ட்விட்டரில் ஒரு பெண் மாதவிடாய் காலத்தின்போது பெண்களுக்கு அலுவலகத்தில் விடுப்பு அளிக்கவேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு கேலியாகவும், கோபமாகவும் மிக அதிகமான எதிர்வினைகள் வந்தது.
இந்தத் தலைமுறையிலும் பெண்களின் மாதவிடாய் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய பேச்சுகள் எப்போதும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது.
‘’இப்படி லீவு கொடுக்கும் பட்சத்தில் அவர்களை வீட்டிலிருந்து கவனித்துக்கொள்ள ஆண்களுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டும்’’, ‘’பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது போல அதற்கு சமமாக ஆண்களுக்கும் ஏதாவது விடுப்பு வேண்டும்’’, ‘’நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்த யோசிக்கும்’’, ‘‘பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கொடுப்பதால் உற்பத்தியின் அளவு குறையும்’’ என பல்வேறு வகையான எதிர்வினைகள் ஆண்களிடமிருந்து வந்தன. இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், ‘’பெண் என்பதால் எதுவும் ஸ்பெஷல் இல்லை... பாலின பாகுபாடுகளை அலுவலக வேலைகளில் கொண்டு வராதீர்கள்’’ என்றும் ‘’இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வளர்ந்த நாடுகளில் இருக்கும் உரிமைகளை கேட்காதீர்கள்’’ என்றும் கூறியிருந்தனர்.

இன்னொருபுறம் அலுவலகங்களில் பிரசவ கால விடுப்பு கேட்கும் பெண்கள் மேல் சக ஆண் ஊழியர்களுக்கு கோபம் இருக்கிறது. ஆறு மாதங்கள் சம்பளத்துடன் அவர்களுக்கு விடுப்பு கிடைப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. மாதவிடாய் கால விடுப்பு பற்றிய ட்வீட்டில் ஒருவர், ’’மாதவிடாய், பிரசவம் எல்லாம் நோயா எதற்கு விடுப்பு’’ என்று கேட்டிருக்கிறார்.
ஆண்களின் இந்த க்கோபத்தின் அடிப்படை பொறாமை என்றாலும்கூட பெண் உடல் பற்றிய சரியான புரிதல் இல்லாததும் முக்கிய காரணம். நம் பாடத்திட்டத்தில் இதற்கான பாடங்கள் இருந்தாலும் அது நடைமுறை கல்வியாக தெளிவாக புரிய வைக்கப்படுவதில்லை.
PMS பற்றி வெளிப்படையாக பெண்கள் பேசுவது தவறு என்று சிலரும், சாதாரண மாதவிடாய் விஷயத்தை மிகைப்படுத்தி பேசுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் உருவாகியிருக்கிறது. ’’மாதவிடாயை ஏன் புனிதம் ஆக்குகிறீர்கள்... அது பிரிவிலேஜ் அல்ல’’ என ஆண்கள் பதற்றம் அடைகிறார்கள்.
சமீப காலமாக பெண்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை PMS (Pre Menstrual Syndrome). மாதவிடாய் தொடங்குவதற்கு முந்தைய ஒரு வாரத்தில் உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் மாற்றங்கள், மாதவிடாய் தொடங்குவதற்கான அறிகுறிகள் PMS எனப்படும். கிட்டத்தட்ட 150 PMS அறிகுறிகள் இருப்பதாக மருத்துவத்துறை சொல்கிறது. தலைவலி, உடல் மற்றும் மன சோர்வு, பதற்றம், குழப்பம் முதற்கொண்டு அதிக உதிரப்போக்கு வரை பெண்ணுக்குப் பெண் அறிகுறிகளும், அதன் தீவிரமும் மாறும்.
எல்லா பெண்களுக்கும் ஒரேபோல் உடல் சார்ந்த பிரச்னைகள் இருப்பதில்லை. ஐந்து முதல் ஆறு நாள்கள் வரை மாதவிடாய் இருந்தும் உடல் சோர்வு வலி இல்லாதவர்கள் இருக்கிறார்கள். இரண்டு நாள்கள் மட்டும் மாதவிடாய் இருந்தாலும் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அளவு வலியால் அவதியுறுபவர்களும் இருக்கிறார்கள். மாதாமாதம் மருத்துவரிடம் சென்றே ஆகவேண்டிய அளவு பிரச்னை உள்ளவர்களும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு தீவிரமான பிரச்னை உள்ளவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தற்போது பெண்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

உடனே ஆண்கள் அவசர அவசரமாக, ’’இதெல்லாம் எல்லோருக்கும் இருப்பதுதானே, அந்தக் காலத்து பெண்கள் இதை கடந்து வரவில்லையா... இப்படித்தான் புலம்பிக் கொண்டு இருந்தார்களா?" என்கிறார்கள். எல்லோருக்கும் இருப்பதாலும் அந்தக் காலத்து பெண்களை வெளியில் பேசவிடாமல் முடக்கி வைத்திருந்ததாலும், இன்று பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகளும், வலிகளும் சாதாரணமாகி விடுமா?
‘’அந்தக் காலத்தில் பெண்கள் இப்படி விடுப்பு கேட்கவில்லை. அதோடுதான் வேலை செய்தார்கள்’’ என்கிறார்கள். தீட்டு என்ற பெயரில் பெண்களை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்து இருந்தாலும் அந்த நாள்கள் பெண்களுக்கு ஓய்வைக் கொடுத்தன. இப்போதை விட அதிக வேலைப்பளு இருந்த ஒரு காலகட்டத்தில் அந்த ஓய்வு பெண்களுக்கு தேவைப்பட்டது. அதே சமயம் இப்போது இருப்பதைபோல மாதவிடாய் பிரச்னைகள், கருப்பை மற்றும் கருப்பை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத அந்தக் காலகட்டத்தில் மாதவிடாய் மற்றும் பிரசவத்தின்போது உயிரிழந்தவர்கள் அதிகம்.
அந்தக் காலத்தில் ஆண்கள் கடுமையான விவசாய வேலைகள் செய்தார்கள். இன்று விவசாயத்தில்கூட பல இயந்திரங்கள் வந்துவிட்டன. இன்றைய ஆண்கள் ஆண்ட்ராய்டு போன் வாயிலாக பெண்களை அந்தகால பெண்களோடு ஒப்பிட்டு சொகுசாக அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் பள்ளி செல்லும் காலத்தில் மாதவிடாய் காரணமாக மாதாமாதம் மூன்று, நான்கு நாள்கள் விடுப்பு எடுக்கும் மாணவிகள் உண்டு. காரணம் பள்ளியில் சரியான தண்ணீர் வசதியும், போதிய அளவு கழிப்பறை வசதிகளும் கிடையாது. பல பெண்களின் வீட்டில் புத்தகத்தை தொடுவது தீட்டு என்று அவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். தீட்டு என்னும் பிரச்னையை ஓரளவு எல்லோரும் கடந்து வந்துவிட்டாலும் இன்றும் இந்தியா முழுவதும் நிறைய பள்ளிகளில் போதிய கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி இல்லாததால் அந்த நாள்களில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பது தொடர்கிறது. அதேபோல் பெரும்பாலான பணியிடங்களில் பெண்களுக்கு நாப்கின், தண்ணீர் வசதி மற்றும் சரியான கழிப்பறை வசதி இருப்பதில்லை. நாளொன்றுக்கு பலமுறை நாப்கின் மாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் கழிப்பறை வசதிகள் இல்லாததால் அந்நாள்களில் விடுப்பு எடுக்கிறார்கள். அவ்வாறு விடுப்பு எடுப்பது அவர்களது வருமானத்தை பாதிக்கவும் செய்கிறது.

தினமும் கடைகளில் வேலை செய்யும் விற்பனைப் பெண்களை பார்க்கிறோம். பெரிய மால்கள் அல்லாமல் சிறு வணிக வளாகங்களில் இயங்கும் கடைகளில் பெண்களுக்கு சுத்தமான தனி கழிப்பறைகள் கிடையாது. அதுபோன்று பல மணி நேரம் நின்றுகொண்டே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலி, வயிற்று வலி காரணமாக விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. விடுப்புக்கு அனுமதி இல்லாதபோது அவர்கள் கட்டாயமாக வேலைக்கு வர வேண்டியிருக்கிறது. காலங்காலமாக சாதாரண கடைகளிலும் சிறு நிறுவனங்களிலும் வேலை செய்யும் பெண்கள் விடுப்பு கிடைக்காமல் சிரமப்படும் பலரும் அதன் காரணமாக வேலையை விடுவதும் தொடர்கிறது. ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவர்கள் பொதுவில் பேசுவதில்லை. நிர்வாகத்திடம் இவற்றை கேட்பது நமது உரிமை என்று கூட பெண்களுக்கு புரிவதில்லை.
நடுத்தர வர்க்கம் அல்லது பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் பேசுவதாலேயே அது பிரச்னை இல்லை என்றும், பெண்கள் சொகுசு கேட்கிறார்கள் என்றும் ஆண்கள் கேலி செய்கிறார்கள். இங்கே எது ஒன்றையும் முதலில் வாய்ப்பு இருப்பவர்கள்தான் பேச வேண்டும். தங்களுடைய உரிமைகளை வெளியில் பேசும் சுதந்திரமும் வாய்ப்பும் சமூக வலைதளங்களில் இயங்கும் பெண்களுக்கு அதிகம் இருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் எதுவானாலும் அதை உயர்மட்டத்தில் இருக்கும் பெண்கள் பேசும்போதுதான் நாடு முழுவதும் அது குறைந்தபட்சம் சர்ச்சையாகவாவது எதிரொலிக்கும். அதனை தொடர்ந்து எல்லா தரப்பு மக்களிடையேயும் விரிவான உரையாடல்களை துவங்கும்.
‘’கர்ப்பப்பை பெண்ணின் உரிமை, குழந்தை பெற்றுக் கொள்வதை ஒரு பெண்தான் தான் தீர்மானிக்க வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்வதை புனிதப்படுத்துவது பெண்களை அடிமையாக்கும்” என்று தொடர்ந்து முற்போக்காளர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இன்னொருபுறம் நடுத்தர குடும்பத்தினர் குழந்தை பெற்றுக் கொள்வதை மேலும் புனிதமாகவும், கொண்டாட்டமாகவும் அணுகத் தொடங்கி இருக்கின்றனர்.

சாரா'ஸ் (Sara’s) என்றொரு மலையாள திரைப்படம் சமீபத்தில் வந்திருக்கிறது. ஒருபுறம் படத்துக்கு பெண்கள் பக்கம் இருந்து தீவிர ஆதரவு இருந்தாலும் எப்போதும்போல் பெரும்பாலான ஆண்கள் அதை ஒரு பிரச்னைக்குரிய விஷயமாகவே அணுகுகிறார்கள்.
குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பம் இல்லாத ஒரு பெண்ணும் அதேபோன்ற மனநிலையில் இருக்கும் ஒரு ஆணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் திடீரென எதிர்பாராதவிதமாக கர்ப்பமாகிறாள். உதவி இயக்குநராக பணிபுரிந்து அதிக முயற்சிக்கு பிறகு இயக்குனராகும் வாய்ப்பு வந்த போது கர்ப்பம் ஏற்பட்டதால் அவள் அந்த கருவை கலைக்க விரும்புகிறாள். ஆனால் அதற்குள் அவள் கர்ப்பமடைந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்துவிட அவளது மாமியாரும் பெற்றோர்களும் அந்த கர்ப்பத்தை கொண்டாடுகிறார்கள். அவள் கலைக்க வேண்டும் என்று முடிவெடுக்கும்போது அதை எதிர்க்கிறார்கள். ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை அவளுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை முன்னிறுத்தியே இப்படம் வெளியாகி இருக்கிறது.
ஆனால், இப்படம் பேசியிருக்கும் இன்னொரு விஷயம் மிக முக்கியமானது. கதாநாயகி சாராவிற்கு சிறுவயது முதலே குழந்தைகள் என்றால் ஒரு ஒவ்வாமை இருக்கிறது. குழந்தைகளை தொந்தரவாக பார்க்கிறாள். பள்ளிக்காலத்தில் இருந்தே குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பம் இல்லாதவளாக இருக்கிறாள். நம் குடும்பங்களில் குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் விருப்பம் இல்லை என்றோ, சிரமமாக இருக்கிறது என்றோ ஆண்களால் சிரித்துக்கொண்டே வெளிப்படையாக சொல்வது போல் பெண்கள் சொல்ல முடியாது. குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம் என்பதை இவ்வளவு வெளிப்படையாக பேசும் முதல் படம் அநேகமாக இதுவாக இருக்கலாம்.

குழந்தை பெற்றுக் கொள்வது வாழ்வின் பெரும் மகிழ்வுகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது. ஆனால், குழந்தை பெற்றுக் கொள்ளாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பது போன்ற சூழ்நிலையை தற்போது Fertility Clinic விளம்பரங்கள் கட்டமைக்கின்றன. அதேபோல் கர்ப்பம் தொடங்கிய முதல் நாளில் இருந்து குழந்தைகளுக்கு 5 வயது ஆகும் வரையிலும்கூட இந்த இந்த காலகட்டத்தில் இதை உடுத்த வேண்டும், இதை உண்ண வேண்டும், இந்த பாடல் கேட்க வேண்டும், வயிற்றில் இருக்கும் குழந்தைகளிடம் இப்படி பேச வேண்டும் என்று வாழ்வில் இயல்பாக நடக்க வேண்டிய சாதாரண விஷயங்கள்கூட இன்று சந்தையில் வியாபார பொருளாக மாறியிருக்கின்றன. மேலும் கர்ப்ப காலம் மற்றும் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளாக்கி ‘மெமரீஸ்’ உருவாக்குவது என குறைந்தபட்சம் 5-6 ஆண்டுகள் பெண்களின் வாழ்வு குழந்தை பேறு மற்றும் குழந்தைகளை சுற்றியே இயங்குகிறது.
இந்த வாழ்க்கை முறைக்கு மாறிய நடுத்தர குடும்பத்து பெண்கள் பலரும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக வேலையை விட வேண்டிய தேவை இருக்கிறது. அதை பெண்களே விரும்பியும் செய்கிறார்கள். ஒரு பக்கம் அப்படி வேலையை விடும் பெண்கள் ஒரு கட்டத்திற்கு மேல் குழந்தைகள் சிறிது வளர்ந்த பிறகு மீண்டும் வேலையை தொடர பலருக்கும் வாய்ப்பில்லாமல் போகிறது.

பெண்களை எதைப் பற்றியும் சிந்தித்து முடிவு எடுக்கவிடாமல் கர்ப்ப காலத்தை பெண்களின் பெற்றோர்களும், கணவரின் பெற்றோர்களும் கொண்டாடும் ஒரு சூழ்நிலை தற்போது உருவாகி வருகிறது. ஒரு பக்கம் இவையெல்லாம் மகிழ்ச்சி என்றாலும் குழந்தை பெற்றுக் கொள்ள தன்னுடைய உடலும் மனமும் தயாராக இருக்கிறதா என்று ஒரு பெண் சிந்திக்க முடியாத அளவு அவளை இந்த அக்கறை மற்றும் அன்பு கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செய்கிறது.
மக்கள் வாழ்க்கையை எப்போதும் கொண்டாட்டமாக வைத்துக் கொள்ள விரும்புவது நல்ல விஷயம் தான். ஆனால் அந்த கொண்டாட்டங்கள் பெண்ணடிமைத் தனங்களை புனிதப்படுத்துவதன் மூலம் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கக்கூடாது!