Published:Updated:

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 7 - மொட்டை அடித்தல்..!

மெய்ப்பொருள் காண்பது அறிவு
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண்பது அறிவு

இப்போதெல் லாம் பல்வேறு காரணங் களைச் சொல்லி மொட்டை அடித்துக் கொள்வது.

மீபத்தில் இந்திய பந்து வீச்சாளர் நடராஜன், தனது ஆஸ்திரேலிய சுற்றுப் பயண வெற்றிக்குப்பின் பழநி கோயிலுக்குச் சென்று, தனது முடியைக் காணிக்கையாக அளித்ததுடன், `மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்' என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.

கடவுளுக்கு நன்றிக்கடன் செலுத்த முடி இறக்குவது பலருக்கும் வழக்கம். நேர்த்திக்கடன் மட்டுமன்றி, பிறந்த குழந்தைக்கு முதல் கடமையாக, குலதெய்வ வழிபாடாக, நோய் குணமாக, இறப்புக்குத் துக்கம் செலுத்த என இந்துக்களின் சம்பிரதாயங்களில் காலங் காலமாக இருந்துவருகிறது முடி இறக்குதல்.

மொட்டை என்றவுடன் நமக்கு பல கோயில்கள் நினைவுக்கு வந்தாலும், அவற்றுள் முக்கியமானது திருப்பதிதான். ஆண் பெண் பேதமின்றி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக முடி இறக்குவதை இங்கே எப்போதும் காணமுடியும் என்றாலும் ஏன் இது திருப்பதி யில் மட்டும் அதிகம் காணப்படுகிறது என்ப தற்கு இதன் ஸ்தல வரலாற்றை காரணமாகக் கூறுகின்றனர்.

சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

ஒருமுறை, திருமலையின் நீலாத்திரியில் மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், நன்கு மேய்ந்த தன் மாடொன்று அங்கிருந்த பாம்புப்புற்றுக்குத் தனது பால் முழுவதையும் பொழிவதைக் கண்டு கோபத்துடன் கோடரியால் அந்தப் புற்றை வெட்டினானாம். அந்தப் புற்றினுள்ளே உறங்கிக்கொண்டிருந்த திருமாலின் தலையில் கோடரி காயமாக்கியதுடன், அவரது கேசத்தையும் நீக்கிவிட, முடியின்றி திருமாலின் அழகு குறையக் கூடாதென கந்தர்வக் கடவுளான நீலாதேவி தனது கேசத்தைத் தந்து திருமாலின் அதிரூபத்தை திரும்பச் செய்தாளாம். கேசத்தைத் தந்து இறைவனை மகிழ்வித்த நீலாதேவிக்கு, வேண்டிய வரங்களை இறைவன் வழங்கிட, அதைப்போலவே திருமலையில் பக்தர்களும் தங்களது முடியைக் காணிக்கையாகச் செலுத்தி இறைவனை மகிழ்வித்து, வரமனைத்தும் பெறுகின்றனர் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகத்தான், திருப்பதியில் முடி காணிக்கை செலுத்து மிடத்தை `கல்யாண கட்டா' அதாவது மகிழ்வுக்கான இடம் என அழைக்கின்றனர்.

இறைவனை மகிழ்விக்க மட்டுமல்ல, அவனிடம் சரணாகதி அடையவும், தான் என்ற கர்வம் தலையிலிருந்து இறங்கியதன் அடையாளமாகவும், ஒருவர் தனது முடியைக் காணிக்கையாக அளிக்கிறார் என்று நம்பப் படுகிறது.

பிறந்த குழந்தைக்கு மொட்டையடிப்பது அதன் முற்பிறப்பின் பந்தங்களையெல்லாம் துண்டிப்பதற்காக என்ற நமது நம்பிக்கையைப் போலவே, இந்தியாவில் பல இடங்களிலும், இதனைப் பலவிதமாக நம்புகிறார்கள். குழந்தைக்கு முதல் மொட்டை அடித்தல் என்பது `சூடகரணா' என வடமொழியில் அழைக்கப்படுவதுடன், கங்கைக்கரையில் வேதங்கள் ஓதி இறக்கப்படும் குழந்தையின் முதல் முடியை கங்கை நதிக்குக் காணிக்கை யாக அளிப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இதேபோல ஜெயினர்களின் `மூண்டன் சன்ஸ்கார்' என்ற முதல் மொட்டையானது குழந்தையின் நீண்ட ஆயுளுக் கும், ஆரோக்கியத்துக்கும், ஐஸ்வர்யத்துக்குமான அடித் தளம் என்ற நம்பிக்கையுடன் ஒரு விழாவாகவே கொண் டாடப்படுகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, இறை நம்பிக்கை மற்றும் நன்றிக்கடனை குறிக்கும் மொட்டை அடித்தல், சில நேரத்தில் இழப்பை, தோல்வியை, தண்டனையைக் குறிப்பிட வும், மெய்ஞ்ஞானத்தைத் தேடும் துறவறத்தின் ஆரம்ப மாகவும் கருதப்படுகிறது.

இந்துகள் மட்டுமன்றி, உலகெங்கிலும் எல்லா மதங்களிலும் இப்பழக்கம் இருப்பதையும் நாம் காண முடிகிறது. வடக்கு இங்கிலாந்தின் பழைமைவாத கிறிஸ்துவர்களும், ரோமன் கத்தோலிக்கர்களும், முதன் முதலாக மதகுரு பொறுப் பேற்றுக் கொள்ளும்முன் Tonsure என்ற மொட்டை போடுவது வழக்கம் என்பதைப் போலவே, இஸ்லாமியர்கள் ஹஜ் தொழுகையின் போதும், புத்த, ஜைன மதத்தினர் மாணவர் சேர்க்கை மற்றும் துறவறம் பூணும் போதும் என ஒவ்வொரு மதத்திலும் புறவாழ்வைத் துறந்து அகத்தூய்மையுடன் இறைவனை நாடுவதற்கு மொட்டை உதவுகிறது.

இத்தனை நம்பிக்கைகளைத் தாண்டி, இதில் அறிவியலும் உள்ளது என்கின்றனர் இயற்கை மருத்துவர்களும் நவீன மருத்துவர்களும்.`சுஷ்ருத' மற்றும் `சாரக சம்ஹிதை'களில், மொட்டை அடித்தலின்போது ரத்தக் குழாய்களும், நரம்புகளும் தூண்டப் பட்டு சிந்தனை மற்றும் ஞாபகத்திறன் அதிகரிப்பதால் மனவலிமை பெற உதவுகிறது என்பதுடன், ஒரு மனிதன் தனது ஆயுள்முழுவதும் மேற் கொள்ளப்பட வேண்டிய கடமைகளில் மொட்டை அடித்தலும் ஒன்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன மருத்துவத்தில் மொட்டையின்போது அதிகரிக்கும் மன வலிமை, அடர்த்தியான முடி வளர்ச்சி ஆகியவற்றை மறுக்கும் `ட்ரைக்காலஜிஸ்ட்ஸ்' என்ற முடி நிபுணர்கள், அதற்கான அறிவியல் காரணங்களையும் கூறுகின்றனர்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 7 - மொட்டை அடித்தல்..!

`டெர்மிஸ்' என்ற நமது சருமத்தின் உட்பகுதியில்தான் வியர்வை நாளங்கள், எண்ணெய் சுரப்பிகள் மற்றும் முடியின் வேர்க்கால்கள் அமைந்துள்ளன என்பதுடன், இவை நமது தலையில் மட்டுமே லட்சக்கணக்கில் காணப்படுகின்றன என்றும், இந்த வேர்களிலிருந்து வளரும் முடியானது ஒரு நாளில் 0.44 மி.மீ அளவுக்கு வளரும் தன்மைகொண்டது என்றும் கூறும் மருத்துவர்கள், முடியின் வளர்ச்சியை மூன்று நிலைகளாகவும் பிரிக்கின்றனர். `அனாஜன்' (வேகமாக வளரும் நிலை), `கெட்டாஜன்' (வளர்ச்சி குறைந்த நிலை) `டெலோஜன்' (முடி உதிரும் நிலை) என்ற வளர்ச்சி நிலைகளில் ஏதேனும் ஒன்றில் இவை காணப்படும் என்றாலும், இந்த முடி சுழற்சியில் பெரும்பான்மையான முடி `அனாஜன்' நிலையில் காணப்படுவதால்தான், மொட்டை அடித்தபின் வேகமாக முடி வளர்வதுபோல் உணர்கிறோம் என்பதே உண்மை.

வியர்வை மற்றும் அழுக்கிலிருந்து விடுபட உதவுவதுடன், கோடைக்காலத்தில் குளிர்ச்சி யைத் தரவும், தலையில் ஏற்படும் நோய்களான பூஞ்சைத் தொற்று (Tinea capitis), பாக்டீரியத் தொற்று (Folliculitis), பொடுகு (Dandruff) போன்றவற்றிலிருந்து காக்கவும், அலர்ஜிக் டெர்மடைடிஸ், சோரியாசிஸ், லைக்கன் ப்ளானஸ் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளிலும்  மொட்டை அடித்தல் நிச்சயம் உதவுகிறது. வைட்டமின் டியை இயற்கையாகப் பெறவும் உதவுகிறது என்கிறது மருத்துவ அறிவியல்.

மதத்துக்காக, இறை நம்பிக்கைக்காக, நோய் சிகிச்சைக்காக மட்டுமன்றி, இப்போ தெல்லாம் பல்வேறு காரணங்களைச் சொல்லி மொட்டை அடித்துக் கொள்வது... காரணமே இல்லாமல் மொட்டை அடித்துக்கொள்வது  ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது.

இவையனைத்துக்கும் மேலாக, புற்றுநோய் சிகிச்சையில் கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையில் ஏற்படும் முடி உதிர்தலால், புற்று நோயாளிகளுக்கு மனிதத்தை உணர்த்த உடனிருப்பவர்கள் மொட்டை அடித்துக் கொள்வதும், ‘விக்’ பொருத்த தலைமுடியை தானம் அளிப்பதும் சமீபத்தில் பெரிதும் காணப்படுகிறது. புற்றுநோய் விழிப்புணர்வு மாதங்களான பிப்ரவரி, அக்டோபர் மற்றும் `நோ ஷேவ் நவம்பர்’ ஆகிய மாதங்களில், மொட்டை அடித்தல், ஒரு மனிதாபிமான நிகழ்வாகவே உலகெங்கும் நடைமுறையில் உள்ளது.

- மெய்ப்பொருள் தேடல் தொடரும்...