Published:Updated:

``அப்பா... கடவுள் நம்மைப் பார்த்துக்கிட்டிருக்கார்!’’ - மகன் சொன்ன நீதிக்கதை! #MotivationStory

``அப்பா... கடவுள் நம்மைப் பார்த்துக்கிட்டிருக்கார்!’’ - மகன் சொன்ன நீதிக்கதை! #MotivationStory
``அப்பா... கடவுள் நம்மைப் பார்த்துக்கிட்டிருக்கார்!’’ - மகன் சொன்ன நீதிக்கதை! #MotivationStory

`என்னுடைய பெற்றோர்தான் என் கதாநாயகர்கள். அவர்களைத் தவிர வேறு ஒருவரைக்கூட என்னால் ஹீரோவாகப் பார்க்க முடியவில்லை’ - ஒரு பேட்டியில் முன்னாள் அமெரிக்க பேஸ்கெட் பால் வீரர் மைக்கேல் ஜோர்டன் (Michael Jordan) உணர்ச்சி பொங்கச் சொன்ன வாக்கியம் இது. சிறு வயதில் நம் குழந்தைகளுக்கு நாம் எதையெல்லாமோ சொல்லித் தருவோம். அவற்றை மறந்தும்விடுவோம். ஆனால், பிள்ளைகள் அவற்றை அப்படியே நினைவில் வைத்திருப்பார்கள்; கடைப்பிடிக்கவும் செய்வார்கள். அதோடு நாம் கற்றுக் கொடுக்கும் விஷயங்களை முதலில் நாம் கடைப்பிடிக்கிறோமா என்றும் கவனித்துக்கொண்டிருப்பார்கள். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், தவறு செய்வதற்குத் துணிந்துவிடுவோம். அப்போதெல்லாம் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்த நல்லவற்றை நினைவில் கொண்டு வந்தாலே போதும்... தவறு செய்ய மாட்டோம். இந்த நீதியை எளிமையாக எடுத்துச் சொல்லும் கதை இது.

அது ஸ்பெயினிலிருக்கும் ஒரு கிராமம். அங்கே ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு ஒரே மகன். அவருக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது. ஒவ்வொரு நாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னர் மகனை அழைப்பார். ஏதாவது ஒரு கதை சொல்வார். அவ்வப்போது சில நீதிகளையும் கற்றுக் கொடுப்பார்.

ஒருநாள் இரவு, வழக்கம்போல் அந்த விவசாயி தன் மகனுக்குக் கதை சொன்னார். சொல்லி முடித்ததும், ``கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் ஒவ்வொருவரையும், நாம் செய்யும் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது...’’

மகன் கேட்டான்... ``அப்பா... கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கார்னு சொல்றீங்க... ஆனா, என்னால அவரை எங்கேயுமே பார்க்க முடியலையே..!’’

``அது அப்படித்தான் மகனே... நம்மால் கடவுளைப் பார்க்க முடியாது. ஆனா, அவர் நம்மையும் நாம செய்யற எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கார்...’’

அந்தச் சிறுவனின் மனதில் இந்த விஷயம் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதற்குப் பிறகு அவன் அவரிடம் எதையும் கேட்காமல் உறங்கிவிட்டான்.

***

சில மாதங்கள் கழிந்தன. பஞ்சம் வந்து மக்களை வாட்டியெடுத்தது. ஸ்பெயினில் அந்த விவசாயி இருந்த கிராமத்திலிருந்து பலர் பஞ்சம் பிழைக்க வெளியூர்களுக்குக் கிளம்பிப் போனார்கள். அந்த விவசாயிக்கு மட்டும் ஊரைவிட்டுப் போக மனமில்லை. கையில் வைத்திருந்த தானியங்களைச் சிக்கனமாகச் செலவழித்து எப்படியோ குடும்பத்தை ஓட்டினார். ஒரு கட்டத்தில் தானியங்களும் தீர்ந்து போயின. அடுத்த நாள் உணவுக்கு வழியே இல்லை.

பக்கத்து ஊரிலிருந்த ஒருவரின் வயலில் மட்டும் சோளம் செழிப்பாக விளைந்திருப்பதாகக் கேள்விப்பட்டார் விவசாயி. அன்று இரவு, ஊர் அடங்கிய பிறகு ஒரு அரிவாளையும் ஒரு சாக்குப் பையையும் எடுத்துக்கொண்டார். விழித்திருந்த மகன் ``எங்கேப்பா போறீங்க..?’’ என்று திரும்பத் திரும்பக் கேட்டு அனத்தியதால், அவனையும் அழைத்துக்கொண்டார். மெள்ள நடந்து இருவரும் பக்கத்து கிராமத்துக்குப் போனார்கள்.

ஊருக்கு வெளியே அந்தக் குறிப்பிட்ட வயல்வெளி தெரிந்தது. விவசாயி, ஒரு மரத்தில் ஏறிக்கொண்டார். தன் மகனையும் கையைப் பிடித்து ஏற்றி, ஒரு கிளையில் உட்காரவைத்தார்.

``என்னப்பா பண்றீங்க?’’

``ஸ்... பேசாதே...’’ என்ற விவசாயி சுற்றிலும் பார்த்தார். ஜன சந்தடி எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். பிறகு மெதுவான குரலில் சொன்னார்... ``நான் கீழ இறங்கி சோளப் பயிரை அறுக்கப் போறேன்... நீ கவனமா எல்லா பக்கமும் பார்த்துக்கிட்டே இரு. யாராவது வந்தாங்கன்னா எனக்கு விசிலடிச்சு சிக்னல் கொடு...’’ என்று சொல்லிவிட்டு மரத்திலிருந்து கீழே இறங்கினார். வயலுக்குள் அவர் நுழையப் போகும் சமயத்தில் பையன் குரல் கொடுத்தான்... ``அப்பா... கொஞ்சம் இருங்கப்பா...’’

மகனின் குரல் கேட்டு அவர் பதறிப்போனார். ``என்னாச்சு... ஏன் கூப்பிடுறே?’’

``ஒருத்தர் நம்மைப் பார்த்துக்கிட்டிருக்காருப்பா...’’

விவசாயி, அவசர அவசரமாக மரத்தின் மேல் ஏறினார். சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினார். அவர் கண்ணுக்கு யாருமே தெரியவில்லை.

``யாருப்பா நம்மைப் பார்க்கிறாங்க... எனக்கு யாரையும் பார்க்க முடியலையே...’’

``கடவுள்... அப்பா நீங்க சொன்னீங்கல்ல? கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கார். நம்மை கவனிச்சுக்கிட்டே இருக்கார்னு. அப்படின்னா, இப்போ நீங்க திருடப் போறதையும் அவர் பார்த்துக்கிட்டுதானே இருப்பார்?’’

விவசாயி தலைகுனிந்தார். மகனை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார்.