40 வயதில் தற்கொலை செய்து கொள்வது, மரணமடைவது அதிர்ஷ்டம் என்று தனது தனிப்பட்ட புலம்பலை பொதுமைப்படுத்தி சமூக வலைதளத்தில் எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாக பலரும் 40 வயதுக்கு மேல் தான் வாழத் தொடங்கினேன் என பதில் கட்டுரைகள் (?!) எழுதக் கடந்த வாரம் பேஸ்புக் முழுவதும் 40 வயதிற்கு மேலான வாழ்க்கை பேசு பொருளானாது.
40 வயதில் வாழ்க்கை முடிந்து விட வேண்டும் என்கிற கருத்து 35 வயதுக்கு மேல் இருப்பவர்களை அது பற்றி சிந்திக்கவும், 50-க்கு மேல் உள்ளவர்களை பதற்றத்திலும் ஆழ்த்தியது என்பதை அவரவர்கள் எழுதியதை வைத்து புரிந்துகொள்ள முடிந்தது. பலரும் அவசரமாக கேலியாகவும், தீவிரமாகவும் பதில் சொன்னதை வைத்து உண்மையில் 40 வயது மனிதர்களை கொஞ்சம் அசைத்துப் பார்க்கத்தான் செய்கிறது என்று தோன்றுகிறது.
நம்முடைய சராசரி ஆயுட்காலம் 70 வயது. 60 வயதில் பணி ஓய்வு பெரும்போது பலரும் வாழ்க்கையின் இறுதி காலம் என்கிற எண்ணத்துக்கு வந்துவிடுகிறார்கள். 60 வயது ஆனவுடன் ”எங்களுக்கென்ன... வயசான காலத்துல” என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அதனாலேயே ஆயுட்காலத்தின் முடிவை நோக்கி ஓடும் பாதையின் முதல் மைல் கல்லாக நாற்பதை பார்க்கத் தொடங்குகின்றனர்.

முடி கொட்டுவது, தொப்பை என ஆண்களுக்கு உடல் ரீதியான மாற்றங்கள் முன்பு நாற்பதுகளில் தொடங்கின. ஆனால், இப்போது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா வயதிலும் தொப்பை இருப்பவர்கள் இருக்கிறார்கள். தங்கள் தொப்பை, நரைத்த முடி பற்றி ஆண்கள் கவலைப்படுவதில்லை. நரைத்த தலையை, தல அஜித்தின் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைல் என்று ஆண்கள் பெருமையாக சொல்லிக் கொள்ள ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் பெண்கள் முப்பது வயதில் முடியை கலர் செய்யத் தொடங்குகிறார்கள்.
பெண்களுக்கு தங்கள் இளமை மீதான கவனம் 25 முதல் 30 வயதுக்குள் தொடங்குகிறது. ஓரிரு நரைமுடி, கண்களின் ஓரத்தில் இரண்டு கோடுகள் தொடங்கியவுடன் தங்களுக்கு வயதாவது பற்றி கவலை கொள்கின்றனர். பெண்களைப் பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் திருமணம், குழந்தைகள் மாறிவரும் வாழ்க்கை முறை, வேலை செய்யும் சூழல், உணவு பழக்கம், போன்ற காரணங்களினால் பலருக்கும் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனதளவில் பெண்களை பாதிக்கிறது.
அடிப்படையில் இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தங்களுடைய காதலன் அல்லது கணவனுடைய ‘அழகிய பெண்’ கோட்பாட்டுக்குள் தான் பொருந்திப் போக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு. உதாரணமாக தன் காதலன் அல்லது கணவனுக்கு பிடித்த திரை நாயகிகள் போல் நாம் இல்லை என்கிற எண்ணம் ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்தாலும், தன்னுடைய உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது அது பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆண்கள் தங்களுக்கு பிடித்த நடிகையை ரசித்து பார்க்கும்போது அது வீட்டில் பிரச்னையை ஏற்படுத்துகிறது.
ஒரு பெண் எப்போதும் ஆணுக்கு பிடித்த வகையில் இருக்க வேண்டும் என்பது பெண்ணின் மரபணுவில் பதியும் அளவுக்கு காலம் காலமாக போதிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு முற்போக்கு சிந்தனையாளர்கள் வந்து பெண்கள் மற்றவர்களின் பார்வைக்காக தன்னை அழகுபடுத்திக் காட்சிப் பொருளாக தேவையில்லை என்று சொன்னாலும் பெண்களின் மன நிலையை மாற்றுவது அவ்வளவு எளிது அல்ல. வெகுசில பெண்களே இதை கடந்து வருகிறார்கள். தன்னுடைய உடலின் மாற்றங்களை வருத்தமின்றி ஏற்றுக்கொண்டு, தன்னுடைய வசதிதான் முக்கியம் என்று அழகு கோட்பாடுகளை விட்டு வெளியேறுபவர்கள் தான் சாதிக்கவும் செய்கிறார்கள்.

பெண்களுக்கு தங்கள் வயதை நினைவூட்டி, வயது குறித்து கலக்கத்தை ஏற்படுத்தும் இரண்டாவது விஷயம் அழகு சாதன பொருள்கள் தொடர்பான விளம்பரங்கள். குழந்தைகள் பிறந்த பின்பு பெண்ணுக்கு இயற்கையாக ஏற்படும் உடல் பருமன், கர்ப்ப காலத்தில் பெரிதான வயிறு, மார்பகங்களின் அளவு, இயல்பு மாறுவது எல்லாம் இயற்கை. 30 வயதில் காலையில் வீட்டு வேலைகள் செய்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, தானும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்களுக்கு, பெண்களின் உடல், முக அழகு, இளமை இவற்றை குறிவைத்து உருவாக்கப்படும் விளம்பரங்கள் பதற்றத்தை உருவாக்குகிறது.
உடல் ஆரோக்கியத்திற்காக குடிக்க சொல்லும் ஒரு பானத்தின் விளம்பரத்தில், ’30 வயதில் பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறையும்’ என விளம்பரம் ஆரம்பிக்கும்போதே முப்பது வயதிலேயே எல்லாம் முடிந்துவிட்ட உணர்வு பெண்களுக்கு ஏற்படுகிறது. இதைவிட மன பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இன்னொன்று வயதாவதை தடுக்கும்(?!) பெண்களுக்கான #AntiAgeing க்ரீம்களின் விளம்பரங்கள். பெண்களின் மன உறுதியை அசைத்து பார்க்கும் நுணுக்கமான விஷயங்கள்தான் விளம்பரங்களின் கருவாக இருக்கின்றன.
பெரும்பாலான விளம்பரங்களில் சிவப்பாக, இளமையாக, உடல் ஒல்லியாக இருக்கும் பெண்கள்தான் வருகிறார்கள். இதுதான் அழகிற்கான ‘Definition’ என்பதை நேரடியாகவே இத்தகைய விளம்பரங்கள் திணிக்கின்றன. உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது நல்ல விஷயம். ஆனால் விளம்பரங்களில் வரும் பெண்களை போல் அழகுப்படுத்திக் கொள்வது, உடலை ‘Slim’ ஆக வைத்துக் கொள்வதற்கான வசதி, சூழ்நிலை, நேரம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நிறம், உயரம், உடல் பருமன் எல்லாம் ஒருவருக்கொருவர் இயற்கையிலேயே மாறுபடுவது. பெண்களின் உடல் பருமனுக்கு முக்கிய காரணங்களாக இருக்கும் பிசிஓடி ( #PCOD ), தைராய்ட், நீரிழிவு பிரச்னைகள் இன்று நோயாக இல்லாமல் ஒரு வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது.
இன்று முப்பதுகளில் இருக்கும் பெண்களுக்கு கம்பேக்ட் பவுடர், ஃபவுண்டேஷன், ஐ லைனர், மஸ்காரா எல்லாம் அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் வந்துவிட்டது. முன்பு விசேஷங்களுக்கு செல்வதுபோல் தற்போது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸப் ஸ்டேட்டஸுக்காக தினந்தோறும் மேக்கப் செய்து கொள்கிறார்கள். பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் ஆர்வம்தான் உலகச் சந்தையை இயக்கிக் கொண்டிருக்கிறது.

சரி இப்படி பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது தவறா? நிச்சயமாக இல்லை! பெண்ணியவாதிகள் பெண்களை முடி வெட்டிக்கொள்ள சொல்வது, பொட்டு, வளையல், சங்கிலி முதலியவற்றை அணிய வேண்டாம் என்று சொல்வது, பேன்ட்- ஷர்ட் போன்ற எளிதான, வசதியான உடைகளை அணியச் சொல்வது எல்லாம் சமத்துவத்தை நிரூபிக்க, அல்லது ஆண்களைப் ‘போல பண்ணுதல்’ என்கின்ற தவறான புரிதல் நம் சமூகத்தில் இருக்கிறது.
அந்த காலம் முதலே பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது ஆண்களின் கண்களுக்கு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான். எந்த நேரமும் ஆண்களின் கண்களுக்கு அழகாக தெரிவதற்காக நன்றாக உடுத்தி அலங்கரித்துக் கொள்ள பெண்கள் வீட்டில் இருக்கும் மேஜை, அலமாரி போன்ற பொருள் இல்லை. அவள் உணர்வு, தன்மானம், சுதந்திரம், சுயமரியாதை எல்லாம் உடைய மனுஷி. பெண்கள் தங்களுக்கு பிடித்ததை கற்க, நாடுகளுக்கு பயணம் செய்ய, விரும்பிய வேலை செய்ய உரிமை உண்டு. இதன் அடிப்படையில் அலங்கரித்துக் கொள்வது பெண்களின் நேரத்தை வீணாக்கும் என்கிற வகையில் அக்காலத்தில் அந்த கருத்து சொல்லப்பட்டது. அதே சமயம் ஒரு பெண் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் விருப்பம் இருந்து அதை முழுநேரமாக செய்வதும் அவளது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உரிமை.
மற்றவர்கள் கண்களுக்கு Pleasant ஆக தெரிய வேண்டும், மற்றவர்களை Please செய்வதுபோல் உடுத்தியிருக்க வேண்டும் என்கிற எண்ணங்களில் இருந்து மனதளவில் வெளியேறும் சுதந்திர உணர்வு அலாதியானது. அதைத்தான் சமீபத்தில் ’நரைத்த முடியை கலர் செய்ய’ சொன்ன தனது தந்தைக்கு நடிகை சமீரா ரெட்டி தனது பதிலில் கூறியிருந்தார்.
பெண்களின் வயது குறித்த மனச்சிக்கலை மட்டுமே அடித்தளமாக வைத்து வியாபாரம் செய்பவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். தொலைக்காட்சி, சமூக வலைதளம். வானொலி என எதை திறந்தாலும் முந்திக் கொண்டு நிற்பது பெண்களுக்கான அழகு சார்ந்த விளம்பரங்கள் அன்றி வேறில்லை. உள்ளூர் சந்தை முதல் வெளிநாட்டு பொருட்கள் வரை புதிதாக வரும் பொருட்கள் பற்றிய தகவல்கள் இன்று இணையத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த பொருளை வீட்டிலிருந்தபடியே வாங்கும் வசதியும் வந்துவிட்டது. அழகுசாதனப் பொருள்கள் தவிர குழந்தைகளுக்கான பொம்மைகள், சமயலறைக்கு தேவையானது, வீட்டை அலங்கரிக்கும் பொருட்களும் பெண்கள் அதிகம் வாங்கும் பட்டியலில் உண்டு.

கடைக்கு கணவருடன் சென்று பொருள்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை இன்னமும் பல குடும்பங்களில் பெண்களின் நிலையாக இருக்கிறது. அல்லது தனியாக செல்ல வேண்டுமானாலும் தேவைக்கான காரணங்களை சொல்லி பணம் வாங்க வேண்டும். அதைவிட ஆன்லைன் ஷாப்பிங் அவர்களுக்கு மிக எளிதாக இருக்கிறது.
மனைவி மற்றும் குழந்தைகளை கடைகளுக்கு அழைத்து சென்று, மனைவிக்கு தேவையான பொருட்கள் வாங்கும் வரை குழந்தைகளை சமாளித்து, பணம் செலவு செய்வதைவிட வீட்டிலிருந்தபடியே மனைவி தேர்வு செய்து காட்டும் ஏதோ ஒன்றை போகிற போக்கில் நன்றாக இருக்கிறது என்று சொல்லி, கிரெடிட் கார்ட் EMI-ல் பணம் கொடுப்பது ஆண்களுக்கும் எளிதாக இருக்கிறது. முன்பு ஆன்லைனில் வாங்குவதை தவறான விஷயம் என்று சொன்ன பெரியவர்களும் கூட இன்று ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை ஒரு பொழுதுபோக்கு போல செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது ஆரம்பக் கட்டத்தில் சரியாகத் தெரிந்தாலும் பெண்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையான பின்பு வீட்டில் இதனால் பல பிரச்னைகள் ஏற்படத் தொடங்குகின்றன. சிறிய செலவுகளாக ஆரம்பிக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பெரிய அளவில் கிரெடிட் கார்ட் கடன்களில் கொண்டு சேர்த்து விடுகிறது. தங்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் போதும் என்று இருந்த ஆண்களுக்கு கொரோனா லாக்டெளனுக்குப் பிறகு வருமானம் குறைய ஆரம்பிக்க, பல குடும்பங்களில் தேவையில்லாத செலவுகளுக்காக வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. இதனால் பெண்கள் தங்களிடம் பொருளாதார வசதி இல்லாததை குறித்து வருந்துகிறார்கள். அதிலும் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக தங்கள் Career-ஐ விட்டுக்கொடுத்த பெண்களுக்கு தேவையான சமயம் பணம் இல்லை என்பது மிகப்பெரும் மன அழுத்தத்தை உருவாக்குவதுடன் குடும்பத்தில் சண்டையிடும் சூழ்நிலையையும் ஏற்படுத்துகின்றது.

வெளித்தோற்றம், உடல்நலம், குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரம் எல்லாம் மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஒருவரின் வாழ்வை நிச்சயம் இன்னொருவர் வாழ முடியாது. நாம் எப்படி இருக்கிறோமோ அதை நாம் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் ஒன்றிலிருந்து ஒன்று, அதிலிருந்து இன்னொன்று என்று ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருள்கள் வாங்குவது தொடர் சங்கிலி போல போய்க் கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு கட்டத்தில் அதன் ஒரு கண்ணியை நாம்தான் துண்டிக்க வேண்டும்.
Life begins at any age when we realize our freedom.