ஜனவரி மாதம் என்றால் பொங்கல், பிப்ரவரி மாதம் என்றால் காதல்... இப்படி ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதுபோல ஆட்டம், பாட்டு, பதற்றம் என்று எதற்கும் குறைவில்லாத மாதம் தான் மே.
'இந்த லீவுக்கு எங்க போனோம் தெரியுமா?', 'எப்படி விளையாடுனோம் தெரியுமா?' என்ற சரித்திர கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் குட்டி ஸ்டோரீஸ் இதோ...

என்னதான் ஏப்ரலிலேயே லீவு விட்டாலும், முழுமையான லீவு இருக்கும் ஒரு மாதம் என்றால் அது மே மாதம் தான். அரசு விடுமுறை எதுவும் இல்லாத மாதமும் இதுதான் என்பது கூடுதல் சிறப்பு. சம்மர் கேம்ப்பில் பலரும், பாட்டி வீட்டில் சிலரும், வீட்டிலேயே சிலரும் இருப்பார்கள்.
எங்கே இருந்தாலும் இவர்கள் மே மாதம் வெயிலில் இருந்து தப்பிக்கவே முடியாது. வெயில் மண்டையைப் பிளந்தாலும்கூட விளையாட்டு மட்டும் நிற்கவே நிற்காது. 'இப்போலாம் யாரு வெயில்ல விளையாடுறாங்க' என்று நினைக்கலாம். இப்போதும் குழந்தைகள் வெயிலில் விளையாடத்தான் செய்கிறார்கள். 90'ஸ் கிட்ஸ் போல கோலி, பச்சை குதிரை, கில்லி என்று இல்லாமல், சைக்கிள், கிரிக்கெட் போன்றவற்றை விளையாடுகிறார்கள்.
மே மாதம் நடுவில் அனைத்து மாணவர்களுக்கு பரீட்சை ரிசல்ட் வரும். ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை அதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் அலைய, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை 'ஆல் பாஸ்' என்று தெரிந்து காலரை தூக்கிக்கொண்டு சுற்ற, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் நகத்தைக் கடித்துக்கொண்டு சுற்றுவார்கள்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சை ரிசல்ட் வந்தவுடன் `பயோ-மேக்ஸா? கம்ப்யூட்டர் சயின்ஸா? அக்கவுன்ட்ஸா? என்ற கேள்வியும், பதற்றமும் வந்துவிடும். பெரும்பாலும் 450-க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் பயோ-மேக்ஸ் குரூப்பைத்தான் எடுப்பார்கள். இது எழுதப்படாத விதி என்றே கூறலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களோ 'என்ன படிக்கலாம்?', 'எங்கே படிக்கலாம்?' என்று தேடவும், ஓடவும் ஆரம்பித்துவிடுவார்கள்.

நாங்க மட்டும் என்ன சும்மாவா? என்று பிற வகுப்பு மாணவர்களுக்கும் பதற்றம் இருந்தே தீரும். ஆனால் இவர்களது பதற்றம் வேறு ரகம். புதிய புத்தகங்களுக்கும், நோட்டுகளுக்கும் பிரவுன் ஷீட் போடவேண்டும், லேபிள் ஒட்ட வேண்டும், பென்சில் பாக்ஸ், பேக், லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் வாங்க வேண்டும்...அப்பப்பா ஏகப்பட்ட பதற்றங்கள்.
இவற்றைத் தவிர மே மாதத்தில் வேறு எதுவும் இல்லையா என்றால் ஏன் இல்லை..... இந்த லீவில் நிச்சயம் குடும்பத்துடன் ஒரு குட்டி டூர் அல்லது பாட்டி வீட்டு டூர் இருக்கும். ஓரிரு படத்திற்கு குடும்பத்துடன் தியேட்டருக்காவது சென்றிருப்போம்.
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் கரன்ட் போகும் என்பது பெரிய குற்றச்சாட்டாக இருந்தாலும், அது குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். இரவாகியும் வீட்டுக்கு வராமல் வெயிலில் விளையாடி களைத்திருக்கும் பிள்ளைகளை அம்மாக்கள் அதட்டியும், மிரட்டியும், உருட்டியும் வீட்டுக்கு கூட்டி வந்திருப்பார்கள்.
அப்போது போகும் கரன்டுக்கும், குழந்தைகள் கோரஸாக கத்தும் 'ஹே...'-க்கும் ஒரு தனி மவுசு தான். கரன்ட் போன அடுத்த கணமே குழந்தைகள் நிலா வெளிச்சத்தில் மீண்டும் தெருவில் விளையாடத் தொடங்கியிருப்பார்கள். 'அப்பா வந்துருவாரு', 'அப்பாகிட்ட சொல்லிருவேன்' என்று குழந்தைகளை அம்மாக்கள் மீண்டும் அழைத்துச்செல்வது தனியொரு போராட்டக் கதை.

உச்சி வெயிலில் வரும் ஐஸ்கார அண்ணனின் வண்டி மணி சத்தம் மிகப்பெரிய வரப்பிரசாதம். 90'ஸ் கிட்ஸுக்கு குச்சி ஐஸ், கோன் ஐஸ், சேமியா ஐஸ் பஞ்சாமிர்தம் என்றால், 2கே கிட்ஸ்க்கு சாக்கோ பார், பட்டர்ஸ்காட்ச், ப்ளூபெர்ரி தேவாமிர்தம். குழந்தைகளுக்குப் புதிய துணிகள் கூடுதல் அழகு சேர்க்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் மண்ணில் விழுந்து அழுக்கான துணிகள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும்.
'பாத்து விளையாடணும், விழுந்திரக்கூடாது' என்று கூறும் அம்மாக்களின் அன்பும், அப்பாக்களின் கண்டிப்பும் விளையாட்டு களத்தில் செல்லுபடியாகாது. ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு லீவிலும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது விழுந்திருப்பார்கள். அதை என்றுமே நினைவில் ஏந்திக்கொண்டே இருப்பார்கள்.
லீவு விட்டதுமே ஒவ்வொரு பிஸ்கட் கம்பெனிகளும் மாற்றி மாற்றி இலவசங்களை அறிவிப்பார்கள். இந்த இலவசங்களை வாங்கி நண்பனிடம் காட்டத்தான் பல பிஸ்கட் பாக்கெட்டுகள் விற்பனை ஆகும். கையில் வாட்ச் போல சுருளும் ஸ்கேல், 3டி ஸ்கேல் மற்றும் லேபிள், கண்ணாடி பவுல்கள், ஸ்டிக்கர்...இவை அனைத்தும் 90'ஸ் கிட்ஸ் ஓடி ஓடி பிஸ்கட் வாங்கிச் சேர்த்த பொக்கிஷங்கள். இப்படி இலவசமாகக் கிடைத்த ஸ்டிக்கர்கள் இன்னும் பல வீடுகளின் பீரோக்களிலேயோ, டிவியிலேயோ சிரித்துக்கொண்டிருக்கும்.
'உங்களுக்கெல்லாம் கால் வலிக்குமா, வலிக்காதா?', 'வெய்யில்ல அலைஞ்சு அலைஞ்சு கருத்து போயிட்ட', 'லீவு விட்டாலும் விட்டாங்க, கைலேயே புடிக்க முடியல', 'எப்போ தான் ஸ்கூல் திறப்பாங்களோ?'...போன்ற அம்மாக்களின் டயலாக்குகள் இல்லாத லீவே கிடையாது என்று அடித்துக் கூறலாம்.

'கிரிக்கெட் விளையாடி ஜன்னலை உடைத்தது யார்?', 'யார் உன்னை தள்ளி விட்டாங்க?', 'வாலு ஏதாவது முளைச்சிருக்கா என்ன?', 'அப்படி என்னதான் விளையாடுவீங்களோ?', 'உங்களுக்கெல்லாம் அலுக்கவே அலுக்காதா?'...என்ற நீள்கின்ற கேள்விகளுக்கு எந்த லீவிலும் விடை கிடைத்ததாக சரித்திரமே இல்லை.
இப்படி ஆடி, பாடி, ஓடி, விளையாடி, கூத்தடித்தாலும் மே மாதம் இறுதியில் ஒரு பக்கம் இன்னும் கொஞ்ச நாளுக்கு லீவை நீட்டிக்க மாட்டங்களா என்ற ஏக்கமும், அய்யய்யோ ஸ்கூலுக்கு போகணுமே என்ற மெல்லிய பயமும் எட்டிப் பார்ப்பதைத் தடுக்கவே முடியாது.
என்ன இது 90'ஸ் கிட்ஸ் ரீவைண்டா என்று நினைக்காதீர்கள். இன்றும், என்றும் எங்கேயாவது ஒரு மூலையிலும், முடுக்குகளிலும் இப்படி விடுமுறையைக் கொண்டாடுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.