Published:Updated:

முறிந்த உறவை ஒட்டவைத்த `தனியொருவன்’! - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

முறிந்த உறவை ஒட்டவைத்த `தனியொருவன்’! - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
முறிந்த உறவை ஒட்டவைத்த `தனியொருவன்’! - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

`நாம் எண்ணற்ற சுவர்களை எழுப்புகிறோம்; பாலங்களைக் கட்டத் தவறிவிடுகிறோம்’ - விஞ்ஞானி ஐசக் நியூட்டன் வெகு எளிமையாகச் சொல்லியிருக்கும் வாசகம்... மிகச் சிறந்த தத்துவமும்கூட. நம் உறவினர்கள், நண்பர்கள் சூழ்ந்த சுற்றத்தைச் சாதாரணமாக நினைத்துவிடுகிறோம். உறவின் மதிப்பை, அருமையை நம்மில் பெரும்பாலானோர் உணர்வதில்லை. அதே நேரத்தில் உறவுகளை வெகு ஜாக்கிரதையாகக் கையாள வேண்டியதும் அவசியம். ஒரு நட்பை, உறவை எத்தனையோ வருடங்கள் கட்டிக்காப்பாற்றி வந்திருப்போம். அதை உடைக்க ஒரு விநாடி போதும்; ஒரே ஒரு சொல்லில்கூட உதறிவிட முடியும். ஆனால், ஒன்று சேர்ப்பது கடினம். திரும்பப் புதுப்பிக்கப்பட்டாலும், பழைய வலுவோடு அந்த உறவு இருக்காது. அலுவலகத்தில் நட்பாகப் பழக ஆரம்பித்து வாழ்நாள் முழுக்க நண்பராக உடன் வருபவர்கள் இருக்கிறார்கள். பல வருடங்கள் ஒன்றாகப் பணியாற்றியிருந்தாலும், முகமோ பெயரோகூட நினைவில் நிற்காத மனிதர்களும் இருக்கிறார்கள். தனி மரம் தோப்பாகாது. சமூகத்தோடு இணைந்து வாழ்வதுதான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றும். சில நேரங்களில் முறிந்த உறவை ஒட்டவைக்க சில நல்ல மனிதர்கள் உதவுவதும் உண்டு. அன்பின் அருமையைப் புரிந்தவர்களால்தான் இதற்கு உதவவும் முடியும். உறவைப் பேணவேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் கதை இது. 

போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள சின்னஞ்சிறு கிராமம் அது. அங்கே இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ரொம்ப காலமாக ஒன்றாக வாழ்ந்தவர்கள்; ஒரே நிலத்தில் விவசாயம் செய்து வந்தவர்கள்... இடையில் ஏற்பட்ட சின்ன மனக்கசப்பு இருவரையும் பிரித்துவிட்டிருந்தது. அவர்களின் தந்தையின் காலத்திலிருந்து 40 வருடங்களாக ஒன்றாக இருந்த கூட்டுக் குடும்பம் அது. ஒரே நிலத்தில் விவசாயம் செய்வார்கள். வீட்டிலிருக்கும் தளவாடங்களை, வேளாண்மைக்கான ஆயுதங்களை அண்ணனோ, தம்பியோ இஷ்டத்துக்கு எடுத்துக்கொண்டு போவார்கள். வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுப்பதிலோ, பொருள்களை வாங்குவதிலோ இருவருக்குமிடையில் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. அப்படி கல் கோட்டைபோல கெட்டியாகப் பிணைந்திருந்த அவர்கள் உறவு, சின்ன வார்த்தைத் தகராறால் முறிந்து போயிருந்தது.  

அது ஒரு காலை நேரம். மூத்த சகோதரன் ஜானின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தான். வெளியே ஓர் ஆள் நின்றிருந்தார். தோளில் ஒரு பை, கையில் கருவிகளை வைப்பதற்கான ஒரு பெட்டியும் இருந்தன. வந்தவர் `வணக்கம்’ சொன்னார். 

``ஐயா... நான் ரொம்ப தூரத்துலருந்து வர்றேன். நல்லா தச்சு வேலை செய்வேன். சின்ன வேலையா இருந்தாக்கூட பரவாயில்லை. ஏதாவது வேலை குடுங்களேன்...’’ 

ஜான், வந்தவரை ஏற இறங்கப் பார்த்தான். அவர் முகம் பளிச்சென்று தெளிவாக இருந்தது. கண்களில் களங்கம் எதுவும் தெரியவில்லை. அவர் தோற்றமும் எளிய உடையும் அவர் மேல் ஒரு நம்பிக்கையை வரவழைத்திருந்தன. 

``வேலைதானே... தர்றேன். இந்தப் பக்கம் வாங்க...’’ என்று அந்த தச்சுத் தொழிலாளியை அழைத்துச் சென்றான் ஜான். ``இங்கே பாருங்க... சின்னதா வாய்க்கால் ஓடுதுல்ல...’’

வந்தவர் பார்த்தார். ஜானின் வீட்டுக்கு அருகே ஒரு வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. ``ஆமாங்கய்யா...’’ 

``அந்த வாய்க்காலுக்கு அந்தப் பக்கம் ஒரு வீடு இருக்குல்ல... அது என் தம்பியோட வீடு. போன வாரம் வரைக்கும் எங்களுக்கு நடுவுல புல்வெளியா இருந்த இடம் அது. அவன் ஒரு புல்டோசரை எடுத்துக்கிட்டுப் போய் கொஞ்ச தூரத்துல இருக்குற ஆத்து மதகை உடைச்சு விட்டுட்டான். அதுலருந்து கெளம்பின தண்ணி, இப்போ எங்களுக்கு நடுவுல வாய்க்காலா ஓடுது. என் மேல இருக்குற வெறுப்புலதான் என் தம்பி அப்படி செஞ்சிருக்கான். அது எப்படியோ போகட்டும். எனக்கு அவன் இருக்குற திசையைப் பார்க்கவே பிடிக்கலை. நீங்க ஒண்ணே ஒண்ணு செஞ்சா போதும். இந்த இடத்துல எட்டடி உயரத்துல ஒரு வேலியை செஞ்சுடுங்க. மரத்தால செஞ்சா நல்லா இருக்கும். அவனும் என்னைப் பார்க்காம நிம்மதியா இருப்பான்...’’ 

``எனக்கு உங்க நிலைமை புரியுது. இந்த வேலையை நீங்களே நினைக்காத அளவுக்கு பிரமாதமா பண்ணிடுறேன். எங்கேயெல்லாம் குழி தோண்டலாம், எந்த மரத்தை வெட்டலாம்னு எனக்கு அடையாளம் மட்டும் காட்டுங்க... போதும்.’’ 

ஜான், அவருக்கு சில இடங்களை அடையாளம் காட்டினான். வேலி எப்படி இருக்கவேண்டும், எந்தெந்த மரங்களைப் பயன்படுத்தலாம் என்கிற குறிப்புகளைக் கொடுத்தான். அவனுக்கு அன்றைக்கு அவசரமாக அருகிலிருக்கும் நகரத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. ``நான் சாயந்திரம் வந்துடுவேன். அதுக்குள்ள வேலையை முடிச்சிடுவீங்களா?’’ 

``முடிஞ்சிடும் சார்...’’ 

ஜான் சந்தோஷமாக தலையை அசைத்துவிட்டு, வீட்டுக்குள் போனான். வந்திருக்கும் தச்சுத் தொழிலாளிக்கு உணவும், தேநீரும் தரச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனான். அந்தத் தச்சுத் தொழிலாளி தன் கருவிகளை எடுத்துக்கொண்டு, மரங்களை வெட்ட, அதை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வர என வேலையில் மூழ்கிப் போனார். 

மாலையில் சூரியன் மறையும் நேரத்துக்கு வீடு திரும்பினான் ஜான். அங்கே அவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அப்போதுதான் அந்தத் தச்சுத் தொழிலாளி தன் வேலையை முடித்திருந்தார். ஜானின் முகம் முதலில் இறுகி பிறகு தளர்ந்தது. அங்கே அவன் எதிர்பார்த்ததுபோல வேலி இருக்கவில்லை. வாய்க்காலுக்கு மேல் ஒரு மரப்பாலம் உருவாகியிருந்தது. மிக அழகான பாலம் அது. பிடித்துக்கொண்டு நடக்க ஏதுவாக இரு பக்கமும் கைப்பிடிக் கட்டைகளெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. 

ஜான் பேச வார்த்தை வராமல், பாலத்தின் மேல் ஏறி நின்றான். மறுபக்கம் அவன் தம்பி நின்றுகொண்டிருந்தான். அங்கேயிருந்து கைகளை நீட்டிக்கொண்டு ஓடி வந்தான். ஜானும் அவனைப் பார்த்துவிட்டு வேகமாக பாலத்தின் மேல் நடந்தான். 

``அண்ணா, என்னை மன்னிச்சிடுண்ணா... நான் நம்ம உறவைப் பிரிக்கணும்கிறதுக்காக மதகை உடைச்சு, வாய்க்காலை வரவழைச்சேன். நீ நம்ம உறவு அறுந்து போயிடக் கூடாதுன்னு பாலம் கட்டியிருக்கே. பெரியவங்க, பெரியவங்கதாண்ணா...’’ ஜானைக் கட்டிக்கொண்ட தம்பியின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. 

ஜானுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இருவரும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்பிப் பார்த்தபோது, அந்த தச்சுத் தொழிலாளி, தன் பையையும், கருவிகள் பெட்டியையும் எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாராக இருந்தார். 

``சார்... என் கூலியைக் குடுத்தீங்கன்னா, நான் கெளம்பிடுவேன்.’’ 

``அதுக்குள்ள என்ன அவசரம்... இன்னும் இங்கே நீங்க செய்ய நிறைய வேலையிருக்கு...’’ 

``எனக்கும் இங்கே இருக்கணும்னுதான் ஆசை சார். ஆனா, இது மாதிரி இன்னும் நிறைய பாலங்களை நான் கட்டவேண்டியிருக்கு.’’