
இசையாலும் இணைந்தோம்
சென்னை மேற்கு மாம்பலத்தில்தான் வீடு. அதனாலேயே மூன்று சகோதரிகளும் `மாம்பலம் சகோதரிகள்’ ஆகிவிட் டார்கள். மூத்தவர் விஜயலட்சுமியும் இளையவர் சித்ராவும் பாடகிகள். கடைக்குட்டி ஹேமலதா வயலின் கலைஞர். கச்சேரிகளில் மூவருமே இணைந்து பணியாற்றுவதும், சமீபத்தில் ஒரே மேடையில் மூவரும் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றதும், முன்னுதாரணமான இவர்களின் கூட்டுக்குடும்ப வாழ்க்கையும் கூடுதல் சிறப்பு!
``புகழ்பெற்ற கஞ்சிரா வித்வான் கே.எஸ்.ரங்காச்சாரி எங்க அப்பா. தாத்தாவின் மறைவால், அப்பாவுக்குக் குடும்ப பாரத்தைச் சுமக்கவேண்டிய நிலை. அதனால் ஒன்பது வயசுல தடைப்பட இசைப்பயணத்தை, பத்து வருடங்களுக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்ததும் மீண்டும் தொடர்ந்தார். 50 வயசு வரை வேலைக்குச் சென்றுகொண்டும், பிறகு முழுநேரமாகவும் பல ஆயிரம் கச்சேரிகளில் பணியாற்றினார்.
கர்னாடக இசைப் பாடகியான அம்மாவால் தொடர்ந்து இசைத்துறையில கவனம் செலுத்த முடியலை. அதனாலேயே கர்னாடக இசையில் நாலு பிள்ளைகளும் புகழ்பெறணும்னு அப்பாவும் அம்மாவும் ஆசைப்பட்டாங்க. காலை எழுந்ததுமே இசைப் பயிற்சி, ரேடியோவில் இசைக் கேட்பது, கச்சேரிகளில் பார்வையாளர்களாகக் கலந்துகிறது, இசை வகுப்புக்குப் போறதுன்னு இசை சார்ந்தே அதிகம் பயணிச்சோம். நானும் தங்கை சித்ராவும் பாடகிகளா கவனம் செலுத்தினோம். தனி அடையாளத்துக்காக, தம்பி ஸ்ரீநிவாசன் மிருதங்கமும் தங்கை ஹேமலதா வயலினும் கத்துகிட்டாங்க. சுகுணா வரதாச்சாரி உட்பட பல குருக்களிடம் முறைப்படி இசைக் கத்துகிட்டோம்” என்று தங்கள் இசைப்பயணம் குறித்த முன்கதையைச் சுருக்கமாகச் சொன்ன விஜயலட்சுமியும் சித்ரா வும் கலைமகளைப் போற்றும் கீர்த்தனை ஒன்றில் சில வரிகளைப்பாட, ஹேமலதா வயலின் இசைக்க, இசையால் நிறைந்தது அந்த இடமும் நம் இதயமும்.
அக்காக்களின் கச்சேரிகளில் பிரதான வயலின் கலைஞரான ஹேமலதா, ``படிப்பிலும் டாப்பரான அக்காக்கள் இருவரும், டிகிரி முடிச்சுட்டு இசைத்துறைதான் எதிர்காலம்னு முடிவெடுத்தாங்க. படிப்பில் அதிக கவனம் செலுத்தியதால, அண்ணனால் இசைத் துறையில கவனம்செலுத்த முடியலை. எனக்குப் படிப்பில் அதிக நாட்டமில்லாததால, பி.ஏ மியூசிக் படிச்சேன். பிறகு, ஈடுபாட்டுடன் வயலின் இசையில் புலமை பெற்றேன். எங்க இசைப் பயணத்துக்கு உதவணும்; அடிக்கடி பணிமாறுதல் ஏற்படுகிற உத்தியோகத்துல இருக்கக் கூடாது; வீட்டுக்கு அருகிலேயே இருக்கணும்னு பல ஆண்டுகள் மெனக்கெட்டு, எங்க மூவருக்கும் அடுத்தடுத்து அப்பா கல்யாணம் செய்துவெச்சார். அதன்பிறகு எங்களின் இசை ஞானம் பெரிசா வளர்ந்துச்சு.
மூவரும் இணைந்து இந்தியா மற்றும் வெளி நாடுகளில், 2,500-க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பணியாற்றியிருக்கோம். தனிப்பட்ட முறையில கர்னாடக இசைப் பாடகர்களின் கச்சேரிகளிலும் நான் வயலின் வாசிக்கிறேன். அக்காக்களின் சில கச்சேரிகளில் மட்டும் பாடியிருக்கேன். ரெண்டு அக்காக்களும் இந்த வீட்டில் மேல், கீழ் போர்ஷன்ல வசிக்கிறாங்க. சமீபத்துலதான் இந்தப் பகுதியிலிருந்து நான் சைதாப்பேட்டைக்குக் குடியேறினேன். தினமும் யாராச்சும் ஒருத்தர் வீட்டுலதான் மூவரும் பயிற்சி எடுப்போம். சேர்ந்தே கச்சேரிக்குப் பயணம் செய்வோம். பயிற்சி நேரம், கச்சேரிகளில் பாடிய விதம்னு கலைஞர்களுக்கே உண்டான முறையில் நிறைய ஆரோக்கியமான சண்டைகள் போடுவோம். ஆனா, எதுக்காகவும் எங்களுடைய பாசத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்கிறவர், முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
மூவரின் இசைப்பயணத்துக்கும் கணவர்கள் கொடுக்கும் ஊக்கம் பாராட்டுக்குரியது. ``அக்காவின் கணவர் தனியார் நிறுவனத்துல ஜெனரல் மேனேஜர். என் கணவர் பிசினஸ் மேன். தங்கையின் கணவர், பேராசிரியர்னு மூவரின் கணவர்களும் நல்ல நிலையில் இருக்காங்க. மனைவிகள் புகழ்பெறணும்னு வீட்டு வேலைகளில் உதவியா இருக்கிற கணவர்கள், சபாக்களிலும் கைதட்டி எங்களை ஊக்குவிப்பாங்க. மூவருமே எங்களைவிடச் சிறப்பா சமைப்பாங்க. நாங்க கச்சேரிகளுக்காக வெளியூர் போகும்போதெல்லாம் பிள்ளைகளை அவங்கதான் பார்த்துப்பாங்க. வீட்டில் நாங்க பயிற்சியில இருந்தாலும், எங்களுக்குச் சமைச்சுக் கொடுப்பாங்க. ஒருபோதும் ஆண் பெண் பேதம் பார்க்க மாட்டாங்க. திருமண வாழ்க்கைக்குப் பிறகு கனவுகளைத் தொலைச்சுட்டு வருத்தப்படற பெண்களுக்கு மத்தியில, 30 ஆண்டுகளுக்கும் மேல் இசைத்துறையில நாங்க பணியாற்ற எங்க கணவர்களின் ஊக்கம் அளப்பரியது” என்கிற சித்ராவின் பேச்சு, அப்பாவின் மீது திரும்பியது....

``இதே தெருவுல தனியா வசிக்கிற பெற்றோரை, மூவரும் தினமும் சந்திச்சிடுவோம். அப்பாவுக்கு 85 வயசாகிடுச்சு. போன வருஷம் வரை, நாங்க மூவரும் பங்குபெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகள்ல அப்பா கஞ்சிரா வாசிச்சிருக்கார். சபாக்களில் எங்க மூவருக்கும் பாராட்டுகள் கிடைக்க, எங்க பின்னாடி கஞ்சிரா வாசிச்சவாறு பெருமைப்படுவார். `பெண் குழந்தைப் பிறந்தாலே வருத்தப்படுற பெற்றோர்களுக்கு நடுவுல, மூணு பெண் குழந்தைகளையும் நல்ல நிலைக்குக் கொண்டுவந்துட்டீங்களே’ன்னு பலரும் பெற்றோரைப் பாராட்டுவாங்க. இப்போவரை அப்பாதான் எங்களின் மேனேஜர். பேரக் குழந்தைகளுக்கும் அவர்தான் முதல் இசை குரு. குறிப்பா, நாங்க பயணம் போகும்போதெல்லாம் எங்க பிள்ளை களை வளர்த்ததில் அம்மா மற்றும் என் தம்பி மனைவியின் பங்களிப்பு அதிகம் இருந்திருக்கு. இந்தக் கொடுப்பினை எத்தனை பெண்களுக்குக் கிடைக்கும்?” என்கிறார் சித்ரா நெகிழ்ச்சியாக.
``படிப்போடு இசை, நடனம்னு ஏதாவதொரு கலையில குழந்தைகள் ஆர்வம் செலுத்தினால், மன அழுத்தம், தவறான எண்ணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். எங்களைப்போல, பிள்ளைகளும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் எங்க குடும்பத்தின் பலம். நால்வரின் பிள்ளைகளும் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்தினாலும், அவங்களுக்கு இசை சொல்லிக்கொடுத்து நல் ஒழுக்கத்தை விதைச்சுட்டோம்” என்று பூரிப்புடன் மூன்று சகோதரிகளும் கூற, உரையாடல் நிறைவுபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நவராத்திரி பூஜையில் மூவரும் கச்சேரியைத் தொடங்கினர். அழகிய கொலுவும் இவர்களின் இசையும் அந்தச் சூழலுக்கு இனிமையையும் மற்றும் நிறைவையும் அளித்தது.
எம்.எஸ். அம்மாவின் ஆசீர்வாதம்!
``எங்க கச்சேரிப் பயணம் தொடங்கிய காலகட்டம். ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்துகிட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா, `நேத்து ஆல் இண்டியா ரேடியோவுல நீங்க ரெண்டு பேரும்தானே பாடினீங்க? உங்க பாடலைக் கேட்டு ரசிச்சேன். ரொம்ப நல்லாயிருந்துச்சு’ன்னு என்னுடைய மற்றும் தங்கை சித்ராவின் கைகளைப் பிடிச்சுக்கிட்டு மனதாரப் பாராட்ட, நெகிழ்ந்துபோயிட்டோம். தங்கை ஹேமலதாவின் வயலின் இசையையும் சுப்புலட்சுமி அம்மா பலமுறை பாராட்டியிருக்காங்க. ஒருமுறை நாங்க அம்மாவின் வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போ, அவர் முன் தரையில உட்கார்ந்து அம்மா பாடிய சில பாடல்களைத் தங்கையும் நானும் பாட, ஹேமலதா வயலின் வாசிச்சாங்க. மகிழ்ச்சியில் மூவரையும் பாராட்டிப் பேசி ஆசீர்வதிச்சாங்க” என்கிறார் விஜயலட்சுமி.