Published:Updated:

உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory

உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory

உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory

`ங்கள் கோபத்துக்காக நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள்; உங்கள் கோபத்தாலேயே நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.’ - இது கௌதம புத்தரின் வைரமொழி. ஒரேயொரு கணத்தில் சுர்ரென்று கோபம் மூக்கின் மேல் வந்து உட்காரும்போது, விளைவுகளை நாம் யோசிப்பதில்லை; எதிரே இருப்பவர் யார், எவர் என்று பார்ப்பதில்லை. அதனால் ஏற்படுகிற இழப்பு எவ்வளவு பெரியது என்று கணக்குப்போடுவதில்லை. கோபம் எதிராளியைப் பாதிப்பதில்லை; தன்னையேதான் பாதிக்கும். இந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை.

மேற்கத்திய நாடுகளில் ஒரு நல்ல பழக்கம் உண்டு. பரிசளித்தல்... ஆங்கிலத்தில் `Gift-giving' என்பார்கள். பிறந்தநாள், திருமண நாள், பண்டிகைகளுக்கு மட்டுமல்ல... சின்னச் சின்ன வெற்றிகளை, நிகழ்வுகளைக்கூடக் கொண்டாடும்விதமாகப் பரிசு கொடுப்பார்கள். அது பிரியத்தின் வெளிப்பாடு. `நீ ஒரு முக்கியமான காரியத்தை, வெற்றிகரமாகச் செய்திருக்கிறாய். அதற்கு என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு அளிக்கப்படுவது. தன் மேல் மற்றவருக்கு இருக்கும் அன்பை, நேசத்தை, அக்கறையைப் புரிந்துகொள்ள பரிசு உதவும். ஆனால், ஒரு பரிசு ஓர் இளைஞனின் வாழ்க்கையையே மாற்றிவிட்ட விநோதக் கதை இது.

லண்டனில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தார்.  அவருக்கு ஒரே மகன். கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தான். தினமும் கல்லூரிக்குப் போகும் வழியில் கார்களை விற்கும் ஒரு பெரிய கடையைப் பார்ப்பான். அங்கே ஒரு ஸ்பெஷல் ஸ்போர்ட்ஸ் கார் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஒருநாள் அந்தக் கடைக்குப் போய் கார் டீலரிடம், அந்த ஸ்போர்ட்ஸ் காரின் விலையை விசாரித்தான். அடுத்தநாள் தன் அப்பாவிடம் சொன்னான்... ``அப்பா... நான் டிகிரி வாங்கிட்டேன்னா என்ன தருவீங்க?’’

``என்ன வேணும்?’’

``ரெண்டு தெரு தாண்டி ஒரு கார் டீலர் கடை இருக்கில்ல... அங்கே ஒரு ஸ்போர்ட்ஸ் கார் புதுசா வந்திருக்கு. வாங்கித் தருவீங்களா?’’

``முதல்ல நல்லா படிச்சு, டிகிரியை வாங்கு. அப்புறம் பார்க்கலாம்.’’ அப்பா மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் போய்விட்டார். 

இளைஞன் பரீட்சையில் பாஸாகிவிட்டான். அப்பா, எப்படியும் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கித் தந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தான். பட்டமளிப்பு விழா நடக்கும் நாளும் நெருங்கியது. அன்று காலை அப்பா  அவனை அழைத்தார். அவர் எந்த அளவுக்கு அவனை நேசிக்கிறார் என்பதைச் சொன்னார்; அவன் நன்கு படித்து பட்டம் வாங்கியதற்காக அவர் பெருமைப்படுவதாகச் சொன்னார். பிறகு அவனுக்கு ஒரு பரிசைக் கொடுத்தார். இளைஞன் ஆவலோடு, அதே நேரத்தில் சிறிது ஏமாற்றத்துடன் மேலே சுற்றியிருந்த வண்ணத் தாளைப் பிரித்தான். அதன் உள்ளேயிருந்தது புத்தம் புதிய ஒரு பைபிள் புத்தகம். அதன் மேல் அவன் பெயர் தங்க எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது.  

இளைஞன் கோபத்தோடும் ஆத்திரத்தோடும் அந்த பைபிள் புத்தகத்தை மேஜை மேல் போட்டான். ``இவ்வளவு பணம் சம்பாதிச்சு என்ன செய்யப் போறீங்க... எனக்கு ஒரு கார் வாங்கிக் குடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க... போயும் போயும் ஒரு பைபிளைப் போய் வாங்கித் தந்திருக்கீங்களே...  நீங்களுமாச்சு, உங்க பணமுமாச்சு...’’ என்றுவிட்டுக் கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான். அப்பா, கோபம் தீர்ந்து மகன் திரும்பி வருவான் என்று காத்திருந்தார். அவன் வரவேயில்லை. லண்டனைவிட்டே கிளம்பிவிட்டான்.

நண்பர்களின் உதவியுடன் வேறோர் ஊருக்குப் போனான். ஒரு தொழில் தொடங்கினான். அதில் வெற்றி பெற்றான். அவனுக்கென்று ஒரு வீடு, குடும்பம் எல்லாமும் ஆனது. ஆனால், என்ன காரணமோ அப்பாவைப் பார்க்கவே தோணவில்லை. மனைவி, அவன் அப்பா என்ன ஆனார் என்று பார்த்துவிட்டு வரக் கூடாதா என அடிக்கடி நச்சரிக்க ஆரம்பித்தாள். அவனுக்கும் அவர் நினைவு மெள்ள மெள்ள வாட்ட ஆரம்பித்தது. ஒரு நாள் ஊருக்குக் கிளம்பிப் போய் அப்பாவைப் பார்க்க முடிவு செய்தான். அதற்கான ஏற்பாடுகளில் அவன் இறங்கியபோது அவனுக்கு ஒரு தந்தி வந்தது... ஒரு சட்ட அலுவலகத்திலிருந்து!

அந்தத் தந்தியில் அவனுடைய தந்தை இறந்துவிட்டதாகவும், அவர் தன் சொத்து முழுவதையும் அவன் பெயரில் எழுதிவைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இளைஞன் ஆடிப்போனான். அப்பாவை நினைத்துக் கதறியழுதான். ஊருக்குக் கிளம்பினான்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே அவனுடைய பழைய நினைவுகள் அவனைப் பாடாகப்படுத்த ஆரம்பித்தன. அப்பா, தனக்குப் பரிசாகக் கொடுத்த பைபிள் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தான். அது, அப்பாவின் அலமாரியில் பத்திரமாக இருந்தது. ஆசையோடு அதை எடுத்துத் தடவிப் பார்த்தான். கண்ணீரோடு மெள்ள ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினான். ஓர் இடத்தில் அப்பா தன் சிவப்புப் பேனாவால் ஒரு பைபிள் வசனத்தை அடிக்கோடிட்டிருந்தார். அது, மத்தேயு 7:11-ல் இருந்த வசனம்... `தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாக இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருள்களைத் தரத் தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அல்லவா?’

அந்த வசனத்தை அவன் வாசித்துக்கொண்டிருக்கும்போதே, பைபிளின் பின் அட்டையிலிருந்து ஒரு சாவி நழுவிக் கீழே விழுந்தது. அவன் அதை எடுத்துப் பார்த்தான். அது ஒரு கார் சாவி. மெள்ள பைபிளின் கடைசிப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தான். அதில் ஒரு ரசீது இருந்தது... அது முன்பொரு காலத்தில் அவன் பார்த்துவைத்திருந்த கார் டீலர் கடையின் ரசீது. ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வாங்கியதற்கான ரசீது அது... அவன் பட்டம் வாங்கிய அதே தேதி. காருக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதற்கு சாட்சியாக கடையின் சீலும், டீலரின் கையெழுத்தும் அதில் இருந்தன.

***    

அடுத்த கட்டுரைக்கு