
மன அழுத்தம், பதற்ற நிலை, தூக்கமின்மை மற்றும் பல மன நோய்களுக்கு மருந்தாகி வயது முதிர்ந்தவர் களுக்கும் பெரிதும் உதவுகிறது தோப்புக் கரணம்.
“அப்பனே அப்பனே... புள்ளை யாரப்பனே... போடவா தோப்புக் கரணம் போடவா..?” பிள்ளை யாரிடம் இப்படி வேண்டுவதாகப் பழைய திரைப்படப் பாடல் ஒன்று உண்டு.
இன்றும் வீடுகளில், பள்ளிகளில் மாணவர்கள் தவறு செய்யும்போதெல்லாம், அவர்களுக்குத் தரும் முதல் தண்டனையே தோப்புக்கரணம்தான்.
ஏன்... சமீபத்திய கோவிட் ஊரடங்கை மீறி, வெளியே சுற்றிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு தமிழ்நாடு போலீஸார் வழங்கிய தண்டனையும் இதேதான்.
கல்வியில் ஏற்றம்தரும் கணபதிக்கு நேர்த்திக் கடனாகவும், கல்வி கற்காத மாணவருக்கு தண்டனையாகவும் தோப்புக்கரணம் இருப்பது ஏன்?

தோப்புக்கரணம் போடுவது எப்போது தொடங்கியது என்பதற்கு சுவையான ஒரு புராணக்கதை உள்ளது. தவவலிமை மிகுந்த ததீசி முனிவர் ஒருமுறை தவறுசெய்ய, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திருமாலின் சக்ராயுதம் உடைந்துவிட, சிவபெருமானிடம் அதற்கு இணை யாக இருக்கும் சுதர்சனத்தைப் பெற வேண்டி கைலாயம் செல்கிறார் திருமால். அப்போது வாயிலில் நின்றிருந்த சிறுவன் விநாயகரைக் கவனிக்காமல் சென்றுவிடுகிறார்.
திருமாலின் வேண்டுதலில் மகிழ்ந்த சிவபெருமான் தனது சக்கரத்தை திருமாலுக்கு வழங்கிட, மகிழ்வுடன் வெளியே வந்த மாமன் திருமாலிட மிருந்த புதிய சுதர்சனத்தை விளை யாட்டாகப் பிடுங்கி வாயில் போட்டுக்கொள்கிறார் விநாயகர்.
உள்ளே சென்றபோது கவனிக் காமல் சென்ற தனது தவற்றை உணர்ந்த திருமால், மருமகனை மகிழ்விக்க தன் நான்கு கரங்களால் காதுகளைப் பற்றியபடி `தோர்பி கர்ணம்' என்று பலமுறை உட்கார்ந்து எழ, தன்னை மறந்து சிரித்த விநாயகனின் வாயிலிருந்து விழுந்த சக்கரத்தை திருமால் பெற்றதாகவும், அப்போதிருந்து தனது வேண்டுதலை நிறைவேற்ற விநாயகனை மகிழ்விக்க பக்தர்கள் தோப்புக்கரணம் போடுவது தொடங்கியதென்றும் கூறுகிறது இந்தப் புராணக்கதை.
உண்மையில், “தோர்பி கர்ணம்” என்ற வடமொழி சொல்லுக்கு, “காது களைப் பிடித்தவண்ணம்” என்று பொருளாம். ஆனால், இதை தண்டனையாகப் பள்ளிகளில் கொண்டுவந்ததற்கு வேறொரு காரணம் இருக்கிறது. காதுகளைப் பற்றி இழுப்பதால் மூளை சுறுசுறுப் படைகிறது என்பதால் ஆதியிலிருந்தே தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் தண்டனையாக இது இருக்கும் நேரத்தில், தமது மாநிலத்தின் பள்ளிகள் அனைத்திலும், `கணேஷ உடற்பயிற்சி' என்று மாணவர்களுக் கான தினசரி காலை நேர உடற்பயிற்சி யாகச் செயல்படுத்தி வருகிறது ஹரியானா அரசு. அதே வேளையில், இந்தத் தோப்புக்கரணத்தை `சூப்பர் ப்ரெயின் யோகா' என்று மேற்கத்திய நாடுகள் பிரபலப்படுத்திக் கொண்டாடுகின்றன.
அப்படி என்னதான் அறிவியல் இதில் அடங்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ளும் முன், தோப்புக் கரணத்தை எப்படிப் போட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்..
நிமிர்ந்து நின்றபடி இடதுகை கட்டை மற்றும் ஆள்காட்டி விரல் களால் வலதுகாதையும், அதேபோல் வலதுகை விரல்களால் இடது காதையும் லேசாக இழுத்தபடி, சிறிது அகட்டிய பாதங்களை நன்கு நிலத்தில் பதித்து, முழங்கால்களை மடக்கி உட்கார்ந்து எழ வேண்டும். அப்படி உட்காரும்போது மூச்சை உள்ளே இழுத்தும், எழும்போது மூச்சை மெதுவாக வெளியேற்றவும் வேண்டும் என்றும், இதை 7, 14, 21 என்ற எண் கணக்கிலோ, 10 நிமிடங் கள் வரையிலோ மேற்கொள்ளலாம் என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள். அதிலும் அதிகாலையில், காற்றோட்டமான சூரிய வெளிச்ச முள்ள இடத்தில், வெறும் வயிற்றில் இறுக்கமில்லாத ஆடைகளுடன் கிழக்கே பார்த்துச் செய்வது நலம் என்கிறார்கள்.
முறையாகத் தோப்புக்கரணமிடும் போது, கால் தசைகளுக்கும், முழங் கால் மற்றும் இடுப்பு எலும்புகளுக்கும் வலிமை கிட்டுகிறது. தசைகளின் ரத்த ஓட்டம் சீரடைவதால், இதய மற்றும் ரத்த நாளங்கள் ஆரோக்கிய மடைகின்றன. ஆழமான மூச்சால் நுரையீரல்களின் செயல்பாடு அதிகரித்து, உடலெங்கும் ரத்தச் சுத்திகரிப்பு நிகழ்கிறது. அத்துடன் அதிகாலை வெயில் சருமத்துக்கும், கண்களுக்கும் ஆரோக்கியத்தைக் கூட்டுகிறது என இந்த எளிய உடற்பயிற்சி மூலமாக உடலின் அனைத்து உறுப்புகளும் பலனடைந்து, உடல் ஆரோக்கியமும், ஆயுளும் கூடுகிறது என்பதால் தோப்புக்கரணம் என்பது வெறும் நம்பிக்கை மட்டு மல்ல, அதில் ஆரோக்கிய அறிவியலும் இருக்கிறது என்பது புரிகிறது.
இதைத்தான், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த ப்ரானிக் சிகிச்சை நிபுணரான மாஸ்டர் க்கோ சூய் (Choa Sui) தன்னுடைய புத்தகத்தில், `சூப்பர் ப்ரெயின் யோகா' என்று தோப்புக்கரணத்தைப் பற்றி குறிப் பிட்டு, `இப்பயிற்சியின் மூலம் உடலின் ஆற்றல்கள் ஒவ்வோர் இடத்துக்கும் சென்று, ஆரோக்கியமும் ஆத்மஞானமும் ஒன்றாகக் கிடைக்க உதவுகிறது' என்கிறார். மேலும், வலது காதுமடல் இடது மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இடது காதுமடல் வலது மூளையுடன் இணக்கப்பட்டுள்ளது என்றும் குறிப் பிடும் சூய், அக்குபஞ்சர் முறையால் விரல்களின் அழுத்தம் காதுமடல் களிலிருந்து மூளைக்குச் சென்று, மூளையின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது என்றும் குறிப்பிடுகிறார். இவரின் குறிப்புகள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி யாக மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் முடிவுகளும் வெளியிடப் பட்டன.
லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்த, டாக்டர் எரிக் ராபின்ஸ் மற்றும் யேல் பல்கலைக்கழக நரம்பியல் மருத்துவரான யூஜினியஸ் இருவரின் ஆராய்ச்சிகளும், இந்தத் தோப்புக் கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள பில்லியன்கள் கணக்கிலான நரம்புகள் சக்தி பெறுவதாகவும், இவற்றின் மூலமாக நினைவாற்றல், படைப்பாற்றல், சிந்திக்கும் திறன், தன்முனைப்பு அனைத்தும் கூடுவதாகவும் சொன்னதிலிருந்து, மேற்கத்திய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது நமது தோப்புக்கரணம்.

அத்துடன் பொதுவாக, மனிதனின் மூளையிலிருந்து வெளிவரும் ஆல்பா (Alpha), பீட்டா (Beta), டெல்ட்டா (Delta) மற்றும் த்தீட்டா (Theta) என்ற நான்குவிதமான மின்சுழற்சி அலை களில் ஆல்பா நிலையில் மூளை சிறப்பாகச் செயல்படுகி்றது என்றும், தோப்புக்கரணம் ஆல்பா நிலையை நன்கு அதிகரிப்பதால் ஆட்டிசம், ஏடிஹெச்டி, டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட கற்றல் குறைபாடுகளைக் களைய உதவுவதுடன், மூளையின் பினியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் செயல்பாடுகளையும் சேர்த்தே அதிகரிப்பதால் அல்சைமர் நோய், மன அழுத்தம், பதற்ற நிலை, தூக்கமின்மை மற்றும் பல மன நோய்களுக்கு மருந்தாகி வயது முதிர்ந்தவர்களுக்கும் பெரிதும் உதவுகிறது தோப்புக்கரணம்.
உண்மையில் நமது இடதுபக்க மூளை, Logical எனப்படும் காரணங் களையும், வலதுபக்க மூளை Intuitive எனப்படும் உணர்வுகளையும் செயல்படுத்த வல்லவை என்பதால், இவையிரண்டும் சம அளவில் இருந்தால் மட்டுமே சமநிலையான வாழ்வை வாழ முடியும் என்பதுடன் அதற்குத் தோப்புக்கரணம் பெரிதும் உதவுகிறது என்றும் புரிகிறது.
எளிதாகக் கூற வேண்டும் என்றால் இந்த அவசர வாழ்வில், நம் அனை வரின் முக்கியத் தேவைகளாக விளங்குபவை வெற்றி, மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி, ஆரோக்கியம் ஆகியன. இவையனைத்தும் ஒன்றாகக் கிடைக்க வேண்டுமென்றால் நம் அனைவருக்கும் தேவை `சூப்பர் ப்ரெயின்.'
அதற்கான அடித்தளம்தான் பிடிக்க எளிதான நமது எளிமையான பிள்ளையாரைப் போலவே, பிடிக்கும் படியாக இருக்கும் சூப்பர் ப்ரெயின் யோகா என்ற எளிதான இந்தத் தோப்புக்கரணம்.
- மெய்ப்பொருள் தேடல் தொடரும்...