Published:Updated:

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 5 - வாழ வைக்கும் வாஸ்து சாஸ்திரம்!

மெய்ப்பொருள் காண்பது அறிவு
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Lifestyle

ந்தியாவில் எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் திருப்பதி மட்டும் எப்படி செல்வத்தை ஈர்க்கிறது என்று யோசித்திருக்கிறீர் களா... வாஸ்துதான் காரணம் என்கிறார்கள்.

திருப்பதியில் வடகிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது. தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலமடையும், செல்வம் மலைபோல் குவியும் என்ற வாஸ்து கணக்கின்படி இத்திருக்கோயில் இருப்பதால், இந்தியாவின் செல்வம் நிறைந்த கோயிலாக இது உள்ளது என்கிறார்கள்.

பொதுவாக, வீட்டைக் கட்டத் தொடங்கு வதை வாஸ்து புருஷன் கண்விழிக்கும் வாஸ்து தினத்தன்று தொடங்குவார்கள். இந்த வருடத்தின் முதல் வாஸ்து தினம், தை மாதம் 12-ம் தேதி, அதாவது ஜனவரி 26 காலை 10.06 முதல் 10.41 வரை என்றும், அந்நேரத்தில் இந்த சுபகாரியத்தைத் தொடங்குவது நன்மைதரும் என்றும் கூறுகிறது தினசரி காலண்டர்.

சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

யாரிந்த வாஸ்து புருஷன்... பாற்கடலில் அமிர்தம் கடையும்போது, அசுரர்கள் அமிர்தத்தைத் தவறவிட, தேவர்களைப் போல உருவெடுத்து, அமிர்த கலசத்தை அபகரித்து, அமிர்தத்தை சுவர்பானு பருகிவிட, ஆவேச மடைந்த மோகினியான நாராயணன், கையிலிருந்த அகப்பை கொண்டு சுவர்பானு வின் தலையைத் துண்டிக்கிறார். தலைப்பகுதி ராகுவாகவும், உடற்பகுதி கேதுவாகவும் உருவெடுத்து, சுவர்பானு சாயா கிரகங்களாக மாறினான். இதையறிந்த அவனின் தமையன் அண்டகாசுரன் என்ற அந்தகனும், தாயார் சிம்ஹிகையும் போருக்குப் புறப்பட்டனர். அதிலும் அந்தகன் ஆத்திரத்துடன் எதிரில் வந்த அனைவரையும் விழுங்கியபடி வந்தான். பயந்தோடிய தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட, அவரது நெற்றி வியர்வைத் துளியில் உருவான உருவம் மாபெரும் பூதமாக சிவபெருமானின் எதிரே நின்றது. அந்தகனின் அசுரர் படையை அப்படியே விழுங்குமாறு இறைவன் பணிக்க, அப்படியே நிறைவேற்றியது பூதம்.

அனைவரின் துன்பத்தை நீக்கிய அதற்கு வாஸ்து என்று பெயரிட்டு, அதைப் பூமியிலுள்ள தீயவர் களையும் விழுங்குமாறு தேவர்கள் அனுப்பி வைக்க, அந்தக் காரியத்தையும் கச்சிதமாகச் செய்தது வாஸ்து. அதன் உடலில் அரக்க குணம் அதிகரிக்க, தேவர்களை நோக்கி போர் புரியவந்த வாஸ்துவை, அடக்குமாறு இறைவனிடம் பணிந்தனர் தேவர்கள். ஆனால், இறைவனின் வியர்வை யில் உருவான வாஸ்துவை அழிக்க முடியாது என்பதால், மும்மூர்த்திகளும் ஒன்றுசேர்ந்து, அசுரர்களை இன்னும் தேடுமாறு வாஸ்துவிடம் சொல்ல, குப்புறப் படுத்து தேடத் தொடங்கிய வாஸ்துவின் மீது அமர்ந்த மூவரும், அதை எழ விடாமல், அதன்மீது எட்டுத்திக் பாலகர்களை அமரச் செய்தனர். குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்ட வாஸ்துவுக்கு, வருடத்தில் எட்டு நாள்கள் விழித்திருக்கவும், அப்போது அதை வணங்குபவர்களுக்கு சிறப்பு செய்யவும் அருளை அளித்தனர் இறைவர்கள். வாஸ்து உருவான வரலாறு இது.

பஞ்சபூதங்களால் ஆனது நம் பூமி. பிரபஞ்சத்திலிருக்கும் ஆற்றலை மின்காந்த அதிர்வுகளாகவும், காஸ்மிக் அலை களாகவும் பெறும் பூமி, அதே பஞ்சபூதங்களால் நிறைந்திருக்கும் அனைத்து உயிர் களுக்கும் மனிதர்களுக்கும் வளர்ச்சியைத் தருகிறது.

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 5 - வாழ வைக்கும் வாஸ்து சாஸ்திரம்!

ஆதி மனிதன், விலங்கு களிடமிருந்தும், இயற்கை மாற்றங்களிலிருந்தும், இயற்கை சீற்றங்களிலிருந்தும், தன்னைக் காத்துக்கொள்ள செயற்கையாக உருவாக்கியது தான் வீடு. ஆனால், இச் செயற்கை அமைப்பு பாதுகாப் பைத் தருவதுடன், இயற்கை யின் விதிக்கும் உட்பட்டு இருக்க வேண்டும் என்பது தான் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை. வட மொழியில் ‘வாஸ்’ என்பதற்கு வசிக்கத் தக்க இடம் என்று பொருளாம்.

சீனர்களின் ஃபெங்-சூயி மட்டுமன்றி, ரோம் நகரின் வெஸ்டா, கிரேக்கத்தின் ஹெஸ்தியா ஆகிய கடவுள் களும், வாஸ்து தெய்வங்கள் தான் என்கிறார்கள்.

மயன் என்ற சிற்பி, தனது மயமதம் என்ற நூலில் காட்டிய வழிமுறைகள் தான், நமது மனையடி சாஸ்திரத்தின் முதல்படி. உண்மையில் நாம் வசிக்கும் அறைகள், குறிப்பிட்ட நீள, அகலங்களைக் கொண்டிருக்க வேண்டுமென் றும் அவ்வாறு கட்டப்படாத வீடுகள் துரதிர்ஷ்டத்தையும் துன்பத்தையும் தருமென்பதும் மனையடி சாஸ்திரம் என்றால், வாஸ்து என்பது ஒரு நிலத்தில் கட்டடம் கட்டுவதற்குரிய வழிமுறைகளையும் அதன் தத்துவங் களையும் விளக்கும் அறிவாகும்.

விஸ்வகர்மா, பிரஹத் சம்ஹிதா, மானசரா, அபராஜிதா, ஸ்கந்த புராணம், கருட புராணம் எனப் பல்வேறு நூல்களும் வாஸ்துவைப் பரிந்துரைப்பதுடன், நமது பண்பாட்டின் முக்கியச் சின்னமாக விளங்கும் கோயில்களும் அரண் மனைகளும் இந்த இயற்கை விதிகளுக்கேற்ப, வாஸ்து வல்லுநர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அதற்கு சூரியனை மையமாக வைத்துக் கணக்கிடப்படும் எண் திசைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சூரியன் எழும் கிழக்கு, மறையும் மேற்கு. துருவ நட்சத்திரம் இருக்கும் வடக்கு, அதன் நேரெதிர் தெற்கு. இந்த நான்குடன், வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய நான்கு கோண திசைகளையும், அவற்றின் குணாதிசயங்களையும் வாஸ்து எடுத்துரைப்பதுடன், கிழக்குக்கு இந்திரன், மேற்கில் வருணன் என எண்திசைகளுக்கான அஷ்டதிக்பாலகர்களை சுட்டிக் காட்டி, அனைத்து உயிர்களின் செயல்களுக்கும் இவர்கள் துணை நிற்பதாகவும் கூறுகிறது. ஆக, வாஸ்து சாஸ்திரம் எண்திசைகளின் நியதியைக் கோட்பாடுகளாக எடுத்துரைப்ப துடன், மனைகள் மற்றும் கட்டடங் களை நாம் முறையாகக் கட்டும்போது அவற்றின் நற்பலன்களை எளிதில் பெற உதவுவதாக நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் குறிப் பிடப்பட்டிருக்கும் அம்சங்களில் ஒன்று பெண்களை முன்னிலைப் படுத்துகிறது. அதாவது, வீடு கட்டும் போது வீட்டுத் தலைவியின் நட்சத்திரத்துக்கு வாஸ்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

எளிய உதாரணம்... வீட்டுத் தலைவரின், தலைவியின் படுக்கை யறையை தென்மேற்கில் அமைக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதை `நைருதி' அல்லது கன்னிமூலை என்றழைக்கும் இந்த வாஸ்து சாஸ்திரம், இதற்கு நேர்மேலாக தண்ணீர்த் தொட்டியை வைக்க வலியுறுத்துகிறது. அதாவது, நாள் முழுவதும் வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் ஆணோ, பெண்ணோ, இரவில் உறங்கும் இடத்தைக் குளுமையாக்கி, மறுநாள் மீண்டும் உற்சாகத்துடன் ஓட இது உதவுகிறது.

அதேபோல் சூரிய ஒளி நிறைந்திருக்கும் கிழக்குத் திசையில் வெராண்டா, பால்கனி. மேற்கு திசையில், அதன் இன்ஃபரா-ரெட் கதிர்வீச்சு படாமலிருக்க அலமாரி, பீரோ போன்ற பரிந்துரைகளும், காற்று வரும் திசைகளில் வாசல் ஜன்னல்கள் என்று இயற்கைக்கும் அறிவியலுக்கும் உட்பட்டுதான் வாஸ்து இருக்கிறது. பரிகாரம் என்ற பெயரில் ஏற்கெனவே கட்டியதை இடித்து பொருள்சேதத்தை ஏற்படுத்துவது தேவையில்லை என்றும் தோன்றுகிறது.

ஆக... மண் மற்றும் மற்ற பஞ்ச பூதங்களால் ஆன மனிதன், பஞ்ச பூதங்களால் நிரம்பப் பெற்ற பிரபஞ்சத்துடன் அதாவது, அண்டத்துடன் இந்தப் பிண்டமும் ஒன்றி வாழ வழி வகை செய்வதே வாஸ்து என்பதே உண்மை!

`சர்வோ சுகினோ பவது'

- உலகத்தில் உள்ள அனைத்து உயிர் களும் இயற்கையுடன் இணைந்து சுகமாக வாழட்டும்!

- மெய்ப்பொருள் தேடல் தொடரும்...