Published:Updated:

காலம் முழுக்க மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன தேவை? - பாடம் சொல்லும் கதை! #FeelGoodStory

காலம் முழுக்க மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன தேவை? - பாடம் சொல்லும் கதை! #FeelGoodStory
காலம் முழுக்க மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன தேவை? - பாடம் சொல்லும் கதை! #FeelGoodStory

`வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு வாழ்க்கைத் துணையை திரும்பத் திரும்ப, ஏராளமான முறை காதலிக்க வேண்டும்’ - திருமண வாழ்க்கைக்குப் புது அர்த்தம் சொல்லிச் சென்றிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மிக்னான் மெக்லாஹ்லின் (Mignon McLaughlin). வாழ்க்கைத்துணையின் மேல் கடைசிவரை காதல் இல்லாமல் போவதுதான் இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். வாழ்க்கையில் பல தருணங்களில் நாம் ஏமாற்றப்பட்டிருப்போம், மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருப்போம், எரிச்சலுக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருப்போம்... இவற்றையெல்லாம் நாம் திரும்ப நினைத்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நமக்கு ஒளிமயமான, அழகான, அற்புதமான ஒரு காலம் இருந்திருக்கும். அதைத்தான் அவ்வப்போது நினைத்துப் பார்க்க வேண்டும். மண வாழ்க்கைக்கு இந்த மனப்பான்மை மிக மிக அவசியம். நம்மில் யாருமே மிகச் சரியானவர்கள் கிடையாது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குறை நிச்சயமிருக்கும். அந்தக் குறைகளோடு நம்மை அங்கீகரிப்பவர்கள்தான் நம்மிடம் மாறாத நேசம் கொண்டிருப்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதற்குத் தேவை விட்டுக்கொடுத்துப் போகும் மனோபாவம். விட்டுக்கொடுத்துப் போவது நம் எல்லோருக்குமே எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் கதை இது.

அது, ஒரு தேவாலயம். அன்றைக்கு அங்கே ஒரு திருமணம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை இளைஞன், கருநீல பேன்ட்டும், கோட்டும் அணிந்து கந்தர்வனைப்போல் காட்சியளித்தான். மணப்பெண், வெள்ளை நிற கவுனில் ஒரு தேவதையாகத் தெரிந்தாள். இருவரும் அழகோ அழகு! `பொருத்தமான ஜோடி’ என்று வந்தவர்களெல்லாம் பேசிக்கொண்டார்கள்.  இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். நட்பாக ஆரம்பித்த உறவு, திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. இருவருக்குமே வாழ்க்கைத்துணை பொருத்தமாக அமைந்தது என்கிற எண்ணம் ஒரு பெருமிதத்தைத் தந்திருந்தது.

சில மாதங்கள் கழிந்தன. ஒரு மாலை நேரம். அந்தப் பெண் தன் கணவனிடம் வந்தாள். ``ஏங்க ஒரு விஷயம்...’’

``சொல்லுப்பா...’’

``இன்னிக்கி ஒரு பத்திரிகையில ஒரு கட்டுரை படிச்சேன். அதாவது, `உறுதியான திருமண வாழ்க்கையை மேற்கொள்வது எப்படி?’-ங்கிறதுதான் அந்தக் கட்டுரையோட தலைப்பு. அதுல ஒரு முக்கியமான பாயின்ட் சொல்லியிருந்தாங்க...’’ அவள் தொண்டையைச் செருமிக்கொண்டு தொடர்ந்தாள். ``உங்களுக்கு என் மேலயோ, எனக்கு உங்க மேலயோ எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துற விஷயங்களையெல்லாம் ஒரு லிஸ்ட்டா எழுதணுமாம். அதைப் படிச்சுப் பார்த்துட்டு, அந்தக் குறைகளையெல்லாம் எப்படிச் சரிபண்றதுனு ரெண்டு பேரும் பேசித் தீர்க்கணுமாம். அந்தக் குறைகளையெல்லாம் களைஞ்சுட்டாலே நம்ம திருமண வாழ்க்கை அற்புதமானதா மாறிடுமாம்...’’

கணவன், அவள் சொல்வதை கவனமாக `உம்’ கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான். 

``நாம ரெண்டு பேரும் அப்படி ஒரு லிஸ்ட்டை எழுதுவோமா... நான், எனக்கு உங்க மேல இருக்குற குறையையெல்லாம் பட்டியல் போடுறேன். அதே மாதிரி நீங்களும் என்கிட்ட பிடிக்காததையெல்லாம் எழுதுங்க... என்ன ஓ.கேவா?’’

கணவன் அதற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் தனித்தனி அறைக்குள் நுழைந்தார்கள். மனைவி, தன்னை கணவன் எரிச்சல்படுத்திய, கோபப்படுத்திய சம்பவங்களையெல்லாம் அசைபோட்டாள். அவனிடம் அவளுக்குப் பிடிக்காததையெல்லாம் ஒரு பேப்பரில் எழுத ஆரம்பித்தாள். கணவனும் மனைவியிடம் பிடிக்காததையெல்லாம் யோசித்தபடி இருந்தான்.

அடுத்த நாள் காலை, இருவரும் காலை டிபன் பொழுதில், டைனிங் டேபிளில் சந்தித்துக்கொண்டார்கள். ``என்னங்க... நேத்து நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல... லிஸ்ட் ரெடி பண்ணிட்டீங்களா?’’

`ஆமாம்’ எனத் தலையசைத்தான் கணவன்.

``முதல்ல நீங்க லிஸ்ட்டைப் படிக்கிறீங்களா, நான் படிக்கட்டுமா?’’

``நீயே படி.’’

அவள் அந்த பேப்பரை எடுத்தாள். கிட்டத்தட்ட மூன்று பக்கங்களுக்கு அவளிடம் `குறைகள் பட்டியல்’ இருந்தது. அவள் கணவனிடம் அவளுக்குப் பிடிக்காத ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க ஆரம்பித்தாள். அவள் படிக்கப் படிக்க, கணவனின் கண்களில் நீர் நிறைந்துபோனது. அவன் முகத்தைப் பார்த்தவள், ``என்ன ஆச்சு?’’ என்று கேட்டாள்.

``ஒண்ணுமில்லை. நீ படி...’’

அவள் மேலே தொடர்ந்தாள். தன் கையில் வைத்திருந்த மூன்று பக்க குறைப் பட்டியலையும் படித்து முடித்தாள். பிறகு, அந்த பேப்பரை மடித்து, கணவனிடம் கொடுத்தாள்.

``சரி... இப்போ நீங்க உங்க லிஸ்ட்டை எடுத்துப் படிங்க. அப்புறமா ரெண்டு பேரும் பேசி, ஒரு முடிவுக்கு வருவோம்...’’

கணவன் சொன்னான்... ``நீ வெச்சிருக்குற மாதிரி என்கிட்ட எந்த லிஸ்ட்டும் இல்லை. நான் முதன்முதல்ல உன்னை எப்படி அன்போட, காதலோட பார்த்தேனோ அப்படியேதான் இப்பவும் நீ இருக்கே. எனக்காக நீ எதையும் மாத்திக்கவேண்டிய அவசியமில்லை. நீ அழகானவ, அன்பானவ. எனக்காக உன்னோட எந்த நடவடிக்கையையும் மாத்திக்க வேண்டாம். ப்ளீஸ்...’’

அவளுக்கு அப்போதுதான் தன் கணவன், தன் மேல் வைத்திருக்கும் அன்பின், காதலின் ஆழம் புரிந்தது. இப்போது அவள் கண்களிலும் நீர் திரள ஆரம்பித்திருந்தது.

***