சினிமா
Published:Updated:

சொல்லிசை மன்னர்கள்!

சொல்லிசை மன்னர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லிசை மன்னர்கள்!

ராப்

‘`புத்தகங்களைத் தள்ளிவைத்து
கால்களைத் துள்ளவைத்து
தாளங்களைக் காதில்கேட்டு
ஆரம்பித்தோம் நடனமாட
அவமானங்கள் சூழ்ந்தாலும்
அவமரியாதையால் வீழ்ந்தாலும்
தாழ்ந்தாலும் துவண்டாலும்
எழுந்து நின்றோம் எங்கள் நடனத்தால்...’’

சொல்லிசை மன்னர்கள்!

மின்சார ரயிலின் தாளத்துக்கு ஏற்ப சொல்லிசைச் சொற்கள் தெறித்து எதிரொலிக்கின்றன. தலையில் டியூராக்கும் ஸ்நாப் பேக் தொப்பிகளும் நெற்றிகளை மறைத்திருக்க, வண்ணமயமான ஆடைகளோடு சிலர் நடனமாடிக்கொண்டிருக்க, பூம்பாக்ஸ் அருகில் அமர்ந்து பீட்பாக்ஸ் செய்கிறார் ஒருவர்.

திடீரென  போன் வருகிறது, `விக்ஸ் அண்ணா... அம்மா ஓகே சொல்லிட்டாங்க. நல்ல டிசைனா போட்டுவிடுண்ணா’ என்ற குரல் கேட்கிறது. `சூப்பர் ப்ரோ’ என மகிழ்ச்சியில் துள்ளியெழுந்து ஸ்ப்ரே கேனைக்கொண்டு கிராஃபிட்டி தீட்டுகிறார் மற்றொருவர். பூனை `ஸீ’யும், நாய் `பிளாக்கி’யும் வரைவதை நின்று ரசித்துக்கொண்டிருக்கின்றன. இந்தக் காட்சிகள் நடப்பது எங்கோ பிரான்ஸில் அல்ல; விசாலாட்சித் தோட்டத்தில். சென்னை ஆர்.ஏ.புரம் அருகில் இருக்கும் சின்ன ஹவுஸிங் போர்டு ஏரியாதான் இந்த விசாலாட்சித் தோட்டம். அதேதான், சென்னை 28-தான்!

மெல்லிசை தெரியும்... அதென்ன சொல்லிசை? ராப் இசைக்கு, தமிழ்கூறு நல்லுலகு தந்த சொல்லே இந்தச் சொல்லிசை. உலகம் முழுவதும் அந்தந்த மண்ணிற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்ட ஓர் இசைவடிவம் ராப். சரி, ராப்பும் ஹிப்ஹாப்பும் ஒன்றுதானா அல்ல வெவ்வேறா? பலருக்கும் பதில் தெரியாத குழப்பமிது. ஹிப்ஹாப் என்பது ராப் போல வெறும் இசைவடிவம் மட்டுமன்று, ஒரு கலாசாரமும்கூட. அந்தக் கலாசாரத்தின் நான்கு பெரும் உட்கூறுகளில் ஒன்றுதான் ராப். இந்த `ராப்’ எனும் சொல்தான் விசாலாட்சித் தோட்டத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் ஹிப்ஹாப் கலாசாரத்தின் ஆதி விதை.

1997-ம் ஆண்டில் `ராப் குரூப் பாய்ஸ்’ என்ற குழுவை ஐந்து பள்ளி மாணவர்கள் இணைந்து தொடங்கினார்கள். ஆனால், அது ஒரு நடனக்குழு. மின்னல் பாய்ஸ், ராப் குரூப் பாய்ஸ் என இரண்டு பெயர்களை தங்கள் குழுவுக்கு யோசித்திருக்க, ராயபுரத்தைச் சேர்ந்த ஒரு நடனக்குழு `மின்னல் பாய்ஸ்’ என்ற பெயரை அவர்களுக்கு வழங்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டதால், இவர்கள் `ராப் குரூப் பாய்ஸ்’ ஆனார்கள். இவ்வளவுதான் பெயர்க்காரணம். 

சொல்லிசை மன்னர்கள்!

பிறகு, `ராப் குரூப் பாய்ஸ்’ நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகளையும் பதக்கங்களையும் அள்ளிக்கொண்டிருக்க, 1999-ம் வருடம் `மினி ராப் குரூப் பாய்ஸ்’ என்ற ஜூனியர் அணி ஒன்றும் உருவானது. `ராப் குரூப் பாய்ஸ்’ன் மிக முக்கிய உறுப்பினரான விஜி என்பவர் ஒரு விபத்தில் இறந்துபோக, அவர் நினைவாக `விஜய் ஆனந்த் டான்ஸ் குரூப்’ என்ற அணியும் விசாலாட்சித் தோட்டத்துக்குள் புதிதாய்ப் பிறந்தது.

ஒரு குழுவின் இளையவர்கள் வளர்ந்த பிறகு சில புதியவர்களை தங்களோடு இணைத்து புதுக்குழுவை உருவாக்கத் தொடங்க, ஏரியாவுக்குள் `ப்ளானட்ஸ்’, `எஃப் கன்ஸ்’ என அடுத்தடுத்து நடனக்குழுக்கள் புதிதாய்ப் புறப்படுகின்றன. பழைய குழுக்கள், குடும்பச் சூழ்நிலை காரணங்களால் காணாமல்போகின்றன. இந்தக் குழுக்கள் எல்லாம் சினிமா பாடல்களுக்கும் டெக்னோ இசைகளுக்கும் நடனமாடிக்கொண்டிருக்க, 2005-ம் ஆண்டில் ஹிப்ஹாப் நடனம் பற்றி முதன்முறையாகக் கேள்விப்படுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நடனக்குழுவான `ட்விஸ்டர்’, அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். ட்விஸ்டர் குழுவுக்கு ஆன்டோ எனும் ஹிப்ஹாப் கலைஞர் நடனவடிவமைப்பு செய்தார். அந்தக் குழுவை ஒருங்கிணைப்பவரும் விசாலாட்சித் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் நீண்டகால நண்பர்கள். நட்புக்காக, விசாலாட்சித் தோட்டத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் சிலர் `ட்விஸ்டர்’ குழுவினரோடு இணைந்து நடனமாடினார்கள். ஆன்டோதான் அனைவருக்கும் பயிற்சி அளித்திருக்கிறார். ஆன்டோ சொல்லித்தந்ததை தங்கள் ஜூனியர்களுக்குச் சொல்லித்தருகிறார்கள் விசாலாட்சித் தோட்டத்தினர்.   கிட்டத்தட்ட, இரண்டு வருடம் தங்கள் மானசீக குருவான ஆன்டோவை நேரில் சந்திக்காமலேயே ஹிப்ஹாப் நடனத்தைக் கற்கிறார்கள். இரண்டு வருடம் கழித்து ஆன்டோவை நேரில் சந்தித்த  தருணத்தை அவர்கள் இன்று விவரிக்கும்போதும் கண்கள் பளிச்சிடுகின்றன. 

சொல்லிசை மன்னர்கள்!

ஜூனியர்களின் திறமையால் ஈர்க்கப்பட்ட ஆன்டோ, அவர்களைத் தன் நண்பர் ஒருவரின் ஸ்டுடியோவுக்கு பயிற்சிசெய்ய வரச்சொல்கிறார். பஸ் டிக்கெட் எடுக்கக் காசில்லாமல் பல கிலோமீட்டர் நடந்தே சென்றவர்கள், வலியுடன் வீடு திரும்புகிறார்கள். கல்லிலும் மண்ணிலும் நடனமாடிய கால்கள், நடந்ததால் வந்த வலி அல்ல அது. நிறத்தாலும் இனத்தாலும் வாழும் இடத்தாலும் அவமானப்படுத்தப்பட்டதால் வந்த வலி. அதன் பிறகு, அந்த ஸ்டுடியோ பக்கமே அவர்கள் செல்லவில்லை. இதைப் புரிந்துகொண்ட ஆன்டோ, வேறொரு ஸ்டுடியோ ஏற்பாடு செய்து பயிற்சி தர தொடங்கினார். தினமும் வீட்டிலிருந்து மதிய உணவையும் புத்தகப் பையையும் எடுத்துக்கொண்டு பயிற்சிக்காக பூங்கா சுவரை ஏறிக் குதித்திருக்கிறார்கள்.

படிப்பு பாதியில் நிற்க, நடனத் திறமை அசுரவேகத்தில் வளர்ந்தது. நடன யுத்தங்களில் வியர்வையும் ரத்தமும் உதிர்த்து வெல்கிறார்கள். தங்களின் மீது சுமத்தப்பட்ட அத்தனை அவமானங்களையும் திறமையால் துடைத்தெறிகிறார்கள். `ஆல் ஃபார் ஒன்’ என தங்களுக்கு பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். ஆன்டோ, அமெரிக்கா சென்று `ஹிப்ஹாப்’ கலாசாரத்தின் ஆதி அந்தம் அனைத்தும் கற்றதோடு தங்கள் மாணவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறார். `ஆல் ஃபார் ஒன்’ குழுவினரின் நடை, உடை, பாவனை எல்லாம் மாறுகின்றன. ஆன்டோவிடமிருந்து ஆங்கிலம் கற்கிறார்கள். விசாலாட்சித் தோட்டத்தின் வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிய கதை இது.

சொல்லிசை மன்னர்கள்!``இந்த ஹிப்ஹாப்தான் எங்க வாழ்க்கையை கலர்ஃபுல்லா மாற்றியிருக்கு. படிப்பைப் பாதியிலேயே கைவிட்டதை நினைச்சா இப்போ வருத்தமாத்தான் இருக்கு. ஆனாலும், எங்க நடனம் எங்களைக் காப்பாத்திட்டு வருது. நாங்க எல்லோரும் பத்தாங்கிளாஸ் ஃபெயில்தான். ஆனாலும், செமயா இங்கிலீஷ் பேசுவோம். ஆன்டோ மாஸ்டர் மட்டும் இல்லைன்னா, நிச்சயமா நாங்க இப்படி இருந்திருக்க மாட்டோம். ஹவுஸ் கீப்பிங் வேலையிலோ, பெயின்டிங் வேலையிலோ இருந்திருப்போம். இந்த மாதிரி கலர் கலரா டிரெஸ் பண்றதை ஏரியாவுக்குள்ள மொதல்ல ஒருமாதிரிதான் பார்த்தாங்க. இப்போ எங்க ஏரியா நாய்க்கே இதெல்லாம் பழகிடுச்சு ப்ரோ’’ என்கின்றனர் `ஆல் ஃபார் ஒன்’ குழுவினர்.  

``ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஹிப்ஹாப் கல்ச்சுரல்ல இருக்கிற ஒரே டர்ஃப், விசாலாட்சித் தோட்டம் மட்டும்தான் ப்ரோ. டர்ஃப்-னா ஹிப்ஹாப்ல `ஏரியா’ன்னு அர்த்தம். கல்ச்சரைக் கெடுக்கிறதே இந்த டிவி-யும் சினிமாவும்தான். ஹிப்ஹாப் ஆர்டிஸ்ட்னு தன்னைச் சொல்லிக்கிறவங்கள்ல நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு, அது பற்றிய வரலாறும் வாழ்வியலும் சுத்தமா தெரியாது. இங்கே போலிகள்தான் அதிகம். நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவர்களா வர்றவங்கள்ல பல பேர் மொதல்ல நடனக் கலைஞர்களே கிடையாது; நடிகர்கள்தான். நடனக் கலைஞர்களா இருக்கிற நடுவர்களுக்கும் ஹிப்ஹாப் நுணுக்கங்கள் பற்றித் தெரியுமான்னு கேட்டா,  அதுவும் சொற்பம்தான். அப்புறம் இவங்க எப்படி நடுவர்களா எங்க டான்ஸுக்கு தீர்ப்பு சொல்வாங்க?

டிஜேயிங் இங்கு கல்யாண வீடு வரைக்கும் வந்திடுச்சு. பிரேக் டான்ஸிங்கோ டிவி-யில் திகட்டத் திகட்டக் கிடைக்குது. கிராஃபிட்டியும் சிங்காரச் சென்னையை அலங்காரம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. வாரத்துக்கு ஒரு ராப் டீம் யூ டியூப்ல அறிமுகமாவுது. இதையெல்லாம் வெச்சி, நம்ம ஊர்ல ஹிப்ஹாப் கலாசாரம் வளருதான்னு கேட்டா, நிச்சயமா இல்லை. ஏன்னா,  அது எல்லாமே ஹிப்ஹாப் இல்ல. நம் ஊர்ல இது ஒரு கலாசாரமா வளராம வெறும் கலையா மட்டும்தான் வளருது. கலாசாரம் தெரியாம கலைஞர்கள் உருவாகுறது அந்தக் கலைக்கும் கலாசாரத்துக்கு செய்ற மிகப்பெரிய துரோகம். எங்களுக்கு துரோகம் பண்ணாதீங்க” என ஆதங்கத்தோடு முடிக்கிறார்கள் `ஆல் ஃபார் ஒன்’ குழுவினர்.

இசையை வென்றவர்கள், எதையும் வெல்வார்கள் என்பதற்கான அடையாளம் இந்த ‘விசாலாட்சித் தோட்டம்’.

ப.சூரியராஜ் - படங்கள்: பா.காளிமுத்து