இருந்து தானமாக பெற்று கரு உருவாக்கப்படும்.

மருத்துவமனைகள் முதலிலேயே தம்பதியிடம் பிரச்னையை விளக்கி கருமுட்டையையும் விந்தணுவையும் தானம் பெற முறைப்படி ஒப்புதல் வாங்குகிறார்கள். பெரும்பாலும் மருத்துவமனைகள் கொடையாளர்களின் அடையாளங்களை தெரியப்படுத்துவதில்லை. பெயரில்தான் தானம் என்று இருக்கிறதே தவிர அவை தானமாகப் பெறப்படுவதில்லை. இதற்கும் சேர்த்துத்தான் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

கருமுட்டை / உயிரணு தானம்
கருமுட்டை / உயிரணு தானம்

IVF முறையில் கருத்தரிக்கும் அவ்வளவு பேருக்கும் அது வேறு ஒருவருடைய கருமுட்டையையோ, விந்தணுவையோ கொண்டு உண்டான கரு என்கிற பொதுப்புத்தி நம் சமூகத்தில் உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் ஏற்கெனவே சோதனைக் குழாய் குழந்தைகள் பற்றி பரப்பப்பட்ட தவறான தகவல்களாலும் தங்களுடைய கருமுட்டை மற்றும் விந்தணுவைக் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்குகூட சில நேரங்களில் அது தங்களுடையது இல்லை என சந்தேகம் வந்துவிடுகிறது.

பெரும்பாலான மருத்துவமனைகள் சிகிச்சை செய்துகொள்பவர்களின் ஒப்புதல் இல்லாமல் வேறு ஒருவருடைய விந்தணு, கருமுட்டையை பயன்படுத்துவது இல்லை. அதனால் ஏற்படக்கூடிய சட்ட பிரச்னைகள் குறித்து மருத்துவமனைகள் அறிந்தே இருக்கின்றன.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் விந்தணு தொடர்பாக முக்கியமான வழக்கு ஒன்று நடந்தது. விவாகரத்தான பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக விந்தணு கொடையாளரைக் கொண்டு செயற்கைக் கருத்தரிப்பு மூலமாக கடந்த ஆண்டு குழந்தை பெற்றுக்கொண்டார். அந்தக் குழந்தையின் பிறப்புச் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கையில் தந்தையின் பெயரை சேர்க்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டுள்ளார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்தப் பெண் வழக்குத் தொடுத்தார்.

அந்த வழக்கில், தந்தை இல்லாமல் தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால் போதுமானது மற்றும் தாயின் பெயரையே இனிஷியலாக பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு வந்தது.

தாயின் பெயரை மட்டுமே சான்றிதழ்களில் பயன்படுத்தலாம் என்பது வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு. அதைவிட முக்கியமாக நான் கருதுவது தனித்து வாழும் பெண் ஒருவர் முன் அறிமுகம் இல்லாத விந்தணு கொடையாளர் மூலமாக தமிழ்நாட்டில் பிள்ளை பெற்றுக்கொள்வது. திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதிகளிடத்திலேயே இன்னமும் கருமுட்டை மற்றும் விந்தணு கொடை பற்றிய போதிய புரிதலும், ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இல்லாத சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

குடும்பம்
குடும்பம்

விந்தணு, கருமுட்டை தானம் பெற்ற விஷயத்தை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வதன் பின்னணி என்னவென்றால் நம் வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களை போல குழந்தைகளையும் உடைமைகளாக எண்ணுவது. “என்னதான் இருந்தாலும் சொந்தப் பிள்ளை மாதிரி வருமா?” என்பதும், “சொந்த பிள்ளையாக இருந்தால்தான் கடைசி காலத்தில் நம்மை பார்த்துக்கொள்ளும்” என்கிற பிற்போக்கு எண்ணங்களும். இன்றைக்கு இவையெல்லாம் பொருந்தாது. ”தன்னுடைய ரத்தமாக இருக்க வேண்டும், தன்னுடைய மரபணுவில் இருந்து உருவாக வேண்டும்” என்றெல்லாம் சொல்லுபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தந்தையை கொன்று ஆட்சிக்கு வந்த இளவரசர்கள் கதையெல்லாம் இந்தியாவிலேயே நடந்தேறி இருக்கின்றன. இன்றும் பெற்றவர்களை கண்டு கொள்ளாமல் தெருவில் விடுகின்ற, சொத்துக்காக கொலை செய்வது வரை போகிற சம்பவங்களை சொந்த பிள்ளைகளே செய்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகளைவிட கடைசிவரை அன்பாக பார்த்துக்கொண்ட கதைகள் நம்மை சுற்றி ஏராளம் இருக்கின்றன. சொந்தப் பிள்ளை, தத்துப்பிள்ளை, விந்தணு, கருமுட்டை கொடை மூலமாக பெற்ற பிள்ளை என எந்த குழந்தையாக இருந்தாலும் வளரும்/வளர்க்கப்படும் சூழ்நிலையை பொறுத்துத்தான் இருக்கின்றது.

ஒருவருக்கு குழந்தை இல்லை என்று அவரே வருத்தப்படாமல் இருந்தாலும் இந்த சமூகம் தொடர்ந்து அதைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறது. கவுண்டமணி - செந்தில் பெட்ரோமேக்ஸ் லைட் நகைச்சுவை காட்சியில் ”இதுல எப்படிண்ணே லைட் எரியும்?” என்று மேண்டிலை உடைக்கும் செந்திலைப்போல ”குழந்தை இல்லாதவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்?” என மேண்டிலை உடைக்க அது முயற்சி செய்துகொண்டே இருக்கிறது. இவர்களை கொஞ்சம் ஒதுக்கி வைக்க பழகிக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும்.

குழந்தைகள் பெற்றுக்கொள்வது வாழ்வின் ஒரு பகுதிதான். ஆனால் பலரும் நாம் பிறந்ததே குழந்தை பெற்று வளர்ப்பதற்காகத்தான், குழந்தை இல்லை என்றால் வாழ்க்கையில் இனி ஒன்றுமே இல்லை என்பதுபோல் இருக்கின்றனர்.

குழந்தை திட்டமிடல்
குழந்தை திட்டமிடல்

நாளை என்பதே நிச்சயமில்லாத வாழ்வில் 60 வயதிற்கு மேல் நம்மைப் பார்த்துக்கொள்ள ஆளில்லை என்று 30 வயதிலிருந்தே வேதனைப்பட்டு இளமைக் காலம் முழுவதும் மன உளைச்சல், கணவன் - மனைவி இடையே சண்டைகள், மருந்துகள் என வீணாக்கத் தேவை இல்லை. குழந்தை பெற்றுக்கொள்வதற்குச் சிகிச்சைகளும், தத்து எடுக்கும் வசதிகளும் இருப்பதுபோல, குழந்தைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் வழிகள் இருக்கின்றன.

குறிப்பாகக் குழந்தைகளுக்காக மட்டுமே 50 - 60 வயதுவரை உழைத்து, பொருளீட்டி வாழ்க்கை முடிந்து போகும் இன்றைய நடுத்தர குடும்ப வாழ்க்கை முறையில் பிள்ளைகள் இல்லாவிட்டாலும் நமக்காக வாழ்வதற்கான நேரமும், சுதந்திரமும் இருக்கின்றது என்பதை புரிந்துகொண்டால் போதும்.