”ராத்திரி பத்து மணிக்கு சாப்பாடு மிச்சம் இருக்கு வந்து வாங்கிக்கோங்கன்னு எதாச்சும் ஓட்டல்ல இருந்து போன் வரும். டீம்ல இருக்க பசங்க சில நேரம் வர முடியாத சூழல் இருக்கும். என் குழந்தைய கூப்டுட்டு நானே கிளம்பி போயிடுவேன். வர்றதுக்கு ராத்திரி ஒரு மணி ஆகிரும். அடுத்தவங்களுக்கு செய்யுறோம். அதுல மனசு சந்தோஷமா இருக்கோம். இதையெல்லாம் தாண்டி வீடுக்குள்ள்ளயே அடைஞ்சு கிடக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட இருந்த நான் இந்தச் சமூகத்தோட இணைஞ்சு இருக்க்கேன். இந்தச் சமூகம் பாதுகாப்பானதுன்னு எனக்குள்ள தைரியத்தையும் நம்பிக்கையையும் குடுத்துருக்கு இந்தப் பயணம்!” அத்தனை இயல்பாக பேசுகிறார், அகிபா.
மதுரை யூ கேன் ஃபவுண்டேஷன் (You Can Foundation) அமைப்பின் தலைவர். கல்லூரிப் பேராசிரியை, ஆங்கிலத் துறை தலைவி, வானொலி அறிவிப்பாளர் என பண்முகங்கொண்டவர். தனது தொண்டு நிறுவனம் மூலம் மதுரை உணவகங்களில் மிச்சப்படுகிற உணவுகளை பொட்டலங்களாக பார்சல் செய்து ரோட்டோரங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கிவருகிறார்.
அகிபாவை பத்தி சொல்லுங்களேன்?

“கட்டுப்பாடுகளோட வளர்றதுக்கும் அடக்குமுறையோட வளர்றதுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். கட்டுப்பாடா வளர்க்குறோம்னு நினைச்சுக்கிட்டு அப்படியான வாழ்க்கையைதான் பெண்கள் பெரும்பாலும் அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க. கிட்டத்தட்ட நானும் அதே சூழல்ல வளர்ந்த பொண்ணுதான். ஆனா நிறைய பேரு அதே இடத்துலயே நின்னுடுறாங்க. ஒரு சிலர் மட்டும்தான் அதை மீறி வெளில வந்து நிக்கிறாங்க. அதுக்கு கல்விதான் மிகப்பெரிய கருவியாக இருக்க முடியும்னு நான் நம்புறேன். நானும் இந்தச் சமூகத்தோட இணையுறதுக்கு காரணமும் கல்விதான். நான் நாலாவது படிக்கும்போதே எனக்கு கல்யாணப் பேச்சு பேசுனாங்க வீட்டுல. ஆறாவது படிக்கும்போது படிச்சது போதும் எதுக்கு பள்ளிக்கூடமெல்லாம் போயிட்டுனு பேச ஆரம்பிச்சாங்க. அதை மீறி பள்ளிக்கூடம் போனேன். என்ன சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாத காலத்துலயே ஒன்பதாவது படிக்கும்போது நிச்சயதார்த்தம் நடந்துருச்சு. பள்ளிப்படிப்ப முடிக்கிறதுக்கு முன்னயே கல்யாணமே முடிஞ்சுருச்சு. படிப்பு மட்டும் இல்லைன்னா என்னா ஆகிருப்பேன்னு இப்போ நினைச்சுப்பார்த்தாலும் உடம்பே நடுங்கிப் போயிரும்.
எப்படி தோணுன விஷயம் இது?
நான் கல்லூரிப் படிப்பை முடிக்கிறதுக்குள்ளயே நிறைய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. படிக்கணும் படிக்கணும்ங்கிறது மட்டும்தான் என்னோட கனவாகவும் இலக்காகவும் இருந்தது. இதைவிட வீட்டை விட்டு வெளிய வந்து நிக்கிறதுங்கிறது மிகப்பெரிய சவாலான விஷயம் எனக்கு. கல்லூரியில வேலைக்குச் சேர்ந்த காலகட்டம் அது. காலேஜுக்கு போற டைம் எல்லாம் குட்டி குட்டி தெருக்களைத் தாண்டிதான் போகணும். தினமும் தெருக்குழாயில குடிதண்ணீருக்காக எப்படியும் பத்து சண்டையாவது பார்த்திருவேன். சம்பந்தமே இல்லாம ஒரு நாள் தண்ணி வேணும்னா என்ன பண்ணனும், மழை வரணும், மழை வேணும்னா மரம் இருக்கணும்னு அப்போ மரம் நடுவோம்னு குழந்தைத்தனமா யோசிக்க ஆரம்பிச்சேன். இந்த விசயத்த கூட வேலை பார்க்குறவங்க கிட்ட சொன்னேன். அப்படியெல்ல்லாம் நினைச்ச உடனே பண்ண முடியாதும்மா, அதுக்கு தனியா பதிவு பண்ணனும்னு சொன்னாங்க. சமூகத் தொடர்பிலிருந்து ரொம்பவே தள்ளி இருக்கோம் போல, நாம எல்லாருக்கும் பொதுவாதானே மரக்கன்று நடுறோம். அதை எதுக்கு பதிவு பண்ணி பண்ணனும்னு நிறைய கேள்வி. என்னோட ஸ்டூடண்ட்ஸ்கிட்ட இந்த ஐடியா சொன்னேன். அவுங்க இதுக்கு ரொம்ப உறுதுணையா இருந்தாங்க. உடனே 'You Can'னு ஒரு அமைப்பை தொடங்கிட்டோம். அப்துல்கலாம் இறந்தப்போ மதுரைல இருந்து ராமேஸ்வரம் வரை 45 பொண்ணுங்க கூட போயி அவரது நினைவா ஆயிரம் மரக்கன்றுகள் நட்டோம். இதான் எங்களோட முதல் பெரிய வேலையா பண்ணுனோம்.
அதே காலகட்டத்துல தொடர்ந்து கடலூர் வெள்ளம் ஓகி புயல்னு தொடர்ந்து எதாவது இயற்கைச் சீற்றங்களால மக்கள் பாதிக்கப்பட்டுட்டு இருந்தாங்க. சுத்தி இருக்க நண்பர்கள் எதாவது பண்ணலாம்னு சொல்வாங்க.கையில காசு இல்லை நாம எப்படி இதெல்லாம் பண்ண முடியும். இதெல்லாம் அரசாங்கத்தோட வேலைதானேனு எல்லாம் தோணிருக்கு. ஆனா இப்போ உடனடி தேவையா நாம இதை பண்ணுவோம். அரசாங்கம் பிறகு பண்ணட்டும்னு நண்பர்கள் நண்பர்களோட நண்பர்கள்னு குடுத்த பணத்தை வச்சு கடலூருக்கும் கன்னியாகுமரிக்கும் நிவாரணப் பொருள்கள போயி குடுத்துட்டு வந்தோம்.
சாப்பாடு பிரிச்சு குடுக்குற ஐடியா எப்படி வந்துச்சு?
அண்ணனோட நண்பர் அண்ணா ஓட்டல் வச்சுருக்காங்க. யதார்த்தமா ஒரு நாள் பேசிக்கிட்டு இருக்கும்போது, ஓட்டல்ல சாப்பாடு எல்லாம் மிச்சமாச்ச்சுனா என்ன பண்ணுவீங்கனு கேட்டப்போ கீழதான் போடுவோம்னு சொன்னாரு. எவ்வளவோ பேரு ஒரு பக்கம் சாப்பாடு சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டு இருக்க அதே வேளையில சாப்பாடு அதிகமா போச்சுன்னு கீழ கொட்டுற சம்பவங்களும் நடந்துக்கிட்டுதான் இருக்குலனு ஒரு யோசனைல, அவர்கிட்டயே அந்தச் சாப்பாடு எனக்கு பொட்டலமா போட்டு தர்றீங்களா நான் போயி சாப்பாடு தேவைப்படுறவங்களுக்கு குடுத்துக்குறேன்னு சொல்லவும் அவருக்கும் அது சரின்னு படவும், மறுநாளே வந்து வாங்கிக்க சொன்னாரு. என்னோட ஸ்டூடண்ட்ஸ்தான் ராத்திரி வந்து சாப்பாடு எல்லாம் பிரிச்சு குடுப்பாங்க. அவுங்க எல்லாம் வர முடியாத சூழல்ல நானே போயிட்டு வந்துருவேன். அந்த ஓட்டல் அண்ணா மூலம் இன்னும் நாலஞ்சு ஓட்டல்கள்ல இருந்தும் உதவிகிடைச்சது. அது போக எங்கெல்லாம் திருமண மண்டபங்கள்ல சாப்பாடு மிச்சம் ஆகுதோ அங்க இருந்து சாப்படு தேவைப்படுற இடங்களுக்குச் சரியான டைம்ல கொண்டு போயி சேர்த்துருக்கோம்.
மறக்க முடியாத அனுபவம் இருக்கா?
அப்படி சாப்பாடு குடுக்குற இடத்துல அறிமுகமான ஒரு பார்வையற்றோர் இல்லத்துல இருந்து திடீர்னு ஒரு போன் கால். அகிபா கல்யாணம் ஒண்ணு பண்ணலாம் இருக்கோம்னு சொல்லவும் சாப்பாடு எதும் ரெடி பண்ணி தரணுமான்னு கேட்டேன். இல்லம்மா கல்யாணமே பண்ணிக்குடுக்கணும்னு சொன்னாங்க. எனக்கு என்ன பண்றாதுன்னே தெரில. என்னோட கல்யாணமே எப்படி நடந்துச்சுன்னு தெரியாது. நான் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன்னு தயக்கம். ஆனாலும் பார்வையற்ற தம்பதிகளுக்கு அவுங்க கேட்டதும் மறுப்பு சொல்லாம சரின்னு சொல்லிட்டோம். உடனே ஒரு பூங்காவுல பொண்ணு பார்க்குற செட்டப்ல ஆரம்பிச்சு முழு கல்யாணாத்தையே முடிச்சோம். இது எனக்கு மறக்கு முடியாத அனுபவம்!
குடும்பத் தலைவி, கல்லூரி பேராசிரியை, வானொலி அறிவிப்பாளர் எப்படி எல்லாத்தையும் சமாளிக்கிறீங்க?
கணவர் துபாய்ல இருக்கார், பொண்ணு எட்டாவது படிக்கிறாங்க, எனக்கு காலேஜ் காலையில் பத்து மணிக்கு போயிட்டு மூணு மணிக்கு வந்துடுவேன். அதனால பொண்ணு ஸ்கூல் போறப்போவும் நான் கூட இருப்பேன் ஸ்கூல் முடிஞ்சு வர்றப்பவும் நான் வீடு இருப்பேன். ரெண்டு பேருக்கும் மிஸ் பண்றோம்னு உணர்வு வந்ததே இல்ல.
காலேஜ் விட்டு வந்ததும் என் பொண்ணோட படிக்கிற டைம் தவிர மீதி நேரம் என்கூடவே கூட்டி வந்துருவேன் அவுங்களுக்குள்ளயும் இந்தச் சமூகம் ஏன் இப்படி மனிதர்களை கை விட்டுடுதுன்னு கேள்விகள் வந்துக்கிட்டு இருக்கு, இந்த ஒரு கேள்வி அவுங்களுக்குள்ள இன்னும் நிறைய கேள்விகள உண்டு பண்ணும். அதுக்கு நிறைய பதில்கள் கிடைக்கும்னு நம்புறேன். சனி ஞாயிறுகள்ல ரேடியோவுல புரோகிராம் பண்ணிருவேன். இப்படித்தான் எனக்கு நானே ப்ளான் பண்ணிக்கிறேன்.
எப்படி இருக்கு இந்தப் பயணம்?
ஆரம்ப காலகட்டத்துல நான் இப்டி பண்றதெல்லாம் எங்க வீட்டுக்குத் தெரியாது. அம்மா அப்பா கிட்டயே இதுக்கு எதிர்ப்பு இருந்தது. ஒரு கட்டத்துல சொந்தகாரங்க எல்லாம் இதை ஓரளவு ஏத்துக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் வீட்டுல எதிர்ப்பு கம்மியானது. ஏத்துக்கிட்டாங்கன்னுதான் நம்புறேன். தினம் தினம் நிறைய மனிதர்களைச் சந்திக்கிறேன். ஒவ்வொரு மனுஷங்களை பார்க்கும்போது அவுங்களோட அனுபவங்களை எனக்கு வேறொரு பரிமாணத்தை குடுக்குது. சுருக்கமா சொல்லணும்னா ஒவ்வொரு நாளும் புதுசா பொறக்குற மாதிரி இருக்கு!