பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
உறுதிமொழி:
Affirmation என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டென்றால், உங்களுக்குத் தேவையானதை, விருப்பமுள்ளதை, உங்களுடைய இலக்கை, இப்படி அனைத்தையும் வேண்டுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லையென்றால், கண்மூடி மேலே சொன்ன அனைத்தையும் மனத்திற்குள் சொல்லிக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படிச் செய்யுங்கள். இது, பாசிட்டிவ் அலையை உருவாக்கும். நம்முடன் நாமே பேசவில்லையெனில் எப்படி?

போனில் பேசுங்கள்:
நடைமுறையில் texting தான் சுலபமானது, சௌகர்யமானது. ஆனால், உங்களுக்கு புத்துணர்வு, மகிழ்ச்சி தரக்கூடிய நபர்களிடம் மாதத்திற்கு இரண்டு முறையாவது போனில் பேசுங்கள். மனம் லேசாகும்.
பாடல்கள் கேளுங்கள் / புத்தகங்கள் படியுங்கள்:
இப்போதைய சமூக வலைதளங்கள், நம்மை பாடல்கள் கேட்க விடுவதில்லை. பார்க்கும் பொழுதுபோக்கே நிறைய - யூடியூப், ட்விட்டர், முகநூல், டிக்டாக் இப்படி. தினமும் அலுவலகத்துக்கு பயணிப்பவர்களாவது பாடல்கள் கேட்பார்கள் என யூகிக்கிறேன். ஆனால் என்னைப்போல இல்லத்தரசிகள், சமையல் / வீட்டு வேலைகள் செய்யும்பொழுதோ அல்லது எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம்... பிடித்த, மகிழ்ச்சியான பாடல்கள் கேட்க வேண்டும். மன மகிழ்ச்சியோட இருக்க இது உதவும்.

நிகழுலகத்திற்கு நம் நினைவு திரும்புவதை, சிலசமயம் பாடல்களால்கூட தடுக்க முடியாது. ஆனால், சுவாரஸ்யமான புத்தகங்கள் நம்மை அதனுடைய உலகிற்கு அழைத்துச்சென்று விடும். இப்பொழுதெல்லாம் பல புத்தகங்கள் இலவசமாகவே உங்கள் கைகளில் வந்துவிடுறது - கிண்டில் ஆப் மூலம். அதனால் நிறைய புத்தகங்களைப் படியுங்கள்.
சமூக வலைதள மனக்கசப்பு:
பைசா மதிப்பு பெறாத சிறு சிறு விஷயத்திற்குக்கூட சில சமயம் சமூக வலைதளங்கள் நமக்கு மனக்கசப்பை உண்டாக்கிவிடும். நம்முடைய மகிழ்ச்சிக்குதான் நாம் சமூக வலைதளங்களில் இருக்கிறோம். அதுவே இல்லை என்றால், அதைத் தவிர்த்து விடுங்கள். சில குழுக்களிலிருந்து வெளியேறுவது, சிலவற்றை டீ ஆக்டிவேட் செய்வது, இப்படி எது தேவையோ செய்யுங்கள். நாம் தான் நமக்கு முக்கியம்.

நடைப்பயிற்சி:
வீட்டுவேலையே உடற்பயிற்சியாக இருக்கும்போது(?!), தனியாக எதற்கு செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றும். ஆனால், கடினமான உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும், நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். இதற்கு சற்று மெனக்கெட்டு பழகிவிட்டால், பிறகு உங்களால் விடமுடியாது. நடைப்பயிற்சி உடலுக்கு மட்டுமில்லாமல் மனத்துக்கும் தெம்பு கொடுக்கும்.
நீர்க்கச் செய்யுங்கள்:
இதை ஒரு தத்துவம் மாதிரி புரிந்துகொண்டு, எல்லா பிரச்னையையும் நீர்க்க வைத்துவிட்டீர்களானால், உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். ஆனால், நான் சொல்லவந்தது தத்துவம் இல்லை, ஒரு ஹேக்.
ஷாம்பு, பாத்திரம் தேய்க்க / பாத்ரூம் கழுவ / வீடு துடைக்க பயன்படுத்தும் திரவம் - இவை அனைத்தையும் நீர்க்கச்செய்து உபயோகியுங்கள்.
இருதரப்பிலும் கடுமையான விளைவு (harsh effects) ஒன்றும் இருக்காது.

கடாய் பொங்கல்:
இது நானே கண்டுப்பிடித்த hack . நீங்கள் ஏற்கெனவே இப்படித்தான் செய்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் எனக்கு சீனியர். நான் சமீபகாலமாகத்தான் இப்படிச் செய்கிறேன்.
காலை டிபனுக்கு பொங்கல், மதியம் லன்ச் பாக்ஸுக்கு சாதம் வேண்டும் என்றால், (குக்கர்ல நேரடியா அரிசி + பருப்பு வேகவெச்சிட்டம்னா) பொங்கல் செய்து முடிச்சபிறகு, அந்த குக்கரை கழுவி மறுபடியும் சாதம் வைக்க வேண்டும். நேரமும், வேலையும் அதிகமாகிவிடும். அதற்கு மொத்தமாக சாதம், மேல் தட்டில் பாசிப்பருப்பு இரண்டும் வேகவெச்சிடுங்க. குக்கர் ஆவியெல்லாம் அடங்கிய பிறகு, அரிசி + பருப்பு எந்த ரேஷியோ செய்வீர்களோ, அதை ஒரு கடாயில எடுத்து, நன்கு மசித்து, பிறகு தாளிச்சி பொங்கல் செய்துவிடுங்கள். இன்னொரு கடாயில், தக்காளி / லெமன் இப்படி ஏதோ ஒன்று ரெடி செய்து லன்ச் பாக்ஸ் கட்டிவிடுங்கள். நிறைய நேரம் மிச்சமாகும்.
காய்கறித் தோசை
தோசைதான் விரும்பிச் சாப்பிடுவாள் மகள். அதுவும் தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடிதான். சட்னி, குருமா எதுவுமே விரும்ப மாட்டாள். இதற்கு ஒரு ஹாக் கண்டுபிடித்தேன். கேரட், பீட்ரூட், இப்படி ஏதோ ஒரு காய்கறி + வெங்காயம் + தக்காளி + பூண்டு இவற்றை வதக்கி, அரைத்துக்கொள்ளவும். கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும். தோசை வார்த்து, இந்தக் கலவையை தோசை மேல் பரப்பி, மூடிபோட்டு வேகவைத்து, பாதியாக மடித்து எடுக்கவும். விரும்பிச் சாப்பிடுவார்கள்.

இட்லி மிளகாய்ப் பொடி:
இட்லியைவிட, இட்லிப்பொடிதான் பிடிக்கும் என் மகளுக்கு. இட்லிப் பொடியிலேயே இட்லி செய்து கொடுத்திடலாமான்னு டெரர்ராக தோணியிருக்கிறது எனக்கு. பிறகுதான், அவளுக்குப் பிடித்ததையே இன்னும் சத்துள்ளதா மாத்திக் கொடுத்தேன். வேர்க்கடலை, பொட்டுக் கடலை, பாதாம், முந்திரி இப்படி ஏதோ ஒன்றை (சுவை அதிகம் மாறாமல் இருப்பதற்கு) அல்லது அனைத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தண்ணீர் குடியுங்கள்:
நான் அடிக்கடி மறக்கும் விஷயங்களில் ஒன்று தண்ணீர் குடிப்பது. மகளும் அப்படியே. ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து வைத்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் குடித்து முடியுங்கள். குழந்தைகளுக்கும் பழக்குங்கள். “தண்ணியக் குடி தண்ணியக் குடி”ன்னு யாரும் சொல்றா மாதிரி வெச்சுக்காதீங்க (சிலேடை தான்!).
-வி. சுதா சத்யநாராயணா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.