Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 7 | `சில்வர்லைன்’ கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைமுறை!

செந்தில் குமாரின் மாடித் தோட்டம்
செந்தில் குமாரின் மாடித் தோட்டம்

தன் மருத்துவமனையில் மிக முக்கியத்தேவைகள், மருத்துவ அவசியங்களைத் தவிர வேறெதற்காகவும் பிளாஸ்டிக்கை அனுமதிப்பதில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிளாஸ்டிக் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கிறது. காலையில் பல் துலக்கும் பசையிலிருந்து இரவு படுக்கும் முன் நாம் அருந்துகிற பால்வரை எல்லாவற்றிலும் எண்ணற்ற ரசாயனங்கள் நம் உடலுக்குள் செல்கின்றன. கிராமங்களில் கொதிக்கும் டீயைக்கூட பாலிதீன் பையில் கட்டித்தருகிறார்கள். சாப்பாடு வாங்கப்போனால் சாம்பாரியிலிருந்து ரசம் வரைக்கும் பாலிதின் பையில்தான் பேக் செய்து தருகிறார்கள். இதுபற்றி விழிப்புணர்வூட்டவும் தடுக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனாலும் மக்கள் மாறவில்லை.

செந்தில்குமார் பாலீதின், புகைப்பழக்கம் போன்றவற்றைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார். தன் மருத்துவமனையில் மிக முக்கியத்தேவைகள், மருத்துவ அவசியங்களைத் தவிர வேறெதற்காகவும் பிளாஸ்டிக்கை அனுமதிப்பதில்லை.

சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
DIXITH

மருத்துமனையில் டிபன் கேரியர்கள், தூக்குப் பாத்திரங்கள் ஏராளம் வாங்கி வைத்திருக்கிறார். உள்நோயாளிகள் அவற்றைப் பெற்று சாப்பாடு வாங்கவோ, டீ வாங்கவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

"நாம் இந்தச் சூழலில்தான் வாழ்ந்தாக வேண்டும். எல்லாவற்றுக்கும் இங்கே வாய்ப்புண்டு. சுயவிழிப்புணர்வோடு வாழ்ந்தால் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். எதையெல்லாம் நம்மால் செய்துகொள்ள முடியுமோ அதையெல்லாம் நாம் செய்யலாம். குறைந்தது, நல்ல காய்கறிகளை நாமே நம் வீட்டில் உற்பத்தி செய்துகொள்ளலாம். வீட்டுக்கருகில் இருக்கும் சிறிய இடத்தில் கீரைகளை, காய்கறிகளை விளைவிக்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் செலவிட்டால் போதும்... உளவியலாக மனமும் புத்துணர்வாகும். விஷமில்லாத காய்கறிகளும் கிடைக்கும்.

செந்தில் குமாரின் மாடித் தோட்டம்
செந்தில் குமாரின் மாடித் தோட்டம்
DIXITH

நான் என் வீட்டில் மாடித்தோட்டம் போட்டிருக்கிறேன். வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி, சேனைக்கிழங்கு, வெள்ளரி, மாதுளை, கீரை வகைகள், மிளகாய் என குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை மாடியில் விளைவிக்கிறேன். காலையில் இரண்டு மணி நேரம் அதற்காக செலவிடுகிறேன். அது என் மனச்சோர்வையெல்லாம் விரட்டி புத்துணர்வு ஏற்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உணவைப் பொறுத்தவரை அதிகம் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கலாம். எப்போதேனும் சாப்பிடுவதில் பிரச்னையில்லை. அடிக்கடி சாப்பிடக்கூடாது. ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் ஆபத்தானது. கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் அரைமணி நேரம் வாக்கிங் போகலாம். உடற்பயிற்சி மூலம் நம்முடலுக்குள் செல்லும் விஷங்களை முறித்து வெளியேற்ற முடியும்.

டாக்டர் ஜி.செந்தில்குமார்
டாக்டர் ஜி.செந்தில்குமார்
DIXITH

60 முதல் 70 சதவிகிதம் புற்றுநோயை மூன்றாம் நிலையில்தான் கண்டறிகிறோம். இந்த நிலையில் 20 முதல் 30 சதவிகிதம்தான் நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதல்நிலையிலேயே கண்டறிந்தால் 90 சதவிகிதம் குணப்படுத்திவிட முடியும். ஆரம்ப நிலையில் கண்டறிவதுதான் சவால். நம் உடல்நிலையைப் பற்றி நாம் நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும். உடலில் வலியில்லாத ஒரு கட்டி வந்தால் அதை உடனடியாக சோதிக்க வேண்டும். சிகரெட் பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள் வாயில் சின்ன புண் வந்தால்கூட அலெர்ட் ஆகவேண்டும். புகையிலை பயன்படுத்தாவர்களுக்கும் கூட புற்றுநோய் வரலாம். வாயில் ஏதேனும் புண் வந்து பத்து நாள்களுக்கு மேல் ஆறாவிட்டால் சோதித்து அறிந்துகொள்வது நல்லது. முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் உறுப்புகளுக்கு பங்கமில்லாமல் காப்பாற்றிவிட முடியும்..." என்கிறார் செந்தில்குமார்.

புற்றுநோய் சிகிச்சைக்கான எல்லா வசதிகளும் டாக்டர் செந்திலின் சில்வர்லைன் மருத்துவமனையில் இருக்கிறது. லேப்ராஸ்கோப்பி சிகிச்சைதான் சில்வர்லைனின் சிறப்பு அடையாளம். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவமனையிலேயே செய்து கொடுக்கிறார்கள். எல்லாவகை புற்றுநோய் அறுவை சிகிச்சைகளையும் இங்கே செய்கிறார்கள்.
சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
DIXITH

புற்றுநோய், ஹெச்ஐவி, காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர் சிகிச்சை எடுப்பதற்கு உதவியாக அரசு மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது. இதற்கு மருத்துவரிடம் ஒரு சான்று பெற்று அதை வருவாய்த்துறையில் அளித்தால் போதும். இதையும் நோயாளிகளுக்குப் பெற்றுத்தருகிறார்கள். கேன்சர் நோயாளி, அட்டெண்டர் இருவருக்கும் ரயில் பாஸும் அரசு இலவசமாக வழங்குகிறது. அதையும் பெற்றுத்தருகிறார்கள். நிறைய இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்துகிறார் செந்தில்.

டாக்டர் செந்திலின் அம்மா பெயர் மல்லிகா. இரண்டு சகோதரிகள். மூத்த சகோதரி ரேகா ஆசிரியை, தங்கை நெய்வேலியில் பணியாற்றுகிறார். மனைவி ஹேமலதா, உடற்கூறு மருத்துவர். இரண்டு குழந்தைகள்...

டாக்டர் ஜி.செந்தில்குமார் குடும்பம்
டாக்டர் ஜி.செந்தில்குமார் குடும்பம்
DIXITH
"என் அப்பா மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தபோது அடுத்து என்ன முடிவெடுப்பது என்பதை என் முடிவுக்கு விட்டார்கள். அப்போது என்னால் சரியாக முடிவெடுக்கமுடியவில்லை. இன்றுவரை அது எனக்கு உறுத்தலாகத்தான் இருக்கிறது. இன்று நான் என் நோயாளிகளை அந்த தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதில்லை. இந்த நோயாளி என் அப்பாவாக இருந்தால் என்ன செய்வேனோ அதை அவர்களுக்குச் சொல்வேன். முடிவை அவர்கள் எடுக்கலாம்" என்கிறார் செந்தில்குமார்.

மக்கள் இப்படியான மருத்துவர்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள்!

அடுத்தவாரம் இன்னொரு மைல்ஸ்டோன் மனிதரைச் சந்திப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு