Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 6 | `சில்வர்லைன்’ மருத்துவமனை திருச்சியில் வேரூன்றிய கதை!

“சென்னையில என்ன மாதிரியான சிகிச்சைகள் கிடைக்குமோ அதை திருச்சியில உருவாக்கணும்னு நினைச்சேன்!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எம்பிபிஎஸ் படிக்கும் காலத்திலேயே திருச்சியில் தங்கி மருத்துவசேவை செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் மருத்துவர் செந்தில்குமார்.

பிறந்தது மன்னார்குடியில்... திருச்சியை ஏன் தேர்வு செஞ்சீங்க? என்று கேட்டால் "சென்னை மாதிரி பெருநகரங்கள்ல பரவலா மருத்துவ சேவை கிடைச்சிரும். சென்னையில என்ன மாதிரியான சிகிச்சைகள் கிடைக்குமோ அதை திருச்சியில உருவாக்கணும்னு நினைச்சேன்" என்று புன்னகைக்கிறார் செந்தில்.

மருத்துவர் செந்தில்குமார்
மருத்துவர் செந்தில்குமார்
DIXITH

புற்றுநோய் மருத்துவத்தில் மும்முனை சிகிச்சை என்று ஒன்று உண்டு. அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை, கதீர்வீச்சு சிகிச்சை... இது மூன்றுக்குமே தனித்தனி மருத்துவர்கள் இருக்கிறார்கள். நோயின் தன்மையைப் பொறுத்து இதில் ஒன்றோ அல்லது மூன்றுமோகூட தேவைப்படலாம். அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் இந்த மூன்று சிகிச்சைகளையும் வழங்கும் மருத்துவர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் சென்னை தவிர்த்த நகரங்களில் இந்த மூன்றும் ஒரே இடத்தில் கிடைக்காது. அதனால் நோயின் துயரத்தை அனுபவித்துக்கொண்டே மருத்துவமனை, மருத்துவமனையாக அலைவார்கள் மக்கள்.

2009-ல் சில்வர்லைன் மருத்துவமனையை ஆரம்பித்தபோதே செந்தில் மும்முனை மருத்துவத்தை ஒரே இடத்தில் வழங்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார். அடுத்த சில வருடங்களில் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் படித்த நண்பர்களை அழைத்து வந்து மும்முனை மருத்துவ வசதியை உருவாக்கிவிட்டார். பாதிக்கப்பட்டவர்களை மூன்று மருத்துவர்களும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் அமர்ந்து சோதிப்பார்கள். என்னென்ன சிகிச்சை தேவை என்பதை அப்போதே விவாதித்து, தீர்மானித்து சிகிச்சையை தாமதமின்றி தொடங்கிவிடுவார்கள்.

"சில நேரங்களில் மிகவும் சிக்கலான தன்மையோடு வருவார்கள். அல்லது வேறு இடத்தில் அறுவை சிகிச்சை முடித்து சரியாகாமல் வருவார்கள். இப்படியான நேரத்தில் நாங்கள் மூவரும் அமர்ந்து ஆலோசித்து சிகிச்சையைத் தீர்மானிப்போம். உயிர்காக்கும் மருத்துவ விஷயத்தில் ஒரு தனி மூளை மட்டும் முடிவெடுப்பதைவிட, மூன்று மூளைகள் சேர்ந்து சிந்தித்து முடிவெடுப்பது நோயாளியின் நலனுக்கு நல்லது..." என்கிறார் செந்தில்.

மருத்துவர் செந்தில்குமார்
மருத்துவர் செந்தில்குமார்
DIXITH

கேன்சர் சிகிச்சை என்பது மிகவும் சிக்கலானது. உயிர் காப்பது ஒன்றுதான் இலக்கு என்பதால் சில உறுப்புகளை நீக்க வேண்டியிருக்கும். நாக்கில் கேன்சர் வந்தால், நாக்கில் பாதியை எடுக்க வேண்டியிருக்கும். பேசமுடியுமா தெரியாது. குரல்வளையில் கேன்சர் வந்தால் குரலே வராமல் போய்விடும். வாயை அசைப்பார்கள், சத்தம் வராது. இதுபற்றியெல்லாம் நோயாளிக்கும் குடும்பத்தாருக்கும் தெளிவாக விளக்கவேண்டும். அதை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆற்றுப்படுத்த வேண்டும். இதற்கெல்லாம் தன் மருத்துவமனையில் ஏற்பாடுகள் வைத்திருக்கிறார் செந்தில்.

இதற்கென முதுநிலை சமூகப்பணியியல் படித்த சமூக பணியாளர்களை பணியமர்த்தியிருக்கிறார். அவர்கள் பயிற்சி அளிப்பார்கள். அறுவை சிகிச்சை முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர்களை அழைத்து வந்து பிற நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டுவார்கள். உறுப்புகளை இழந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை உருவாக்கித் தருவார்கள். அறுவை சிகிச்சைக்குப் பின் என்ன நடக்கும் என்பதை குணமடைந்தவர்கள் மூலம் சொல்லச் செய்வார்கள். சிகிச்சை முடிந்தவர்களை ஒரு அமைப்பாக இணைத்து தொடர்ந்து அவர்களின் நல்வாழ்வுக்கான பணிகளையும் செய்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆசிரியர்கள்தான் ஒருவரின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள். அவர்கள் சொல்கிற ஒரு வார்த்தை அப்படியே நம் மனதில் பதிந்து வழிநடத்தத் தொடங்கிவிடும். திரும்பிப் பார்த்தால் நம்மையறியாமல் நாம் அந்த வார்த்தை காட்டிய வழியில் வெகுதொலைவு கடந்து வந்திருப்போம். அப்படி தன் வாழ்க்கையை மாற்றிய ஆசிரியராக மருத்துவர் செந்தில் குறிப்பிடுவது எம்.எஸ் படிக்கும்போது தனது ஆசிரியராக இருந்த டாக்டர் ராமநாதனை. நோயாளியை அணுகும் விதமாகட்டும், மாணவர்களை கையாள்வதாகட்டும், தனித்தன்மை மிக்க மனிதர் அவர் என்கிறார் செந்தில்.

சில்வர்லைன் மருத்துவமனை
சில்வர்லைன் மருத்துவமனை
DIXITH

"புற்றுநோய்ப் பிரிவில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் டாக்டர் மோகன் பிரசாத். மதுரையில் நான் படித்தபோது பேராசிரியராக இருந்தார். அடையாறில் இன்ஸ்டிடியூட் ஆரம்பித்தபோது சேர்ந்த முதல் பேட்ச் அவர். அவரைப் பார்த்துதான் நான் அடையாறு சென்றேன். அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் எம்சி.ஹெச் படிப்பதென்பது சாதாரணமில்லை. இதற்கு தனி நுழைவுத்தேர்வு உண்டு. அகில இந்திய அளவில் நடக்கும். நிறைய மருத்துவர்கள் எழுதுவார்கள். மொத்தம் மூன்றே சீட்கள்தான். 4 ஆண்டுகள் முயற்சி செய்து மூன்று பேரில் ஒருவனாக வந்தேன்..." என்கிற செந்தில்,

"அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் டாக்டர் சாந்தா, டாக்டர் ரவிக்கண்ணன், டாக்டர் அய்யப்பன், டாக்டர் விகாஷ் மகாஜன், டாக்டர் சி.எஸ் மணின்னு நிறைய ஆளுமைகள் இருந்தார்கள். அவர்கள் எதையும் கற்றுத்தரமாட்டார்கள். அவர்களைப் பார்த்து நாம்தான் கற்றுக்கொள்ளவேண்டும். ஒருகட்டத்தில் அவர்களாகவே மாறிவிடுவோம். அதுதான் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது. மருத்துவத்தை மட்டுமின்றி, ஒரு மருத்துவர் எந்தளவுக்கு மனிதநேயத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவர்களைப் பார்த்துத்தான் நான் கற்றுக்கொண்டேன்..." என்கிறார்.

தனியார் மருத்துவமனைகள் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு, எதற்கெடுத்தாலும் டெஸ்ட் எடுக்கச் சொல்வார்கள் என்பதுதான். நோயுற்றவர்களை மிரளவைப்பது அதுதான். அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டைப் பொறுத்தவரை ஒரு டெஸ்ட் எடுத்தால் நோயின் தன்மையை மாற்றமுடியும் என்றால் மட்டுமே டெஸ்ட் எடுக்கச் சொல்வார்கள். அந்த இன்ஸ்டிடியூட்டின் மாணவர் செந்திலும் அதையே ஃபாலோ செய்கிறார்.

புற்றுநோய் எப்படி வருகிறது என்பது புதிராகவே இருக்கிறது. எந்தவிதமான கெட்ட பழக்கமுமே இல்லாத, ஆரோக்கியத்தில் அதீத கவனம் செலுத்துகிற, சத்தான ஆகாரங்களைத் தேடித்தேடிச் சாப்பிடுகிற சிலரேகூட புற்றுநோய்க்கு இலக்காகிறார்கள். ஏன் இந்த நிலை?
சில்வர்லைன் மருத்துவமனை
சில்வர்லைன் மருத்துவமனை
DIXITH

"மரபணு மூலமாக புற்றுநோய் வருவதென்பது 5 முதல் 10 சதவிகிதம்தான். 80 முதல் 90 சதவிகிதம் நம் வாழ்க்கைமுறை மாற்றம்தான் காரணம். குறிப்பாக, உடல் பருமன், நாம் சாப்பிடும் உணவுகள், கலப்படங்கள், ரசாயனங்களை உணவுப்பொருள்களில் பயன்படுத்துதல், தவறான பழக்கங்களுக்கு அடிமையாதல் போன்ற காரணங்களைச் சொல்லலாம். 'பழங்கள் சாப்பிடுங்கள், நல்லது' என்பார்கள். ஆனால், கார்பைட் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு தார் வாழைப்பழத்தை இயற்கையாகப் பழுக்க வைத்தால் இரண்டு சீப்பு பழுத்து மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும். நான்கு சீப்பு காயாக பச்சை நிறத்தில் இருக்கும். இப்போது மொத்த வாழைத்தாருமே மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. தோலைப் பிரித்துப் பார்த்தால் காயாக இருக்கிறது. நம் வாழ்க்கைமுறையின் இயற்கைத்தன்மை மாறியதும் நம் உணவுப்பழக்கம் மாறியதுமே புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணம்" என்கிறார் செந்தில்.

நல்லுணவு, அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை, போதுமான உறக்கம்... நோயற்ற வாழ்க்கைக்கு இவைதான் ஆதாரம். செந்தில் நல்லுணவுக்காக வீட்டில் மாடித்தோட்டம் போட்டிருக்கிறார். தன் பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் தினமும் அதிகாலை இரண்டு மணி நேரம் அதற்கென ஒதுக்குகிறார். "வெறும் வார்த்தையால் மற்றவர்களுக்கு புத்திமதி சொல்வது எளிது. வாழ்ந்து காட்டுவது நல்ல விளைவைத்தரும்..." என்று சிரிக்கிறார் செந்தில்குமார்.

அடுத்தவாரம் செந்தில்குமாரின் மாடித்தோட்டத்தைப் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு