”எதுவுமே திட்டமிட்டு பண்ணல. நான் என்னோட குடும்ப ஆரோக்கியத்துக்காகன்னு ஒரு சுயநலத்துக்காக வீட்டுலயே தோட்டம் ஆரம்பிச்சு அறுவடை பண்ணிக்கலாம்னு ஆரம்பிச்ச விஷயம். அதுவே ஒண்ணோடு ஒண்ணு தொட்டு தொட்டு அரசுப்பள்ளிகளில் நூலகம், வீதிகள் தோறும் நூலகம், மாணவர்களுக்கான வார்லி ஆர்ட்னு கைப்பிடிச்சு கூட்டிப்போயிருச்சு. இதுல எல்லாத்தையும் அப்படியே அதன் போக்குலயே எடுத்துட்டுபோறேன்” எனச் சொல்லும்போதே அத்தனை மகிழ்ச்சி அர்ச்சனாவுக்கு!
மாடித்தோட்டம், ஆசிரியர் பணி, குழந்தைகளுக்கான நூலகப்பணி என பண்முகம் கொண்ட சமூக அக்கறையுடன் இயங்கிகொண்டிருக்கும் மதுரைக்காரர்.
அர்ச்சனா பற்றிய அறிமுகம் சொல்லுங்களேன்...

"சொந்த ஊரு மதுரை அனுப்பானடிதான். இன்ஜினியரிங் முடிச்சுட்டு சென்னையில ஐடி கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன். சில சொந்த பிரச்சனைகள் காரணமா திரும்பவும் மதுரைக்கே வர வேண்டிய சூழல். இங்க வந்து பாலிடெக்னிக்ல பேராசிரியரா பணியைத் தொடங்குனேன். அப்போதான் வெளியில வாங்குற காய்கறிகளை மனசு ஏத்துக்கவே இல்ல. செயற்கை உரம், உடல் உபாதைகள்னு அப்போ இயற்கை விவசாயத்த பத்தின நிறைய புரிதல்களும், அதனோட முக்கியத்துவமும்தான் என்னய மாடித்தோட்டத்த நோக்கி நகரவச்சது. 2014ல நம்பிராஜன் அவர்களோட அறிமுகம் கிடைச்சது. ஆரம்பத்துல நிறைய பிரச்சனைகள் சந்திச்சேன். இருபத்து ஆறு நாள்ல அறுவடை செய்ய வேண்டிய செடிகள் எல்லாம் ஆறு மாசம் ஆகியும் எந்த வளர்ச்சியும் இல்லாம இருந்துச்சு. போகப்போக பிரச்னைகள் சரி பண்ண ஆரம்பிச்சு அறுவடை பண்ண ஆரம்பிச்சேன். அப்பா அம்மா வயசுல இருக்கிற பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் அவுங்களோட சின்ன வயசுல கிடைச்ச காய்கறிகளோட சுவை இருக்கிறதா சொன்னாங்க. அப்போவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு."
எப்படி பள்ளிக்குழந்தைகளை நோக்கி நகர ஆரம்பிச்சீங்க?
"இந்த ஆர்கானிக் காய்கறிகளோட முக்கியத்துவத்த மத்தவங்களுக்கும் எடுத்துச்சொல்லணும்னு நிறைய பயிற்சி முகாம்கள் நடத்தினேன். அதன் நீட்சியாகதான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்த வேண்டுமென அவர்களை நோக்கி நகர ஆரம்பிச்சேன். விருதுநகர்ல மட்டும் பன்னிரண்டு பள்ளிக்கூடங்கள்ல பண்ணிருக்கேன். அப்போதான் அரசுப்பள்ளிகளுடைய கட்டமைப்புகளில் நூலகங்களோட வசதி ரொம்ப பின் தங்கி இருக்கிறமாதிரி உணர்ந்தேன். நாம படிக்கிற காலத்தில் நூலகங்களோட செயல்பாடுகள் ரொம்ப தீவிரமாக இருந்தன. ஆனால் இவர்களுக்கு ஏன் அப்படி கிடைக்கவில்லை என்கிற ஒரு கேள்விதான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நூலகங்கள் அப்படிங்கிற புள்ளில வந்து விழுந்தது. ஆரம்பத்துல எந்த அரசுப்பள்ளியிலயுமே அதுக்கான அனுமதி அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவே இல்ல. கிட்டத்தட்ட ஒரு ரெண்டு வருஷ காத்திருப்புக்கும் முயற்சிக்கும் பிறகுதான் ஒத்தக்கடை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக முதல் நூலகத்தை ஏற்படுத்தினோம். நண்பர்கள் மூலமாகவும் ஃபேஸ்புக் மூலமாகவும் நிறைய புத்தகங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன்."
வீதி தோறும் 'குழந்தைகள் நூலகம்' எப்படி ஆரம்பமாச்சு?
"பள்ளிகளுக்கான நூலகம்தான் அதனோட அடிப்படையே! இந்த கொரோனா ஆரம்பகட்டத்துல பள்ளுக்கூடங்களுக்கு நேரடியாக போவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. அதற்கு பிறகுதான் குழந்தைகளை அவர்களின் வீடுகளை நோக்கித் தேடிப் போகலாம்னு முடிவெடுத்து சிந்தாமனி, திருமோகூர் பகுதிகளில் நேரடியாக மாணவர்களை சந்திக்க ஆரம்பிச்சோம். தன்னார்வலர்களோட எண்ணிக்கை ரொம்பவே குறைவு, ஆனாலும் இதை ஒரு சவாலா எடுத்துதான் ஆரம்பிச்சோம். எட்டாவது வரையிலான குழந்தைகள் கிட்ட இதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.
வெறுமனே புத்தகத்தை மட்டும் குடுத்துட்டு வர்றது மட்டுமல்லாம, அதனோட தொடர்ச்சியா அந்தக் கதைகளை எல்லாம் குழந்தைகள் நாடகமாக்கவோ இல்ல கதை சொல்லல் மூலமாகவோ உள்வாங்க ஆரம்பிச்சாங்க. அந்தப் புத்தகங்களுக்கு அவர்களுக்குள்ளயே ஒரு விவாதம் நடக்கும். இப்படித்தான் ஒரு நூலகம் ஆரம்பிப்போம். அந்த நிகழ்வோட வெற்றி, என்னோட நண்பர்களுக்கு இன்னும் நிறைய நம்பிக்கை குடுக்கும், அதுதான் அடுத்த நூலகத்தைத் தயார் பண்றதுக்கு தைரியத்தைக் குடுக்கும். ஆகஸ்ட்டுல ஆரம்பிச்சு இப்போவரை எட்டு வீதி நூலகங்கள் பண்ணிருக்கோம். இதை இன்னும் அதிகப்படுத்தணும். மதுரையை அடிப்படையாக கொண்ட தன்னார்வலர்கள் யார் வேண்டுமானாலும் எங்களோட இணையலாம்!"
வார்லி ஆர்ட் பயணத்த பத்தி சொல்லுங்களேன்..?
"அடிப்படையில ஒரு டீச்சரா இருந்துட்டதால, குழந்தைகளுக்கு ஒரு விஷயத்த ஈசியா பதியவைக்கிறதுக்காக வார்லி ஆர்ட் ஒரு கருவியா பயன்படுத்தலாம்னு முடிவெடுத்தேன். பர்வதவர்த்தினி மூலமாக வார்லி ஆர்ட்டை நான் கத்துக்கிட்டேன். நான் கத்துக்கிட்ட வார்லிய நிறைய டீச்சர்களுக்கு சொல்லிக் குடுத்தேன். டீச்சர்களுக்கு சொல்லி குடுக்குறது மூலமா அது நிறைய மாணவர்களுக்கு போயி சேர்ந்திடுது.
பெருசா எந்த செலவும் கிடையாது. கத்துக்கவும் சரி, அதை வரையுறதுக்கும் சரி ஒரு ஸ்கேல் ஒரு பென்சில் போதும். ரொம்ப ரொம்ப எளிமையான வடிவம்தான் இந்த வார்லி ஆர்ட்! இந்த வார்லிய பயன்படுத்தி திருக்குறள், கொரோனா கால சூழல்னு குழந்தைகள் அவுங்களோட கற்பனையை நிறையவே விரிவுபடுத்திக்கிறாங்க. அதெல்லாம் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு."