Published:Updated:

மேடம் ஷகிலா - 25: Chatting, Flirting, Sexting… EMA உறவுகள் ஏன் சமூக வலைதளங்களில் தொடங்குகின்றன?

Chatting
News
Chatting

திருமணமான, வயதில் மூத்த பெண்ணை தேர்வு செய்யும்போது முதலில் அவள் இந்த உறவை வெளியில் சொல்ல மாட்டாள் என்கிற உறுதி ஆணுக்கு கிடைக்கிறது. அதனால் அவனுக்கு ’போதும்’ என்று தோன்றும் போது அந்த உறவிலிருந்து வெளியேறும் சுதந்திரமும் ஆணுக்கு இருக்கிறது.

Published:Updated:

மேடம் ஷகிலா - 25: Chatting, Flirting, Sexting… EMA உறவுகள் ஏன் சமூக வலைதளங்களில் தொடங்குகின்றன?

திருமணமான, வயதில் மூத்த பெண்ணை தேர்வு செய்யும்போது முதலில் அவள் இந்த உறவை வெளியில் சொல்ல மாட்டாள் என்கிற உறுதி ஆணுக்கு கிடைக்கிறது. அதனால் அவனுக்கு ’போதும்’ என்று தோன்றும் போது அந்த உறவிலிருந்து வெளியேறும் சுதந்திரமும் ஆணுக்கு இருக்கிறது.

Chatting
News
Chatting
90-களின் இறுதியில் வெகு பிரபலமாக இருந்தது Yahoo Chat Rooms. அறிமுகமில்லாதவர்களுடன் பொது உரையாடலை ஆன்லைனில் சாத்தியமாக்கிய முதல் தளம் அதுதான். அதன்பின் MSN Messenger அறிமுகமானது. 2004-ல் அறிமுகமானாலும் 2007 - 2008 வாக்கில் Orkut எனும் முதல் சமூக வலைதளம் பிரபலமாக இருந்தது. அதன் அடுத்த வெர்ஷன்தான் ஃபேஸ்புக்.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு முந்தைய காலகட்டத்தில் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இணைய வசதி இருப்பவர்கள், இணைய வசதியுள்ள செல்போன் வைத்திருப்பவர்கள் என குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தது. ஆண்ட்ராய்டு போனின் வரவு மற்றும் வாட்ஸ்அப் இரண்டும் பெண்களிடம் செல்போன் பயன்பாட்டை அதிகப்படுத்தியது. இன்று நடுத்தர குடும்பங்களில் வாட்ஸ்அப் ஒரு தவிர்க்க முடியாத ஆப்பாக புழக்கத்தில் இருக்கிறது.

Yahoo chat-ல் தொடங்கி இன்று ClubHouse வரை அறிமுகம் இல்லாதவர்களுடன் தனிப்பட்ட நெருக்கமான உரையாடல்கள் ஆபத்துகளை பற்றிய அச்சம் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Man - Woman
Man - Woman

இணையம் வந்த புதிதில் இன்டர்நெட் என்றால் பாலியல் தொடர்பான விஷயங்களின் தளம் என்கிற பலருக்கும் புரிதல் இருந்தது. இன்றும்கூட இணைய வசதி இருந்தால் பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று சொல்வதன் பின்னணியில் இருப்பதும் அளவுக்கதிகமாக இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பாலியல் தொடர்பான விஷயங்கள்தான்.

ஒரு காலகட்டம் வரை ஆண்கள் இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொள்வது சமூகத்தில் மிக சாதாரணமான விஷயமாக இருந்தது. பிறகு முதல் வாழ்க்கைத் துணையை சட்டரீதியாக பிரியாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வது, அல்லது உடன் வாழ்வது தவறு என சட்டம் வந்தது. அதன் பிறகு சமூகத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவருடன் வாழ்வது அல்லது திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் தவறான விஷயமாக பார்க்கப்படுகின்றன.

ஆனால், இதிலும்கூட ஆண் மைய சமூகத்தின் #MalePatriarchy வேர்கள் பரவி இருக்கின்றன. சட்டப்படி தவறாக இருந்தாலும் ஒரு ஆண் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு வெளியிலான உறவு வைத்துக்கொள்ளும் போது ‘அவன் ஆம்பள அப்படித்தான் இருப்பான்’ என்று எளிதாக சொல்வதும் ஒரு பெண்ணுக்கு அதே விஷயம் நடக்கும்போது நாட்டின் பாரம்பரியத்திற்கே கேடு வந்துவிட்டது போலவும் இச்சமூகம் நடந்துகொள்கிறது.

திருமண வாழ்வில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப்பின் ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யங்களும், ஆச்சர்யங்களும் சற்று குறைய வாய்ப்பு உண்டு. கருத்து வேறுபாடு மற்றும் சண்டைகளால் ஒருவர் மீது மற்றவருக்கு இருக்கும் அபிப்பிராயம் மாறிக்கொண்டே இருக்கும். அத்தகைய சூழலில் தாங்கள் அல்லாத ஒன்றாக மற்றவர்களால் Branding செய்யப்படும்போது, ‘நான் அதுவல்ல’ என நிரூபிக்க மனித மனம் முயற்சி செய்து கொண்டே இருக்கும். தொடர்ந்து திணிக்கப்படும் எதிர்மறை எண்ணங்களுக்கு எதிராக ஒரு நேர்மறை பிம்பத்தை (Positive Image) உருவாக்கி புதிதாக ஒருவரிடம் அதை நிரூபித்து நம்ப வைத்துவிடுவது மனிதர்களுக்கு குறைந்தபட்ச ஆறுதலாக இருக்கிறது. அத்தகைய ஆறுதலை பெரும்பாலும் ஈர்ப்பு உள்ள பாலினத்தவர்களிடம் இருந்து பெறவே விரும்புகிறார்கள்.

Girl Chatting
Girl Chatting

மனிதர்களுக்கு தங்கள் மீது எப்போதும் நேர்மறையான, உயர்வான எண்ணங்களே இருக்கும். அடுத்தவர்களிடம் இருந்து வரும் விமர்சனங்கள் மற்றும் எதிர்வினைகளை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. தொடர்ந்து ’இதுதான் நீ...’ என்று சுற்றி இருப்பவர்கள் எதிர்மறையான விஷயங்களினால் அடையாளப்படுத்தும்போது பலரும் அதிலிருந்து தப்பி புதியவர்களை தேடிப் பழக விரும்புகிறார்கள்.

நண்பர்கள்/உறவுகள் மாறிக்கொண்டே இருப்பதும், புதிதாக பார்ப்பவர்களிடம் திடீரென்று இணக்கம் ஆவதற்கும் இது ஒரு முக்கியமான காரணம். தன்னுடைய எந்த அடையாளமும் இன்றி புதிதாக பார்க்கும் ஒருவரிடம் மனம் விட்டு பேசும்போது மனிதர்கள் அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெரிதாக அடையாளங்களை பகிர்ந்து கொள்ளாமல், நம்மை பற்றிய முன்முடிவுகள் இல்லாத ஒருவரிடம் பேசுவது குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவசியம் தேவைப்படுகிறது. அதற்கு ஒரு மிகப்பெரிய தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன சமூக வலைதளங்கள்.

சமூக வலைதளங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ஒன்றுபோல இருப்பது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. பெரும்பாலனவர்கள் அங்கே போலியான ஒரு பிம்பத்தை உருவாக்கி உலா வருபவர்களாகவே இருக்கின்றனர்.

உருவம், கல்வி, தொழில் இன்னும் பல காரணங்களால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையால் பொதுவெளியில் வெளிப்படையாக உரையாடாதவர்கள் போலி கணக்குகளின் மூலம் தாங்கள் விரும்பிய மனிதர்களாக தங்களை காட்டிக்கொண்டு மற்றவர்களிடம் பேசுவதற்கும் சமூக வலைதளங்கள் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதனால் சம்பந்தபட்டவர்கள் தீவிர மனநல பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்று மனநல மருத்துவர்கள் எச்சரித்தாலும் தினமும் எண்ணற்ற போலிக் கணக்குகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

பிடித்த ஒருவரை சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமல் ரசித்துக் கொள்வது #Crush. சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக சொல்வதோடு மட்டுமல்லாமல் தம் மீது ஈர்ப்பு வரும்படி பேசுவது, நடந்துகொள்வது #Flirting. பாலின வேறுபாடின்றி நட்பைக் கடந்த உரையாடல்கள் வைத்துக்கொள்வதும், அந்த உறவு அதற்குமேல் செல்லாது என்கிற உறுதியில் தொடங்குபவர்களும் அதிகம். ஆனால் இவையெல்லாம் இதே இடத்தில் நின்று விடுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.
Talking in Phone
Talking in Phone

மனிதர்களுக்கு எந்த வயதிலும், யார் மீதும் அன்பு, நட்பு, பாலியல் ரீதியான ஈர்ப்பு உருவாகுதல் இயற்கை என்றாலும் ஒரு சமூகமாக வரையறைகளுக்கும், சட்டங்களுக்கும் உட்பட்டு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களை தவிர்த்துவிடுகிறோம். ஆனால், மனித மனதிற்கு உணர்வுகளுக்கு ஆட்பட்டு சட்டங்களை மீறுவதில் மிகுந்த ஆர்வமும், த்ரில்லும் இருக்கும்.

சமூக வலைதளங்களில் உண்டாகும் உறவுகள் #VirtualRelationship உண்மையானது அல்ல என்றும் அதனால் பல சிக்கல்கள் உண்டாகும் என்றும் தொடர்ந்து பலரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில் பண ஏமாற்று முதல் கொலை சம்பவங்கள் வரை நடப்பதாக நாள்தோறும் செய்திகளில் பார்க்கிறோம்.

சமூக வலைதளங்கள் இன்றும் அதிக அளவில் தனிப்பட்ட உரையாடலுக்கான மீடியமாக தான் பார்க்கப்படுகின்றன. Messenger உரையாடல்களை எவ்வளவு கேலி (Troll) செய்தாலும் ஒரு பக்கம் அது மிகத் தீவிரமான உறவுகளை உருவாக்கும் இடமாக இருக்கிறது.

ரசனைக்கு ஏற்றவாறு ஒத்த கருத்து உடையவர்களை கண்டடைந்து பழகும் வாய்ப்பை சமூக வலைதளம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், பலருக்கும் அந்த வாய்ப்பு அவசர அவசரமாக நட்பை தாண்டிய உறவாக மாறுகிறது. பலரும் முகம் தெரியாதவர்களுடன் கூட துணிச்சலாய் பேசுகிறார்கள். எதிரில் இருப்பவர்களை வார்த்தைகளை மட்டும் வைத்து நம்பத் தொடங்குகிறார்கள். அதிலிருக்கும் ஆபத்து தெரிந்தாலும் பலரும் அதை பொருட்படுத்துவதில்லை. திருமணம் ஆகாத பெண்களை விட திருமணமான பெண்களே அதிகம் இத்தகைய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆன பெண்களிடம் திருமணமாகாத, இளைஞர்கள் பேச/உறவு கொள்ள விரும்புவது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் காமெடியாக சித்திரிக்கப்படுகின்றன. ஆனால், சமூக வலைதளத்தில் இத்தகைய உறவுகளுக்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Flirting
Flirting

திருமணமான, வயதில் மூத்த பெண்ணை தேர்வு செய்யும்போது முதலில் அவள் இந்த உறவை வெளியில் சொல்ல மாட்டாள் என்கிற உறுதி ஆணுக்கு கிடைக்கிறது. அதனால் அவனுக்கு ’போதும்’ என்று தோன்றும் போது அந்த உறவிலிருந்து வெளியேறும் சுதந்திரமும் ஆணுக்கு இருக்கிறது. காதல், பணம், பாலியல் உறவு மற்றும் வேறுவிதமான உதவிகள் என இத்தகைய உறவுகளுக்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இத்தகைய உறவில் இருக்கும் ஆண்கள் முதலில் பயன்படுத்தும் Pickup line, ‘நீ என் அம்மாவை போல என் மீது அக்கறையுடன் இருக்கிறாய்’ என்பதுதான். உடனே உருகி தன்னுடைய மூத்த குழந்தையாகவே அவனை நினைப்பதாக பதிலுக்குக் கூறும் பெண்களும் உண்டு.

திருமண உறவில் இருவரில் யாரோ ஒருவருக்கு காதலும், ஈர்ப்பும் குறையும் போது இன்னொருவர் அவ்விடத்தை நிரப்ப திருமண உறவுக்கு வெளியில் அன்பை தேடுகின்றனர். பெரும்பாலான திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் ஆரம்பத்தில் ’அன்பாக நான்கு வார்த்தை பேசினால் போதும்’ என்று தொடங்கினாலும் பெரும்பாலும் அது பாலியல் ரீதியான உரையாடலை நோக்கித்தான் செல்கிறது. அவ்வாறு செல்லும் உறவுகள் பணம் கேட்டு மிரட்டுவது முதல் தற்கொலை வரை செல்லும் கதைகளும் இங்கு உண்டு.

சமூக வலைதளங்களின் அறிமுகத்திற்கு முன்பே ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. திருமணமான ஆண் ஒருவன் தினமும் அலுவலகம் செல்லும் வழித்தடத்தில் உடன் பயணிக்கும், திருமணமான பெண் ஒருத்தியுடன் நட்பு கொள்கிறான். அவனது குழந்தையின் உடல்நலக் குறைவினால் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தமும், அதே நிலையில் இருக்கும் மனைவியுடனும் ஒரு இடைவெளி இருப்பதாக அவன் உணரும் சமயத்தில் இந்த நட்பு ஏற்படும். புதிதாக ஒரு பெண் பழகுவதால் அவனிடம் ஏற்படும் மாற்றங்கள் அவனுக்கு அந்த நேரத் தேவையாக இருக்கும். அவளை நம்பி நெருங்கிப் பழகும் நேரத்தில் அந்தப் பெண் அவனிடம் பணம் பறிப்பதற்காக காதல் நாடகமாடியது தெரிய வரும். இதுபோன்ற பல கதைகள் இன்று சமூக வலைதளங்கள் மூலம் எளிதாக நடந்து கொண்டிருக்கின்றன. பணத்தை இழப்பது மட்டுமல்லாமல் சம்பந்தபட்டவர்களுக்கு மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது.

பச்சைக்கிளி முத்துச்சரம்
பச்சைக்கிளி முத்துச்சரம்

திருமணமான நடுத்தர வயது பெண்கள் போலிக் கணக்கின் மூலம் இளம் பெண்களை போல் ஆண்களிடம் உரையாடுகிறார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்களுடைய போன் நம்பரை பகிராமல் வாய்ஸ் காலில் பேசிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்வோம் என்கிற நிலை வரும்போது அந்த போலிக் கணக்கை மூடிவிட்டு ஓடிவிடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் விளையாட்டாக கேலி செய்யப்படுகிறது. பெண்களுக்கு மட்டும் தான் சமூக வலைதளங்களில் உணர்வு ரீதியான அல்லது பாலியல் ரீதியான பிரச்னைகள் வரும் என்றும், ஆண்களுக்கு பணம் சார்ந்த மிரட்டல்கள் மட்டுமே வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உணர்வு சுரண்டல், ஏமாற்றங்களுக்கு பாலின பாகுபாடுகள் கிடையாது. இணைய காதலாக இருந்தாலும் திடீரென்று அது காணாமல் போகும் போது அல்லது ஏமாற்றப்படும்போது ஒரு ஆணுக்கும் அது மன உளைச்சலை உண்டாக்கும் என்பதை யாரும் புரிந்துகொள்வதோ, தீவிரமாக எடுத்துக்கொள்வதோ இல்லை.

திருமணத்திற்கு வெளியிலான ஒரு உறவு ஆரம்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் உண்டாக்கினாலும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு காரணத்தினால் பிரிய நேரலாம். அவ்வாறு பிரியும்போது அது பிளாக் மெயில் வரை சென்று வாழ்க்கையை முடித்துவிடும் நிலைக்கு தள்ளுகிறது. அதேபோல் மக்கள் அன்புக்காக ஏங்கி தேடிக்கொள்ளும் புது உறவிலும் பெரும்பாலானோர் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அடிப்படை நோக்கம் ’காதல் மட்டுமே’ என ஆரம்பிப்பவர்கள்கூட ஒரு கட்டத்தில் பொறாமை, உடைமை எண்ணம் (possessiveness), ஈகோ போன்றவற்றால் சண்டையிட்டுக் கொள்கின்றனர். சிலர் தாங்கள் அந்த உறவில் அடிமையாக இருக்கிறோம் என்பது தெரியாமல் காதலின் பெயரால் அடிமையாக இருக்கிறார்கள். பலருக்கும் இதுபோன்ற உறவுகள் நச்சாக (Toxic) முடிகின்றது.

திருமணத்திற்கு வெளியில் உண்டாகும் உறவுகளை பெரும்பாலும் ஆண்கள் ஒரு கமிட்டட் ரிலேஷன்ஷிப்பாக வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தன்னுடைய மனைவி அல்லது குழந்தைகளை விட்டு வரமுடியாது என்கிற தெளிவோடுதான் பெரும்பாலான ஆண்கள் பெண்களிடம் பேசுகிறார்கள். ஆனால், பெண்கள் இந்த எல்லைக்கோட்டை புரிந்து கொள்வது இல்லை. தன்னுடைய கணவர் அல்லது குழந்தைகளை விட்டு விலக முடியாது என்ற புரிதல் ஆரம்பத்தில் இருந்தாலும், தான் விரும்பும் ஆணிடமும் ஒரு கமிட்மென்ட்டை பாதுகாப்பு உணர்வின் அடிப்படையில் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். திருமணத்திற்கு வெளியில் ஏற்படும் காதலுக்காக குழந்தைகளை கொல்லும் வரை செல்பவர்கள் இங்கே பெண்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

குழந்தையைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட ரேஷ்மா
குழந்தையைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட ரேஷ்மா

கேரள மாநிலம் கொல்லத்தில் ரேஷ்மா என்கிற பெண் தன்னுடைய பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிக் கொன்றிருக்கிறார். குப்பைத் தொட்டியில் இருந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரேஷ்மா, அனந்து என்பவரை ஃபேஸ்புக் மெசெஞ்சர் சாட் வழியாக ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார். ரேஷ்மாவுக்கு குழந்தை பிறந்தபோது, ’குழந்தை நம் காதலுக்கு தடையாக இருக்கும்’ என காதலன் அனந்து கூற, ரேஷ்மா தன்னுடைய குழந்தையை கொன்றிருக்கிறார் என தெரியவந்திருக்கிறது. கூடவே அனந்து ஒரு ஃபேக் ஐடி என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விசாரணையில் திடீர் திருப்பமாக ரேஷ்மா கணவரின் அக்காள் மகளும், அவரது அண்ணன் மனைவியும் ஆற்றிலிருந்து சடலமாக கடந்த வாரம் மீட்கப்பட்டனர். அவர்கள் எழுதி வைத்திருந்த கடித்தத்தின்படி, அந்த இரண்டு இளம்பெண்களும் விளையாட்டாக ஃபேஸ்புக்கில் ‘அனந்து’ என்கிற பெயரில் போலிக் கணக்கு (Fake ID) ஒன்றை தொடங்கி ரேஷ்மாவிடம் பேசி வந்திருக்கின்றனர். வெறும் எழுத்து வடிவிலான காதல் உரையாடலை (Text Messages) நம்பி ரேஷ்மா தன்னுடைய குழந்தையை கொல்லும்வரை சென்றிருக்கிறார். விசாரணையில் குழந்தையை கொல்ல காரணமாக இருந்திருக்கிறோம் என்று தெரிந்தால் கைது செய்யப்படுவோம் என அஞ்சி ஆர்யா, க்ரீஷ்மா என்கிற இரண்டு இளம்பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் ரேஷ்மாவின் வயது 22.

நிஜ வாழ்வில் திருமணத்திற்கு வெளியிலான காதல் உறவினால் குழந்தைகளைக் கொல்வது, தற்கொலை போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சமூக வலைதளத்தில் ஒரு போலிக் கணக்கின் மூலம் வெறும் சாட்டிங்கில் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்த (Virtual Relationship) ஒருவரை நம்பி குழந்தையை கொல்வதுவரை செல்லும் இளம்பெண்களின் மனநிலையும், காதல், திருமணம், குடும்ப உறவுகளை பற்றிய அவர்களின் புரிதலும் அதிர்ச்சியையும், வேதனையையும் உண்டாக்குகிறது.

Girl Chatting
Girl Chatting

18 வயது நிரம்பிய இளம்பெண்கள் திருமணத்திற்குத் தயாராக இருப்பார்கள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் எத்தனை வயது ஆனாலும் நம் சமூகத்தில் காதல், திருமணம், குழந்தைகள் பற்றிய வெளிப்படையான உரையாடல்கள் இல்லை. அதேபோல் பெண்கள் தங்களுக்கு பிடித்தவரை மணக்கும் சுதந்திரமும் இன்னும் முழுமையாக இல்லை. பெரும்பாலும் பண்டம் மாற்றும் செயலாகத்தான் திருமணங்கள் இங்கு நடைபெறுகின்றன. அதன் விளைவாக ஒரு கட்டத்தில் தனக்கு ஒவ்வாத திருமணத்திலிருந்து வெளியேற பொருளாதார சுதந்திரமும், வாய்ப்பும் இருக்கும் பெண்கள் முயற்சி செய்கிறார்கள். அப்படி கதவை திறந்துக்கொண்டு நேரடியாக வெளியேற முடியாதவர்கள் ஜன்னல் வழியாக கிடைக்கும் சிறு ஒளிக்கீற்றை பற்றிக்கொண்டு அதன் வழியாகவே வெளியேறலாம் என்றெண்ணி பெரும் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல... இன்பாக்ஸில் வருவதெல்லாம் அன்பல்ல!