Published:Updated:

உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

Published:Updated:
உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

`ஒரு வெற்றி பெற்ற மனிதனாவதற்கு முயற்சி செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக, மதிப்புமிக்க மனிதனாவதற்கு முயற்சி செய்யுங்கள்’ என்று குறிப்பிடுகிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein). `மதிப்புமிக்க’ என்று ஐன்ஸ்டீன் குறிப்பிடுவதில் அர்த்தமிருக்கிறது. நம்மில் பலருக்கு வாழ்க்கையின் மதிப்பு தெரிவதில்லை. அதாவது, தங்கள் மதிப்பை தாங்களே உணராதவர்களாகத்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். இந்த உலகில் யாரும் யாரைவிடவும் குறைந்தவரில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. `ஒன்றுக்கும் உதவாது என நினைக்கும் சிறு துரும்புகூட பல் குத்த உதவும்’ என்று சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர். இதை மனதில் கொள்வோம். நம்மை நாமே மதிக்கக் கற்றுக்கொள்வோம். எதற்கும், யாருக்கும் அஞ்சாமல் நம் திறமையின் மேல் நம்பிக்கைவைப்போம். நாம் விலை மதிப்பில்லாதவர்கள்; தனித்துவமானவர்கள். சிலரால் நம்மைச் சரியாக மதிப்பிட முடியாமல் போகலாம். நம் மதிப்பு அவர்களுக்குத் தெரியாததுதான் அதற்குக் காரணமாக இருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் புறக்கணிக்கப்பட்டால், மனதை விட்டுவிடக் கூடாது. `அவர்கள் நம்மைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’ என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நம்மை நாமே எடை போட்டுக்கொண்டு, நம் மதிப்பைத் தெரிந்து வைத்திருக்கவேண்டியதும் அவசியம். இந்தக் கதை அந்த யதார்த்தத்தை உணர்த்துகிறது.  

சின்ன வயதில் பெரிய சந்தேகம்! சில நேரங்களில் அல்ல... பல நேரங்களில் இது நடப்பதுண்டு. ஒரு சிறுவனுக்கும் அப்படிச் சந்தேகம் ஒன்று வந்தது. சமையலறையில் வேலையாக இருந்த பாட்டியிடம் போனான். 

``பாட்டி... ஒரு சின்ன சந்தேகம்...’’ 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``என்ன கண்ணு?’’ 

``பாட்டியம்மா... என் வாழ்க்கையின் மதிப்பு என்ன?’’ 

பாட்டி புரியாமல் பேரனைப் பார்த்தார். 

``இல்லை பாட்டி... புரியலையா? சரி... இப்படிக் கேட்கிறேன். என்னோட மதிப்பு என்ன?’’ 

ஒரு கணம் தன் செல்லப் பேரனை உற்றுப் பார்த்த பாட்டி ஒரு புன்முறுவலை வெளிப்படுத்தினார். ``ஒரு நிமிஷம் இரு. இதோ வந்துடுறேன்’’ என்று சொல்லிவிட்டு, ஓர் அறைக்குள் போனார். வெளியே வரும்போது அவர் கையில், மோதிரம் வைக்கிற சைஸில் சின்னஞ்சிறு நகைப் பெட்டி ஒன்று இருந்தது. அதை எடுத்து பேரனிடம் நீட்டினார். சிறுவன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதற்குள் ஒரு கல் இருந்தது. சாதாரணக் கல் அல்ல, வைரமாகவோ நவரத்தினம் போன்ற ஓர் ஆபரணக்கல்.

``வாழ்க்கையோட மதிப்பு என்னானு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி, இந்தக் கல்லோட மதிப்பு என்னனு தெரிஞ்சுக்கிட்டு வா... போ!’’ என்றார் பாட்டி. 

பையன் யோசனையோடு பாட்டியைப் பார்த்தான். 

``என்ன பார்க்குறே... உண்மையைத்தான் சொல்றேன். கெளம்பு. ஆனா, ஒரு முக்கியமான விஷயம், இந்தக் கல்லை எந்தக் காரணம் கொண்டும் வித்துடக் கூடாது. புரியுதா?’’ 

``சரி பாட்டி.’’ 

சிறுவன் கிளம்பிப் போனான். முதலில் அவன் கண்ணில்பட்டவர் ஒரு பழ வியாபாரி. அவரிடம் சிறுவன் பேசினான்... ``இந்தக் கல்லு என்ன விலையிருக்கும்?’’ 

அதை ஆராய்ந்து பார்த்த பழ வியாபாரி, ``அப்பிடி ஒண்ணும் விசேஷமான கல்லாத் தெரியலையேப்பா. உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. இந்தக் கல்லைக் குடு. அதுக்கு பதிலா பன்னண்டு ஆரஞ்சுப் பழம் தர்றேன்.’’ 

``இல்லைங்கய்யா. இதை விக்கக் கூடாதுனு என் பாட்டி சொல்லியிருக்காங்க’’ என்ற சிறுவன் அங்கிருந்து நகர்ந்தான். 

அடுத்து சிறுவன் ஒரு காய்கறி வியாபாரியிடம் போனான். தன் கையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் கல்லைக் காட்டி, ``இது எவ்வளவு மதிப்புப் பெறும்?’’ என்று கேட்டான். காய்கறி வியாபாரி, கல்லை வாங்கிப் பார்த்துவிட்டு, சிறுவனை மேலும் கீழும் பார்த்தார். பிறகு, ``இதுக்கு ஈடா ஒரு மூட்டை உருளைக்கிழங்கு தர்றேன், வாங்கிக்கிறியா?’’ என்று கேட்டார். 

``மன்னிச்சுக்கோங்க பெரியவரே... இதை என்னால விக்க முடியாது’’ என்று சொல்லிவிட்டு கிளம்பிய சிறுவன், ஒரு நகைக் கடைக்காரரிடம் போனான். ``ஐயா... இந்தக் கல்லுக்கு எவ்வளவு தருவீங்க?’’ என்று கேட்டான். 

நகைக் கடைக்காரர் அந்தக் கல்லை வாங்கிப் பார்த்தபோதே அவர் கண்கள் ஆச்சர்யத்தாலும் பேராசையாலும் விரிந்தன. நன்கு சோதித்துப் பார்த்துவிட்டு, ``நல்லது தம்பி. இந்தக் கல்லைக் குடு. 10 லட்ச ரூபா தர்றேன்’’ என்றார். 

``உங்க உதவிக்கு ரொம்ப நன்றி ஐயா. இதை நான் விக்கிறதுக்கு வரலை.’’ 

``சரி... ஒரு பை நிறைய தங்கக் காசு தர்றேன். எனக்கே இதை வித்துடு...’’

``ஐயய்யோ... இது என் பாட்டியோடது. அதை விக்கிற அதிகாரம் எனக்கு இல்லை. இந்தக் கல் எவ்வளவு விலை பெறும்னு தெரிஞ்சுக்க வந்தேன். அவ்வளவுதான்... மன்னிச்சுக்கங்க’’ என்று சொல்லிவிட்டு சிறுவன் கடையைவிட்டு வெளியே வந்தான். 

நகரின் கடைத்தெருவில் நடந்து நடந்து, ஆபரணக் கற்கள் விற்கும் ஒரு பெரிய கடைக்கு வந்து சேர்ந்தான். அதற்குள் நுழைந்தான். கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் கல்லைக் கொடுத்து, ``இது என்ன விலைக்குப் போகும்?’’ என்று கேட்டான். 

ஆபரணக் கற்கள் விற்கும் முதலாளிதான் கல்லாவில் அமர்ந்திருந்தவர். வைரம், வைடூரியம், பவளம், ரத்தினம்... எனப் பல கற்களை வாழ்நாளில் பார்த்திருந்தவர். ஒவ்வொரு ஆபரணக்கல்லின் மதிப்பையும் நன்கு அறிந்திருந்தவர். அவர், வெகு நேரம் சிறுவன் கொண்டு வந்திருந்த கல்லை ஆராய்ந்தார். கடைசியில் சொன்னார்... ``தம்பி... நான் பெரிய பணக்காரன்தான். ஆனா, என்னோட மொத்த சொத்தை வித்தாலும் இந்தக் கல்லை என்னால வாங்க முடியாது. ஏன்... என் சொத்தைப்போல பத்து மடங்கு சொத்தைக் கொடுத்தாலும் இந்தக் கல்லுக்கு ஈடாகாது’’ என்றவர், கல்லை சிறுவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். 

அவர் சொன்னதைக் கேட்டு சிறுவன் திகைத்துப் போனான்; குழப்பமடைந்தான். வீடு திரும்பியவன், பாட்டியிடம் நடந்ததையெல்லாம் சொன்னான். பிறகு தன் பழைய கேள்வியைத் திரும்பக் கேட்டான்... ``இப்பவாவது சொல்லுங்க பாட்டி, என் வாழ்க்கையின் மதிப்பு என்ன?’’ 

``இப்பவே உனக்குப் புரிஞ்சிருக்கணுமே கண்ணு, புரியலையா? உன் கையில இருக்குற கல்லுக்கு ஒவ்வொரு வியாபாரியும் ஒரு விலையைச் சொன்னார். அது அவங்க தப்பில்லை. அவங்க, தங்களுக்குத் தெரிஞ்ச அளவீடு மூலமா இந்தக் கல்லைப் பார்த்திருக்காங்க. 12 ஆரஞ்ச், ஒரு மூட்டை உருளைக்கிழங்கு, 10 லட்ச ரூபா பணம், ஒரு பை தங்கக்காசு... இப்படியெல்லாம் விலை போய், கடைசியில விலை மதிக்க முடியாததுல வந்து நிக்குது இதனோட மதிப்பு. அந்தக் கல் மாதிரிதான் நீயும். விலை மதிக்க முடியாதது உன்னோட வாழ்க்கை. ஆனா, மனிதர்கள் அவங்கவங்களோட புரிதல், பொருளாதார நிலை, அவங்களுக்குக் கிடைச்ச தகவல், உன் தோற்றம் இதையெல்லாம் வெச்சுத்தான் உன்னை மதிப்பிடுவாங்க. அதுக்காக மனசை விட்டுறாதே. வாழ்க்கையில உன்னோட உண்மையான மதிப்பை உணர்ந்த யாரோ ஒருத்தரை நீ நிச்சயம் சந்திக்கத்தான் போறே...’’ 

சிரித்தபடி சொன்ன பாட்டி, பேரனின் தலை முடியை செல்லமாகக் கலைத்துவிட்டார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism