Published:Updated:

சூஃபி துறவி கொண்டுவந்த அந்த 7 விதை... இந்தியாவுக்கு காபி வந்த கதை!

சூஃபி துறவி கொண்டுவந்த அந்த 7 விதை... இந்தியாவுக்கு காபி வந்த கதை!
சூஃபி துறவி கொண்டுவந்த அந்த 7 விதை... இந்தியாவுக்கு காபி வந்த கதை!

சூஃபி துறவி கொண்டுவந்த அந்த 7 விதை... இந்தியாவுக்கு காபி வந்த கதை!

`காலையில் எழுந்ததும் சூடா ஒரு கப் காபி குடிக்கலைனா அந்த நாளே ஓடாது!', `ரொம்ப டென்ஷனா இருக்கு, ஒரு கப் காபி சாப்ட்டு வரலாம். வாடா மச்சான்!'... இப்படி ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் காபிக்கும் நமக்கும் இருக்கும் கதைகள், காதல்கள் ஏராளம். அலுவலக மீட்டிங், விருந்தினர்களின் வருகை, விழாக்களில் உபசரிப்பு என எந்த நிகழ்வுகளிலும், யாராவது வராமல் மிஸ்ஸானாலும், காபியின் பிரசென்ஸ் மிஸ்ஸாகாது. பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, ``இப்படிப்பட்ட அற்புதமான காபியை யாருடா கண்டுபிடிச்சது?" என்று கேட்டுக்கொண்டே ருசித்திருப்போம். கண்டுபிடித்தவருக்கு நன்றி சொல்லவேண்டும் என எண்ணினால், `ஆடுகளுக்கு'ச் சொல்லுங்கள்.

வரலாறு:

9-ம் நூற்றாண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் (தற்போதைய எத்தியோப்பியா) கல்டி என்ற ஆடு மேய்ப்பவர், தன் ஆடுகள் புதுவிதமான பழங்களை உண்பதையும், அதைச் சாப்பிட்ட பிறகு அந்த ஆடுகள் அனைத்தும் வழக்கத்துக்கு மாறாக சுறுசுறுப்பாக இருப்பதையும் கவனித்தார். கல்டியும் அந்தப் பழங்களைச் சாப்பிட்டார். புத்துணர்ச்சியூட்டும் மணமும் வித்தியாச சுவையும் கல்டிக்கு முழு மனநிறைவை கொடுத்தன. பிறகு, தனக்குத் தெரிந்த துறவியிடம் இந்தப் பழங்களைச் சுவைக்கக் கொடுத்தார். அவர், அந்த அருமையான நறுமணம் பழத்திலிருந்து வரவில்லை; அதனுள் இருக்கும் விதையிலிருந்துதான் வருகிறது என்பதை உணர்ந்து, அந்த விதைகளை அரைத்து, அதை நீரில் கரைத்துப் பானமாக்கினார். உலகின் முதல் `கப் ஆஃப் காபி' அதுதான்.

இதையடுத்து, இஸ்லாமியர்கள் பரவியிருந்த இடங்களில் இந்தப் பானமும் பரவியது. ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களுக்கு இந்தப் பானம் குடிப்பதற்கு அனுமதியில்லை. 1607-ம் ஆண்டு ஆய்வுப்பயணம் மேற்கொண்ட ஜான் ஸ்மித் என்பவரால், `காபி' புது உலகுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. 1690-ம் ஆண்டு, வணிகரீதியாக முதல்முதலில் டச்சுக்காரர்களால் காபிச்செடிகள் பயிரிடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டன.

1713-ம் ஆண்டு, பிரெஞ்சு மன்னன் 14-ம் லூயிக்கு, காபிச்செடி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. அவருடைய ஆட்சியில்தான், முதன்முதலில் காபியோடு `சர்க்கரை' கலக்கப்பட்டது என்கிற வரலாறும் உண்டு. 1822-ம் ஆண்டு, `மாதிரி எஸ்ப்ரெஸ்ஸோ மெஷின் (Prototype Espresso Machine)' பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்டது. 1938-ம் ஆண்டு பிரேசிலில் ஏற்பட்ட அளவுக்கு மீறிய காபி உற்பத்திப் பிரச்னையைச் சரிசெய்யும் வகையில், அந்நாட்டு அரசுடன் இணைந்து `இன்ஸ்டன்ட் காபி' பவுடரை முதன்முதலில் தயார்செய்தது `நெஸ்லே' நிறுவனம்.

ஏன் `காபி' என்ற பெயர்?

இது அரேபியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பானம் என்பதால், முதலில் இதை அவர்கள் `கஹுவா (அரேபிய அர்த்தம் - விதையிலிருந்து உருவாக்கப்படும் பானம்)' என்றே அழைத்தார்கள். இது `கஹியா (பசியைப் போக்குவது)' எனும் வினைச்சொல் மூலம் மருவிய வார்த்தை. இதுவே நாடுவிட்டு நாடு சென்று, இன்று `காபி' என்று அனைவராலும் பொதுவாக அழைக்கப்படுகிறது.

எப்படி இந்தியாவுக்கு வந்தது?

17-ம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலம் சிக்மகளூரிலிருந்து பாபா பூடான் எனும் சூஃபி துறவி `ஹஜ்' செயற்பாட்டுக்காக மெக்கா பயணித்தார். தனது வேலைகளை முடித்துவிட்டு, Yemen வழியாக இந்தியாவுக்குப் பயணிக்கும்போது, ஏதோ ஒரு விதையை அரைத்துப் பொடியாக்கி நீரில் கலந்து தரும் பானம் ஒன்றைக் கவனித்தார். அதைக் குடித்தும் பார்த்தார். புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய இந்தப் பானத்தை இந்தியாவுக்கும் கொண்டுவர நினைத்தார். ஆனால், அரேபியர்கள் தங்களின் காபி விதைகளைக் கொடுக்க மறுத்தார்கள். ஆனாலும், 7 வறுக்கப்படாத விதைகளை யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து எடுத்து இந்தியா வந்தடைந்தார் பாபா. அவற்றை சிக்மகளூரில் விதைத்தார். அவர், அன்று விதைத்த அந்த 7 விதைகளே இன்று கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு என, தென்னிந்தியப் பகுதிகளில் பரவியுள்ளன. இப்படித்தான் மெள்ள மெள்ள அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டது காபி. 

ஃபேக்ட்ஸ்:

  • அரசவை, வீடுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்தப் புத்துணர்ச்சி பானம், 1475-ம் ஆண்டு, அன்றைய ரோமானியப் பேரரசின் தலைநகரான கான்ஸ்டான்டினோப்பிளில் (Constantinople) `முதல் காபி ஷாப்' தொடங்கப்பட்டது.  
  • உலகளவில் 80 நாடுகளில் காபிச்செடிகள் பயிரிடப்படுகின்றன.
  • உலகளவில் ஆண்டுக்கு சுமார் 150 மில்லியன் காபி மூட்டைகள் தயாராகின்றன. ஒரு மூட்டையில் 60 கிலோ பவுடர்கள் அடங்கும்.
  • பிரேசில், வியட்நாம், கொலம்பியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்துதான் சுமார் 60 சதவிகித பவுடர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • ஆண்டுதோறும் மூன்று லட்சம் டன் பவுடர்களை உற்பத்திசெய்து, உலகளவில் 5 வது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா.
  • இதில் அராபிக்கா, ரோபுஸ்டா என்று 2 இனங்கள் இருக்கின்றன. ரோபுஸ்டா வகையைவிட அராபிக்கா இனம் அதிக சுவை தரும்.
  • எண்ணெய்க்கு அடுத்து, வர்த்தகத் தயாரிப்பில் 2 ம் இடத்தில் இருப்பது `காபி'தான்.

இப்பவே சூடா ஒரு கப் காபி குடிக்கணும்போல தோணுதுல?!

அடுத்த கட்டுரைக்கு