Published:Updated:

அன்று பாரிஸ் கார்னர்... இன்று தி.நகர்... சென்னையின் பெஸ்ட் ஷாப்பிங் ஸ்ட்ரீட்!

அன்று பாரிஸ் கார்னர்... இன்று தி.நகர்... சென்னையின் பெஸ்ட் ஷாப்பிங் ஸ்ட்ரீட்!
அன்று பாரிஸ் கார்னர்... இன்று தி.நகர்... சென்னையின் பெஸ்ட் ஷாப்பிங் ஸ்ட்ரீட்!

வீடு வீடாகச் சென்று பொருள்களை விற்றுக்கொண்டிருந்த காலம், வாரம் ஒருநாள் மட்டும் களைகட்டும் வாரச்சந்தை, தெருவுக்கு ஒரு கடை, கடைகள் நிறைந்திருக்கும் ஒரு தெரு, ஷாப்பிங் மால், இப்போது இன்டர்நெட் ஷாப்பிங்... இப்படி ஷாப்பிங் பல காலகட்டங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், தெருமுனையில் இருக்கும் குட்டிக்குட்டிக் கடைகளுக்குச் சென்று பேரம் பேசி பொருள்களை வாங்குவதில்தான் பலரும் பரமதிருப்தியடைகிறார்கள்.

`என்னதான் மால்களில் கிடைக்கும் ஒரு கர்ச்சீஃப்பை 300 ரூபாய் கொடுத்து வாங்கினாலும், அதே விலையில் ரங்கநாதன் தெருவில் வாங்கும் ஒரு குர்த்திக்கு ஈடாகுமா? அதிலிருக்கும் `கிக்' வேறெதிலும் இருக்காது' என்பது 90's கிட்ஸ் மைண்ட்வாய்ஸ். `அப்படி என்னதான் இருக்கிறது இந்த பாரிஸ் கார்னரிலும் தி.நகரிலும்?' என்ற கேள்விக்குரிய பதிலையும், இந்த இடங்கள் எப்படி இவ்வளவு பெரிய ஷாப்பிங் மையமாக மாறின என்பதைப் பற்றியும் பார்க்கலாம்...

பாரிஸ் கார்னர்:

இப்போது இருக்கும் தி.நகர், பனகல் பார்க்குகெல்லாம் முன்னோடி ஜார்ஜ் டவுன். 1600-களில், பெரும்பாலான இந்திய மக்கள் குவிந்திருந்த இடம் முத்தையால்பேட்டை. மக்கள் எண்ணிக்கை அதிகம் இருந்த காரணத்தால், இதை `பிளாக் டவுன் (Black Town)' என்று பிரிட்டிஷார்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களின் கிழக்கு இந்திய நிறுவனத்தின் பண்டகசாலையை (Warehouse) இங்குதான் அமைத்தார்கள். இதனால், வர்த்தக அளவில் மாபெரும் வளர்ச்சியை இந்த இடம் பெற்றது. இந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது, அவர்கள் இங்கு அமைத்த துறைமுகம்தான். உடை முதல் உணவு வரை அனைத்துப் பொருள்களின் அங்காடி, இங்கு நிறைந்திருந்தது. மக்கள் எளிதாகப் பொருள்களை வாங்குவதற்கு ஏற்ற இடமாகவும் இது இருந்தது.

1787-ம் ஆண்டு, பிரிட்டிஷ் வர்த்தக வியாபாரியான தாமஸ் பாரி என்பவரால், East India Distilleries (EID) எனும் வர்த்தகக் கட்டடம் கட்டப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் பல்வேறு வகையான தொழில்கள் தன் முதல் தடத்தைப் பதித்தன. அதில் மிகவும் முக்கியமானது, `உரம் உற்பத்தி'. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பல வர்த்தகப் படைப்புக்குக் காரணமாக இருந்த இந்தப் பாரி கட்டடம், காலப்போக்கில் அடையாளச் சின்னமாகவே மாறிவிட்டது. 1911-ம் ஆண்டு, `இந்தியப் பேரரசர்' என்று மகுடம் சூட்டப்பட்ட `ஐந்தாம் ஜார்ஜின்' நினைவாக, இந்த இடம் `ஜார்ஜ் டவுன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெருமாள் முதலி தெரு, ஆண்டர்சன் தெரு, மின்ட் தெரு என, சுமார் 25 சிறிய வீதிகளைக்கொண்டிருக்கும் இந்த இடத்தின் தனிச்சிறப்பு, ஒவ்வொரு தெருவிலும் ஒரே பொருள்களைக்கொண்ட கடைகள் மட்டுமே இருப்பதுதான். இங்கு ஆடை, ஆபரணம், பாத்திரம், வாகன உதிரி பாகம் என அனைத்துப் பொருள்களையும் ஹோல்சேலாகவும் ரீடெயிலாகவும் வாங்கிக்கொள்ளலாம். எந்நேரமும் மக்கள் கூட்டத்துக்கு அளவில்லாமல் இருக்கும் இங்கு, இன்றும் `சைக்கிள்ரிக்‌ஷா' இயங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது, அனைவராலும் `பாரிஸ் கார்னர்' என்றே அழைக்கப்படுகிறது.

வட இந்தியர்களின் ஆதிக்கம் இங்கு அதிகம் என்பதால், தென்னிந்தியப் பொருள்களுக்கு கொஞ்சம் டிமாண்ட்தான். முழு பாரிஸ் கார்னர் கடைகளைச் சுற்றிப்பார்க்கவே ஒரு நாள் நிச்சயம் போதாது. 19-ம் நூற்றாண்டில் இங்குதான் முதல் பட்டுப்புடவை கடை அமைத்தனர் என்பது கூடுதல் இன்ஃபோ.

தி.நகர்:

சென்னை ஷாப்பிங்னாலே இப்போ தி.நகர்தான். வார இறுதிநாளில் நடந்து செல்லக்கூட சிரமமாக இருக்கும் தி.நகர் ரங்கநாதன் தெருவில், மூன்றே மூன்று கடைகளோடு கனரக வாகனங்கள் இயங்கிக்கொண்டிருந்தன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், அப்படித்தான் இருந்தது என்று `தியாகராய நகர் அன்றும் இன்றும்' என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார் நல்லி சில்க்ஸின் நிறுவனர் சின்னசாமி செட்டியார். அதிலிருந்து...

``இன்றைய ஷாப்பிங் உலகின் கிங்கான தி.நகர் ஒரு காலத்தில் ஏரியாகத்தான் இருந்தது. தற்போதுள்ள மேற்குமாம்பலம், 1923 வரை `மாம்பலம்' என்றே அழைக்கப்பட்டது. அங்கிருந்து வள்ளுவர்கோட்டம் வரையிலான நீண்ட நிலப்பரப்பு `லாங் டேங்க்' (Long Tank) அல்லது `லாங் லேக்' (Long Lake) என்றழைக்கப்பட்டது. ஜஸ்டிஸ் பார்ட்டி (Justice Party) அன்றைய மெட்ராஸ் ஆட்சிப்பொறுப்பைக்  கைப்பற்றியதும், `நகர திட்டமிடலின்' ஒரு பகுதியாய், லாங் லேக் பரப்பளவை, மக்கள் வாழும் சிறுநகரமாக மாற்றியமைத்தனர். இதைத்தான், மெட்ராஸின் `முதல் திட்டமிட்ட நகரம்' என்றழைக்கப்படுகிறது. குறுகியநாளில் வீடு, பள்ளி, பூங்கா (பனகல்), மருத்துவமனை, கோயில், கடைகள் என மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்திசெய்யும் வளர்ச்சிபெற்ற குறுநகரமாக மாறியது.

`Father of Justice Party' என்றழைக்கப்பட்ட இந்தக் கட்சியின் முதன்மைத் தலைவரான `சர் பிட்டி தியாகராயா'வின் நினைவாகவே இதற்கு `தியாகராய நகர்' எனப் பெயர் சூட்டப்பட்டது. இதைச் சுற்றியுள்ள பனகல் பார்க், உஸ்மான் ரோடு, பாண்டிபஜார் போன்ற பெயர்களும், அன்று ஆட்சிசெய்த தலைவர்களின் நினைவாக வைத்தவைதாம். நகரத்தினுள் அமைக்கப்பட்ட முதல் பேருந்துநிலையம் தி.நகர் பேருந்துநிலையம்தான். சிவாஜி கணேசன், கண்ணதாசன், காமராஜர் போன்ற பல பிரபலங்களின் வீடுகளை இங்கு காண முடியும். இதற்குக் காரணமும் இந்தப் பேருந்துநிலையம்தான். போக்குவரத்து வசதி அவர்களுக்கு ரொம்ப முக்கியமாச்சே!

1928-ம் ஆண்டு நல்லி சில்க்ஸ் திறக்கப்பட்டது. தொடர்ந்து நாயுடு ஹால் தன் தடத்தை இங்கு முதலில் பதித்தது. பிறகு, கும்பகோணம் பாத்திரக்கடை, கல்யாண் ஸ்டார் மற்றும் லிப்கோ புத்தகக்கடை ஆகிய மூன்று கடைகள் ரங்கநாதன் தெருவில் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலிருந்து வந்து, இங்குப் பலரும் வணிகம் செய்யத் தொடங்கினர். நடுத்தரக் குடும்பங்கள் அதிகம் இருந்த இடம் என்பதால், அவர்களுக்கு ஏற்றதுபோல் விலைகளும் மலிவாக இருந்தன. தற்போது இந்தியாவிலேயே அதிக ரெவின்யூ கொடுக்கும் மிகப்பெரிய ஷாப்பிங் மையமாக மாறியிருக்கிறது தி.நகர்."

ஆடை, ஆபரணம், இணை ஆடைகள், பாத்திரம், புத்தகம் என அனைத்தையும் மிகவும் மலிவான விலையில் இங்கு வாங்கலாம். என்னதான் விலை குறைவாக இருந்தாலும், நாம் என்றைக்குமே இந்தச் சிறுதொழில் செய்யும் வியாபாரிகளிடம் `பேரம்' பேசாமல் வாங்கினால் முழு நிம்மதி இருக்காதுபோல! தற்போது எல்லாவிதமான விலைகளிலும் பொருள்கள் இங்கு கிடைக்கின்றன. இதனால்தான் அனைத்து மக்களும் தி.நகரில் குவிகின்றனர். 

மேலும், மலிவான விலையில் ஆடை, ஃபேன்சி நகைகள், காலணிகள், மொபைல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் வாங்குவதற்கு பாண்டிபஜார் மிகவும் சிறந்தது. உயர்ரக பொருள்கள் வாங்க பனகல் பார்க் செல்லலாம். இவை மட்டுமல்ல, மிகவும் குறைந்த விலையில் மின்னணு சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருள்களும் வாங்க ரிச்சி ஸ்ட்ரீட், `நம்பர் 1' சாய்ஸ். எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் இந்த ஸ்ட்ரீட், இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய எலெக்ட்ரானிக் மார்க்கெட். மேலும், டிரெண்டி டிசைன்களில் காட்டன் துணிகளை ஹோல்சேலாக வாங்குவதற்கு எழும்பூர் பாந்தியன் ரோடை தவிர, பெஸ்ட் ஆப்ஷன் இல்லை. 

இவற்றில் நீங்கள் போக நினைக்கும் ஸ்ட்ரீட் எது? இதேபோல் ஒவ்வோர் ஊரிலும் பல தெருக்கள் உள்ளன. ஹிஸ்டரியைப் புரட்டிப் பார்க்கலாமே... உங்கள் ஊரின் ஷாப்பிங் வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது?