Published:Updated:

``உன் பசங்க, அம்மாவை நல்லா பார்த்துக்கிறேனு சொன்னதும் அவர் உயிர் பிரிஞ்சது'' - இது உமாவின் வெற்றிக் கதை!

உமா தன் குடும்பத்துடன்
News
உமா தன் குடும்பத்துடன்

''அவளுக்கென்ன, புருஷன் உள்ளங்கையில வைச்சுத் தாங்கறான்'னு சொல்வாங்களே... அப்படியொரு வாழ்க்கை''

Published:Updated:

``உன் பசங்க, அம்மாவை நல்லா பார்த்துக்கிறேனு சொன்னதும் அவர் உயிர் பிரிஞ்சது'' - இது உமாவின் வெற்றிக் கதை!

''அவளுக்கென்ன, புருஷன் உள்ளங்கையில வைச்சுத் தாங்கறான்'னு சொல்வாங்களே... அப்படியொரு வாழ்க்கை''

உமா தன் குடும்பத்துடன்
News
உமா தன் குடும்பத்துடன்

வாழ்க்கையும் காதலும் எப்போது அழ வைக்கும்; எப்போது சிரிக்க வைக்கும் என்பதே தெரியாது. ஆனால், அதற்கு உண்மையாக இருப்பவர்களை நிச்சயம் சாதிக்க வைத்து விடும். அடுத்த பாராவில் இருந்து தன் வாழ்க்கையை நம்மிடம் பகிர்ந்துகொள்ளப் போகிற உமாவின் வாழ்க்கையும் ஒரு காதலின் மடியில் இருந்துதான் முளைத்திருக்கிறது. அதே காதல் மண்ணுக்குள் மறைந்தப் பின்பு, அதன் நினைவிலேயே மெல்ல மெல்ல ஜெயித்துக் கொண்டிருக்கிறது.

''எனக்கு அவரை யாருன்னே தெரியாது. ஆனா, அவருக்கு என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கு. எங்கப்பா, 'இவர்தான் மாப்பிள்ளை'ன்னு அவரை என்கிட்ட காட்டினப்போ, 'எனக்குக் கல்யாணமே வேணாம்பா'ன்னு சண்டை போட்டிருக்கிறேன். ஆனா, அவர் காதலோட சக்தி, எனக்கும் அவருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிடுச்சு. கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சது, அவரு 108 கிலோ தங்கம்னு. யெஸ், என் வீட்டுக்காரர் அந்தளவுக்கு ஹைட், வெயிட்டா இருப்பாரு. ' அவளுக்கென்ன, புருஷன் உள்ளங்கையில வைச்சுத் தாங்கறான்'னு சொல்வாங்களே... அப்படியொரு வாழ்க்கை.

அவர்கூட வாழ்ந்த வாழ்க்கையில, என்னை ராணி மாதிரி நடத்தினாரு. ஒரு ஆணோட உண்மையான காதல், ஒரு பொண்ணை எப்படியெல்லாம் கொண்டாடும்னு அணு அணுவா தெரிஞ்சுக்கிட்டேன். இவரைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எங்கப்பாகிட்டே அடம்பிடிச்சதை அப்பப்போ நினைச்சுப்பேன். சிரிப்பு சிரிப்பா வரும். 'நல்லவேளை... அப்பா நம்மை கட்டாயப்படுத்தி இவருக்கு கல்யாணம் செஞ்சு வைச்சுட்டாரு'ன்னு மனசுக்குள்ள பல தடவை நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கேன். நாங்க ரெண்டு பேரும் எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்போம். எங்ககூட சேர்ந்து சிரிக்கிறதுக்கு ரெண்டு குழந்தைகளும் பொறந்தாங்க. இவரோட பிசினஸூம் எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நல்லாத்தான் போயிக்கிட்டிருந்துச்சு. ஸோ, வாழ்க்கை இப்படியே பாசிட்டிவா போகும்னு குழந்தை மாதிரி நம்பிக்கிட்டிருந்தேன்க்கா.

தன் மகளுடன்
தன் மகளுடன்

அன்னிக்கு என் பொண்ணோட பிறந்த நாள். பிசினஸ் விஷயமா இவரு வெளியே போயிருந்தாரு. சாயந்திரமா பேக்கரிக்குப் போயி, ஆர்டர் கொடுத்திருந்த கேக்கை வாங்கிட்டு வந்துடலாம்னு பிளான் பண்ணியிருந்தோம். போன இடத்துலே என்ன நடந்துச்சு, இவருக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு அப்ப தெரியலை. சாயந்திரம் 3 மணி வாக்குல வீட்டுக்கு வந்தவரு, 'தலை லேசா வலிக்குது உமா'ன்னு சொல்லிட்டுப் போய் படுத்திட்டாரு. 'கார்லதானே போனாரு. வெயில்ல நின்னிருப்பாரோ'ன்னு நினைச்சபடியே, மாமியார் - பிள்ளைங்களோட கோயிலுக்குப் போயிட்டேன். அஞ்சு மணிபோல வீட்டுக்கு வந்தா, இவர் பெட்ரூமெல்லாம் வாந்தியெடுத்து வச்சிருக்காரு. தலையைப் பிடிச்சுக்கிட்டு 'வலி தாங்க முடியலை'ன்னு தவிக்கிறாரு.

இவரு பெரிய உடம்புக்காரரு. அதனால, என்னாலேயும் என் மாமியாராலேயும் இவரை படியில இறக்கி, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறதெல்லாம் நடக்காதக் காரியம். உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி, பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிட்டல கொண்டுபோய் சேர்த்தேன். அவரை செக் பண்ணிப் பார்த்த டாக்டர்ஸ், 'இவரு இன்னிக்கு பிளட் பிரஷர்க்கு மாத்திரைப் போடலியா'ன்னு கேட்டாங்க. 'பிளட் பிரஷ்ஷரா... என் வீட்டுக்காரருக்கா...'ன்னு நான் மலங்க மலங்க முழிச்சேன். ஆனா, அவருக்கு பிளட் பிரஷர் இருந்திருக்கு.

குழந்தைகளுக்கு சமைப்பது ரொம்பப் பிடிக்கும்
குழந்தைகளுக்கு சமைப்பது ரொம்பப் பிடிக்கும்

என் மனசு நோகக்கூடாதுன்னு அதை என்கிட்டே மறைச்சிருக்காரு. தவிர, அன்னிக்கு பிசினஸ் விஷயமா வேலைப் போயிருந்தப்போ, அவரு யாரை ரொம்ப நம்பியிருந்தாரோ அவங்களே அவரை ஏமாத்தியிருக்காங்க. மனசு நொறுங்கிப்போய்த்தான் வீட்டுக்கு வந்திருக்காரு. பிரஷர் ஏறி, மூளையில இருக்கிற சில நரம்புகள் வெடிச்சு, சுயநினைவை இழந்துட்டாரு. டாக்டர்ஸ், அவரோட தலையில ஒரு ஆபரேஷன் பண்ணனும்கிறாங்க. தொண்டையில துளைப்போட்டு டியூப் வழியா திரவு உணவுக் கொடுக்கணும்னுகிறாங்க. இதுக்கு நடுவுல அவருக்கு மூச்சும் விட முடியலை. அரை மணி நேரத்துல எல்லாம் கொலாப்ஸாயிடுச்சுக்கா. ரெண்டு குழந்தைகளைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டெ அழுதுக்கிட்டிருந்த என்னை டாக்டர்ஸ் தனியா கூப்பிட்டாங்க. உன் வீட்டுக்காரருக்கு ஆபரேஷன் செலவு மட்டும் 10 லட்சமாகும். ஆனா, அப்படி செலவழிச்சாலும் அவர் சுயநினைவில்லாம படுக்கையிலதான் இருப்பாரு. அதனால், அவருக்கு செலவழிக்கிற காசை குழந்தைங்க எதிர்காலத்துக்கு வைச்சுக்கோங்கன்னாங்க.

என் எதிர்காலமே அவருதாங்க சொல்லி, என் நகையெல்லாம் வித்து 10 லட்சத்தை ஹாஸ்பிட்டலில் கட்டினேன். ஆபரேஷன் முடிஞ்சது. ஆனா, கம்பீரமா நடந்துக்கிட்டிருந்த மனுஷன், படுக்கையில முடங்கிட்டாரு. மாத்திரை, மருந்து, டவல் பாத்னு அவரை மூணாவது பிள்ளையா பார்த்துக்க ஆரம்பிச்சேன். கையில இருந்த பணமெல்லாம் கரைய ஆரம்பிச்சது. தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்ககிட்டே கடன் வாங்கினேன். என் பையன் படிச்சிக்கிட்டிருந்த ஸ்கூல் பிரின்சிபல்கிட்டேகூட ஹெல்ப் கேட்டேன்.

கணவர் மகேஷ்
கணவர் மகேஷ்

இதெல்லாம் நடந்தது 2016-ல். ரெண்டு வருஷம் எதாவது அதிசயம் நடந்திடாதா, அவரு நல்லாயிட மாட்டாரான்னு நம்பிக்கையிலேயே வாழ்ந்துக்கிட்டிருந்தேன். இதுக்கு நடுவுல 'அப்பா எப்பம்மா என் பர்த்டே கேக்'கை வாங்கிட்டு வருவாருன்னு என் பொண்ணு அழுததுல இருந்து, என் வீட்டுக்காரர் உடம்பைத் துடைக்க வெந்நீர் வைச்சுக்க இடம்கொடுத்த ஹாஸ்பிட்டல் வொர்க்கர் ஒருத்தன், நான் குளிக்கிறதை எட்டிப்பார்க்கிறது வரைக்கும் எல்லாத்தையும் தாங்கினேன்கா'' - இவ்வளவு நேரம் தங்கு தடையில்லாமல் பேசிக் கொண்டிருந்த உமாவின் குரல், அந்த நாளின் இயலாமையையும் நிர்க்கதியையும் நினைத்து கண்ணீரில் கரைய ஆரம்பித்தது.

''தொடர்ந்து ஹாஸ்பிட்டல்ல வைச்சு அவரைப் பார்க்க முடியாம, வீட்லே வைச்சும் பார்த்துக்கிட்டிருந்தேன். மறுபடியும் ஒருநாள், அவரோட நிலைமை மோசமாக, மறுபடியும் ஹாஸ்பிட்டல் வாழ்க்கை. இந்த முறை அவரோட உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலைமை. ஆனா, அவர் என்னைவிட்டுட்டுப் போக மனசில்லாம அந்த மருத்துவ உபகரணங்களோட துடிச்சிட்டுக்கிட்டிருந்தாரு. அவ்ளோ கம்பீரமான உருவம், தோல் போர்த்தின எலும்புக்கூடா படுக்கையில துடிச்சிக்கிட்டிருக்கு.

கணவர் மற்றும் குழந்தைகளுடன் உமா
கணவர் மற்றும் குழந்தைகளுடன் உமா

எனக்கு எங்கிருந்துதான் அந்த ஆவேசம் வந்துச்சுன்னே தெரியலை. 'போதும்டா மகேஷ், நீ எனக்காக வாழ துடிக்கிறதெல்லாம் போதும்டா. உன்னை இந்தக் கோலத்துல இனியும் பார்க்க என்னால முடியாது. நான், உன் அம்மாவையும் உன் குழந்தைகளையும் நல்லா பார்த்துக்கிறேன். நீ நிம்மதியா கிளம்புடா'ன்னு கதறி அழ ஆரம்பிச்சேன். நீங்க நம்புவீங்களான்னு தெரியலைக்கா. அவரோட துடிப்பெல்லாம் மெல்ல மெல்ல அடங்க ஆரம்பிச்சது. அப்படியே என் கண்ணு முன்னாடி அவரு வேற எங்கியோ கிளம்பிப் போயிட்டாரு.

அன்னிக்கு அழுததுதான் கடைசிக்கா. அப்புறம் நான் அழவே இல்லை. அழுதா, என்னடி ராஜாத்தின்னு என்னைக் கொஞ்சறதுக்கும் சமாதானப்படுத்தறதுக்கும் யாருரிக்கா..? என் பிள்ளைங்க படிக்கிற நீலாங்கரை ஸ்கூல்லேயே கேன்டீன் ஆரம்பிக்கிறதுக்கு உதவிக் கேட்டேன். என் கஷ்டமெல்லாம் அவங்களுக்கு தெரியும்கிறதால, அவங்களும் சரின்னாங்க. எய்ம்ஸ்-ங்கிற என்.ஜி.ஓ-பத்திக் கேள்விப்பட்டு அவங்ககிட்டே உதவிக் கேட்டேன். அவங்களும் செஞ்சாங்க. கேன்டீன் ஆரம்பிச்சேன். இப்ப வெங்கலில் இருக்கிற இன்னொரு ஸ்கூல்லேயும் கேன்டீன் வைக்கிறதுக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கு.

உமாவின் கேன்டீன்
உமாவின் கேன்டீன்

ஆனா, அங்கே சமைக்க முடியாது. வீட்டிலேயே எல்லாம் சமைச்சு அங்கே விற்க மட்டும்தான் முடியும். அதனால, அந்த கேன்டீனை எங்கப்பா பார்த்துக்கிட்டிருக்காரு. அவரில்லாத இந்த ஒரு வருஷ வாழ்க்கையில, எவ்வளவோ கஷ்டத்தைப் பார்த்துட்டேன். ஆனா, என் மகேஷ் எனக்கு அன்புப் பரிசாக் கொடுத்த என் குழந்தைங்களுக்காக எப்படிப்பட்ட நெருப்பையும் தாண்டி வருவேன்க்கா...'' - மகேஷின் காதல் உமாவை ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அது சாதிக்கவும் வைக்கும்.