Published:Updated:

``இந்த பூமியில யாரும் அநாதை இல்லை!’’ - 75 ’நல்லடக்கம்’ செய்திருக்கும் அய்யாசாமி

இவர், தனது சேவைக்காக `நன்னெறிச் செம்மல்’, `கருணை மறவன்’, `மனிதரில் புனிதர்’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

``இந்த பூமியில யாரும் அநாதை இல்லை!’’ - 75 ’நல்லடக்கம்’ செய்திருக்கும் அய்யாசாமி
``இந்த பூமியில யாரும் அநாதை இல்லை!’’ - 75 ’நல்லடக்கம்’ செய்திருக்கும் அய்யாசாமி

``இந்த உலகத்துல ஒரு மனுஷன் அனுபவிக்கிற மிகப் பெரிய வலி எது தெரியுமா..? புறக்கணிப்பு. தோள் சாய தோழனோ, தோழியோ இல்லைன்னா... அந்த வாழ்க்கை நரகத்துக்குச் சமம். பணத்துக்காக நாளு, கிழமை பார்க்காம ஓடுறோம். `யாருமே தேவையில்லை, பணம் மட்டும் இருந்தா போதும்’னு நினைக்கிறோம். ஆனா, பணத்தைவெச்சுக்கிட்டு எல்லாத்தையும் வாங்கிட முடியுமா... அன்பு, பிரியம், நட்பு, தோழமை இதையெல்லாம் காசு கொடுத்து வாங்கிடுவீங்களா? செத்துப்போனா, தூக்கிப்போட நாலு பேரு வேணும். அந்த நாலு பேரைச் சம்பாதிச்சுட்டா போதும். அநாதைப் பிணமா போகிற நிலைமை மட்டும், இங்கே யாருக்கும் வந்துடக் கூடாது’’ இப்படி சக மனிதர்கள் மீதான நேசத்தோடும் அக்கறையோடும் பேசுகிற அய்யாசாமி, நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 

சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறவினர்களால் கைவிடப்பட்டு உயிரிழப்பவர்கள்; விபத்தில் இறந்துபோன அடையாளம் தெரியாதவர்கள்... இப்படி எத்தனையோ ஆதரவில்லாதவர்களின் உடல்களின் இறுதிப் பயணத்துக்குத் தோள் கொடுத்து உதவுபவர். `நாங்கள் இருக்கிறோம்’ என்ற வாட்ஸ்அப் குரூப்பை ஆரம்பித்து, அதன் மூலம் பலருக்கும் உதவிவருபவர். பெற்றெடுத்த தாய், தந்தையரையே பாதுகாக்கத் தவறும் பிள்ளைகளுக்கு மத்தியில், ஆதரவற்றோரின் இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்திவருபவர். அவருடைய சேவை குறித்து கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தோம்... 

``டெல்லியில, ஒரு தனியார் கம்பெனியில சூப்பர்வைஸரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட பத்து வருஷம்... மாமா பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வாழ்க்கை அதன் போக்குல போய்க்கிட்டே இருந்துச்சு. ஒரு கட்டத்துல `நான் யாரு?’ங்கிற கேள்வி என்னைத் துளைக்க ஆரம்பிச்சது. `இங்கே, இந்த உலகத்துல யாருக்காக என்ன பண்றோம்... ஏன் வாழுறோம்... வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்’னு பல கேள்விகள். அதுக்குப் பிறகு வேலையில பெருசா ஈடுபாடு ஏற்படலை. `இந்த வாழ்க்கை இப்படியே போயிடுமோ’னு கவலை வந்துடுச்சு. வேலையை விட்டுட்டு, மயிலாடுதுறைக்கு வந்துட்டேன். கொஞ்சநாள் கழிச்சு, ஒரு தனியார் கம்பெனியில மேனேஜர் வேலை கிடைச்சுது. எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருந்துச்சு. ஆனா, `நான் யாரு’ங்கிற அந்தக் கேள்வி மட்டும் என்னைத் துரத்திக்கிட்டே இருந்துச்சு. 

எனக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஆன்மிகம் தொடர்பா நிறையப் படிப்பேன். ஒருமுறை, காஞ்சி மகா பெரியவரின் `தெய்வத்தின் குரல்’ படிச்சுக்கிட்டு இருந்தேன். அதுல `அநாத ப்ரேதே ஸம்ஸ்காரா: அச்வமேத பலம் லபேத்’ என்கிற வரிகள் மட்டும் என்னை என்னவோ பண்ணுச்சு. திரும்பத் திரும்ப அந்த வாக்கியத்தையே உச்சரிச்சுக்கிட்டு இருந்தேன். அதாவது `அநாதைப் பிணங்களை அடக்கம் செய்யறது 100 அஸ்வமேத யாகம் நடத்துறதுக்குச் சமம்’னு அது சொல்லுது. 

இந்த பூமியில பொறந்த யாருமே அநாதை இல்லை. சிலர் மட்டும் இறந்த பிறகு ஏன் அநாதை ஆகணும்னு யோசிச்சேன். அந்த நேரத்துலதான் கடலூர் மாவட்டத்தை `தானே’ புயல் தாக்கிச்சு. ஒரு மீட்பு முகாமுக்குப் போயிருந்தேன். அப்போதான், அநாதைப் பிணங்களோட உண்மையான நிலைமையைப் பார்த்தேன். அது, என் மனசை ரொம்ப பாதிச்சிடுச்சு. நான் யாரு... என்ன செய்யணும்னு எனக்குள்ளே ஒரு தெளிவு வந்துடுச்சு. அன்னைக்கே மயிலாடுதுறைக்குப் போனேன். நகராட்சி சுகாதார ஆய்வாளர்கிட்ட மனு ஒன்றைக் கொடுத்து, `அநாதைப் பிணங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கணும்’னு கேட்டேன். என்னோட மனுவை ஏத்துக்கிட்டு, ஒப்புதல் வழங்கினாங்க. `இனி, அநாதைப் பிணங்களை அடக்கம் செய்யறது என்னோட சமூகப் பணி’னு எனக்கு நானே உறுதிமொழி எடுத்துக்கிட்டேன். இதுவரைக்கும் 75 பேரை நல்லடக்கம் செஞ்சிருக்கேன்...” 

தான் சமூக ஆர்வலராக மாறிய, பின்னணியைச் சொன்ன அய்யாசாமியிடம், ``அநாதைப் பிணங்களைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கு எப்படிக் கிடைக்கும்... அதற்கு யாரெல்லாம் உதவுவார்கள்?’’ என்று கேட்டோம். 

``போலீஸ் கண்டுபிடிச்ச பிணங்களைப் பற்றி, சுகாதார ஆய்வாளர் தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பாரு. அது வெளியான மூணு நாளைக்குள்ளே யாராவது சொந்தக்காரங்க வந்து வாங்குறாங்களானு பார்ப்போம். யாரும் வரலைன்னா, சுகாதார ஆய்வாளரே எனக்குத் தெரியப்படுத்துவாரு. தகவல் கிடைச்சவுடனே பூ , மாலை, சந்தனம், பால், புடவை, வேட்டி எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு அநாதைப் பிணம் இருக்குற இடத்துக்குப் போயிடுவோம். பிணத்தை ஆம்புலன்ஸ்ல ஏத்துக்கிட்டு, தீப்பாய்ஞ்ச அம்மன் கோயிலுக்குப் பக்கத்துல இருக்குற மயானத்துல அடக்கம் செஞ்சுடுவோம். பொதுவா, பிணத்தை எரிக்க மாட்டோம், புதைக்கத்தான் செய்வோம். அந்த நேரத்துல எங்களோட போலீஸ் அதிகாரிகளும் இருப்பாங்க. பிணங்களை எடுத்துட்டுப் போறதுக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தோட அமரர் ஊர்தி இலவசமா கிடைக்கும். என்னோட நண்பர்கள் பழைய வேட்டி, புடவை கொடுத்து உதவுறாங்க. அதனால சுமை தெரியறதில்லை. 

ஆரம்பத்துல, `இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத வேலை?’னு நண்பர்கள் சொன்னாங்க. ஆனா, தொடர்ந்து நான் செயல்படுறதைப் பார்த்துட்டு தன்னார்வலர்கள் சிலர் உதவிசெய்ய முன் வந்தாங்க. கிங்ஸ் ரோட்டரி கிளப்புல என்னை இணைச்சுக்கிட்டேன். அதனால, ரோட்டரி சங்க உறுப்பினர்களும் உதவுவாங்க. இப்போ, நல்ல உள்ளம் படைச்ச பல பேருகிட்டே இருந்து உதவிகள் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. வெளியில மட்டும் இல்லை... இப்போ வீட்டுக்குள்ளேயிருந்தும் உதவிகள் கிடைக்குது. என்னோட மனைவி லதா, வாழ்க்கைத் துணையாக மட்டுமில்லாம என் சமூக சேவையிலும் துணையாக இருக்காங்க. இதைவிட  மனுஷனுக்கு வெறென்ன வேணும்? இப்போதான் வாழ்க்கை அர்த்தம் உள்ளதா தெரியுது!” மனநிறைவோடு பேசுகிறார் அய்யாசாமி. 

இவர், தனது சேவைக்காக `நன்னெறிச் செம்மல்’, `கருணை மறவன்’, `மனிதரில் புனிதர்’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். சமூகத்தை மாற்றுபவர்கள் மாமனிதர்கள். சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என முயல்பவர்கள் நேசத்துக்குரிய மனிதர்கள். அய்யாசாமி இரண்டாவது ரகம்!